Pages

Powered by Blogger.

வானவில் தேவதை - 31








கார் கிளம்பி சென்ற ஐந்து நிமிடங்களில் சபர்மதியை தேட துவங்கிவிட்டான் பூரணசந்திரன் .


பத்தாவது நிமிடம் அவள் வீட்டில் இல்லையென தெரிந்துவிட்டது . 


பதினைந்தாம் நிமிடம் அனுசூயாவையையும் காணவில்லையென தெரிந்துவிட்டது .


ஸ்வாதியும், சம்யுக்தாவும் காரை ஓட்டியபடி வெளியேறியது தெரிய வர , சிறுமலையின் முடிவில் இருக்கும் போலீஸ் செக்போஸ்ட்க்கு 
போன் மூலம் , ஸ்வாதியின் கார்நம்பர் அடையாளம் , அனுப்பி விட்டு தீபக்குமார் கார் ஓட்ட  ஆண்கள் மூவருமாக கிளம்பிவிட்டனர் .



" நான்தான் அறிவில்லாமல் தர்மனை வேண்டாமென ஒதுக்கி விட்டு ஓடினேன் .அதனால் என்னால் அவனை மீண்டும் பிடிக்க முடியவில்லை .


திரும்பி வந்த என்னை அவனுக்கு பிடிக்கவில்லையென்று நன்கு என்னால் உணர முடிந்தது .இருந்தும் என்னை வீட்டை விட்டு வெளியேற்றாமல வைத்திருந்ததால் , எப்படியாவது என்னை மணம் முடிக்க வைத்து விடலாமென எண்ணிக்கொண்டிருந்தேன் .



ஆனால் உனக்கென்ன பிரச்சினை ? நீயும் பூரணசந்திரனும் ஆரம்பத்திலிருந்தே ஒன்றாக படித்தவர்கள் .நண்பர்கள் .பின் ஏன் உன்னால அவனை கைக்குள் போட முடியவில்லை ? " சம்யுக்தா கேட்டாள் .


" ம்...நண்பர்கள்தான் ...காலேஜ் படிக்குப்போதே நான்தான் அவன் பின்னால் சுற்றிக்கொண்டிருப்பேன் .அவன் ஒருநாளும் என்னை திரும்பி பார்த்ததில்லை .


பின் படிப்பு முடிந்ததும் நானும் பல நாடுகள் சுற்றிவிட்டு வந்து எல்லாவற்றையும் நன்கு அனுபவித்து விட்டு , எதிலும் பற்றில்லாமல் இருந்தேன் .


அப்பா திருமணம் செய்து கொள்ள சொல்லிக்கொண்டிருந்தார் .அதற்கு நல்ல வசமான ஆளை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த போதுதான் மீண்டும் பூரணனை பார்த்தேன் .



ஏதோ மருந்து , கண்டுபிடிப்பு ...அது ..இதுவென உளறியபடி அப்பாவை காண வந்திருந்தான் .எனக்கு அவனை பார்த்ததுமே இவனை விட நல்ல கணவன் நமக்கு கிடைக்க மாட்டானென தோன்றிவிட , அப்பாவிடம் சொல்லி இந்த ப்ராஜெக்ட்டை எடுத்து கொள்ள சொன்னேன் .இதனால் பூரணன் கொஞ்சம் என் பக்கம் திரும்பி பார்க்க ஆரம்பித்தான் .



ஆனால் தொழில் விசயம் தவிர அதிகப்படியாக ஒரு வார்த்தை வாயிலிருந்து வராது .


இப்போது அப்பாவிற்கே இவனது ப்ராஜெக்ட்டில் சுவாரஸ்யம் பிறந்து விட இது போல் உலக சுற்றுப்பயண ஐடியா சொன்னது அவர்தான் .அந்த பயணத்தின் போது பூரணனுடனேயே சென்று , அங்கே வைத்து அவனை வளைத்து விட எண்ணியிருந்தேன் .



இடையில் சனியனாக இந்த சபர்மதி வந்து தொலைந்தாள் .தான் அவளை திருமணம் செய்து கொள்ள போவதாக பூரணன் என்னிடம் தெரிவித்துவிட்டான் .


