Pages

Powered by Blogger.

காக்கை கோவில்

காக்கை கோவில்       

                             
_____________________
"அம்மா "நீளமான அழுத்தமான குரல் .
குரலை கேட்கவுமே தெரிந்து விட்டது இளநீர் பறிப்பவன் .அந்த காலனியில் அநேக வீடுகளில் தென்னை மரம் உண்டு .இம்மரமேறி இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வந்து தேங்காய் பறித்து போட்டு உரித்துக் கொடுத்து விட்டு போவதுண்டு .மரத்திற்கு நூறு ருபாய் .

அழகாய் பாளை வெட்டி விட்டு பக்குவமாய் இளநீர் ,தேங்காய் பிரித்து வெட்டி போட்ட குப்பைகளையையும் சுத்தம் செய்து விட்டு போய் விடுவான் .

மரத்தில் முற்றி  கிடந்த தேங்காய்கள் நினைவு வர "பின்னாடி வாப்பா "என குரல் கொடுத்தபடி பின் கதவை திறந்தாள் .

மரத்தை தொட்டு வணங்கியவன் இரு கால்களுக்குமிடையே ஒரு கயிற்றை கோர்த்தபடி  லாவகமாய் மரமேற தொடங்கினான் .

மனதில் லேசான படபடப்புடன் அவனை அண்ணாந்து வேடிக்கை பார்த்தாள் ."அம்மா தள்ளிக்கோங்க" குரல் கொடுத்தவன் படபடவென காய்ந்த ஓலைகளை வெட்டிப் போட தொடங்கினான் .தென்னம்பாளைகளை சீவி விட்டவன் காய்களை பறித்து பாதுகாப்பான இடத்தில் எறிந்தான் .
வேலை முடித்து அநாசியமாய் இறங்கினான் .

தள்ளி நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவள் அருகில் வந்து பார்த்தாள் .தென்னை மட்டைகளோடு கிடந்தது முட்கள் ,கம்பிகள் கலந்து உருவான ஒரு புதர் போன்ற அமைப்பு .

"என்னப்பா இது "/என்றாள் அவள் .

"காக்கா கூடும்மா "என்றவன் அதை ஓரமாக போட்டு விட்டு மட்டைகளை சுத்தப்படுத்த ஆரம்பித்தான் .

அந்த கூட்டை கையில் எடுத்து பார்த்தாள் .தொட முடியாத அளவு கம்பிகளும் முட்களுமாக பின்னியிருந்தது அது .எப்படி இதற்குள் தங்கி முட்டையிட்டு குஞ்சு பொரிக்கிறது ஆச்சரியமாய் அதை புரட்டி பார்த்தாள் .

"தள்ளுங்கம்மா தொடாதீங்க கையை கிழிச்சிட போகுது "என்றவன் அந்த கூட்டை வாங்கி அதில் பின்னியிருந்த கம்பிகளை பிரிக்க தொடங்கினான் .

"எதுக்குப்பா "என்றாள் அவள் .

"இதை பிரித்து நான் எடுத்துக்குறேன்மா ,பழைய இரும்பில் போட்டுக்கிடுறேன"் என்றான் .

அதை பிரித்து எடுக்க மிக சிரம்ப்பட்டான் .முள்ளும் ,கம்பியும் சேர்த்து ஒன்றோடொன்று பின்னி பின்னி ....அப்பா ..

ஒரு தேர்ந்த பொறியாளரை போல் என்ன அழகான கூடு ,விழி விரித்து நோக்கினாள் .

சுத்தமாய் பதினைந்து நிமிடமானது அவனுக்கு ,அந்த கூட்டை பிரித்து எடுக்க ."கம்பி மட்டுமே கணிசமாக  இருக்கும்மா" என்றான் சந்தோசமாக .

எவ்வளவு உழைப்பு .எப்படி இவ்வளவு பொறுமையாக ஒவ்வொன்றாய் சேமித்தது .ஆச்சர்யம் தீரவில்லை அவளுக்கு .

