Pages

Powered by Blogger.

வானவில் தேவதை - 15







அன்று வீட்டிற்கு விருந்தினர் வந்திருந்ததால் விருந்து சாப்பாடு தயாராகிக்கொண்டிருந்தது .ஆடும் , கோழியும் , நண்டும் ,இறாலுமாக ....அடுப்பங்கரையில் இருந்த நான்கு அடுப்புகளும் ஒன்று போல் எரிந்தபடியேதான் இருந்தன 

.சமைக்கும் கைகள் ஒரு வாய் ருசி கூட பார்க்கவில்லை .அதற்கு கூட  நேரமில்லை அவற்றிற்கு .பிரியாணியும் ,குழம்பும் ,வறுவலுமாக ஒரு கலவையான மணம் அடுப்படியை நிறைத்திருந்தது .பின்புறத்தில் அமர்ந்து தேர்வுக்கு படித்து கொண்டிருந்த சபர்மதியை அந்த வாசம் இழுத்தது .


புத்தகத்தை மூடி வைத்து விட்டு மெல்ல அடுக்களைக்குள் எட்டிப் பார்த்தாள் .சாப்பாட்டு வகைகளை முடித்துவிட்டு அடுத்து இனிப்புகளுக்கு தயாராகிக்கொண்டிருந்தாள் தமயந்தி .


" அம்மா ..."


"ம்.."

" எனக்கு கொஞ்சூண்டு பிரியாணி மட்டும்மா ..."


இன்னும் யாரும் சாப்பிடவில்லையே அதற்குள் ...முதலில் சிறிது யோசித்தாள் தமயந்தி .பின்பு ஒருவேளை விருந்தினர்கள் உண்ட பின் மீதி இல்லாமல் போய்விடலாம் .ஏற்கெனவே அப்படி நடந்திருப்பதால் நாலு வாய் பிரியாணி மகளுக்கு கொடுப்பதில் தவறில்லை என எண்ணியவள் , சிறிய தட்டொன்றில் 
சிறிது பிரியாணியை வைத்து மகளுக்கு கொடுத்தாள் .


இரண்டாவது வாய் பிரியாணி வாயிலிருந்தே எகிறி விழுந்தது .தட்டு தூர போனது .

" வந்தவங்களை  என்னன்னு கூட பார்க்கலை.அதுக்குள்ள அம்மாவும் மகளுமாக உள்ள உட்கார்ந்து மென்னு தள்ளுறீங்களா ? தமயந்தியின் அண்ணன் மனைவி பத்ரகாளியாய் நின்றிருந்தாள் .


" இல்லை அண்ணி ..குழந்தை ரொம்ப ஆசைப்பட்டான்னுதான் இரண்டே வாய்தான் ..." திணறினாள் தமயந்தி .


" ஒரு வட்டில் நிறைய கோபுரம் கட்டி கொடுத்திட்டு ...இரண்டு வாய்தான் கூசாம புழுகுறியே ...இப்படி தின்னு வாழுறதுக்கு ஆத்தாளும் மகளுமா நாலு வீட்ல போய் பிச்சை எடுங்க தூ "விசமனைத்தும் உமிழ்த்து விட்டு நாகப்பாம்பு சென்று விட்டது .


தமயந்தி அழவில்லை .ஒரு மாதிரி பிரமை பிடித்த மாதிரி இருந்தாள் .இரண்டு நாட்கள் சாப்பிடவில்லை .மூன்றாம் நாள் காலை சபர்மதி " அம்மா இனி இப்படி சாப்பாடு கேட்க மாட்டேன்மா .ப்ளீஸ்மா சாப்பிடுங்கம்மா " என கெஞ்சியபோது ,மகளை இழுத்து அணைத்து கொண்டாள் .


இருவேளை உணவு உண்டு கொண்டிருந்தவள் அன்றிலிருந்து ஒரு வேளையாக மாற்றி விட்டாள் .சபர்மதி அன்றிலிருந்து பிரியாணி சாப்பிடுவதையே நிறுத்திவிட்டாள் .


