Pages

Powered by Blogger.

வானவில் தேவதை - 23





காலை காபிக்காக ஏழு மணிக்கு இறங்கி வந்த அம்சவல்லி திகைத்தாள் .ஹாலில் அமர்ந்து பேப்பர் படித்தபடி , காபியை உறிஞ்சிக்கொண்டிருந்தார் சத்யேந்திரன் .மீண்டும் மாடிக்கே சென்று விட  எண்ணி திரும்பினாள் அம்சவல்லி .


", அம்சா ...எங்கே போற ..இங்கே வா ...காபி சாப்பிடலாம் "


திருமணமான புதிதில் எப்போதோ ஓரிரு முறை இப்படி பெயர் சொல்லி அழைத்திருக்கிறார் .பின்பு முழுவதும் " ஏய்...தான் ..."..இல்லையென்றால் பிள்ளைகளிடம் எங்கேடா உங்க அம்மா ...?...இத்தனை வருடங்கள் கழித்து இவர் சொடக்கு போட்டால் நான் போய் காலடியில் உட்கார்ந்து விட வேணுமோ ...? வீம்புடன் மாடிக்கு சென்று காபி வரவைத்து குடித்தாள் அம்சவல்லி .


காலை உணவுக்கு அவளுக்காக அவர் காத்திருப்பதை பார்த்ததும் ,உணவு உண்ணாமலேயே வெளியே கிளம்பி விட்டாள் .


அதன்பிறகு ஒரு வாரமாக இருவருக்குமிடையே கண்ணாமூச்சி நடந்தது .சத்யேந்திரன் இருக்குமிடம் திரும்பாமல் , அழைத்தால் காதிலேயே விழா பாவனையில் முழுவதுமாக அவரை தவிர்த்தாள் அம்சவல்லி .


என் வாழ்நாள் முழுமைக்கும் உங்களை மன்னிக்க நான் தயாரில்லை ...உலகத்து வெறுப்பையெல்லாம் சத்யேந்திரன் மேல் கொட்டினாள் அம்சவல்லி .


" இன்னும் வேறு என்ன வேலை வைத்திருக்கிறாய் " கண்டிப்புடன் கேட்டது சபர்மதி குரல் .



" அது ...வந்து ...சமையலை மேற்பார்வை பார்த்து விட்டு ...துணிகளை துவைத்து விட்டு .....அப்புறம் ..." தடுமாறினாள் அனுசூயா .


கிட்டத்தட்ட ஒரு வாரமாக இவர்கள் இருவருக்குமிடையே இந்த கண்ணாமூச்சி நடந்து கொண்டிருந்தது .சபர்மதி இருக்குமிடம் திரும்பாமல் , அவள் அழைத்தால் வேலையை சாக்கிட்டு ஓடுவது என இருந்தாள் அனுசூயா .இன்றும் அதே போல் ...


" அதெல்லாம் மற்றவர்கள் பார்த்து கொள்வார்கள் .நீ என்னுடன் கிளம்பு .உன்னிடம் பேச வேண்டும் ."


" ஐயோ அவருக்கு மருந்து கொடுக்கனுமே ..."


" என்ன மருந்து ...",அவளைக் கூர்ந்தாள் சபர்மதி .


தலைகுனிந்தாள் அனுசூயா .


அம்சவல்லிக்கு மனது இருந்த குழப்ப நிலையில் மகளிர் மன்றமெல்லாம் போக தோணவில்லை .காரை நேராக பழனிக்கு விட சொன்னாள் .முருகனை தரிசித்ததும் மனம் கொஞ்சம் சாந்தி பெற்றது .சிறிது நேரம் அமர்ந்து செல்லலாமென அந்த தூண்களின் ஓரம் அமர்ந்தாள் .கோவில் நடை சாத்தப்பட்டு விட , பக்தர்கள் கூட்டம் இல்லாமலே போய்விட ,ஆளற்ற அத்தனிமையில் வெளியை வெறித்தபடி அமர்ந்திருந்தாள் அம்சவல்லி .



எத்தனை போராட்டம் , எத்தனை துயர் .அத்தனையையும் வாரி வாரி கொடுத்து விட்டு , இன்று அவர் 
மகள் சொல்கிறாளென என்னிடம் குழைகிறாரே ...


அவள் சொல்லி என் வீழ்ந்த வாழ்வை திரும்ப பெற அப்படி நான் என்ன தாழ்ந்து விட்டேன் .அவள் என்ன உயர்ந்து விட்டாள் .இப்படி எண்ணமிட்டபடி அமர்ந்திருந்த அம்சவல்லிக்கு உண்மையிலேயே சபர்மதி உயர்ந்தவள்தான் என்பதனை காது குளிர கேட்க வைத்தார் ஆறுமுகப்பெருமான் .


"இப்படி உட்காரலாம் ...".



என்ன இது அவள் குரல் போலவே இருக்கிறதே .எட்டிப்பார்த்தாள் 

அம்சவல்லி .அவள்தான் ...சபர்மதிதான் ...உடன் யார் அது ...அனுசூயா போல் தெரிகிறதே ..


