Pages

Powered by Blogger.

வானவில் தேவதை - 9





அந்த பெரிய காம்பவுண்ட் கேட்டினை கார் நெருங்கிக்கொண்டிருந்தது .
உள்ளே எதுவும் சிறு நகரத்தின் தலைநகர் ஒளிந்திருக்குமோ ? என அபிப்ராயப்பட்டாள சபர்மதி .அந்த காம்பவுண்ட் சுவர்கள் அவ்வளவு உயரமாக ,நீள ,அகலமாக இருந்தன .

இதுதான் "சோலைவனம் " சபர்மதி .சொல்லியபடி காரைக்கண்டதும் சரசரவென திறந்த கோட்டைக்கதவிற்குள் காரை நுழைத்தான் தீபக்குமார் .ஒழுங்காக போடப்பட்டிருந்த தார் ரோட்டின் மேல் வழுக்கியபடி சென்ற கார் அங்கே ஏற்கெனவே நின்றிருந்த ஒரு நீநீநீ ளளளமான காரின் பின்னா ல் நின்றது .

இவ்வளவு நீளமாக இருக்கிறதே இது என்ன காராய் இருக்கும் ? என சிந்தித்தபடி அதனை கண்டுபிடிக்க முனைந்தபடி சபர்மதி கீழிறங்க ,அந்தக்காரை கண்டவுடன் ஒருவித பரபரப்புக்கு உள்ளாகியிருந்தான் தீபக்குமார் .

ஓ...பி.சி ...வந்துட்டாரு போல என தனக்கு தானே பேசியபடி உள்ளே சென்றான் .திகைத்து நின்றாள் சபர்மதி .என்ன இது அவன் பாட்டுக்கு என்னை இங்கே நிப்பாட்டி விட்டு உள்ளே சென்றுவிட்டான் .இப்போது நான் என்ன செய்ய ? உள்ளே போவதா ? அல்லது யாராவது அழைக்கட்டுமென இங்கேயே நிற்கவா ?...

கேள்விகளால் அலைக்கழிக்க பட்டபடி அங்கேயே விழித்தபடி நின்றாள் சபர்மதி .

"என்ன மகாராணி ஆரத்தி எதுவும் காட்டி உள்ளே அழைப்பாங்கன்னு காத்துக்கிட்டிருக்கீங்களோ ?" குத்தலாய் வந்தது ஒரு பெண் குரல் .தன்னையா கூறுகிறார்கள் ? வேறு யாரும் தன்னைப்போல் வாசலில் நிற்கிறார்களா ?, சுற்றும் முற்றும் ஆராய்ந்தாள் சபர்மதி .

யாரும் இல்லை .இது என்ன வரவேற்பு ? ஒன்றும் புரியாமல் லேசாக தலையை சொறிந்தபடி வாசலை ஏறிட்டாள் .சுமார் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண் .

எப்படியும் எழுபது கிலோவை எட்டுவாள் .ஆனாலும் தன்னை சிறு பெண்ணாக காட்டவோ என்னவோ உடலை இறுக்கி பிடித்த ரவிக்கையும் உடலோடு ஒட்டிய சேலையும் ,வெண்மை மறைத்த தலையுமாய் காட்சியளித்தாள் .

தனக்கு மட்டும் ஒரு சிறு வாய்ப்பு கிடைத்தால் தலைக்கு வேறு டை உபயோகித்து பாருங்களேன் .அது கொஞ்சம் கருமையை குறைக்க கூடும் .என்று இந்த பெண்ணிடம் கூற வேண்டும் .அப்படி கூறும் போது இந்தப்பெண்ணின் முகம் போகும் போக்கு எப்படியிருக்கும் என நினைத்தவளுக்கு சிரிப்பு பொங்கி வந்தது .

சூழ்நிலையறிந்து இதழ் வரை வந்த சிரிப்பை கண்களோடு தேக்கிக்கொண்டு அந்த பெண்ணை  ஏறிட்டாள் .

"அதுதான் நேக்கா உள்ளே வந்தாச்சே ,பின்ன என்ன ? வரவேற்போம்னெல்லாம் வெளியே போக்கு காட்டிக்கிட்டே நிற்காதே .சட்டுபுட்டுன்னு உள்ளே வந்து ஆக வேண்டியதை பாரு ".

என்ன ஆக வேண்டியது ...ஓ...ஏதோ வேலையென்று அந்த தீபக்குமார் சொன்னாரே , அந்த வேலையை சொல்கிறார்களா இந்த அம்மா ? இவர்கள்தான் முதலாளியம்மாவா ? இவர்களிடம் தன்னால் வேலை பார்க்க முடியுமா ? சிறு கவலையுடன் உள்ளே சென்றாள் சபர்மதி .

