Pages

Powered by Blogger.

அம்மா சும்மா இருங்க

அம்மா சும்மா இருங்க 



__________________________
குக்கர் ஒரு புறம் விசிலடிக்க ,மிக்ஸி மறுபுறம் இரைந்து கொண்டிருந்தது .
ஒரு கரண்டியை தாங்கியிலிருந்து உருவ முயல்கையில் நாலைந்து கரண்டிகள் கீழே விழுந்து அபஸ்வரம் எழுப்பின .ஒரு நொடி நின்று அவற்றை எடுக்கலாமா என யோசித்து விட்டு சட்டென திரும்பி அடுப்பிடம் ஓடுகிறாள் கலையரசி .அவள் கால் பட்டு கீழே விழுந்த கரண்டி ஒன்று காத்தாடியாய் சுற்றியபடி ப்ரிட்ஜ் சின் அடியில் பதுங்குகிறது .

காலுக்கடியில் வெங்காயத்தோலும் ,கத்தரிக்காய் காம்பும் மிதிபடுகின்றன.வெட்டிப்போடப்பட்ட அழுகல் தக்காளி துண்டொன்று பாதத்தை பிரள வைக்க சற்று தடுமாறி விட்டு சமாளித்து கிரைண்டரிடம் ஓடுகிறாள் .பார்க்க பார்க்க பரிதாபம் மேலிடுகிறது காயத்ரிக்கு .

காலை வேலை முடித்து ,டிபனடைத்து மூன்றும் ,ஆறும் படிக்கும் இரண்டு பிள்ளைகளை கிளப்பி ,கணவனை கிளப்பி ,காயத்ரிக்கு பத்தியம் ரெடி பண்ணி ,தானும் கிளம்பி வாயில் எதையேனும் தட்டிக்கொண்டு ஒனபதுக்குள் ஸ்கூட்டியில் ஏறி உட்கார்ந்தால்தான அவள் 9.30 அலுவலகத்திற்கு நேரத்தில் செல்ல முடியும் .இடையில் வந்து நிற்கும் வேலைக்காரப் பெண்ணையும் பார்க்க வேண்டும் .

இந்த வேலைக்காரியை வேலை சொல்வது (காயத்ரி பாணியில் மேய்ப்பது )காயத்ரி வேலையாகத்தான் இருந்தது .ஆனால் சுத்தம் பார்க்கும் காயத்ரியால் மூன்று மாதத்துக்கு ஒருத்தி என மாற்ற வேண்டி வந்ததால் அந்த வேலையும் அவளிடமிருந்து பிடுங்கப்பட்டது .

மெல்ல சமையலறைக்குள் எட்டிப் பார்த்த காயத்ரி " ஏம்மா கலை நான் ஏதாவது பண்ணட்டுமா " என்றாள் .

அடுப்பில் வதங்கிக்கொண்டிருந்த உருளையை கீழிறக்கி வைத்து விட்டு பால் குக்கரை அடுப்பிலேற்றி சுட வைத்து டிகாசன் கலந்து அவளிடம் நீட்டி "இந்தாங்கத்தை காபி வராண்டால காத்தாட உட்கார்ந்து குடிங்க "என்றாள் கலையரசி .

வெளியே போ என்ற அர்த்தம் அதற்கு .அதனை உணர்ந்தும் கண்டுகொள்ளாமல் அடுப்படியினுள் நுழைந்து காபியை கீழே வைத்து விட்டு அரிவாள்மனையை எடுத்து வைத்து ஓரமாய் வைத்திருந்த அவரக்காயை நறுக்க தொடங்கினாள் காயத்ரி .கலையரசி மௌனமாக பார்த்து விட்டு அடுப்பிடம் திரும்பி கொண்டாள் .

உரிக்க உரிக்க நார் வந்து கொண்டே இருந்தது ."சை பூராவும் நாரு "என்று புலம்பியபடி கையை உதற கை பட்டு அருகில் வைத்திருந்த குழம்பு சட்டி கவிழ்ந்தது .நொடியில் குழம்பு அத்தனையும் தரையில் .

