Pages

Powered by Blogger.

வா என் வண்ண நிலவே 5

அன்று ஏதோ தவறுதல் நடந்துவிட்டது .நித்யன் தெரியாமல் பேசி விட்டான் .இல்லையில்லை நான்தான் தப்பாக கேட்டுவிட்டேன் .என் காதிலதான் ஏதோ கோளாறு ....

அன்றொருநாள் தன் காதில் விழுந்த நித்யவாணனின் வார்த்தைகளுக்காக விதவிதமாய் தானே சமாதானம் அடைந்து கொண்டிருந்தாள் எழில்நிலா .

இல்லை அவள் கணவன் அப்படிபட்டவனில்லை .அவன் ...அவன் உயர்ந்தவன் ...பெண்மையை மதிப்பவன் ...அவளை உயிராக நினைப்பவன் ...இல்லையென்றால் இன்று காலை அவளை அவ்வளவு ஆசையோடு அணைப்பானா .....

இன்னும் இரண்டே மணி நேரத்தில் கணவனை பற்றிய தன் அபிப்பிராயம் மாறப்போவதை அறியாமல் ,மென்மையாய் கணவனோடு உரசியபடி பயணித்து மண்டபத்தை அடைந்தாள் எழில்நிலா .

அதன் பின்னர் இளவட்டங்களின் இளமை வளையத்திற்குள் சிக்கிய தம்பதி புது மணமக்களுக்கேயுரிய அனைத்து கேலி ,கிண்டல்களை மனமார ரசித்து ஏற்றனர் .

எழில்நிலாவும் ,நித்யவாணனும் திருமணத்திற்கு முன்பே கொடைக்கானலில் சந்தித்திருக்கிறார்கள் என்ற விசயம் எழில்நிலவின் அத்தை மகள் அஞ்சனா மூலம் சபையில் பரப்பப்பட "ஓஓஓஓ ....!"என்ற உற்சாக கூச்சல் ...

தொடர்ந்து எப்ப சந்தித்தீர்கள் ?...எப்படி பார்த்தீர்கள் ...?என பல கேள்விகள் ...சொல்லாவிட்டால் இந்த இடத்தை விட்டு நகர விடப்போவதில்லையென செல்ல மிரட்டல்கள் ....

ஒருவரையொருவர் பார்த்து கொண்ட கணவனும் மனைவியும் தங்களுக்கான ரகசிய பாசையை விழி வழி பரிமாறிக்கொள்ள ,அதனையும் கண்டு கொண்ட இளவல் கூட்டம் மீண்டும் ஓ...ஓ..ஓ...வென ஆர்ப்பரித்தது .

"உங்கள் எழிலை நான் முதன் முதலில் பார்த்தது கொடைக்கானலில் ப்ரையண்ட் பூங்காவில்தான் "என  ஆரம்பித்தான் நித்யவாணன் .

உடன் முகம் கூம்பி போனது எழில்நிலாவுக்கு . இல்லையே முதல் சந்திப்பு அது இல்லையே ...அன்று அதிகாலை பனிமூட்டத்திற்கிடையே ....

தலையை பலமாக உலுக்கி கொண்டாள் எழில்நிலா .உண்மை ..அவள் நித்யவாணனை முதலில் பார்த்தது அன்று அதிகாலைதான் .ஆனால் அவள் மட்டுந்தானே அவனை பார்த்தாள் .அவன் தன்னை பார்க்கவில்லையே ...அவன்பாட்டுக்கு தன் வழியில் டக்டக்கென போய் விட்டானே ...

தன்னை பார்க்காமல் போனானா ?...அல்லது பார்த்தும் பார்க்காமல் போனானா ?...வேதனையுடன் எண்ணியவளின் மனக்கண்ணில் அன்றைய பனிமூட்ட அதிகாலை ....

எழில்நிலா குடும்பம் இருப்பது மதுரை .சித்தி சந்திரா இருப்பது கொடைக்கானல்.