சிறு முன் வராண்டாவை கடந்து அவள் அடைந்த ஹாலின் விஸ்தீரணம் அவளை பிரமிக்க வைத்தது .முன்பு பெருந்தேவியின் தீவிரத் தேடலில் ஒரே ஒரு இந்தி சீரியலுக்கு   அவளுக்கு வாய்ப்பு வந்தது .அந்த சீரியலின் வீடு செட் இப்படித்தான் இருந்தது .

நான்கு நாள் படப்பிடிப்பிலேயே இது போன்ற உடையணிந்து தன்னால் நடிக்க முடியாது என்று மறுத்து விட்டு திரும்பி விட்டாள் .முன்னால் ஏகப்பட்ட அலங்காரங்களுடன் பிரம்மாண்டம் காட்டும் அந்த வீட்டின் பின்புறம் காணப்படுவை வெறும் கட்டைகளும் ,வைக்கோல்களும் ,தெர்மோக்கோல்களுந்தான் .அது போல் இந்த வீடும் ....சே எனக்கு ஏன் சிந்தனை இப்படியெல்லாம் போகிறது .தலையை உலுக்கி விட்டுக்கொண்டாள் .

அவ்வளவு பிரம்மாண்டத்திற்கு ஏதோ அங்கே குறைவது போல் தோன்றியது சபர்மதிக்கு .என்னவாயிருக்கும் ? மெலிதாக இருள் ஆரம்பித்து விட்டதால் அந்த வீட்டில் விளக்குகள் ஆங்காங்கே போடப்பட தொடங்கியிருந்தன .

ஆனால் அவ்வளவு பெரிய இடத்திற்கு அந்த மின்விளக்குகள் போதாதது போல் ஆங்காங்கு இருள் மண்டிக் கிடந்தது .அது ஒரு விதமான அமானுஷ்ய சூழ்நிலையை அவளுக்கு கொடுத்தது .கையிலிருந்த பேக்கை கீழே வைத்தபடி தீபக்குமார் எங்காவது தெரிகிறானா ? என கண்களை சுழட்டினாள் .

அந்த முதலாளியம்மாவை காணவில்லை .உள்ளே எங்கோ மறைந்துவிட்டாள் .அவ்வளவு பெரிய அறையில் அரைகுறை வெளிச்சத்தில் சபர்மதி மட்டுமே நின்று கொண்டிருந்தாள் .என்ன கொடுமை இது ? எத்தனையோ கிலோமீட்டர் காரிலேயே பயணித்து வந்திருக்கிறாள் .பாதுகாப்பான ஏஸி கார் பயணமென்றாலும் உடல் முழுவதும் புழுதியாக இருப்பது போன்று ஒரு பிரமை .

குளிக்க முடியாவிட்டாலும் முகமாவது கழுவ வேண்டாமா ? 
மலையேறும் முன் ஒரு சிறு ஹோட்டலில் அறையெடுத்து ப்ரெஷ்அப் செய்து கொள்ளுமாறு கூறியிருந்தான் தீபக்குமார் .அதன் பிறகு கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்திற்கு மேல் ஆகி விட்டதே .உடனே பாத்ரூம் உபயோகிக்க வேண்டுமென்ற உந்துதல் சபர்மதியிடம் .

என்ன செய்வது ? யாரைக்கேட்பது ? கால்மாற்றி நின்றபடி யோசித்தாள் .
" அம்மா ..." அவளுக்கு பின்புறம் ஒரு பணிவான குரல் .திரும்பினாள் .தோட்டக்கார்ர் போல் தோற்றம் காட்டிய ஒரு வயதானவர் .அந்த "அம்மா " சபர்மதிக்கல்ல .அநேகமாக உள்ளே மறைந்து விட்ட அந்த" டை " தலை பெண்மணிக்கானதாயிருக்கலாம் .

அப்படித்தான் என்பது போல் அந்தப்பெண்மணி "ஜீபூம்பா ".....போல் ஏதோ ஒரு இருள் மூலையிலிருந்து தோன்றினாள் . " என்னப்பா " ...அதட்டினாள் .இந்த குரலுக்கு என்ன சாப்பிடுவாள் இந்த அம்மா .மயில் கொஞ்சுகிறதே குரலில் .தனக்குள் நக்கலாக முதலில்  எண்ணியவள் சீ என்ன இது இந்த அம்மா விசயத்தில் தனக்கு ஏன் இப்படி முரணாகவே தோன்றுகிறது ?

தன்னையே திருத்தியபடி சற்று ஒதுங்கி நின்று கவனித்தாள் ." ஏன்யா இந்த மலையேறி இறங்க உனக்கு நாலு நாள் வேண்டியிருக்கா ம் ? "என அதட்டிக்கொண்டிருந்தாள் ."