என்ன பண்றீங்க கத்தினாள் கலையரசி .கிட்டத்தட்ட அலறினாள் .

வேகமாக வந்த மதிவாணன் " என்னாச்சு கலை "என்றான் .

"பாருங்க உங்க அம்மாவை கொஞ்ச நேரம் சும்மா இருக்க மாட்டேங்கிறாங்க .காய் வெட்டி தர்றேன்னு குழம்பை பூராவும் கொட்டிட்டாங்க .இனி நான் திரும்ப குழம்பு வைக்கனும் " புலம்பினாள் .

"அம்மா நீங்க எழுந்திருங்க " காயத்ரியின் கையை பிடித்து எழுப்பினான் மதிவாணன் .

"இல்லப்பா நானும் கொஞ்சம் உதவி பண்ணலாமேன்னுதான் ..." காயத்ரிக்கு குரல் தழுதழுத்தது .

"அம்மா நீங்க சும்மா இருக்கிறதுதான் எங்களுக்கு செய்ற பெரிய உதவி "எனக் கூறியபடி காயத்ரியை ஹாலிலிருந்த சாய்வு நாற்காலியில் அமர்த்தி விட்டு உள்ளே செல்கிறான் .

உள்ளே" சரி சரி விடு இன்னைக்கு குழம்பெல்லாம் வைக்க வேண்டாம் .எல்லாருக்கும் தயிர் சாதமே போதும் .தொட்டுக்கத்தான் உருளைக்கிழங்கு இருக்கே ."எனும் சத்தம் கேட்டது .

வேலைக்காரி குழம்பை துடைத்து அள்ளி குப்பை கூடையில் போட்டாள் .
காபியை கொண்டு வந்து காயத்ரி கையில் கொடுத்த மதிவாணன் "இதைக் குடிச்சிட்டு சும்மா இருங்கம்மா "என்று விட்டு சென்றான்
"சும்மா இருங்க "..."சும்மா இருங்க "முடியுமா அவளால்? .காலை ஐந்து மணியிலிருந்து இரவு பத்து மணி வரை ஒரு நிமிடம் சும்மா இருந்தவளா அவள் .?

பம்பரமாய் சுற்றி வந்தவள் .அவள் திருமணமாகி மூத்த மருமகளாய் இந்த வீட்டிற்கு வந்த போது பெரிய குடும்பம் இது .அவள் கணவன் சாமிநாதனுக்கு இரண்டு தம்பி ,ஒரு தங்கை .திருமணமான மறுநாள் அவள் மாமியார் அவள் கையில் கொடுத்த கரண்டி இப்போது அவள் மருமகள் கலையரசி இரண்டாவது பேரனை பெற்று தேறிய வரை அவள் கையிலேயே இருந்தது .

பிறகு சுகர் ,பிரசர் என சிறிது உபாதைகள் தலை காட்ட ஒரு வாரம் ஓய்வெடுக்கும்படி மருமகள் கைக்கு போன கரண்டி மீண்டும் அவள் கைக்கு திரும்பவே இல்லை .செங்கோல் இழந்த மன்னனானாள் .

எப்பொழுது தன் பதவி பறி போயிற்று என்று இன்று வரை அவளால் கண்டு பிடிக்கவே முடியவில்லை .

பிளாஸ்டிக் பந்தை சுவரில் எறிந்து எறிந்து விளையாண்டு கொண்டிருந்தான் பேரன்."டேய் குளிக்க போடா "கத்தினாள் கலையரசி .

போறேம்மா ,பந்தாட்டத்தை தொடர்ந்தான் பேரன் .ராசா அம்மாவுக்கு நேரமாகுது பாரு போய் குளிடா செல்லம் " என்றாள் காயத்ரி .

யாரோ யாரையோ சொல்வது போல் காதில் வாங்காமல் பந்தை வீசிக்கொண்டிருந்தான் அவன் .தாழ்ந்த குரலில் ஏதோ முணுமுணுப்பு வேறு .அது தனக்கான வசவுதான் என உணர்ந்த காயத்ரிக்கு மனம் வலித்தது .

