Pages

Powered by Blogger.

வானவில் தேவதை - 27




சந்தன நிற முழுக்கை சட்டையை , கறுப்பு கலர் பேன்ட்டினுள் இன் பண்ணிக்கொண்டு , அலையலையாக பறந்து நெற்றி மீது படர்ந்த தனது முடியை லாவகமாக ஒதுக்கியபடி ... ஒரு அரசனின் கம்பீரத்தோடு காரிலிருந்து இறங்கி அலட்டலில்லாத நேர் நடையுடன் உள்ளே வந்து கொண்டிருந்த பூரணசந்திரன் , சபர்மதியை நெருப்பில்லாமல் எரிய வைத்துக்கொண்டிருந்தான் .


இவன்தான் எவ்வளவு அழகாக இருக்கிறான் .இவனை எந்தப்பெண்தான் விரும்பாமல் இருப்பாள் ? அந்த ஸ்வாதி மட்டும் எப்படி விதிவிலக்காவாள் ...

.இவ்வளவு மன உறுதியுடன் இருக்கும் என்னையே எளிதாக புரட்டி போடுகிறானே ...ம் ....நிறைவேறா தாபத்துடன் நெடு மூச்சு விட்டபடி ...


" சதிஷ் இவர்தான் ..."  என அவனுக்கு பூரணனை அறிமுகப்படுத்துவதற்காக திரும்பியவள் , திடுக்கிட்டாள் 


'பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்த்தது போல் ' என்பார்களே அது போல் பூரணனை பார்வையிட்டுக்கொண்டிருந்தான் அவன்.வாயை "ஆ ", வென திறந்து வைக்காதது ஒன்றுதான் மீதம் .


ஆனால் பூரணன் அருகே நெருங்க , நெருங்க சதிஷ் வாயையும் திறக்க கூடிய சாத்தியம் தெரியவே , சுற்றுமுற்றும் பார்த்த சபர்மதி ஆபத்திற்கு பாவமில்லை என முடிவு செய்து ,அருகில் கிடந்த டென்னிஸ் பேட்டை எடுத்து அவன் முதுகில் ஒன்று வைத்தாள் .


ஆவென லேசாக கத்தியவன் தன் முதுகை லேசாக தடவியபடி , "ஏய் சபர் அங்கே பாரேன் , ஒரு சார்மிங்  ..எங்...ஹீரோ .அட ..அட ..நடையைப்பாரேன் ...அப்படியே ராஜநடை ...யார் இது ? உங்க உறவுக்காரரா ...? "



" அறிவுகெட்டவனே ...இவர்தான்டா பூரணசந்திரன் ..."



" என்னது இவரா ...உனக்கென்ன பைத்தியமா ..இவரையா ..." என கத்தும்போது உயர்ந்து விட்ட சதிஷின் குரலை அடக்க சபர்மதி மீண்டும் டென்னிஸ் பேட்டை கையில் எடுக்க வேண்டியிருந்தது .


" மெல்ல பேசு முட்டாள் ...", அடிக்குரலில் உறுமினாள் சபர்மதி .


வராண்டாவில் ஓய்வாக அமர்ந்திருந்த சத்யேந்திரனிடம் பேசிவிட்டு , உள்ளே வந்து கொண்டிருந்த பூரணசந்திரன் பார்வை தங்கள் மேல் படிவதை கண்டவுடன் , அவசரமாக தனக்கும் சதிஷிற்கும் இடையே இருந்த இடைவெளியை குறைத்துக்கொண்டாள் சபர்மதி .


சிறு புன்னகையுடன் அவர்களிருவரையும் நெருங்கிய பூரணசந்திரன் " ஹலோ சதிஷ் .." என கை குலுக்க நீட்டினான்.


பூரணனின்  நீட்டிய கைகளை வேகமாக பற்றிக்கொண்ட சதிஷ் " ஹலோ சார்...எப்படி சார் உங்களுக்கு என்னை தெரியும் ? ... ஆளைப்பார்த்ததும் பெயரை சொல்லிட்டீங்களே , செம பிரில்லியன்ட் சார் நீங்க " பிரமிப்புடன் கூறினான் .


" ஐயோ...இதில் என்னடா பிரில்லியன்ட் .அவர்தான் உன்னை முகநூலில் பார்த்திருக்கிறாரே ...மரமண்டைடா நீ ..." சபர்மதி அவனை நொந்து கொண்டாள் .