"இல்லீங்கம்மா என் தங்கச்சிக்கு எடுத்து செய்ய ஆள் கிடையாதும்மா அங்கே நான்தானே எல்லாத்தையும் பார்க்கனும் .அதான் ..." என்றான் அந்த ஆள் உடலை போலியாக குறுக்கி கொண்டு .தோட்டக்காரன் போல் தோன்றியது .

"என்னது அம்மாவா ..." மிரட்டலாய் வந்தது அந்த அம்மாவின் குரல் .

"ஐயோ இல்லீங்கக்கா ...அக்கான்னு தானுங்களே சொன்னேன் ,ஒருவேளை நாக்கு பல்லுல நசுங்கினதுல மாறி வந்திருங்குங்கக்கா" என்றான் மேலும் பணிந்து .

அவசரமாக தனது மேலுதட்டு வியர்வையை துடைக்க வாயை கைக்குட்டையால் அழுத்தமாக மூட வேண்டி வந்தது சபர்மதிக்கு .அப்படியும் சத்தம் கொஞ்சம் வெளியே கேட்டதோ ? என்ற சந்தேகம் அவளுக்கு .

"ம் ..சரி சரி போயிட்டு வா " திருப்தியாக வழியனுப்பினாள் .கைக்குட்டையை கைகளுக்குள் மறைத்தபடி அவளுடன் பேச தயாரானாள் சபர்மதி .ஆனால் அவள் கண்டுகொள்ளாமல் உள்ளே திரும்பவும் ,அவசரமாக " அம் ...இல்லையில்லை அக்கா ...என அழைத்து முடிக்கையிலேயே " அந்தப்பெண் நின்று இவள் புறம் திரும்பி முறைத்தாள் .

" என்ன சொன்ன ?"

"அக்கான்னு ,அதானே உங்களுக்கு பிடிக்கும் ...?" ...மேற்கொண்டு பேசாமல் நிறுத்தினாள் .

தாடைக்குள் பற்கள் நெறிபடுவது 
நன்றாக தெரிந்தது சபர்மதிக்கு .
" இல்லை நீ ...அம்...இல்லையில்லை அக்கான்னு கூப்பிடாதே " சொல்லியவள் விருட்டென்று உள்ளே மறைந்து விட்டாள் .மீண்டும் தனியாக நின்றாள் சபர்மதி .

"அடப்போங்கடா இந்த பொம்பளை இப்படி விளக்கு பூதம் மாதிரி திடீர் திடீர்னு வருது .போகுது .இத்தனை பெரிய வீட்டில் ஒரு ஈ.காக்கா கூட காணோம் .நம்மை யாரும் என்னன்னு கேட்க போறதில்லை .பேசாமல் நாமே பாத்ரூம் எங்கேயிருக்குன்னு தேடி போக வேண்டியதுதான் ." தனக்குள்ளேயே பேசியபடி பாத்ரூம் எங்கே இருக்க கூடும் என கண்களை நாலாபுறமும் சுழற்றினாள் .

அலங்காரமாய் சுவரில் மாட்டப்பட்டிருந்த துப்பாக்கி கண்ணில் பட்டது .உடனே அவனின் நினைவு தானே வந்தது .அவன் மட்டும் அந்த காட்டெருமையை அப்போது சுட்டிருக்கா விட்டால் இப்போது சபர்மதி இங்கே நின்றிருக்க மாட்டாள் .கை கால்கள் தனித்தனியாக அந்த பள்ளத்தாக்கில் கிடந்திருப்பாள் கழுகுகளுக்கு உணவாக.

அப்போதும் அந்த நன்றியுணர்ச்சி நெஞ்சம் நிறைக்க ,நன்றியுரைக்க அவனை ஆவலோடு நோக்கியபடி அருகே செல்ல எட்டு வைத்தாள் .ஆனால் ...அவன் ...அதென்ன பார்வை ....பின் முதுகு வரை தோட்டா போல் துளைக்கும் பார்வை .சாவகாசமாக பாறை மேல் சாய்ந்தபடி அலட்சியமாக தன் துப்பாக்கியை துடைத்தபடி சபர்மதி மேல் அவன் வீசிய பார்வையில் என்ன இருந்தது ?

இதுதான் என வரையறுக்க முடியாமல் ,முதலில் சிறிது அறிமுகத்தன்மை , பிறகு ஏளனம் ,வெறுப்பு ,கோபம் எல்லாம் கலந்த கலவை பாவம் ஒன்று .ஒரே நேரத்தில் நிரம்பி வழிந்த இத்தனை பாவனைகளில் குழம்பி என்ன பேச என தெரியாமல் இவள் நின்றபோது ,
"உயிரை விட முக்கிய மானவைகளா இந்த நாடக பாவனைகள் ? என்றான்

"என்னது என்ன சொல்றீங்க சார் ?