உயிர்வாதை தருகின்றன 
இளம்பிராய ஞாபகங்கள் 
சிட்டுக்குருவியின் சிறகுகளை 
ஆராய்கையிலும் 
ரணத்தில் குச்சி நுழைக்கின்றன 
அதென்னவோ எனது வரப்புகளில் 
வேதனைக்கடுகுகள் மட்டுமே 
விதைக்கப்படுகின்றன 
விளையும் பூக்களில் 
ரத்தச்சிவப்பு ...


தனது டைரியில் கிறுக்கியவள் .இந்த வேதனை தந்த அந்த கொடூரனுக்கு பெயர் தந்தையா ...? அவனுடன் நான் குலாவ வேண்டுமா ? இதற்கு தூது ஒரு வெள்ளை கொக்கு ...


நாலு வாய் நல்ல உணவுண்ண நானும் என் அன்னையும் என்ன பாடுபட்டோம் .இந்த பாவமெல்லாம் உங்கள் குடும்பத்தை சும்மா விடுமா ? அதுதான் பிடித்து ஆட்டுகிறதே .மூட்டை மூட்டையாக தானியங்கள் நிரம்பி வழிகின்றன ,குடும்பத்தில் ஒருவராவது ஒரு வாய் உணவு ருசியாக உண்ண முடிகிறதா ? கடவுள் இருக்கிறார் .அதை எனக்கு 
உணர்த்திவிட்டார் .


பார்க்கத்தான் போகிறேன் இந்த குடும்பத்தில் உள்ளவர்கள் படும் பாடுகளை ...அப்போதுதான் என் அன்னையின் ஆத்மா சாந்தியடையும் .இவ்வாறு பலவாறு எண்ணியபடி இரவு முழுவதும் விழித்திருந்தாள் சபர்மதி .


காலை எட்டு மணி வரை படுக்கையிலேயே இருந்துவிட்டு நிதானமாக குளித்து முடித்து கீழே இறங்கினாள் .காவேரியின் கழுநீர்தண்ணி ...இல்லை காப்பியை அவள் உள்ளே போனதும் தோட்டத்து செடிகளுக்கு வார்த்தாள் .எல்லோருக்கும் இந்த காப்பிதானே மனதுக்குள் குதூகலித்து கொண்டாள் .


காலை பேப்பரை தேடினாள் .அது ஒவ்வோரு தாளாக ஆங்காங்கே பறந்து கொண்டிருந்தது .தன்னருகில் பறந்த இரண்டொரு தாள்களை பிடித்து அரைகுறையாக செய்திகளை வாசித்துக் கொண்டிருந்தாள் .


"ஹாய் சிஸ் குட்மார்னிங் " என்று வந்தான் ராஜசேகரன் .நிமிர்ந்து புன்னகைத்து காலை வணக்கம் சொன்னாள் .


" பனியில் பூத்த ரோஜா போல சூப்பரா இருக்க சிஸ் ..ஆமாம் நீ மாடலாமே ...சீரியல்லாம் வேற பண்ணியிருக்கிறியாமே ....நிஜமாகவா ? " விபரம் கேட்டான் .


ஏனோ தனது இந்த அறிமுகம் சபர்மதிக்கு பிடிக்கவில்லை. " ம் " என அரைகுறையாக தலையசைத்து விட்டு " யார் சொன்னார்கள் ?" என விசாரித்தாள்.


" கேள்விப்பட்டேன் " என்றவன் வேறு விசயங்கள் பேச தொடங்கினான் .நெட் , மெயில் , பேஸ்புக் என பேச்சு திரும்பவும் ," நீங்கள் என்ன போன் உபயோகிக்கிறீர்கள் ?" என கேட்டாள் ." ஏன் என்றபடி தனது போனை எடுத்து காட்டினான் ." அனைத்து வசதிகளும் கொண்ட உயர்ரக கைபேசி .


