Pages

Powered by Blogger.

வா என் வண்ண நிலவே

 மறுக்க மறுக்க என்னுள் உன்னை
ஊற்றிக்கொண்டிருக்கிறாய் 
மறுத்தலின் முடிவென்பது
விருப்பத்தின் ஆரம்பம் தொடுகையில்
பாம்பு விழுங்கும் சந்திரனாகிறேன்
முழு உருவும் செரிக்கப்பட்டு
சூழும் அந்தகாரம்
சுவர்க்கோழி ரீங்காரமாய் என்னுள்
புகுகிறது
வானவில் சிறகணிந்து வானில்
உலவி விட்டு
ஏழு வண்ணங்களையும் உண்டு 
செரித்து விட்டு 
வெண்ணிற  நிலவாகிறேன்.

என்ன இப்படி பார்க்கிறான் ...கன்னம் சிவக்க யோசித்தவள் ,இல்லையில்லை இந்த பார்வையில் லாம் மயங்க கூடாது.
தலை நிமிர்ந்து அவனை நோக்கி" உங்களுடன் நிறைய பேச வேண்டும் என்றாள் அவசரமாக ..."

"என்னது பேசனுமா ,ஏற்கனவே நேற்று  பொழுதை பூராவும் வீணடிச்சிட்ட ...இன்னைக்கும் பேசியே பொழுதை கழிக்கலாம்னு பாக்குறியா ..அதெல்லாம் நடக்காது .
இன்றைக்கு பேச்சே கிடையாது. செயல் மட்டுந்தான் "என கண்களை சிமிட்டியவன் அதையே நிரூபிப்பவன் போல் அவள் எதிர்பாராத தருணத்தில் அவளை இறுக அணைத்து அவள் இதழ் மீது அழுந்த இதழ் பதித்தான் .

யாரோ வரும் ஓசை கேட்டு சட்டென அவளை விடுவித்தவன் அவள் நிற்க முடியாமல் தள்ளாடுவது கண்டு ,மெல்ல பற்றி கட்டில் மேல் அமர்த்தியவன் "சீக்கிரம் வந்து சேரு "என ரகசியம் பேசிவிட்டு நகர்ந்தான் .

நெற்றி வேர்க்க விழித்தபடி அமர்ந்திருந்தாள் எழில்நிலா .

நித்யன் கட்டாயம் இன்றிரவு பேசப்போவதில்லை .அவளையும் பேச விடப்போவதில்லை .உட்கார்ந்து தெளிவாக பேசி விட்டு இந்த வாழ்க்கை தனக்கு தேவையில்லையென எழில்நிலா சொல்லிவிட்டால் நஷ்டம் அவனுக்குதானே ,எப்படி பேசுவான் ...எனவே ஆண்களுக்கே உரிய முறையை கையாளுகிறான் என வேதனையோடு எண்ணினாள் எழில்நிலா .

அவன் அணைப்புக்குள் அடங்கி விட்டால் தனது உறுதிகள் தனக்கே நினைவு வருமோ என்னவோ ...அவன் தான தன்னை அப்படி மயக்கி வைத்திருக்கிறானே என தனக்குள்ளேயே குமுறினாள் எழில்நிலா .

இன்று கண்டிப்பாக நித்யனின் அறைக்குள் செல்லக்கூடாது என முடிவெடுத்தாள் அவள் .

"சாப்பிட வாம்மா ...பத்து நிமிடத்தில் சாப்பிட்டீன்னா ரூமுக்குள் போக நேரம் சரியா இருக்கும் .சடக்குன்னு எந்திரி" என்றபடி வந்தார் மைனாவதி.

சாப்பிட கூட "டைம் டேபிளா" என வெளித்தெரியாமல் பற்களை கடித்தபடி எழுந்து வந்தாள் எழில்நிலா .

எதிரில் அமர்ந்திருந்த நித்யவாணனை நிமிர்ந்து பார்க்காது தட்டிற்குள் தலையை கவிழ்த்துக்கொண்டாள் .