அந்த செமஸ்டர் விடுமுறைக்காக மஞ்சுளாவின் தங்கை சந்திரா தனது ஊரான கொடைக்கானலுக்கு எழில்நிலாவை அழைத்தாள் .அரை மனதோடு சந்திராவுடன் எழில்நிலாவை அனுப்பி வைத்தனர் அவள் தாயும் ,தந்தையும் .

சீசன் நேரமானதால் களை கட்டியிருந்த  கொடைக்கானல் எழில்நிலாவை மிக கவர்ந்தது .
மதுரை வெக்கைக்கு பழகியிருந்த அவள் தேகம் கொடைக்கானல் குளிரில் சிவந்து நடுங்கியது .

ஆழ்ந்து மூச்செடுத்து அந்த குளிரை அனுபவித்தாள் எழில்நிலா .

அந்த அதிகாலை, குடும்பத்தினர் அனைவரும் கம்பளிக்குள் இருக்க ,
புது சூழ்நிலையால் தூக்கம் வராத எழில்நிலா ஒரு ஸ்வெட்டரை அணிந்து கொண்டு வீட்டிற்கு வெளியே வந்தாள் .

ஆறுமணிக்கு நடு இரவை நினைவு படுத்தியது கொடைக்கானல்.கைகளை தேய்த்து கன்னத்தில் வைத்தபடி இயற்கைக்குள் அமிழ்ந்தவள் ,
அவளை கண்டதும் ஓடி வந்த டிரைவரிடம் "கொஞ்சம் வெளியே போலாமா "எனக் கேட்டாள் .

இந்த காலைக்குளிரிலா என கேட்க நினைத்து விட்டு அதிகாலை மலர்ந்த புத்தம் புது மலராக வாசம் வீசி நின்றுகொண்டு  காரெடுக்க சொல்லும் அந்த விருந்தாளியை தவிர்க்க முடியாது உடனே தலையாட்டினான் டிரைவர் .

அதிக தூரம் வேணாம்மா ,நம்ம எஸ்டேட் எல்லைக்குள்ளேயே போய் விட்டு வந்திடுவோம் என்றான் பணிவுடன் .

சரி என தலையாட்டியபடி காரில் ஏறினாள் எழில்நிலா .மிக மிக லேசாக வெளிச்சம் வானின் ஏதோ ஒரு மூலையிலிருந்து கசிந்து கொண்டிருந்தது .

அரைகுறை வெளிச்சத்தில் வகைவகையாய் வண்ணம் காட்டிக்கொண்டிருந்த மரம் செடிகளை கண்கள் விரிய விழுங்கியபடி பயணமானாள் எழில்நிலா .

சிறிது நேரத்திலேயே ஓரிடத்தில் காரை நிறுத்தினான் டிரைவர் .
"இதுக்கப்புறம் பக்கத்து எஸ்டேட்மா ...போதும் இதுக்கு மேல போறதுனால் எல்லாரும் எந்திரிச்சதும் வெளிச்சம் வந்ததும் போவோம் "என்றான் .

"சரி ஆனால் இங்க கொஞ்ச நேரம் கீழே இறங்கி நிற்கிறேன்" என்றபடி கீழே இறங்கினாள் எழில்நிலா .

அந்த இயற்கையிலேயே பிறந்து வளர்ந்தவர்களால் அதனை அனுபவிக்க முடியாது .அது சாதாரணமாக இருக்கும் .

ஆனால் மதுரை வெயிலில் வளர்ந்தவளுக்கு கொடைக்கானல் இயற்கை தாகத்திற்கு கிடைத்த தேவாமிர்தம் .

கைகளை கன்னங்களில் பதித்தபடி அந்த இடத்தில் இரு மலைகள் ஒன்றுடன் ஒன்று இணையும் அழகை ரசித்துக்கொண்டிருந்தாள் எழில்நிலா .

டக்டக்கென குதிரையின் குளம்பொலி அவள் செவிகளில் கேட்டது .என்ன இது குதிரை ஓசை ...நாமென்ன சரித்திர காலத்திலா இருக்கிறோம் என எண்ணியவளின் மனதுக்குள் கல்கியின் ,'பொன்னியின் செல்வன்' நினைவு வந்தது .