ஆனால் அவர்களுக்குள் நல்ல உறவில்லையென அன்று விமான நிலையத்தில் உணர்ந்து கொண்டேன் .



வெளிநாட்டில் பூரணனை எவ்வளவோ என் பக்கம் இழுக்க முயற்சித்தேன் .ம்ஹூம் ...எனக்கு முழு தோல்வி .


பிறகுதான் சபர்மதியிடம் முயற்சிக்கலாமென தோன்ற , நம்பிக்கையின்றிதான் ஆரம்பித்தேன் .ஆனால் பலன் நூறு சதவிகிதம் .சில செட்டப்புகளுடன் நடந்த என்  வீடியோ சாட்டிங்கை சபர்மதி அப்படியே நம்பிவிட்டாள் 

.உடல்நலம் சரியில்லை, கொஞ்ச நேரம் துாங்குகிறேன் .எனக்கு மருந்து வாங்கி வா என அவனை அனுப்பி விட்டு இவளுடன் சாட்டிங் செய்து காதில் பூ சுற்றினேன். அந்த மடச்சி நம்பி விட்டாள்.



அங்கே இருந்தபடியே வெற்றிகரமாக இருவரையும் பிரித்து வைத்தேன் .ஆனால் இங்கு வந்ததும் பூரணன் என்னை இனம் கண்டுகொண்டானென நினைக்கிறேன் .என் திட்டங்கள் எதுவும் நடக்கவில்லை .


இந்த ப்ராஜெக்ட்டை நிறுத்த அப்பாவிடம் கேட்டபோது காலம் கடந்து விட்டதாக அவரும் மறுத்துவிட்டார் .


இவ்வளவுக்கும் காரணமான இந்த சபர்மதியை உருத்தெரியாமல் ஆக்க வேண்டுமென்றுதான்  சில ஏற்பாடுகள் செய்து திட்டம் போட்டுக் கொண்டு இன்று காலை இங்கே வந்தேன் .


எதிர்பாராமல் நீயும் என்னோடு சேர்ந்து கொண்டாய் .இதோ நம் திட்டம் இன்னும் சிறிது நேரத்தில் அப்படியே நிறைவேற போகிறது " முடித்தாள் ஸ்வாதி .



திண்டுக்கல் ரயில்வே ஸ்டேசனில்  ஆட்களை நிற்க சொல்லியிருக்கிறேன் .


இவளுகளை அவர்களிடம் ஒப்படைத்து விட்டு நீ உன் வழியில் போய்விடு .நான் என் வழியில் போய்விடுகிறேன் 


.நாளை விசாரணை வந்தால் எங்களுக்கு விழாவில் கலந்து கொள்ள பிடிக்காமல் வெளியேறி விட்டோம் .வேறு ஒன்றும் தெரியாது என சாதித்து விடுவோம் ." என்று தன் திட்டத்தை முழுமை படுத்தினாள் .



திடீரென அவர்கள் கார் நிறுத்தப்பட்டது .ஒரு பைக்கால் ...



" இந்நேரம் பைக்கை கொண்டு வந்து  எவன் உள்ளே விடுகிறான் " சலித்தபடி கீழே இறங்கிய ஸ்வாதி அந்த பைக்காரன் ஹெல்மெட்டை சுழற்றியதும் அரண்டு ஓட முயன்றாள் .


பின்னாலேயே இறங்கிய சம்யுக்தாவும் அவளை தொடர முயல " எங்கே ஓடுகிறீர்கள் " என இருவர் முடியையும் பற்றி இழுத்து ஒரு கயிற்றினால் இருவரையும் சேர்த்து கட்டியவன் ராஜசேகரன் .அவன் பைக்கில் குறுக்கு வழியில் வந்திருந்தான் .



பத்தே நிமிடங்களில் காரில் வந்து இறங்கிய தர்மனையும் , பூரணனையும் பார்த்த ஸ்வாதி குழம்பினாள் .எப்படி இவ்வளவு சீக்கிரம் வந்தனர் என்று .



பாசத்திற்கும், அன்பிற்கும் , காதலுக்கும் ,.... நேரமோ ,காலமோ , தூரமோ ஒரு பொருட்டில்லை என்பது பாவம் அவளுக்கு தெரியவில்லை .