" இவ்வளவு விலையுயர்ந்தது வேண்டாம் .நெட் பயன்படுத்தும்படி ஒரு சாதாரண போன் எனக்கு வேண்டுமே . எங்கே வாங்கலாம் ?"


" ஸ்மார்ட் போனெல்லாம் இங்கு கிடைக்காது .மலையிறங்கி கீழே போக வேண்டும் .நான் இந்த போன் இப்போதுதான் வாங்கினேன் .முன்பு நான் உபயோகித்த போனை உனக்கு தருகிறேன் .இப்போதைக்கு உபயோகி " என ராஜா கொண்டு வந்து தந்த போன் புது மெருகு குலையாத நவீன ரகம் .


" இது பழசா " ஆச்சரியமாக கேட்டாள் சபர்மதி .


"ஆமாம் நான் ஒரு மாடல் மூன்று மாதங்கள்தான் உபயோகிப்பேன்  .அடுத்த மாடல் வரவும் மாற்றிவிடுவேன் .பழைய போன்களை என் நண்பர்களுக்கு தந்து விடுவேன் .இது கூட அசோக் கேட்டுக்கொண்டிருந்தான் .என் தங்கைக்கு கொடுத்து விட்டேனென கூறி விடுகிறேன் " இயல்பான அவன் தங்கையில் ஒரு நிமிடம் தடுமாறினாள் சபர்மதி .


கூடவே மூன்று மாதத்திற்கு ஒருமுறை ஐம்பது ,அறுபதாயிரத்திற்கு போனா ? குடும்பம் என்ன ஆகிறது ? தன் போக்கில் எண்ணி விட்டு மானசீகமாக தலையில் ஒரு கொட்டு வைத்துக்கொண்டாள் .ஒரு 'தங்கையில் 'உருக வேண்டுமா ? .மேலும் அவன் இவ்வாறு இருப்பதுதானே சபர்மதிக்கு தேவை .


" சூப்பர் ப்ரோ"  என அவனை உற்சாகப்படுத்தினாள் . ராஜ் பழக எளிமையானவனாக இருந்தான் .

பூரணசந்திரன் போலில்லை .கலகலப்பாக பேசினான் .நான்கு வார்த்தைக்கு ஒருமுறை ஜோக் அடித்தான் .தனக்காக வாங்கி வைத்திருந்த புது சிம்மை தங்கைக்காக கொடுத்தான் .


சற்று வெளியே போய் வரலாமென காரில் வெளியே அழைத்து சென்றான் .அப்படியே காலை டிபனை வெளியிலேயே முடித்து விட்டனர் .காவேரியின் சமையலில் இருந்து ஒரு நேரம் விடுதலை என எண்ணிக்கொண்டாள் .ஆயினும் சிறுமலை சிறிய ஊர்தான். கிராமத்து சேர்த்திதான் .எனவே பெரிய உணவு விடுதிகள் எதுவும் அங்கு இல்லை .



ஒரு சுமாரான உணவு விடுதியில் 
ஏதோ சுமாராகத்தான் என்றாலும் அதுவே ருசியாகவே தெரிந்தது சபர்மதிக்கு .காவேரியின் கைவண்ணம் அப்படி என்பதால் இருக்கலாம் .


" நம்ம வீட்டு சமையலுக்கு இது பரவாயில்லைதானே சபர் ." கேட்டான் ராஜ் .


" உண்மைதான் "ஒத்துக்கொண்டாள் 


" ஹாய் ராஜ் ..." கோரஸ் குரல்கள் பின்னிருந்து கேட்க திரும்பினாள் .நான்கு இளைஞர்கள் .ஒவ்வோருவரும் ஒவ்வொரு வித முக தோற்றம் காட்டினர் .


" ஹாய் " உற்சாகத்துடன் கை பற்றி குலுக்கினான் .தனது நண்பர்களை அவளுக்கு அறிமுகம் செய்தான் .