" அப்புறம் ....சொல்லுங்க ..." தன்மையாக விசாரித்தான் பூரணன் .


" என்ன ..என்ன சார்...சொல்லனும் "  ...குழம்பினான் சதிஷ் .


" சொல்ல ஒண்ணுமில்லையா ..ம் ..." என்று சபர்மதியை பார்த்தான் பூரணன் .அவள் சொல்லு ..சொல்லு ...என சதிஷை பார்த்துக்கொண்டிருந்தாள .


" அ...அது...வந்து ....சார் நான் ...வந்து. ..இங்கே ..."


", ம் ...சொல்லுங்க எதுக்கு வந்தீங்க ...சபர்மதி என்ன சொல்ல சொன்னாள் ..?",


" அவளா ..அவள்...வந்து ..." என உற்சாகமாக ஆரம்பித்தவன் , சபர்மதியின் முறைப்பை கண்டதும் , " நான் சும்மா இங்கே சுற்றி பார்க்க வந்தேன் சார் ...இதோ இப்ப நானும் சபர்மதியும் வெளியே கிளம்ப போறோம் ..."


" ஓ...ஆனால் சபர்மதிக்கு இங்கே வேலை இருக்கிறதே ...நான் எஸ்டேட் பக்கம்தான் போகிறேன்.என்னோடு வாருங்களேன் ...."


" ஓ...போகலாமே ..." உற்சாகமாக தலையாட்டியவன் , சபர்மதியை பார்த்ததும் " இல்லையில்லை ...நாங்கள் இரண்டு பேரும்தான் ...."
என்று நிறுத்தினான் .



" எனக்கு இங்கு எந்த வேலையும் கிடையாது .நாங்கள் இருவரும் வெளியே செல்ல போகிறோம் ...", சத்தத்தை உயர்த்தி அறிவித்தாள் சபர்மதி .


" வேலை இருக்கிறது மதி ...என்னோடு வா " மாடி ஏற துவங்கினான் .


அசையாமல் நின்றபடி "என்ன .என்ன வேலை ...? " என்றாள்.


" சதிஷ் ..நீங்கள் சென்று ஒரு காபி குடிங்களேன் .நாங்கள் அதற்குள் சிறு விபரம் பேசி விடுகிறோம் .." சபர்மதியை கவனத்திலேயே கொள்ளாமல் சதிஷிடம் கூறினான் .


காவேரியின் மணமான பில்டர் காபி நினைவு வந்து விட , போகாதே என்ற சபர்மதியின் பார்வையை சந்திக்க கூட செய்யாமல் சாப்பாட்டு அறைக்கு நடந்துவிட்டான் சதிஷ் .


திரும்பி மேலே பார்க்க பூரணன் மாடியேறி சென்றுவிட்டான் .அப்படி என்ன இவர் பின்னாலேயே ஓடி வருவேனென்ற நிச்சயம் , நான் போக மாட்டேன் .சட்டமாக சோபாவில் அமர்ந்து சம்மணம் போட்டுக்கொண்டாள் சபர்மதி .


இந்த சதிஷ் மடையனை என்ன சொல்லி வரவழைத்தேன் .அவன் என்ன செய்து கொண்டிருக்கிறான் .வரட்டும் ..அவனை ...மனதிற்குள்ளாக இரு ஆண்களையும் திட்டியபடி சபர்மதி அமர்ந்திருந்தது , இரண்டு நிமிடங்களாகத்தான் இருக்கும் .


ஹாலின் அந்த மூலையில் அலங்காரத்திற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்த பெரிய பித்தளை குத்து விளக்கை தூசு தட்டி அழுந்த துடைத்துக்கொண்டிருந்த அனுசூயா கண்களில் பட்டாள் .மறு விநாடி சபர்மதியின் உள்ளத்தில் பரிதாபம் சுரந்தது .இவள் ...இவளைப்பற்றி பூரணனிடம் பேச வேண்டுமே ...


நொடியில் சதிஷை மறந்தாள் .கடகடவென மாடியேறியவள் அங்கு தனக்காக சோபாவில் அமர்ந்தபடி காத்துக்கொண்டிருந்த பூரணனிடம் , " அனுசூயா ..." என்றாள் .


" அதனை பேசவே உன்னை வர சொன்னேன் .அந்த டைரி எனக்கு வேண்டுமே ..."


" அது அண்ணனின் அறையில்தான் இருக்கும் .அவர் இல்லாத நேரம் நாம் அங்கு போவது சரியில்லையே ..."