மரமேறுபவனுக்கு பணம் கொடுத்து அனுப்பியவள் நினைவு முழுவதும் அந்த கூடே ஆக்ரமிக்கிறது .மனிதர்கள் போன்றே பறவைகளும் ஒரு வீடமைக்க எவ்வளவு சிரம்ப்படுகின்றன என எண்ணியவள் திடுக்கென யோசித்தாள் .

அந்தக்காக்கா இப்போது வீட்டுக்கு என்ன செய்யும் ?...

சட்டென்று பின்வாசல் சென்று தென்னை மரத்தினடியில் நின்று அண்ணாந்து பார்த்தாள் .வெயில் கண் கூசியது .ஒன்றும் தெரியவில்லை .

இரவு தூங்கும்போது  காலை எதுவோ சுரண்டுவது போலிருந்தது .
விழித்து பார்த்தால் கண்களில் கொலை வெறி பார்வையுடன் அந்த காக்கா .அப்படியே அவளை கண்ணாலேயே குத்தியது .

தொப்பல் தொப்பலாய் உடம்பெல்லாம வியர்வையில் நனைந்தவள் படக்கென எழுந்து அமர்கிறாள் .அவள் எழுந்து அமரவும் காகம் கட்டில் கைபிடியில் தன் அலகை முன்னும் பின்னுமாக திருப்பி கூர் தீட்டிக்கொள்கிறது .

கத்தியை தீட்டுவது போல் தெரிகிறது அவளுக்கு .அருகில் படுத்திருந்த கணவனை அழைக்க வாயை திறக்கிறாள் .வெறும் காற்றுதான் தொண்டையிலிருந்து வருகிறது .கைகளால் எழுப்பலாமென எண்ணி கைகளை தூக்கினால் கையை தூக்கவே முடியவில்லை .

"ஆ" பாத மேற்புறம் ஒரு ஆழமான கொத்து .தீயை வைத்து தேய்த்தது போல் எரிந்தது .அம்மாவென அலறியபடி கால்களை பொத்தினாள் .பொத்திய கைகளை தாண்டி ரத்தம் தெறித்து படுக்கையை நனைத்தது .

தனது சிறகுகளை படபடவென அடித்துக்கொண்டது அக்காகம் .ஒவ்வொரு முறை அடிக்கும் போதும் பெரியதானது .நிமிடத்தில் அந்த அறையின் கூரையை எட்டி பிரம்மாண்டமாக வளர்ந்து நின்றது .

சிறு புழுவை போல் படுக்கையில் கிடந்தாள் அவள் .தனது ராட்சச அலகினை பிளந்து அவளை கவ்வி தூக்கியது .வீட்டின வெளியே பறந்தது .மேகங்கள் உரச உரச வான் வெளியில் பறந்த அது யாருமற்ற தனி இடமொன்றில் அவளை கீழே வீசியது .

விநோதமாக சத்தமொன்று எழுப்பியபடி பறந்து மறைந்தது .கீழே விழுந்ததில் பலமான அடி அவளுக்கு .எழுந்து கொள்ள முயற்சித்தாள் .முடியவில்லை .

தரையில் அமர்ந்தபடியே பெருங்குரலெடுத்து அழத்தொடங்கினாள் .

அவளது தேகம் தூக்கிவாரிப்போட துவங்கியது .யாரோ பற்றி உலுக்குவது போல் உடல் ஆட துவங்கியது .முகத்தில் சுளீரென எதுவோ தாக்க ....

அலறியபடி கண் விழித்தாள் அவள் .
அவள் கணவன்தான் அவளை பிடித்து உலுக்கி கொண்டிருந்தான் .முகத்தில் தண்ணீர் தெளித்திருந்தான் .சட்டென எழுந்து அமர்ந்தவள் சுற்றிலும் பரக்க பரக்க பார்த்தாள் .

அவள் வீடுதான் .அவள் படுக்கையறைதான் .அவள் கணவன்தான் .எனில் கண்டதெல்லாம் ....