மென்மையாய் புன்னகைத்தபடி ஓரமாக ஒதுங்கி நின்று கவனித்த போது ,கம்பீரமாக தாவி வந்தது அக் கருநிற குதிரை .

நல்ல கருகரு கருப்பு ஆனாலும் உடல் முழுதும் ஒரு பளபளப்பு .எவ்வளவு அழகான கறுப்பு என எண்ணியபடி பார்வையை உயர்த்தியவளின் பார்வை உறைந்தது .

கண்டிப்பாக பனியினால் அல்ல .அந்த குதிரையின் மீது ராஜ கம்பீரத்துடன் அமர்ந்து வந்த அந்த யவ்வனனை கண்டு எழில்நிலாவின் பார்வை உறைய இறுகிக்கிடந்த உள்ளம் வெயில் கண்ட பனியாக உருகத்தொடங்கியது .

என்ன உயரம் ,என்ன அழகு ,என்ன கம்பீரம் ...எல்லாவற்றிற்கும் மேல் என்ன நிறம் ...

ஆண்களில் இத்தனை அழகும் நிறமும் சாத்தியமா ....

எழில்நிலா அவனைக்கண்டது அதிகபட்சமாக இரண்டு நிமிடங்கள் இருக்கும் . அப்படியே ஸ்தம்பித்து நின்று விட்டாள் .

"போகலாமாம்மா "என்ற டிரைவரின் கேள்வியில் திடுக்கிட்டு திரும்பினாள் .

அவள் பார்வை சென்ற திசையை பார்த்தவன் "அது நம்ம பக்கத்து எஸ்டேட் முதலாளிம்மா ...இந்த பக்கம் அவுகளுக்கு நிறைய சொத்துக்கள் இருக்கு .ஆனா இருக்கிறது சென்னைல .அடிக்கடி வந்து எஸ்டேட்டை பார்த்துட்டு போயிடுவார் "என கேட்காமலேயே விவரங்கள் தந்தான் .

அவனைப்பற்றிய ஒவ்வோரு எழுத்தையும் நெஞ்சப்பெட்டகத்தில் போட்டு பூட்டினாள் .

இதயச்சுமை தாங்காது 
தடுமாறுது பூச்சென்டொன்று
மன்னவனை மனதில் சுமந்து

4 comments:

  1. Padma........irandu kadhal ulllangalin kalavaiyana kadahi. sila neram sarithira kadhai padikiromo enra ninaivai undakukirathu un tamil varthai korvai. rajakumaranai parthathum veeznthathum ippadi enral rajakumariyai paarthu mayangiyatharkum oru flash back irukume......

    ReplyDelete
    Replies
    1. சாரதா நீங்க காதல் கதைகள் ரொம்ப படிக்கிறீங்க போங்கப்பா ...முதல்லயே என் சஸ்பென்ஸ் லாம் உடைச்சிடுவீங்க போல ...அதெல்லாம் ஒண்ணும் இப்ப சொல்ல மாட்டேன் ...

      Delete
  2. சாராதா கா சரியாய் பாயிண்ட்டை பிடிச்சுட்டீங்க.
    பத்மா பதிலிலேயே ......தெரிஞ்சுடுச்சே

    ReplyDelete

Blogger News

வணக்கம் தோழமைகளே , எனது " வா என் வண்ண நிலவே " கதைக்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு மிக்க நன்றி. இதோ உங்கள் முன் எனது அடுத்த கதை " வானவில் தேவதை " கறுப்பென்பது பிழையல்ல .மனமிருப்பின் வரமே என்பதனை என் முதல் கதையில் கூறியிருந்தேன். சொந்தங்கள் இல்லாத வாழ்வு வாழ்வல்ல.சந்தர்ப்ப சூழ்நிலைகளே சொந்தங்களின் பாசத்தை மறைக்கிறது என்பதனை இரண்டாவது கதையில் கூறியிருக்கிறேன் காதல் கலந்து.படித்து பாருங்கள்.
 

Blogger news

Blogroll