காபி டம்ளரை உதட்டில் பொருத்தினாள் .ஆறிப்போன காபி நாக்கு நுனியை தாண்ட மறுத்தது ."இதை என்ன செய்ய "யோசித்தபடி கையிலிருந்த காபியை வெறித்த போது ,முழு வேகத்துடன் கையை தாக்கியது பந்து .காபி டம்ளர் கீழே விழுந்து காபி தரையில் பரவியது .

உயிர் போகும் வலி கையில் .நரம்புகளெல்லாம் சுருண்டு கொள்ள கை மரத்து போனது ."ம்மா" குரல் கூட முனகலாகத்தான் வந்தது காயத்ரிக்கு .
சிறிது நேரம் திகைத்து நின்ற பேரன்
"நான் குளிக்க போறேன் " ஓடி விட்டான் பேரன் .

தரை துடைக்க தண்ணீர் வாளியுடன் வந்த வேலைக்காரி சிந்திய காபியை பார்த்ததும் காயத்ரியை முறைக்கிறாள் .வாளிக்குள் மாப்பை அழுத்தியவள் தொப்பென்று சிந்திய காபியின் மீது போட்டு ராவ ஆரம்பித்தாள் .கால்கள் வரை வந்த மாப்பை தவிர்க்க மெல்ல எழுந்து கொண்டாள் காயத்ரி .

"காலம் போன காலத்துல சும்மா இருக்காம நம்ம உயிரை வாங்குது கிழம் "கேட்கட்டுமென்றே தெளிவாக முணுமுணுக்கப்பட்ட வார்த்தைகள் .

இந்த காது அரைகுறையாக கேட்பதற்கு முழுவதும் கேட்காமலேயே போய் விடலாம் பெருமூச்சுடன் எண்ணிக்கொண்டாள் காயத்ரி .

பின் வாசல் படியில் வந்தமர்ந்தாள் காயத்ரி .கை இன்னும் விண்விண்ணென்று தெரித்தது .தோட்டத்தை பார்த்தாள் .காய்ந்து போய் கிடந்தது .தண்ணீர் விடுவோம் என எழுந்து ட்யூப்பை தேடிய போது "அம்மா" ..மகனின் குரல்

என்னப்பா உள்ளே விரைந்தாள் மகன்.அலுவலகத்திற்கு கிளம்பிய நிலையில் ,"ஆபிசுக்கு கிளம்பிட்டேன்மா.ஜாக்கிரதையாய் இருங்க .நீங்க ஒண்ணும் செய்ய வேணாம் .சும்மா ஓய்வா இருங்க ."என்றான் .தலையாட்டினாள் காயத்ரி .பைக் புறப்பட்டது .

தயிர் சாதத்தை மறுத்து அடம் பிடித்த பிள்ளைகளின் தலையில் ரெண்டு கொட்டு வைத்து அவர்களை ஆட்டோவிற்குள் தள்ளி விட்டு வந்த கலையரசி கணவனுக்கு கையாட்டிவிட்டு உள்ளே விரைந்தாள்
தனது டிபனை கைப்பைக்குள் திணித்தபடி ,"அத்தை உங்க சாப்பாடு டேபிள்ல எடுத்து வச்சிட்டேன் .மாத்திரையும் பக்கத்துலயே இருக்கு சாப்பிட்டதும் மறக்காமல் போட்டுக்கோங்க .அதை இதை உருட்டாம சும்மா இருங்க "என்றவள் திரும்பி வேலைக்காரியிடமும் "ஏய் வேலை முடிஞ்சதா சடக்குன்னு வெளியேறு எனக்கு நேரமாச்சு "என்றாள் ;

பின் வாசல் வழி வேலைக்காரி போனதும் பின்வாசலை பூட்டி சாவியை மறக்காமல் தன் கைப்பைக்குள் போட்டுக்கொண்டாள்
இரண்டு மாதம் முன்பு வரை பின்வாசல் சாவி ஆணியில்தான் தொங்கிக்கொண்டிருக்கும் .ஒருநாள் பின் வாசல் கதவை திறந்து வைத்தபடி கண் அயர்ந்து விட்டாள் காயத்ரி .எப்படியோ உள்ளே நுழைந்த நாயொன்று அடுப்படி வரை போய் ஒரு வழி பண்ணி விட்டது .