" டேய் நாங்க சாப்பிட்டாச்சு .இப்போ ஐஸ்கிரீம் சாப்பிடுவோமா ? "


" என்னடா இன்னைக்கு நாங்க இல்லாமலேயே சாப்பிட்ட?  "  அவர்கள் குரலில் லேசான பொறாமையோ ?,"


" டேய் என தங்கைடா ..முதன்முதலில் வெளியே அழைத்து வந்திருக்கிறேன். அதனால்தான் ...இப்ப வாங்கடா ...எல்லோருக்குமே ஜஸ்கிரீம் சொல்றேன் ..." எல்லோருக்குமே அவரவர் விருப்பம் கேட்டு ஆர்டர் சொன்னான்


அடுத்தவர் காசுதானே என்ற எண்ணமா என்ன ..ஒவ்வொருத்தனும்  ஒரு ஏழு எட்டு வகைகள்  வாங்கி தின்றனர் . சரிதான் இவன் வழியாக இப்படி போகின்றது போல ...என எண்ணிக்கொண்டாள் சபர்மதி .


நடுவிலிருந்த அந்த பரட்டைதலையன் ( இவனெல்லாம் முடி எங்கு வெட்டுவான் ) " ராஜ் அந்த போன் " என இழுத்தான் .

" எந்த போன் ..ஓ அதுவா ..அதனை என் தங்கைக்கு கொடுத்து விட்டேனடா .உனக்கு அடுத்த போனை தருகிறேன் என்ன " என்றான் .


சற்று ஏமாற்றம் தெரிந்ததோ அவனிடம் இருந்தாலும் அது இரு நொடிகளே . சட்டென இயல்பானவன் " ஓ கேடா சிஸ்டர் முக்கியம்தானே ..." என்றான்.


இன்று எங்கேடா போகலாம் ..ஒருவன் ராஜன் கேட்டான் .


" இப்போ எங்கேயும் போக முடியாதுடா .என் தங்கையை வீட்டில் விட்டுவிட்டு வருகிறேன் அப்புறம் யோசிக்கலாம் . சபர் போகலாமா ? " என்றான் ராஜ் .


தலையாட்டியபடி அவனுடன் கிளம்பினாள் .
ஏனோ ராஜனின் நண்பர்கள் யாரிடமும் அவளுக்கு நல்ல அபிப்ராயம் இல்லை .இவர்கள் நட்பிலிருந்து வெளியேறினால்தான் ராஜன் உயர்வான என தோன்ற அதை சொல்ல வாயை திறந்தவளுக்கு தனது சபதம் நினைவு வந்தது 


.இதைத்தானே அவள் விரும்பிக் கொண்டிருந்தாள் .
பின் என்ன ? கடவுள் அவளுக்கான வாய்ப்புகளை வாரி வழங்கிக்கொண்டேயிருக்கிறார் .அதனை யோசிப்பானேன் .


இவ்வாறு எண்ணியபடி நின்றுகொண்டிருந்தவள் பக்க கார் கதவை திறந்துவிட்டு " ஏறிக்கொள்ளம்மா " என்றுவிட்டு சுற்றி மறுபுறம் போனான் ராஜன் .


எதிர் சாலையில் தற்செயலாக பார்வையை போட்டிகள் விழிகள் நிலை குத்தின .அங்கே ஒரு கடை வாசலில் நின்றுகொண்டு இவர்களையே முறைத்தபடி ...சந்தேகமே வேண்டாம் முறைத்தபடிதான் நின்று கொண்டிருந்தான் பூரணசந்திரன் .


அவன் நிற்கும் தோரணையிலேயே இவர்களை பிடிக்கவில்லையென்று
தெளிவாக புரிபட , உற்சாகமானாள் சபர்மதி .அவன் நின்றபுறமாக தன் கூந்தலை ஒரு சிலுப்பு சிலுப்பி காட்டியவள் , காரில் ஏறி அதன் முன் கண்ணாடியில் தனது தலையலங்காரத்தை சரி செய்ய வேறு செய்தாள் ஓரக்கண்ணால் அவனை பார்த்தபடி .