ஆண்கள் இருவருமாக அவர்களை அடித்து நொறுக்கிவிடும் உத்தேசத்தில் கையை முறுக்கியபடி வர, "அவர்களை ஒன்றும் செய்யாதீர்கள்எங்களுக்கு ஒன்றுமில்லை "என்ற குரலுடன் பின்னாலிருந்து எந்த குறைவுமின்றி புது மலராக இறங்கி வந்தனர் சபர்மதியும், அனுசூயாவும் .


நடக்கையில் சிறு கல் ஒன்று தடுக்க தடுமாறிய அனுசூயாவை தாங்கி நிறுத்தினான் தர்மன்.அழகான காதலொன்று ஆரம்பமானது அங்கு.



விழா மிக நல்லபடியாக நடந்து முடிந்தது .என் வாரிசுகள் என சத்யேந்திரன் தன் மகன்களோடு  மகளையும் அறிமுகம் செய்தார் .



என் மனைவியாகப்போகிறாள் என தர்மன் அனுசூயாவை அறிமுகப்படுத்த , என் கணவராகப்போகிறாரென சபர்மதி பூரணசந்திரனின் கை கோர்த்துக்கொண்டாள் .


வாயார வாழ்த்தி , வயிறார உண்டு விடை பெற்றனர் விருந்தினர் .


குடும்பத்தினர் மட்டுமாக தனித்திருக்கையில் சபர்மதியின் காதுகளை பற்றி திருகினான் பூரணன் .



" எந்த தைரியத்தில் அவள் உன்னை கடத்த போகிறாளென தெரிந்தும் அவள் பின்னே போனாய் ? அப்படி ஒரு எண்ணம் அவளுக்கிருப்பது தெரிந்தவுடன் எங்களிடம் கூறியிருக்க வேண்டாமா ?"என அதட்டினான் .


" நீங்கள் இருக்கும் தைரியத்தில்தான் மாமா அப்படி போனேன் .எப்படியும் நீங்கள் என்னை காப்பாற்ற வந்துவிடுவீர்களென்ற தைரியம்தான் " மையல் பார்வையொன்றை பூரணன் புறம் வீசுயபடி கூறினாள் சபர்மதி


" தப்பம்மா ஒரு மணி நேரத்தில் நாங்கள் எல்லோரும் எப்படி தவித்து விட்டோமென தெரியுமா ? "கண்கலங்க சத்யேந்திரன் இடையிட்டார் .


"  இல்லைப்பா எனக்கு அவளிடமிருந்து சில விபரங்கள் அவள் வாயாலேயே ் வேண்டியிருந்தது .அதற்காகத்தான் போனேன் .


அவள் மயக்க மருந்தை உபயோகிக்கும் முன்பே மயங்கியது போல் நடித்தேன் .அனுசூயாவும் வருவாள் என நினைக்கவில்லை.அவளையும் இவர்கள் உள்ளே இழுத்து போட்டார்கள் .

என் கை அழுத்தத்தினால் ஏதோ உணர்ந்து அவளும் எனக்கு ஒத்துழைத்தாள் . என் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை .அந்த ஸ்வாதியே எனக்கு தேவையானவைகளை கொட்டி விட்டாள் .தவிரவும் இன்னோரு களையையும் கண்டு கொண்டோமே " என்றவள் தர்மனிடம் திரும்பி


" சம்யுக்தா பற்றி தெரிந்தும் நீங்கள் ஏன் அண்ணா அவளை வீட்டினுள் அனுமதித்திருந்தீர்கள் ? " என கேட்டாள் .


" அது எனக்கு நானே வைத்துக்கொண்ட பரீட்சை .என்றான் தர்மன் .
" ஆமம்மா நீ என் மனநிலை தெளிந்தவுடனேயே அனுசூயா பற்றி கூறிவிட்டாய். ஆனால் என் மனதின் ஒரு ஓரத்தில் சம்யுக்தா உறுத்திக்கொண்டே இருந்தாள் .ஒரு முறை அவளை நேரில் பார்க்க எண்ணியிருந்தேன் .