அதிலிருந்து இப்படி ஒரு ஏற்பாடு .நீ பூட்டிட்டா நான் விட்டுடுவேனா ?ரகசிய புன்னகை ஒன்றுடன்
மனதுக்குள் பெருமையாய் எண்ணிக்கொண்டாள் காயத்ரி .

"அத்தை அதை செய்யுறேன் ,இதை செய்யுறேன்னு எதையும் போட்டு உடைக்காம டிவி பார்த்துக்கிட்டு சும்மா இருங்க .நான் வர ஆறு ஆயிடும் ",முன் வாசலையும் பூட்டியவள் ஸ்கூட்டியில் பறந்து விட்டாள் .

செய்வதறியாது சிறிது நேரம் ஹால் சோபாவில் சாய்ந்திருந்தாள் காயத்ரி .வயிறு லேசாக குரல் கொடுக்க எழுந்து டேபிளுக்கு வந்தாள் .அவளுக்கான கோதுமை கஞ்சி அழகாக ஹாட்பாக்ஸில் வைக்கப்பட்டிருந்தது .அதனை ஒரு கிண்ணத்தில ஊற்றிக்கொண்டாள் .
ஸ்பூன் போட்டுக்கொண்டு ஹால் சோபாவில் அமர்ந்து கொண்டாள் .

டிவியை போட்டாள் .ஒரு வாய் கஞ்சியை உறிஞ்சினாள் .இதமான சூட்டோடு அளவான உப்போடு இருந்தது .பசி வேகத்தில் பாதி கிண்ணம் வேகமாக காலியானது .ச

சானல்களை ஒவ்வொன்றாய் மாற்றினாள் .கலர் சானல்களை வேகமாக மாற்றி விட்டு கறுப்பு வெள்ளையில் சிறிது நேரம் தங்கினாள் .கஞ்சி ஆறி விட்டிருந்தது .இப்போது அதில் உப்பு தூக்கலாக தெரிந்தது .தவிரவும் ஹாட்பாக்ஸில் வைத்த ஒரு வித வாடை .

சாதாரண சில்வர் டப்பாவில் வைக்கச் சொன்னால் கேட்க மாட்டேங்கிறா என மருமகளை சிறிது குறை பட்டுக்கொண்டாள் .அடுத்த ஸ்பூன் வாயில் வைத்த போது உள்ளே போன பாதி கஞ்சியும் வெளியே வர ஓங்கரிக்க சட்டென எழுந்து மிஞ்சியதை சின்க்கில் கொட்டி தண்ணீரை திறந்து விட்டாள

டேபிளில் இருந்த மாத்திரைகள் பயமுறுத்த அப்புறம் பார்த்து கொள்ளலாம் என்றெண்ணியபடி மீண்டும் டிவி முன் அமர்ந்தாள் .

கறுப்பு வெள்ளை போரடிக்க வேறு சானல் மாற்றினாள் .ஐய்யய்யோ என ஒரு பெண் அடிவயிற்றிலிருந்து கத்தினாள் ஒரு சீரியலில் .சட்டென பபயந்து போனாள் காயத்ரி .தொடர்ந்து நாசமா போவ ,விளங்க மாட்ட என புனித வார்த்தைகளை உதிர்க்க தொடங்கினாள் சீரியல் பெண் .படக்கென டிவியை ஆப் செய்தாள் காயத்ரி .

இந்த துன்பத்துக்குத்தான் டிவியே போடுறதில்லை என நோகாமல் தலையிலடித்துக் கொண்டாள் .