இன்னமும் அவன் தன் பார்வையை விலக்காமல் இவர்களை முறைத்தபடியே இருந்தான் .அதிக உற்சாகத்துடன் ராஜன் புறம் சாய்ந்து பேச தொடங்கினாள் சபர்மதி .


" ப்ரோ என் போன் எப்போ ஒர்க் ஆகும் ..ம் ..." தலை சாய்த்து கொஞ்சினாள் .


" கொடு பார்க்கலாம் " போனை வழங்கியவர் தனது போனை எடுத்து அவளுக்கு நம்பர் அழுத்த தொடங்க , டப்பென்று காதில் அறையும் சத்தத்துடன் தனது கார் கதவை அடித்து கிளம்பி போனான் .


" எங்கே போவான் ? ஒருவேளை வீட்டிற்குதானோ ? " அவன் சென்ற பாதையை ஆராய்ந்து கொண்டிருந்த சபர்மதி தலையில் தட்டினான் ராஜன் " ஹேய் உன் சிம் ஆக்டிவ் ஆயிடுச்சு பார் .ரிங் வருது " என்றான்


உற்சாகத்துடன் போனை வாங்கிக்கொண்டாள் சபர்மதி ." நன்றி ப்ரோ " என்றாள் உளமார ...


" இதெற்கெல்லாம் நன்றியா ?"  என்றபடி காரை எடுத்தான் ராஜன் .



வீட்டு வாசலிலே அவளை இறக்கி விட்டவன் " சிஸ் கடுவன் உள்ளேதான் இருக்கு போல .நான் எஸ்கேப் நீயே போய் மாட்டிக்கோ " பறந்துவிட்டான்


பூரணனின் கார்தான் .அவுட்ஹவுஸ்சில் இருப்பானாயிருக்குமென்று எண்ணியபடி படியேறிய சபரமதியை வராண்டாவிலேயே எதிர்கொண்டான் பூரணசந்திரன்

" அவனை எங்கே ?"


அலட்சியமாக அவனை பார்த்தபடி உள்ளே செல்ல திரும்பியவளை பற்றி திரும்பினான் . அதிகாரமாக " ராஐனோடு அதிக பழக்கம் வைத்துக் கொள்ளாதே " என்றான் .


" ஏனோ ...அவர் என் அண்ணன் அல்லவா. .." தங்கையும் அண்ணனும் பாசமலர் பறிப்பதில் உங்களுக்கென்ன சங்கடமோ " நக்கலாக வினவினாள் .
ஏதோ சொல்ல வாயெடுத்து விட்டு " உன் நன்மைக்காகத்தான் .அப்புறம் உன் இஷ்டம் ."...


" அவுட்ஹவுஸ் நோக்கி. நடக்க தொடங்கினான் .எப்பொழுதும் அந்த அவுட்ஹவுஸ் தான் .அப்படி என்னதான் பேசுவார்களோ ?.." பொறுமியபடி உள்ளே நடந்தாள் .



ஹால் சோபாவில் அமர்ந்தவள் போனில் முகநூலில் நுழைந்து சதிஷின் செய்தி ஏதும் வந்திருக்கிறதா என பார்த்தாள் .அனுப்பியிருந்தான் நிறைய செய்திகள் . எல்லாம் படப்பிடிப்பு பற்றியதான .விரைவில் அவளை வந்து சந்திப்பதாகவும் , தொடர்ந்து டச்சில் இருக்கும்படியும் கேட்டு அனுப்பியிருந்தான் .


அப்படியே செய்வதாக அவனுக்கு பதில் அனுப்பினாள் . , அவளின் வெகு அருகே கடந்து சென்ற பூரணசந்திரன் அவள் கை போனை பாரத்தபடி சென்றான் .உற்சாகமாக தனது கை பேசியை அவன் காணுமாறு உயர்த்தி வைத்துக்கொண்டு மேலும் சில நண்பர்களுடன் சாட் பண்ண தொடங்கினாள் .நேரம் ஓடியதே தெரியவில்லை .