" எல்லாம் சரிதான் வா ...இடத்தை காட்டு ...."


தர்மனின் அறைக்குள் நுழைந்தார்கள் .பீரோவில் இருந்த டைரியை எடுத்து கொடுத்தாள் சபர்மதி .பரவலாக அந்த டைரியை புரட்டினான் பூரணன் .அந்த சம்யுக்தாவை தனது பொபைலில் ஒரு போட்டோ எடுத்தான் .


" போட்டோ எதற்கு .."


" இவளைப்பற்றி எதுவும் விபரம் கிடைக்கிறதா என பார்ப்போம் "


" அது எதற்கு நமக்கு .? அண்ணனும் அவளைப்பற்றிய விபரங்களுக்காகத்தான் முயற்சித்து கொண்டிருக்கிறார் என நினைக்கிறேன் .

அவர் இன்னும் இவளை மறக்கவில்லை என்றே தோணுகிறது .அவருக்கு மனநிலை சரியில்லாத போது , நானும் அவருமாக வீட்டை விட்டு போக நினைத்தோமே , அன்று கூட அவளைப்பற்றி ஏதோ புலம்பினதாக எனக்கு ஞாபகம் .இப்படிப்பட்ட துரோகி மேல் இன்னுமா அன்பு வைத்திருப்பார் ...? " வருத்தத்துடன் கூறினாள் சபர்மதி .


அமைதியாக அவள் சொன்னதை உள்வாங்கியபடி இருந்தான் பூரணன் .


" அனுசூயாவை பார்க்கும் ஒவ்வொரு முறையும் மனதை என்னவோ செய்கிறது .அந்த சம்யுக்தா கடைசி வரை அண்ணன் கண்ணில் படாமலே இருந்து விட்டால் , அண்ணன் அனுசூயாவை ஏற்றுக்கொள்ள வாய்ப்பிருக்கிறது.அதைத்தான் நான் அந்த வேலவனிடம் வேண்டிக்கொண்டிருக்கிறேன் ."


" ம் ...என்று தலையசைத்துக்கொண்டான் பூரணசந்திரன்.மீண்டும் டைரியை அலமாரியில் எடுத்த இடத்தில் வைத்துவிட்டு வெளியே வந்தனர் .


முன்னால் நடந்த சபர்மதியின் கூந்தலை மெல்ல பற்றி பார்வையிட்ட பூரணன் " மதி ...ஒரு வருடத்தில் உனக்கு முடி நன்கு வளர்ந்து விட்டது போலவே ..." என்று விசாரித்தான் .தலை குளித்து உலர்வதற்காக முடியை விரித்து விட்டிருந்தாள் சபர்மதி .


சபர்மதிக்கு இயற்கையாய் நன்கு அடர்த்தியான நீண்ட முடி .ஆனால் வேறு வேறு விக் வைக்க வேண்டியிருப்பதால், அவள் தன்  தலைமுடியை தோள் வரை வெட்டி விட்டிருந்தாள் .


இங்கு வந்ததும் மீண்டும் முடி வளர்க்க ஆசைப்பட்டு வெட்டுவதை நிறுத்தி விட , கருகருவென வளர்ந்து இடையை தொட்டிருந்தது அவள் கூந்தல் .இப்போது பூரணன் விசாரித்ததும் 
மிகவும் சந்தோசமாகி ...


" ஆமாம் ..நல்லா வளர்ந்திடுச்சி இல்லை ." என்று தன் பாதி கூந்தலை அள்ளி முன்னால் போட்டுக்கொண்டாள் .


" மிகவும் அழகாக ...." சொல்லியபடியே ...தன் கைகளால் 
அவள் கூந்தல் அளைந்தான் .படபடக்கும் நெஞ்சுடன் கண்களை மூடிக்கொண்டாள் சபர்மதி .மெல்ல அவளின் மிக அருகே நெருங்கி , அவள் கூந்தலை முகர்ந்தவன் 


" என்ன வாசம் மதி இது ...ஷாம்புவா ..சீயக்காவா ...அல்லது எதுவும் ஸ்பிரேயா ...ஆளை மயக்குகிறது ..."


கூந்தல் வாசம் பிடிக்கும் சாக்கில் அவள் கன்னம் வாசம் பிடித்துக்கொண்டிருந்தான்.ஒற்றை விரலால் அவள் கன்னம் வருடியவன் "எவ்வளவு மென்மை ..." என வியந்தபடி அவள் முகம் நோக்கி குனிய , கரடியாய் சத்தமிட்டது அவன் போன் .