"ஏய் , சனியனே ஏண்டி உயிர் போகுற மாதிரி அந்த கத்து கத்தின " என்றான் .

"இ..இ..இல்லைங்க ஒ....ஒ..ஒரு கனவு ...ஒரு காக்கா என்னை தூக்கிட்டு போயி ...."

"என்னது குறைச்சி பார்த்தாலும் அறுபது கிலோ இருப்ப .ரெண்டே கிலோ இருக்கிற காக்கா உன்னை தூக்கிட்டு போகுதா ?...கொடுமைடா சாமி என தலையிலடித்தவன் தூங்கி தொலைடி ...உசுரை வாங்கிக்கிட்டு" என கத்தியவன் திரும்பி படுத்து தூங்க தொடங்கினான் .

திக்திக்கென இதயம் துடிக்க படுத்தவளுக்கு நடந்தது கனவென நம்ப முடியவில்லை .

காக்கை கொத்தின வலி இன்னும் பாத மேற்புறம் உணர்கிறாளே ,

மேகங்களின் உரசல் குளிர் தேகத்தில் மீந்திருக்கிறதே ,

கீழே விழுந்த வலி உடலில் ஊடுறுவியுள்ளதே ,

எப்படி ...இப்படி ...

கண்களை மூட பயந்து விழித்தபடியே இரவை கழித்தாள் .

மறுநாள் காலை இரவு சம்பவத்தை (அதை கனவென்று நம்ப அவள் தயாரில்லை )கணவனிடம் விளக்க முயன்றாள் .

காதில் போனை ஒட்ட வைத்தபடி "எல்லாம் அந்த மாடத்தையும் சேர்த்துதான்யா சொல்றேன் .அதை வச்சு நானென்ன கோவிலா கட்டப்போறேன் .உங்களுக்கு ஒரு வாரம்தான் டைம் ,அதுக்குள்ள எனக்கு இடம் முழுவதும் சுத்தமாகனும் " என கத்திக்கொண்டிருந்தான் .

தயங்கியபடி அருகில் வந்த மனைவியை பார்த்தவன் "இங்க பாருடி நான் ஏற்கெனவே பெரிய கடுப்புல இருக்கேன் .காக்கா வந்துச்சு ,கழுதை வந்துச்சுன்னு ஏதாவது உளர்ன கொன்னுடுவேன் "
என கத்திவிட்டு கிளம்பிவிட்டான்.

அவன் ஒரு ரியல் எஸ்டேட் முதலாளி .சிட்டியை தாண்டி ஒதுக்குபுறமாக சீப்பாக கிடைக்கும் இடங்களை அடித்து பேசி குறைந்த விலைக்கு வாங்கி ,சுத்தப்படுத்தி ,அழகாக்கி ,
சென்னைக்கு மிக அருகில் என்ற வாசகத்துடன் விளம்பரபடுத்தி நல்ல விலைக்கு விற்று விடுவான் .

சரியான லாபம் இத்தொழிலில் .சொந்த வீட்டு வெறியில் உள்ள நடுத்தரவர்க்கத்தினர் அரும்பாடு பட்டு எப்பாடு பட்டேனும் பணத்தை இவனிடம் கொண்டு வந்து கொட்டிக் கொண்டிருந்தனர் .

கணவனிடம் அப்போது மட்டுமல்ல ,அதன் பிறகும் அவளால் ஒன்றும் பேச முடியாது போனது .அவன் சக்கரம் கட்டாத குறையாய் ஓடிக்கொண்டிருந்தான் .

அவளுக்கோ கணவனிடம் சொல்ல ஏகப்பட்ட காக்கை தொல்லை இருந்தது. ஆம் ...அன்றிலிருந்து தினம் காக்கா அவளை விரட்டத்தொடங்கியிருந்தது .

முதலில் இரவில் மட்டும் .பிறகு சிறிது சிறிதாக பகலிலும் ....