மெல்ல எழுந்து வீட்டில் குறுக்கும் நெடுக்குமாக நடக்க தொடங்கினாள் .
வீட்டின் ஒவ்வொரு அறையையும் நிதானமாக சுற்றி வந்தாள் .திருமணம் முடிந்ததும் வந்து விளக்கேற்றிய பூஜையறை ,மாமியார் மேற்பார்வையில் முதன் முதலில் சமைத்த சமையல் ....

பொரியாத கடுகை சுட்டிக்காட்டிய மாமியாரின் வார்த்தைகள் இன்னும் மூளையில் பதிந்திருந்தன ,அன்று ருசி பார்க்க வாயில் விட்டுக்கொண்ட குழம்பின் ருசி கூட இன்னும் ,நாக்கில் தங்கி இருக்கிறது .

கணவனின் அரவணைப்பை அனுபவித்த படுக்கையறை ....
அதே சிலிர்ப்பை தேகம் இப்போதும் உணர்ந்தது .

காலச்சக்கரத்தை சுழற்றும் சக்தி அவளிடம் இருக்குமாயின் ,சக்கரத்தை சுழற்றி விட்டு திருமணம் முடிந்து மீண்டும் இந்த வீட்டினுள் வலது கால் வைக்கும் காலத்திற்கு போவாள் .

இளமைக்காலம் திரும்ப பெற அல்ல .
கொல்லும் இத்தனிமையிலிருந்து விடுதலை பெற .

எப்போதும் மாமனார் ,மாமியார் ,கணவர் ,கொழுந்தனார்கள் குடும்பம் , விடுமுறையில் வருகை தரும் நாத்தனார் குடும்பமென கலகலப்பாக இருந்தே பழகியவளுக்கு ஆளரவமற்ற இத்தனிமை பெருங் கொடுமையாக இருந்தது .

இப்படி என்னை தனியாக விட்டுட்டு நீங்க மட்டும் நிம்மதியா போய்ட்டீங்களே ...என்னையும் கூடவே கூட்டிட்டு போக கூடாதா என கணவரின் படத்தின் முன் நின்று புலம்பினாள் .

கண்களை துடைத்து கொண்டு வீட்டின முன்னறைக்கு வந்து பூட்டிய கதவை பிடித்தபடி சிறிது நேரம் வேடிக்கை பார்த்தாள் .காம்பவுண்ட் சுவரை தாண்டி அக்கம் பக்கத்து பெண்கள் காய்கறிக்காரனிடம் பேரம் பேசிக்கொண்டுருந்தனர் .காது சிறிது மந்தமாகி விட்டதால் அவர்களின் பேச்சு நிழல்படம் போல் தெரிந்தது .

வீட்டின் பக்கவாட்டு வேப்ப மரத்தில் ஓடிய அணிலை சிறிது நேரம் வேடிக்கை பார்த்தாள் .ஒன்றிரண்டு காக்கைகள் கூட கரைந்து கொண்டிருந்தன .இன்று காலை காக்கைக்கு சாதம் வைக்கவில்லை.
யே .தினமும் சாதம் ஆக்கியவுடன் காக்கைக்குதான் மருமகளிடம் கேட்டு வாங்கி கொண்டு போய் வைப்பாள் .

இது அவளது முப்பத்தைந்து ஆண்டு பழக்கம் .மாமியார் தொடங்கி வைத்தது .இன்று நடந்த கலாட்டாவில் அது மறந்தே விட்டது .எதையோ இழந்தாற்போல் உணர்ந்தாள் காயத்ரி .

காய்கறிக்காரன் வியாபாரம் முடித்து போய் விட தெரு இப்போது வெறிச்சிட்டது .வீட்டினுள் வந்தாள் காயத்ரி .

பின் வாசலை அடைந்தாள் .கதவுக்கு பெரிய பூட்டு போடப்பட்டிருந்தது .சாவியை கைப்பையில் பத்திரபடுத்திய மருமகள் நினைவு வந்தது .சிரித்துக்கொண்டாள் .