இவர்களுக்குள் என்ன ரகசியம் .
தூணுக்கு மறுபுறம் அமர்ந்து காதுகளை தீட்டிக்கொண்டாள் அம்சவல்லி .


" சொல்லு அனுசூயா ...ஏன் இப்படி செய்தாய் ...? "


" நான் தீங்கு நினைத்து செய்யவில்லை சபர்மதி .நல்லது என்று எண்ணிதான் ..."


" தப்பு அனுசூயா ..ரொம்ப தப்பு உன் மேல் எவ்வளவு நம்பிக்கை இருந்தால் பெரியம்மா உன்னை இப்படி முழுமையாக தர்மன் அண்ணனிடம் அனுமதித்திருப்பார்கள் .அந்த நம்பிக்கைக்கு நீ. துரோகம் செய்யலாமா "


" தப்பென்றோ , துரோகமென்றோ நினைக்கவில்லை சபர்மதி .எனக்கு தேவை அவருடைய பூரண நலம் .அதற்காகத்தான் அந்த பச்சிலை மருந்துகளை எங்கள் ஊர் வைத்தியரிடமிருந்து வாங்கி வந்து அவருக்கு கொடுத்தேன் .அது இப்படி எதிர் விளைவுகளை உண்டாக்கும் என நான் நினைக்கவில்லை "


"இப்போது உண்டாக்கி விட்டதே .நாட்டு மருந்து தீங்கென்று சொல்லவில்லை .அதனை பயன்படுத்த ஒரு முறை உண்டல்லவா .பத்தியம் அதற்கு முக்கியமில்லையா ?"


" ஆம் ...சபர்மதி ...நானும் முடிந்த வரை பத்தியம் முயற்சித்தேன் ....ஆனால் .."


"அதெப்படி முடியும் .நாம் ஆங்கில முறை வைத்தியம் பார்த்துக்கொண்டிருக்கையில் நீ பச்சிலை வைத்தியத்தையும் கலந்தால் ,அந்த உடல் எதனை என்று ஏற்கும் ."


முகத்தை கைகளால் மூடிக்கொண்டு அழுதாள் அனுசூயா ." என்னை மன்னித்து விடு சபர்மதி .நான் தெரியாமல் செய்து விட்டேன் .இனி இந்த மூலிகைகளை எல்லாம் தூக்கி வீசிவிட்டு அவரை நல்லபடியாக கவனித்துக்கொள்கிறேன் .அத்தையிடம் எதுவும் சொல்லி விடாதே .உண்மை தெரிந்தால் அவர்கள் என்னை வீட்டை விட்டே விரட்டி விடுவார்கள் "


" கண்டிப்பாக பெரியம்மாவிடம் சொல்ல மாட்டேன் .உனக்காக இல்லை .அவர்களுக்காக .இது வரை வாழ்வில் அவர்கள் சந்தித்த அனைவருமே பெரியம்மாவிற்கு துரோகம்தான் செய்திருக்கிறார்கள் .அதில் முதலிடம் என் தாய்க்கு .கடைசி இடம் நீயாக இருக்க வேண்டுமென முருகனிடம் வேண்டிக்கொள்கிறேன் .


இனி ஒரு துரோகம் அவர்களை தீண்டுவதை நானிருக்கும் வரை அனுமதிக்க மாட்டேன் .உனது நாட்டு வைத்தியத்தை உடனே நிறுத்தி விடு .இன்னும் இரண்டு மாதங்களில் தர்மன் அண்ணன் பூரண குணமடையாவிடில் உன்னை நான் சும்மா விட மாட்டேன் .இப்போது கிளம்பு "


உறுதியாக , அதிகாரமாக , ஆளுமையாக ...என்ன பேச்சு அது ...மறுத்து பேச தோன்றுகிறதா எதிரிக்கு .ஆக...என் வாழ்வின் அடுத்த துரோகம் ..நான் மிக நம்பி அழைத்து வந்த இந்த அனுசூயா .


நானிருக்கும் வரை இனி ஒரு துரோகம் அவர்களை தீண்டுவதை அனுமதிக்க மாட்டேன் ...என் வயிற்றில் நான் சுமந்து பெற்ற பிள்ளை இப்படி பேசியிருக்குமா ?..இவள் ...பெண்ணா ..தேவதையா ...என் குடும்பத்தை நேர் படுத்தினாள் வீட்டை ஒழுங்குபடுத்தினாள் , என் பிள்ளைகளையும் ,கணவரையும் எனக்கு திரும்ப தர முயற்சிக்கிறாள் .
விரக்தியால் நான் தூக்கி போட்ட என் வாழ்வை அழகாக புதுப்பித்து என்னிடம் வழங்குகிறாள் .இனியும் அதனை மறுத்தால் என்னைப்போல் முட்டாள் இருக்க மாட்டார்கள் .


மழைக்கான அறிகுறிகள் வானில் தோன்ற ஆரம்பிக்க , வண்ணமாய் வானில் மலர்ந்தது வானவில் ஒன்று .அந்த வானவில்லின் பின்னனியில் சென்று கொண்டிருக்கும் சபர்மதி தேவதையாக அம்சவல்லி கண்ணுக்கு தெரிந்தாள் .