தன்னுணர்வு மீண்ட சபர்மதி , தான் இருந்த நிலை கண்டு அதிர்ந்து அவனை தள்ளி விட்டு விட்டு , தன் அறைக்குள் நுழைந்து கதவை மூடிக்கொண்டாள் .


மூச்சு வாங்க தனது அறைக்கட்டிலில் அமர்ந்தவள் , நீள நீள மூச்சுகளாய் எடுத்து தன்னை சமாளிக்க முயற்சித்தாள் .


என்ன செய்ய ? இப்படி நடக்குமென்று எதிர்பார்க்கவில்லையே ...ஆனால் நான் எதிர்பார்த்திருக்கத்தானே வேண்டும் ? என்று ஸ்வாதியிடம் குடும்பத்திற்காக ஒருத்தி , எனக்காக ஒருத்தி என பேசிவிட்டானோ அன்றே இதற்கெல்லாம் அவன் அஞ்சாதவனாகத்தானே இருக்க வேண்டும் .வெகு நேரமாக தன்னையே நொந்தபடி அமர்ந்திருந்தாள் சபர்மதி .



அவனுக்கு வேண்டுமானால் இதெல்லாம் சாதாரணமாக இருக்கலாம் .ஆனால் நான் எப்படி  அப்படி எனை மறந்து நின்றிருந்தேன் .சபர்மதிக்கு யோசிக்க யோசிக்க அழுகைதான் வந்தது .ஒன்று மட்டும் அவளுக்கு தெளிவாக தெரிந்தது .


இனி பூரணனுடனான தனிமையை முடிந்த வரை தவிர்ப்பதுதான் தனக்கு நல்லது .அதன் பின் அவனிடமிருந்து  முடிந்த வரை தூரம் செல்வது. அதற்கு உதவத்தான் சதிஷை வரவழைத்திருந்தாள் .



திடீரென இப்போதுதான் சதிஷ் நினைவு வர ,அவன் எங்கே ? .அவனிடம் சில விசயங்களை விளக்கி பூரணனிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க சொல்ல வேண்டும்


 அவன் ஏற்கெனவே பூரணசந்திரனை பார்த்து பிரமித்து போய் இருக்கிறான் , அதை முதலில் உடைக்க வேண்டும் இப்படி  எண்ணியபடி கீழே இறங்கி வந்து சதிஷை தேட அவனும் , பூரணனும் வெளியே கிளம்பி போய் விட்டதாக அம்சவல்லி கூறினார்.


ஐய்யய்யோ சதிஷிடம் நான் ஒன்றுமே கூறவில்லையே்அவன் எதையாவது உளறிக்கொட்டிக்கொண்டு இருப்பானே .பதறிய சபர்மதி தனது மொபைலை எடுத்து சதிஷை தொடர்பு கொண்டாள் .



மறுமுனை ரிங் போய் , எடுக்கப்பட ஹலோ என சதிஷின் மொபைலில் ஒலித்தது பூரணசந்திரன்  குரல் .


என்ன இது அவன் நினைப்பாகவே இருப்பதால் யாருக்கு போன் போட்டாலும் அவன் குரலே ஒலிப்பது போல் தோன்றுகிறதோ ?.இல்லை தப்பு நம்பர் போட்டுவிட்டேனா...?  யோசித்தபடி போனை கட் பண்ணி விட எண்ணியபோது ..


" கட்  பண்ணி விடாதே சபர்மதி. உன் நணபர் இதோ என் எதிரில்தான் இருக்கிறார் .என்ன விசயம் ..."


" போனை அவரிடம் கொடுங்கள் ." என்றாள் கண்டிப்பாக .


", கொடுக்கலாமே , ஆனால் சிறிது நேரம் ஆகும் .உன் உயிர் தோழர் இதோ இந்த பள்ளத்தில் ஓடும் ஓடையை இறங்கி பார்க்க ஆசைப்பட்டார் . அதனால் அதோ.... அங்கே நின்று கொண்டிருக்கிறார் .ஏறி வர பத்துநிமிடங்கள் ஆகலாம் .அது வரை நாம் பேசிக்கொண்டிருக்கலாமே .." என்றான் .