அதற்குள் மாமா அவளை இங்கேயே அழைத்து வந்துவிட , அவள் சுயரூபம் நன்கு தெரியவேண்டுமென்றே அவளை இங்கேயே அனுமதித்தேன் .உங்களுக்கெல்லாம் அல்ல ...எனக்கு 


அப்போதுதான் நாளை அவள் நினைப்பு சிறிது கூட எனக்கு வராது என நினைத்தேன் .அதை நூற்றுக்கு நூறு நிறைவேற்றி விட்டாள் .இப்போது மிக நிம்மதியாக உணர்கிறேன் " என்றான் தர்மன் .



" சரி சரி ...எல்லாம் நல்லபடியாக முடிந்தது .இனி நடக்க வேண்டியதை பார்க்கலாமே ..." பூடகமாக ஏதோ சொல்ல முயற்சித்தான் பூரணசந்திரன் .



" ஆமாம் சத்யேந்திரன் உன் மகன் தர்மனுக்கும் , அனுசூயாவிற்கும் அடுத்த முகூர்த்தத்திலேயே திருமண ஏற்பாடு செய்து விடுங்கள் .எனக்குத்தான் அந்த கொடுப்பினை இல்லையே " சோகம் போல முகத் தை வைத்து பெருமூச்செறிந்தார் சுந்தரவடிவு .



" என்னம்மா என்ன ஆச்சு ...? " புரியாமல் விசாரித்தான் பூரணசந்திரன் .


" நீதான் திருமணமே வேண்டாமென்று விட்டாயேடா .இந்த தொழிலுக்காக உன் வாழ்க்கையையே அர்ப்பணிப்பதாக கூறினாயே .எனவே இதுபோன்ற சொந்தங்களின் திருமணத்தை பார்த்தாவது என் ஆசையை தீர்த்து கொள்கிறேன் " வராத கண்ணீரை ஒற்றிக்கொண்டார் சுந்தரவடிவு .


" அம்மா ..." அலறினான் பூரணசந்திரன் .தொடர்ந்து அவன் " என்னம்மா ...இப்படி பண்றீங்களேம்மா...." என்க சோலைவனம் சிரிப்பில் அதிர்ந்தது .


சிரித்த படியே திரும்பி பார்த்த சுந்தரவடிவு மகனை காணாமல் திகைக்க " மாமா அப்பொழுதே தங்கச்சியோட எஸ்கேப் " என தகவல் தந்தான் ராஜசேகரன் .


வெளியே தோட்டத்தில் தன்னவனின் அணைப்பிலிருந்தபடி சபர்மதி ஸ்வாதியின் சூழ்ச்சிகளை விவரிக்க , "இவ்வளவு மோசமாக என்னை எடை போட்டதற்கு இப்போதே தண்டனை அனுபவிக்க வேண்டுமென கூறியவாறே தனக்கு விருப்பமான முறையில் தண்டனை தர பூரணசந்திரன் தொடங்க , மிக விருப்பத்துடன் அந்த தண்டனைகளை ஏற்று அவனுடன் ஒன்ற தொடங்கினாள் சபர்மதி .



அந்த வானவில் தேவதையை வாழ்த்தியபடி நிலவு மகள் தூக்கம் வருவதாக கூறி மேக போர்வையை போர்த்துக்கொண்டாள் .


வசந்தம் மலர்ந்து வாசம் வீச தொடங்கியது  .




                                                                                                        " - சுபம்.




-






0 comments:

Post a Comment

Blogger News

வணக்கம் தோழமைகளே , எனது " வா என் வண்ண நிலவே " கதைக்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு மிக்க நன்றி. இதோ உங்கள் முன் எனது அடுத்த கதை " வானவில் தேவதை " கறுப்பென்பது பிழையல்ல .மனமிருப்பின் வரமே என்பதனை என் முதல் கதையில் கூறியிருந்தேன். சொந்தங்கள் இல்லாத வாழ்வு வாழ்வல்ல.சந்தர்ப்ப சூழ்நிலைகளே சொந்தங்களின் பாசத்தை மறைக்கிறது என்பதனை இரண்டாவது கதையில் கூறியிருக்கிறேன் காதல் கலந்து.படித்து பாருங்கள்.
 

Blogger news

Blogroll