ஒரு நல்ல முடிவோடு கண்களை துடைத்துக்கொண்டு எழுந்தாள் அம்சவல்லி .



அன்று மாலை சபர்மதி வீடு திரும்புகையில் கண்ட காட்சி அவள் வாழ்நாள் முழுவதும் நெஞ்சில் சேமித்து வைக்க கூடியதாக இருந்தது .


அப்பாவும் , தர்மன் அண்ணாவும் ஒரு சோபாவில் அமர்ந்த படி எதற்கோ சிரித்துக்கொண்டிருக்க , பெரியம்மாவும்  , விடுமுறைக்கு வீட்டுக்கு வந்திருந்த ராஜன் அண்ணாவும் ஒருவரோடு ஒருவர் செல்லமாக அடித்து விளையாடிக்கொண்டிருந்தனர் .கையில் காபி டிரேயோடு தள்ளி நின்று அவர்களை ரசித்துக்கொண்டிருந்தாள் அனுசூயா .


ஒரு இனிய கவிதையாக இருந்தது அந்த காட்சி .மனதோடு கண்களும் நிறைய அதை அவர்களை பார்த்தபடி நின்றாள் சபர்மதி .தர்மன்தான் அவளை முதலில் பார்த்தான் .


".தங்கச்சி ...".கத்தியவன் ...வேகமாக ஓடி வந்து அவளை பிடித்து இழுத்து "வா ...வா ...இந்த அம்மா  ரொம்ப வம்பு பண்றாங்க .நானும் தம்பியும்  அவுங்களை  நல்லா அடிச்சிட்டோம் .
நீயும் வந்து நல்லா ரெண்டு உதை கொடு ..வா...வா ..."


இழுத்து வந்து அம்சவல்லி எதிரில் நிறுத்தினான் .அம்சவல்லியும் , சபர்மதியும் ஒருவரையொருவர் சில கணங்கள் பார்த்தனர் .



"கண்ணோடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் 
என்ன பயனும் இல "


காதலுக்கு மட்டுமே இக்குறளை சொல்லவில்லை வள்ளுவர் பெருந்தகை .அன்பிற்கு...பாசத்திற்கு  ....இவ்வுலகையே ஆட்டிப்படைக்கும் ஆற்றல் பெற்ற அன்பிற்கும் உரியவை இச்சொற்கள் .


" அடி ...அம்மாவை அடி ..."  சபர்மதியின் கைகளை பற்றிக்கொண்டு குதித்தபடி இருந்தான் தர்மன் .விளையாட்டாக அடிப்பது போல் ஓங்கிய சபர்மதியின் கரங்களை பற்றி , அவளை தன்னோடு அணைத்துக்கொண்டாள் அம்சவல்லி .


" பெரியம்மா ..." விம்மினாள் சபர்மதி .


" யாரடி உனக்கு பெரியம்மா ...அம்மான்னு கூப்பிடுடி ...ஏன் ...உன்னை நான் என் வயிற்றில் சுமக்கவில்லை .அதற்காக பெரியம்மா என்றழைத்து அந்நியமாக்குவாயா ...? ஏக்கத்துடன் கேட்டாள் அம்சவல்லி .


" அம்மா ..." ஆனந்த கதறலுடன் அவளை அணைத்துக்கொண்டாள் சபர்மதி .இக்காட்சி குடும்பத்தினருக்கு மட்டுமல்ல வேலையாட்களுக்கும் கண்ணில் நீரை வரவழைத்தது .


" ஐ....அம்மாவும் தங்கச்சியும் ஒரே கொஞ்சல் ..." கை தட்டி ஆர்பரித்த தர்மனின் குரலுக்கு தோட்டத்து மயில்கள் தோகை விரித்தன .


அன்பும் , பாசமும் எங்கே ஆட்சி செலுத்துகிறதோ , அங்கே இயற்கையும் தன் கருணை கரங்களை விரிக்கிறது .மழை வரப்போவதால் மயில்கள் ஆடினவோ , மயில்கள் ஆடியதால் மழை வந்தோ ...அன்பு வெள்ளத்தில் திளைக்கும் அக்குடும்பத்தை ஆசீர்வதிப்பது போல் மழை பொழிந்து பூமி குளிர்ந்தது .


- தேவதை வருவாள்.




0 comments:

Post a Comment

Blogger News

வணக்கம் தோழமைகளே , எனது " வா என் வண்ண நிலவே " கதைக்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு மிக்க நன்றி. இதோ உங்கள் முன் எனது அடுத்த கதை " வானவில் தேவதை " கறுப்பென்பது பிழையல்ல .மனமிருப்பின் வரமே என்பதனை என் முதல் கதையில் கூறியிருந்தேன். சொந்தங்கள் இல்லாத வாழ்வு வாழ்வல்ல.சந்தர்ப்ப சூழ்நிலைகளே சொந்தங்களின் பாசத்தை மறைக்கிறது என்பதனை இரண்டாவது கதையில் கூறியிருக்கிறேன் காதல் கலந்து.படித்து பாருங்கள்.
 

Blogger news

Blogroll