துணி காயப்போடும் போது கயிற்றில் வந்து அமர்ந்து கைகளை கொத்தியது ,

பின் வாசல் படியில் கால் வைத்தால் காத்திருந்தது போல் வந்து கால்களை கொத்தியது ,

காரில் ஏறி வெளியே கிளம்பும் போது கார் கதவில் உட்கார்ந்து முறைத்தது ,

காரோடு சேர்ந்து கூடவே பறந்து வந்தது ,

எங்கேயென நிமிர்ந்து பார்த்தால் கண்ணை கொத்த வந்தது ...

அப்பப்பா ....கிட்டத்தட்ட நரகத்தில் வாழ்ந்தாள் அவள் ....

எல்லாமே கனவென்றான் கணவன் ..
அவள் விரிவுரைகளை பாதி காதில் வாங்கி ,பாதி வெளியே விட்டு ...

இரவில்தானே கனவு வரும் ...பட்ட பகலில் மட்ட மத்தியானத்தில் மொட்டை மாடியிலா வரும் ....

தலை சுற்றியது அவளுக்கு ...தாங்க கைப்பிடி சுவரை பற்றிய போது அங்கிருந்த ராட்சச காகம் தன் வாயை திறந்து பற்களினால் (ஆம் அது அலகினுள் கூரான பற்கள இருந்தன )அவளை கடித்தது .

அலறியபடி மயங்கினாள் அவள் .

மீண்டும் கண் விழித்த போது மென்மையான படுக்கை தாங்கியிருந்தது அவளை .எதிரே கருணை பொங்கும் கண்களுடன் ஒரு வயோதிகர் .

"பயப்படாதம்மா" என ஆதரவாய் தலை வருடினார் ."நான் உன் அப்பா மாதிரி .உனக்கு என்ன ஆச்சு ..என்கிட்ட எல்லாத்தையும் சொல்லு .கட்டாயம் என்னால் உன் பிரச்சினையை தீர்க்க முடியுமென்றார் .

விவரம் கேட்கும் காதிற்காய் காத்திருந்தவள் வெடிக்கும் அழுகைக்கும் ,விசும்பலுக்குமிடையே எல்லாவற்றையும் சொல்லி முடித்தாள .

நீ தூங்கும்மா எல்லாத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார் .

அவள் "ஐயோ தூங்கினால் காக்கா வருமே " என்றாள் மிரட்சியுடன் .

"இல்லம்மா அப்படியெல்லாம் வராது" என மென்மையாய் இமைகள் மீது தடவிக்கொடுத்தார் .

மெல்ல ஆழ்துயிலாழ்ந்தாள் அவள் .

வெளியே வந்து போனை எடுத்த அவர் "உடனே வாங்க "என்றார் .

எதிர்முனையை ஒருநிமிடம் கவனித்தவர் "உங்கள் மனைவி மனைவியாய் வேண்டுமென்றால் உடனே வாங்க "என்றார் .

அரை மணியில் வந்த கணவன் "என்னாச்சு டாக்டர் என்ன சொல்றா அவ ?" எனக்கு தொழில்ல எவ்வளவு பிரச்சினை தெரியுமா ,இடையில் இவா வேற என்னை போட்டு உருட்டுறா ?"என படபடத்தான .

"முதலில் உட்காருங்க மிஸ்டர் .நாம் தெளிவாக பேசனும் "என்றார் டாக்டர் .

மனமின்றி வாட்ச்சை பார்த்தபடி அமர்ந்தவன் "சீக்கிரம் சொல்லுங்க" என்றான் .

முதலில் "நீங்கள் உங்களை பற்றி சொல்லுங்க "என்றார் டாக்டர் .

"என்னை உங்களுக்கு தெரியுமே டாக்டர் .நான் ஒரு ரியல் எஸ்டேட் ...

கையுயர்த்தி நிறுத்தினார் ."அது தெரியும் .இப்ப தொழில்ல என்ன பிரச்சினை உங்களுக்கு "என்றார்

தயங்கினான் அவன் .