" புகழ்ச்சி என்பது இனிப்பு போல .அது வாழ்வுக்கு அளவோடுதான் வேண்டும் "

இதென்னதிது ..ஒண்ணும் புரியலையே ,யாரையோ நினைத்தபடி தன்னிடம் பேசுகிறானோ ?...விளங்க வைத்து விடும் நோக்குடன் " இங்கே பாருங்கள் சார் நான் இந்த ஊர் பெண்ணில்லை .என்னோட ஊர் சென்னை .நீங்க யாரையோ நினைச்சு என்கிட்ட பேசுறீங்க " என்றாள் .

"சென்னை என்பது ரத்த சம்பந்தத்தை கூட மழுங்கடித்து விடுமோ ? .." அவன் குரலில் உஷ்ணம் .

ம்ஹூம் இவன் புரியிற மாதிரி பேசப்போவதில்லை என சபர்மதி எண்ணிக் கொண்டிருக்கையிலேயே " சபர்மதி " என தீபக்குமாரின் குரல் கேட்டது ." இதோ இங்கிருக்கிறேன் " என தீபக்கிற்கு பதிலளித்தபடி ,அந்த புது மனிதனை தீபக்கிற்கு அறிமுகம் செய்விப்போம் .ஒருவேளை இருவரும் அறிமுகமானவர்களாக இருக்கலாம் என எண்ணியபடி திரும்பி பார்க்க அந்த மனிதனை காணவில்லை .

"யாரைங்க தேடுறீங்க ? அட என்னாச்சு ? " எருமையை பார்த்து கேட்டான் தீபக்குமார் .

"என் பின்னாடி வந்து மேலே பாய பாத்தது .யாரோ ஒருத்தர் சுட்டுட்டாரு ? அவர் ...." தலையை திருப்பி அங்குமிங்கும் தேடத்தொடங்கினாள் .

" சபர்மதி இங்கே பழங்குடியினர் கொஞ்சம் இருப்பாங்க .அவுங்கதான் இந்த மாதிரி காட்டெருமையை எல்லாம் சுடுவாங்க .அந்த குரூப்ல யாராவதுதான் இருக்கும் .விடுங்க நாம போகலாம்.சுட்டவங்க வந்து இதை தூக்கிட்டு போயிடுவாங்க " முன்னால் நடக்க தொடங்கினான் .

"பழங்குடியினரா ..? அவனை பார்த்தால் அப்படி தெரியவில்லையே தேர்ந்தெடுத்த உடைகளோடு ஒரு உயர் குடும்ப களையும் முகத்தில் இருந்ததே ." தனக்குள் பேசியபடி தீபக்குமார் பின் நடந்தாள் சபர்மதி .

துப்பாக்கியை கண்டவுடன் அவன் நினைவு எதற்கு வரவேண்டும் ? ம்க்கும் பெரிய ஹீரோ அவன் .தனக்குள் நொடித்துக்கொள்ளும் போதே அந்த பாறை மேல் அலட்சியமாக சாய்ந்தபடி அவன் நின்ற தோற்றம் ஒரு ஹீரோவைத்தானே ஒத்திருந்தது என உள்மனம் எண்ண தொடங்க சை எவனோ ஒருத்தனை பற்றி இப்ப என்ன நினைப்பு ? தலையை உதறிக் கொண்டாள்


"எப்ப வந்த ? "தனக்கு பின்னால் சிறு பரபரப்பு கலந்து ஒலித்த குரலில் திடுக்கிட்டு திரும்பியவள் மீண்டும் ஒருமுறை தலையை உதறி கண்களை அழுந்த மூடி மூடி திறந்து பார்த்தாள் .

எவ்வளவு நேரமாக நின்றுகொண்டு....தீபக் எங்கே ? அக்கா பார்க்கலையா ? அக்கா ....என உள்நோக்கி அழைத்தவன் அந்த காட்டெருமையை சுட்ட அதே ஹீரோதான் .



- தேவதை வருவாள்.


0 comments:

Post a Comment

Blogger News

வணக்கம் தோழமைகளே , எனது " வா என் வண்ண நிலவே " கதைக்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு மிக்க நன்றி. இதோ உங்கள் முன் எனது அடுத்த கதை " வானவில் தேவதை " கறுப்பென்பது பிழையல்ல .மனமிருப்பின் வரமே என்பதனை என் முதல் கதையில் கூறியிருந்தேன். சொந்தங்கள் இல்லாத வாழ்வு வாழ்வல்ல.சந்தர்ப்ப சூழ்நிலைகளே சொந்தங்களின் பாசத்தை மறைக்கிறது என்பதனை இரண்டாவது கதையில் கூறியிருக்கிறேன் காதல் கலந்து.படித்து பாருங்கள்.
 

Blogger news

Blogroll