" உங்களிடம் பேச எனக்கு ஒன்றும் இல்லை ...." சீறினாள் சபர்மதி .


",  நானும் பேச போவதில்லை டியர் .அதற்கு பதிலாக இதோ இப்படி ...." என்றவன் தொடர்ந்து போனில் "இச் " என ஓசையெழுப்ப, சபர்மதி அதிர்ந்து இல்லாத ஈரத்தை கன்னத்தில் துடைத்துக்கொண்டாள் .


" என்ன இது ...." என்றாள் குரலில் கடுமை காட்ட முயற்சித்தபடி .


" உனக்கு பேச்சு மொழி புரிவதில்லை .செய்கை மொழிதான்  புரியும் போல ...அதனால்தான் ...."


" போதும் நிறுத்துங்கள் ...உங்களது இந்த விளையாட்டுக்கு நான் ஆளில்லை " ஆத்திரமாக கத்திவிட்டு போனை வைத்த சபர்மதியின் குரலில் இறுதியில் அழுகை கோடிட்டிருந்ததை உணர்ந்த பூரணன
புரியாமல் போனை வெறித்தான் .


அன்று இரவுதான் சதிஷ் வீடு திரும்பினான் .மீண்டும் பூரணன் புகழ் பாட , தயாராக வந்தவனை வாயிலிலேயே வாயடைத்து " என்ன நாமிருவரும் காதலிப்பதாக அவரிடம் கூறிவிட்டாயல்லவா..." எனக்கேட்டாள் சபர்மதி .


திருதிருவென விழித்தவன் " ஆமாம் ....ஆமாம" ் என தலையாட்டினான் .
" ம் ...ஒரு தடவை மட்டுமல்ல , இனி நீ இங்கிருந்து கிளம்பும் வரை அவரை பார்க்கும் நேரமெல்லாம் சொல்லிக்கொண்டே இரு ..."


" சரி...சரி என்ற தலையாட்டல் " இதற்கு .


சதிஷ் மட்டுமல்ல நானுமே இனி மிக கவனமாக இருக்க வேண்டும் .பூரணன் மூச்சுக்காற்று படும் இடத்தில் கூட இனி நிற்ககூடாது.தனக்குள்ளாகவே உறுதி எடுத்துக்கொண்டாள் சபர்மதி 


.அடுத்த  நான்கு தினங்களாக இந்த உறுதியை செயல்படுத்துவது சபர்மதிக்கு கடினமாக இல்லை .ஏனெனில் பூரணன் நான்கு தினங்களாக சோலைவனம் வரவில்லை .


ஐந்தாவது நாள் காலை , சோலைவனம் வந்த பூரணனை கண்டதும் தனது உறுதியெல்லாம் காணாமல் போய்விட, பூரணனின் சட்டையை பிடித்து உலுக்கும் ஆத்திரம் வந்தது .


ஏனெனில் தளுக்கு நடையுடன் , மினுக்கும் சிரிப்புடன் பூரணனுடன் வந்தவள் சம்யுக்தா .


மெனக்கெட்டு அவளை தேடி அழைத்து வந்ததுமில்லாமல் , அதோ வெளியே கிளம்பிக்கொண்டிருக்கும் தர்மனை வேறு அவளுக்கு கை காட்ட


அவள் சுற்றுப்புறம்  மறந்து " தர்மா " என கத்தியபடி வந்து தர்மனின் தோள்களில் தொற்றிக்கொண்டாள் .


நெருப்புக்கோளங்கள் இரண்டை கண்களில் ஏந்தி , பூரணனை முறைக்க துவங்கினாள் சபர்மதி .




                                                                                           - தேவதை வருவாள்.










0 comments:

Post a Comment

Blogger News

வணக்கம் தோழமைகளே , எனது " வா என் வண்ண நிலவே " கதைக்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு மிக்க நன்றி. இதோ உங்கள் முன் எனது அடுத்த கதை " வானவில் தேவதை " கறுப்பென்பது பிழையல்ல .மனமிருப்பின் வரமே என்பதனை என் முதல் கதையில் கூறியிருந்தேன். சொந்தங்கள் இல்லாத வாழ்வு வாழ்வல்ல.சந்தர்ப்ப சூழ்நிலைகளே சொந்தங்களின் பாசத்தை மறைக்கிறது என்பதனை இரண்டாவது கதையில் கூறியிருக்கிறேன் காதல் கலந்து.படித்து பாருங்கள்.
 

Blogger news

Blogroll