அந்த பூட்டு அவள் மாமனார் வாங்கி போட்ட பூட்டு .அதற்கு இரண்டு சாவி உண்டு என்பது கூட மகனுக்கும் ,மருமகளுக்கும் தெரியாது .

தனது தலையணைக்கடியில் வைத்திருந்த இன்னொரு சாவியை எடுத்து வந்து கதவை திறந்து வெளியே வந்தாள் .வெளிக்காற்று சுதந்திரமாய் காயத்ரியை தழுவியது .ஆழ்ந்து அதனை சுவாசித்தாள் .

ஏதோ சாதனை செய்த திருப்தி காயத்ரிக்கு வெளியே வந்ததில் .ஏதோ விடுதலையான கைதியின் மனநிலை .ஒருநிமிடம் ஏய் என்று கை தட்டி சிறு குழந்தை போல் குதிக்க வேண்டும் போல் தோன்றியது .

மெல்ல தோட்டத்தில் நடக்க தொடங்கினாள் .சுற்றியுள்ள வீடுகள் எல்லாம் அபார்ட்மெண்ட் களாக மாறி வரும் போது அவள் மகன் மதிவாணன் மட்டும் தனிவீடு விசயத்தில் உறுதியாக இருந்தான் .

கலையரசியும் அவனுக்கு குறைந்தபட்சம் இந்த விசயத்தில் ஒத்து போவதால் இந்த வீடு தப்பி பிழைத்து கொண்டிருக்கிறது .இல்லையானால் இப்படி காலாற வெளியே உலவுவது ஏது .பலவாறு எண்ணியபடி நடந்த காயத்ரியின் கால்களை சருகுகள் உறுத்தியது .

நின்று சுற்றி பார்த்தாள் .நிறைய சருகுகள் சேர்ந்து விட்டிருந்தன.விளக்குமாறை தேடினாள் .அந்த மூலையில் கிடந்தது அது .எடுத்து வந்து குப்பையை கூட்ட தொடங்கினாள் .

மகனோ மருமகளோ திட்டக்கூடும் .திட்டட்டும் அதற்காக அவர்கள் கூறியது போல் சும்மாவே இருக்க முடியாது .சிறிது பெருக்கவுமே மூச்சு வாங்க தொடங்கியது .வாசல் முன்பு மட்டும் தூத்து அள்ளி குப்பையை ஓரமாக கொட்டினாள் .

வறண்டிருந்த செடிகளுக்கு டியூப் வைத்து நீரூற்றினாள் .இந்த வேலையெல்லாம் எப்படி செஞ்சீங்க? எப்படி பின்னால் வந்திங்க? என்று மருமகள் கேட்டால் ....ஒரு நிமிடம் யோசித்தவள் கேட்டால் சாவியை சொல்லி விட வேண்டும் ,கேட்டால் அதனை தர கூடாது என எண்ணிக்கொண்டாள் .

மறக்காமல் பின் கதவை பூட்டிக்கொண்டு உள்ளே வந்தாள் .வேலை பார்த்ததாலோ என்னவோ சிறிது பசித்தது ..

மேசையில் இருந்தவற்றை ஆராய்ந்து சோறும் தயிரும் விட்டுக்கொண்டாள் .தயிர் புளித்தது .உருளைக்கிழங்கு உப்பின்றி சப்பென்றிருந்தது .துளி ஊறுகாய் இருந்தால் உள்ளே தள்ளி விடலாம் .ஆனால் காயத்ரிக்கு ஊறுகாய் ஆகாதென்று

மதிவாணனுக்கு வேளா வேளைக்கு வகை வகையாய் வேணும் .எப்படித்தான் இதையெல்லாம் சாப்பிடுகிறானோ ?.பெருமூச்சுடன் நாலு வாய் கஷ்டப்பட்டடு சாப்பிட்டாள் .

தட்டை போட்டு விட்டு கை கழுவியவளுக்கு இப்போதும் மாத்திரை போடும் எண்ணம் வரவில்லை .ஒரு நாள் போடாட்டா என்ன என சமாதானப்படுத்திக் கொண்டாள் .