அவள் கவனத்தை கவர எழுந்த நித்யனின் செருமல் வீணானது ."ஒத்த சப்பாத்திக்கு அப்ப இருந்து பேன் பாத்துக்கிட்டு இருக்க .டயட் டயட்னு நல்லா உடம்பை கெடுத்து வச்சிருக்கீங்க இந்த காலத்து பிள்ளைங்க .என்ன சப்பாத்தி மெல்ல பல்லில்லையா ...சரி விடு இந்த பால்சாதமாவது சாப்பிடு "என அவள் பக்கம் சாதம் வைத்த தட்டை தள்ளினாள் மைனாவதி.

வேறு வழியின்றி சாதத்தை வெளியே வர வர உள்ளே தள்ளிய எழில்நிலா அடுத்து எதுவும் சொல்ல ஆரம்பிக்கும் முன் அவசரமாக கை கழுவ ஓடினாள் .

"எல்லாத்தையும் பத்திரமா எடுத்து ப்ரிட்ஜ் ல மூடி வை .நாளைக்கு எடுத்துக்கலாம்" என வேலைக்காரிக்கு எதையோ எடுத்து வைக்க உத்தரவிட்டுக்கொண்டிருந்தார் மாமியார் .

இரவு என்ன செய்ய வேண்டுமென தெரிந்துவிட்டது எழில்நிலாவுக்கு .

கையில் பாலுடன் அவளை மாடிக்கு அனுப்பி விட்டு படுக்க போய்விட்டார் மாமியார் .மாத்திரை போட்டு விட்டு படுப்பதால் இனி நித்யனின் தாயும் தந்தையும் காலையில்தான் அறையை விட்டு வெளியே வருவார்கள் .

தங்கியிருந்த ஒன்றிரண்டு உறவினர்களும் படுக்க போயாச்சு .ஆனால் நித்யன் தன்னை தேடுவான் .அவனுக்கு சொல்லிவிட வேண்டுமென நினைத்தவள் ஒரு பேப்பரில் "உங்களை நாளை காலை சந்திக்கிறேன்" என எழுதி தன் தலையிலிருந்த ரோஜா ஒன்றினை எடுத்து அதன் காம்பில் சுற்றி நித்யனின் அறைக்கதவில் சொருகினாள் .பால் சொம்பையும் அங்கேயே விட்டவள் இறங்கினாள் .

பின்பு பங்களாவின் பின்புறம் போக பயன்படும் மாடிபடிகளை உபயோகித்து கீழே வந்தாள் . அந்த பெரிய பங்களாவின் பின்புறம் ஒதுக்கமாக இருந்த நிலவறையை திறந்து உள்ளே நுழைந்தாள் .

இதனை நித்யனின் தங்கை சித்ரா இன்று மதியம் அவளுக்கு சுட்டியிருந்தாள் .
இப்பங்களா ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் யாரோ ஒரு ஆங்கிலேயரால் கட்டப்பட்டது .பல கை மாறி இப்போது அவர்கள் குடும்பம் வசம் வந்ததை பெருமையாக கூறினாள் .

ஏதாவது முக்கியமான சாமான்களை ஒளித்து வைக்க அவர்கள் இந்த நிலவறையை உபயோகித்திருக்கலாம் என விளக்கினாள் .

வீட்டின் எந்த அறையில் ஒளிந்தாலும் அங்கே நித்யன் வந்து விடக்கூடுமென்பதால் ,இன்று இரவு மட்டும் இந்த நிலவறையில் இருந்து விட்டு காலை எழுந்து நித்யனை ஏதாவதொரு தனியிடத்துக்கு அழைத்து சென்று பேசி விட வேண்டியதுதான் என முடிவெடுத்தாள் எழில்நிலா .

அவன் நினைத்த மாதிரி வாழ்வு அவளால் வாழ முடியாது .நடந்தது நடந்து விட்டது இனி பழைய தொடர்புகளை விட்டுவிட்டு அவளுடன் மட்டுமே வாழும் பட்சத்தில் அவள் அவனுடன் இணைந்து வாழ தயாராயிருக்கிறாள் .