"அவரோட தொழிலால வந்த பிரச்சினை இதுன்னு உங்க மனைவி சொன்னாங்க ...அதான் "என்றவர் மேலே கூறுமாறு கையசைத்தார் .

"ஊருக்கு ஒதுக்குபுறமாக இருந்த அந்த இடம் விலைக்கு வந்தது .அதனை தோப்பென்று கூற முடியாது .மா ,தென்னை ,வேம்பு ,மா ,கொடுக்காய் என பல மரங்கள் ஒரு ஒழுங்கற்று காடாய் வளர்ந்திருந்தன.
அருகிலிருந்த ஒரு சிறு கிராமத்தார் அந்நிலத்தின் நடுவில் சின்னதாக பீடமொன்று கட்டி கோவிலென கூறிக்கொண்டு மரங்களை சுற்றி நட்டு அதனை தோப்புக்கோவில் என கூறிக்கொண்டிருந்தனர் .

சுமார் எழுபது வருடங்களாக இருந்தது அந்தக்கோவில் .அந்நில உரிமையாளர்கள் அக்கிராமத்தினரை வெளியேற்ற இரண்டு தலைமுறையாக முயன்று முடியாமல் இவனிடம் குறைந்த விலைக்கு விற்று விட்டனர் .

இவன் கைக்கு வந்ததும் ,மரங்களை முழுவதும் வெட்டி சுத்தப்படுத்த முனைய ,கிராமத்தினர் கோவிலென்று கூறி கோர்ட்டில் ஸ்டே வாங்கினர் .

இப்போது அந்த ஸ்டேவை  உடைத்து மரங்களையெல்லாம் வெட்டி 
கோவிலை இடிக்க முயற்சித்துக்கொண்டிருக்கிறான் .
கிராமத்தினர் பயங்கரமாக தடுத்துக்கொண்டிருக்கின்றனர் .
தீக்குளிக்கப்போவதாய் மிரட்டிக்கொண்டிருக்கின்றனர் .

ஓஹோ தலையாட்டி கேட்ட டாக்டர்  இந்த விசயமெல்லாம் உங்க  மனைவிக்கு  தெரியுமா "என்றார் "தெரியும் டாக்டர் .அந்த பழைய ஓனர் அன்னைக்கு எங்க வீட்ல வந்துதான் பேசினார் .என் மனைவி கூட சாமி சமாச்சாரமா இருக்கு ,நமக்கு வேண்டாங்க என்றாள் .ஆனால் நான் தொழிலில் வீட்டு பெண்கள் தலையீடு இருக்க கூடாதுன்னு நினைக்கிறவன் .அதனால் இதை பற்றி இனி பேசக்கூடாதுன்னு கண்டிப்பாக சொல்லிட்டேன் "என்றான் .

ம் ...அந்த சம்பவம் தான் உங்க மனைவி மனதை பாதித்திருக்கனும் என்றார் டாக்டர் .

"இல்லை டாக்டர் அவா என்னவோ தென்னை மரத்துல கட்டுன காக்கா கூட்டை கலைச்சதுனாலன்னு ...."

"இல்லையில்லை அது அவுங்களாவே நினைச்சுக்கிட்டது .ஆனா அவுங்க அடிமனதை பாதித்தது அந்த கோவில் விசயந்தான் "என்றார் டாக்டர் .

"நான் மாத்திரை மருந்து தர்றேன் .நீங்க வீட்டுக்கு கூட்டிட்டு போங்க .எனக்கென்னவோ அந்த நிலத்தை நீங்க விட்டுடுறது நல்லதுன்னு தோணுது .அதுதான் உங்க மனைவிக்கான கரெக்ட் ட்ரீட்மெண்ட் டாக இருக்கும் "என்றார்

தலையசைத்தபடி மனைவியை அழைத்து வெளியேறியவனை நிறுத்தி ,"ஆமா அது என்ன கோவில்னு சொன்னீங்க "என்றார் .