காலையில் ப்ரிட்ஜ்ஜினடியில் விழுந்த கரண்டி நினைவு வந்தது .கண்டிப்பாக வேலைக்காரி எடுத்திருக்க மாட்டாள் .அவள் விளக்குமாறு ப்ரிட்ஜ்ஜை சுற்றி சுற்றி வரும் .அடியில் போகாது .

கஷ்டப்பட்டு குனிந்து அதனை எடுக்க முயன்றாள் .கை எட்டவில்லை .விளக்குமாறை விட்டு அதனை தொட்டு வெளியே தள்ளினாள் .வெளியே வந்த கரண்டியை எடுத்து கழுவ போட்டாள் .கலையரசியோ ,வேலைக்காரியோ எடுத்திருந்தால் அப்படியே கரண்டி ஸ்டான்டில் தொங்க விட்டிருப்பர் .

அடியில் எத்தனை தூசுகளோ ?...சீச்சி என எண்ணிக்கொண்டாள் .நல்ல வேலை செய்தோம் தன்னை தானே தட்டிக் கொண்டாள் .

ஹாலுக்கு வந்தாள் .டிவியை பார்த்தால் பயம்மாக இருந்தது .என்ன செய்யலாம் ?கண்களை சுழற்றினாள் .அலமாரியில் அடுக்கியிருந்த புத்தகங்கள் கண்ணில் பட்டன .

ரொம்ப நாளாச்சே வாசித்து .ஆவலுடன் புத்தகங்களை நெருங்கினாள் .ஒவ்வொன்றாய் கலைத்தாள் .பொன்னியின் செல்வன் கண்ணில் பட்டது .எல்லாவற்றையும் இன்றே முடிப்பவள் போல் ஐந்து பாகத்தையும் தேடி எடுத்தாள் .இதற்குள் அலமாரி முழுவதுமாக கலைந்து போனது .

மதிவாணன் திட்டுவானோ ?ஒரு நொடி யோசித்தாள் .திட்டினால் எனக்கு பொழுது போகலை .அதனால் புத்தகம் படிக்க எடுத்தேன் .கலைஞ்சிருச்சுன்னா எடுத்து அடுக்கிக்கோன்னு சொல்லிடுவேன் .தனக்கு தானே சொல்லிக்கொண்டாள் .

புத்தகத்தை திறந்தாள் .எழுத்துக்கள் இரட்டை இரட்டையாக தெரிந்தது .லென்ஸ் பவர் போய் வேறு கண்ணாடி போன வாரம்தான் மாற்றியிருந்தாள் .ஆனால் அந்த கண்ணாடி போட்டதும் தலைவலி வந்ததால் பழையதையே உபயோகிக்கும்படியும் அடுத்த வாரம் செக்கப் பண்ண அழைத்து போவதாகவும் மதிவாணன் கூறியிருந்தான் .

மிக கஷ்டப்பட்டு இரண்டு பக்கம் வாசித்தாள் .நெற்றிப்பொட்டு வலிக்க தொடங்கியது .ஆயாசத்துடன் அந்த புத்தகங்களை அலமாரியிலேயே திணித்தாள் .

மீண்டும் வாசல்படி வந்தாள் .பள்ளி விட்டு குழந்தைகள் நடமாட்டம் தொடங்கியது .காயத்ரியின் பேரன்கள் பள்ளியில் இருந்து டியூசன் போய் விடுவார்கள் .மதிவாணன் ஏழு மணிக்கு வரும்போது உடன் அழைத்து வருவான் .கலையரசி ஆறு மணிக்கு வந்துவிடுவாள் .

வீட்டினுள் செய்து வைத்துள்ள குளறுபடிகளுக்கு என்ன பதில் சொல்ல போகிறோம் .நேரமாக ஆக இந்த பயம் அதிகரித்தது .சும்மா இரு சும்மா இரு ன்னு மாத்தி மாத்தி சொல்லிட்டு போனாங்களே சும்மா இருக்காம போனோமே மனதிற்குள் புலம்பினாள் .