இல்லையெனில் ....பிரிந்து விட வேண்டியதுதான் ...மனம் முழுதும் நித்யனை நிரப்பியபடி காலம் முழுவதும் தன் அன்னை தந்தையுடன் வாழ்ந்து விட வேண்டியதுதான் ...இப்படி எண்ணியபடி அந்த நிலவறையினுள் உட்கார்ந்திருந்தாள் எழில்நிலா .

ஒரு மணி நேரத்திலேயே இதனுள் காலை வரை இருப்பது சாத்தியமில்லையென அவளுக்கு தெரிந்து விட்டது .ஒரே வியர்வை .அதோடு இந்த பூ ,நகை ,பட்டுசேலை கசகசப்பு வேறு .

இரண்டு மணி நேரத்திலேயே தனது முட்டாள்தனத்தை உணர்ந்து கொண்டாள் எழில்நிலா .

வெளியேறி விட எண்ணி கதவை அடைந்து மேலே தூக்க முனைந்தாள் .காலையில் வெளியே வர வசதியாக கதவின் தாளை போடாமலேதான் வைத்திருந்தாள் .ஆனால் இப்போது கதவு அசைய மறுத்தது .

எப்படியோ தாள் தானாகவே விழுந்து விட்டது போலும் .அந்த பழைய கால இரும்பு கதவு சிறிது கூட அசைய மறுத்தது .

பயத்தினால் எழில்நிலாவுக்கு மயக்கம் வரும் போல் இருந்தது .ஒரேடியாக போய் சேர்ந்து விடுவோமா என பயந்தாள் .ஆனால் அவளது நித்யனை விட்டு விட்டு செத்து போக அவள் தயாரில்லை .

இப்படி எண்ணும்போதுதான் நித்யனை தான் எந்த அளவு விரும்புகிறோம் என்பது அவள் மனதில் தைத்தது .

இவ்வளவு விரும்பும் இவனை விட்டு பிரிந்து விட வேண்டியதுதான் என்று எவ்வளவு இலகுவாக நினைத்தாள் .அவனையும் தன்னையும் பிரித்து நினைப்பதே இவ்வளவு வலிக்கிறதே
முருகா என்னை எப்படியாவது இந்த இடத்திலிருந்து வெளியேற்று .நான் என் நித்யனுடன் பல காலம் வாழ ஆசைப்படுகிறேன் என பலவாறு அழுது வேண்டியபடி இருந்தாள் .

புழுக்கத்தில் கிடந்து அழுது கொண்டிருப்பதாலோ என்னவோ எழில்நிலாவின் கண்கள் இருட்டத்தொடங்கியது .

தான் மயங்க போகிறோம் இனி பிழைப்போமோ என்னவோ என எண்ணியபடி சொருகத்தொடங்கிய அவள் கண்கள் கதவை திறக்கும் ஓசையும் ,உள்ளே வந்த வெளிச்சத்தையும் கண்டு அவசரமாக விரியத்தொடங்கின .

0 comments:

Post a Comment

Blogger News

வணக்கம் தோழமைகளே , எனது " வா என் வண்ண நிலவே " கதைக்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு மிக்க நன்றி. இதோ உங்கள் முன் எனது அடுத்த கதை " வானவில் தேவதை " கறுப்பென்பது பிழையல்ல .மனமிருப்பின் வரமே என்பதனை என் முதல் கதையில் கூறியிருந்தேன். சொந்தங்கள் இல்லாத வாழ்வு வாழ்வல்ல.சந்தர்ப்ப சூழ்நிலைகளே சொந்தங்களின் பாசத்தை மறைக்கிறது என்பதனை இரண்டாவது கதையில் கூறியிருக்கிறேன் காதல் கலந்து.படித்து பாருங்கள்.
 

Blogger news

Blogroll