நிமிர்ந்த போது இரவு வந்திருந்தது.


மூன்று நாட்கள் மிகவும் மெதுவாக சென்றது சபர்மதிக்கு  .ராஜனை அதன்பின் கண்ணிலேயே காணவில்லை .பூரணசந்திரன்தான் என்னவோ சொல்லியிருக்க  வேண்டுமென சபர்மதிக்கு தோன்றியது .

அவனையும் மூன்று நாட்களாக ஆளையே காணோம் .அமசவல்லி பகல்நெரங்களில் வீடு தங்குவதே இல்லை .அனுசூயாவின் பொழுதுகள் தர்மனுடன் கழிந்தன .


வீடு முழுவதும் எந்நேரமும் ஒரு வெறுமை.


மறுநாள் மதிய உணவு வேளையில் 
பசி வயிற்றை குடைய , போனை தன் பாக்கெட்டில் வைத்தபடி கிழிறங்கினாள் .

சாப்பாட்டு அறையில் அமர்ந்தபடி உணவுண்ண வருமாறு அம்சவல்லி அழைக்க , இன்றைக்கென்ன இந்த அம்மா இங்கே இருக்கிறார்கள் என்று எண்ணியபடி போய் உண்ண அமர்ந்தவளின் அருகே உணவுண்ண வந்து அமர்ந்தான் பூரணசந்திரன் . அவனை முறைத்தபடி தனது நாற்காலியை சற்று நகர்த்தி போட்டு கொண்டாள் .


பிறகுதான் உணவின் தரம் நினைவு வர , பசிக்கவில்லை என்று எழுந்துவிடலாமா ?  யோசித்தாள்.



ஆனால் அவியலின் மணம் நாசியை நிறைக்க சந்தேகமாக தன் தட்டை பார்க்க , அவியல் மற்ற பதார்த்தங்களின் சுவை தோற்றத்திலேயே தெரிந்தது .
இரண்டு விரல்களால் அவளை எடுத்தவளை " இன்று நல்லாவே இருக்கும் . பயப்பட வேண்டம் " பூரணசந்திரனிண் குரல்தான் .


மிக ருசியாகவே இருந்தது. வேறு சமையல்காரியா....எட்டி உள்ளே
பார்த்தாள் . காவேரிதான் மணக்க மணக்க ரசம் எடுத்து வந்தாள் .
" இனி இங்கே சாப்பாட்டிற்கு வருவதானால் முன்பே சொல்லிடுங்கய்யா , கோழி மீனுன்னு சமைப்பேன் "என்று கூறுயபடி .


ஆக இது பூரணனுக்கு பயந்து செய்யப்பட்ட சமையல். ஏனோ இப்போது அவியல் கசந்தது .என்றோ ஒருநாள் வாய்க்கும் அபூர்வ நல்ல சாப்பாட்டை தலை குனிந்து ரசித்து  சாப்பிட்டு கொண்டிருந்தாள் அம்சவல்லி .சாப்பிட்டு முடித்து கை கழுவிக்கொண்டிருந்தவள் பின் வந்து " உன்னுடன் கொஞ்சம் பேச வேண்டும் , பின்னால் வா " முணுமுணுத்துவிட்டு சென்றான் பூரணசந்திரன்.


இவர் சொல்லிட்டா நான் போகனுமாக்கும் என ஒரு மனமும் என்ன சொல்லித்தான் என்ன நாம் கேட்கவா போறோம் ? முடியாதுன்னு முகத்திலடிச்சுட்டு வருவோம் .இந்த எண்ணத்துடனே சபர்மதி போனாள் .
பின்னால் நீச்சல்குளத்தருகில் அமர்ந்திருந்தான் .