வீட்டினுள் திரும்ப வரும் போது காலில் ஏதோ பிசு பிசுவென ஒட்டியது .குனிந்து பார்த்த போது காலையில் பேரன் தட்டி விட்ட காபியை வேலைக்காரி இந்த லட்சணத்தில் துடைத்துள்ளாள் என தெரிந்தது .இவ்வளவு நேரம் எப்படி கவனிக்காம விட்டோம் என எண்ணியபடி யோசனையுடன் நின்றாள் .

உடனே உள்ளே சென்று அரை வாளி தண்ணீரை சுமக்க முடியாமல் எடுத்து வந்து குனிந்து துடைக்க தொடங்கினாள் காயத்ரி .சும்மா இருங்க என ஒலித்த குரல்களை அலட்சியப்படுத்தினாள் .

திடுமென அழைப்புமணி ஒலித்தது .சட்டென திடுக்கிட்டவள் எழுந்து வாசலுக்கு சென்று பார்த்தாள் .மதிவாணனை தேடி வந்த ஆட்கள் .ஏழு மணிக்கு மேல் வருமாறு கூறி விட்டு உள்ளே வந்தாள் .

ஏழு மணிக்கு வரும் மகனிடம் என்ன சொல்லி சமாளிப்பது என மனதினுள் பயந்தபடியே உள்ளே வந்த காயத்ரி ....

தரையில் தடவி வைத்திருந்த தண்ணீரில் கால்கள் வழுக்கி கீழே விழ ,நீட்டிக்கொண்டிருந்த சோபா முனை மண்டையை வலுவாக பதம் பார்க்க தனது வாழ்வின் கடைசி விநாடிகளை எண்ணியபடி ,"அப்பாடி இனி மகனுக்கும் ,மகளுக்கும் பதில் சொல்ல வேண்டியதில்லை "என்ற நிம்மதியுடன் வேறு உலகுக்கு பயணமானாள் காயத்ரி .

வெள்ளை மார்போனைட் நிதானமாக சிவக்க தொடங்கியது .இனி அவள் சும்மாவே இருப்பாள் .

இளமை கொழிக்கும் முத்த சிலிர்ப்பையும்
சமைத்த கை விரல் ரேகையையும்
பிள்ளை வாய் எச்சில் வாசத்தையும்
இந்த மாத்திரைகளோடு சேர்த்து
விழுங்கி கொண்டிருக்கிறேன்
காகங்களும் அணில்களும்
நிறைந்ததாய் இருக்கின்றன
என் பகல் பொழுதுகள்
என்றோ ஒருநாள்
என் கணவனிடம் வாங்கிய
மாடிப்படி அடி முத்தத்தால்
இரவினை தள்ளி விட முடியும்
என்னால்
அக்கம் பக்கமும் டிவியும் பேப்பரும்
கடிகாரமும் வெய்யிலும்
இணைந்த பகலை
தள்ளவே முடிவதில்லை
அடுத்தொரு ஜென்மமிருப்பின்
பிராரத்திக்கிறேன் .
குறுகிய பகலும் நீண்ட இரவுமாய்
பொழுதுகள் அமைய .

0 comments:

Post a Comment

Blogger News

வணக்கம் தோழமைகளே , எனது " வா என் வண்ண நிலவே " கதைக்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு மிக்க நன்றி. இதோ உங்கள் முன் எனது அடுத்த கதை " வானவில் தேவதை " கறுப்பென்பது பிழையல்ல .மனமிருப்பின் வரமே என்பதனை என் முதல் கதையில் கூறியிருந்தேன். சொந்தங்கள் இல்லாத வாழ்வு வாழ்வல்ல.சந்தர்ப்ப சூழ்நிலைகளே சொந்தங்களின் பாசத்தை மறைக்கிறது என்பதனை இரண்டாவது கதையில் கூறியிருக்கிறேன் காதல் கலந்து.படித்து பாருங்கள்.
 

Blogger news

Blogroll