சற்று தயங்கிவிட்டு தலையை குனிந்தபடி ,"அது ஒரு வித்தியாசமான கோவில் டாக்டர் .அங்க சாமி ஒரு காக்கா "

"என்னது "எழுந்தே விட்டார் டாக்டர் .

"ஆமா டாக்டர் அந்த கிராமத்தில் ஒரு வீட்டினருக்கு ஒரு காக்கா ஏதோ உதவி பண்ணியதாம் எழுபது வருடத்திற்கு முன்பு .
அந்த வீட்டினர் ஒரு பீடத்தினுள் காக்கா சிலை செய்து அங்கே கொண்டு வந்து வைத்துவிட்டனர் .ஏன்னா அந்த காக்கா அங்க இருந்த மரத்துக்குள்ளதான் வந்து மறைஞ்சிடுச்சாம் .காலப்போக்கில் காக்கா எனபது சனீஸ்வரன் அவதாரம் என கூறப்பட்டு அந்த கிராம் முழுவதுக்கும் குலதெய்வமாகி விட்டது "என்றான்

"இதெல்லாம் நம்பும்படி இல்லை .ஆனால் உங்க மனைவி இதனை அளவுக்கதிகமாக நம்புகிறார்கள் .அதன் புரதிபலிப்புதான் இந்த காக்கா கனவுகள் "என்றார் .

தலையசைத்தபடி வெளியேறினான் அவன் மனைவியுடன் .

அந்த இடத்தின் பழைய ஓனரை  வீட்டிற்கு அழைத்து பேசினான் அவன்  .தன்மகளின் திருமண பத்திரிக்கை கொடுக்க வந்ததாக கூறினார் .

அவரிடம் நடந்த விபரங்களை கூறினான் அவன் .மீண்டும் அந்த இடத்தை வாங்கிக்கொள்ளுமாறு கேட்டான் .சிறிது நேரம் அமைதியாக இருந்த பழைய ஓனர் வாங்க நாம் அந்த கோவுலுக்கு போவோம் என அழைத்து சென்றார் .

மரங்களெல்லாம் வெட்டப்பட்டு பீடம் மட்டும் அநாதரவாய் இருந்தது .அந்த பீடத்து காக்கை முன் ஒரு பத்திரிக்கையை வைத்தவர் கீழே விழுந்து வணங்கினார் .

"என் மகள் கொஞ்ச நாட்களாவே கண்ட கண்ட கனவெல்லாம் கண்டு புலம்பிக்கொண்டிருந்தாள்.இந்த இடத்தை உங்களுக்கு விற்று விட்டு அவளுக்கு ஹெவி ட்ரீட்மெண்ட் எடுத்த பிறகு இப்போதான் கல்யாணம் கூடி வந்திருக்கு .நீங்க குடும்பத்தோடு வந்திருந்து வாழ்த்துங்க தம்பி "என்றவர் கை கூப்பி விட்டு கிளம்பி விட்டார் .

ஆறுமாதங்கள் கழித்து அவர் தன் மகள் ,மருமகனுடன் அந்த இடத்தை கடக்கும் போது" இடம் விற்பனைக்கு "
என்ற போர்டு தொங்கியது .சுற்றிலும் மரங்கள் சிறிது சிறிதாக வளர ஆரம்பித்திருந்தன 

0 comments:

Post a Comment

Blogger News

வணக்கம் தோழமைகளே , எனது " வா என் வண்ண நிலவே " கதைக்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு மிக்க நன்றி. இதோ உங்கள் முன் எனது அடுத்த கதை " வானவில் தேவதை " கறுப்பென்பது பிழையல்ல .மனமிருப்பின் வரமே என்பதனை என் முதல் கதையில் கூறியிருந்தேன். சொந்தங்கள் இல்லாத வாழ்வு வாழ்வல்ல.சந்தர்ப்ப சூழ்நிலைகளே சொந்தங்களின் பாசத்தை மறைக்கிறது என்பதனை இரண்டாவது கதையில் கூறியிருக்கிறேன் காதல் கலந்து.படித்து பாருங்கள்.
 

Blogger news

Blogroll