" என்ன ...?" என்றாள் எங்கோ பார்த்தபடி

" எனக்கு ஒரு பெரிய வாய்ப்பு தொழிலில் வருவது போல் இருக்கிறது சபர்மதி. அது அமைந்து விட்டால் நான் எட்டு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை ஜப்பான் ,கனடா என பல இடங்கள் சுற்ற வேண்டியிருக்கும் ."



" அதற்கு உங்களுக்கு நான் குடை பிடிக்க வேண்டுமா ? ..அதற்குத்தான் உங்களை உரசியபடி திரியும் அவள் இருக்கிறாள் ..? எனக்கெதற்கு இந்த செய்தி ..."


" ஸ்வாதி எனது நல்ல தோழி ...நான் பேச வந்தது வேறு. அப்படி நான் சென்றுவிட்டால் , இந்தக்குடும்பம் ....."


நிறுத்தி பெருமூச்சொன்று விட்டவன் எழுந்து ,  அவள் இருகைகளையும் அழுத்தி பிடித்து " மதி ப் ளீஸ் ....நீ. உன் வன்மத்தை சிறிது ஒதுக்கிவிட்டு உன் குடும்பத்தை கவனித்து  பார்க்க வேண்டும் " என்றான் கெஞ்சுதலாக .


பட்டென அவன்கைகளை உதறி " எங்கிருக்கிறது என் குடும்பம் ? எனது உறவுகளெல்லாம் என் நண்பர்கள்தான் . எண்ணிய காரியம் நிறைவேறியவுடன் என் நண்பர்களிடம் பறந்துவிடுவேன் நான் " உறுதியாக கூறியபடி திரும்பியவளின் கால்களை தன் கால்களால் இடறி விட்டான் பூரணன் .


சிறு கத்தலுடன் நீச்சல்குளத்துனுள் விழ. போனவளின் இடையை பற்றி தாங்கினான் .ஒரு கால் தரையிலும் ஒரு கால் குளத்தினுள்ளுமாக பூரணனின் கை தாங்கலில் நின்றாள் சபர்மதி.

" சொன்னா கேட்கனும் , கேட்காம போவேன் போவேன்னு அடம்பிடிக்க கூடாது " ரகசியம் போல் குரலை இறக்கி பேசியவனின் கைகள் அவள் இடையை இறுக்கியது .


அவன் செய்கைகளை தடுக்க எண்ணி தடுக்க இயலாமல் "  போவேன் , போகத்தான் போகிறேன் " என்றாள் மெல்லிய குரலில் ஆனால் உறுதியாக .


" சரி போ ..என்றவன் அவள் மீதான தனது பிடியை தளர்த்திக்கொண்டதுமில்லாமல் அவளை உந்தி நீச்சல்குளத்தினுள் தள்ளியும் விட்டான் .


அவன் தள்ளிய வேகத்தில் அடி ஆழம் வரை சென்று , பின் நீந்தி மேலே வந்தவள் பார்க்கும்போது அவன் அங்கு இல்லை .வாசலில் அவன் கார் கிளம்பும் ஒலி கேட்டது .



- தேவதை வருவாள்.




0 comments:

Post a Comment

Blogger News

வணக்கம் தோழமைகளே , எனது " வா என் வண்ண நிலவே " கதைக்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு மிக்க நன்றி. இதோ உங்கள் முன் எனது அடுத்த கதை " வானவில் தேவதை " கறுப்பென்பது பிழையல்ல .மனமிருப்பின் வரமே என்பதனை என் முதல் கதையில் கூறியிருந்தேன். சொந்தங்கள் இல்லாத வாழ்வு வாழ்வல்ல.சந்தர்ப்ப சூழ்நிலைகளே சொந்தங்களின் பாசத்தை மறைக்கிறது என்பதனை இரண்டாவது கதையில் கூறியிருக்கிறேன் காதல் கலந்து.படித்து பாருங்கள்.
 

Blogger news

Blogroll