Pages

Powered by Blogger.

வா என் வண்ணநிலவே - 7

தன்னைத்தானா தன்னிடந்தானா பேசினான் ...எழில்நிலா சுற்றி சுற்றி பார்த்தாள் ."உன்னிடந்தான் கேட்கிறேன்.." என்றான் நித்யவாணன் .
"அ..அ...அது ..வந்து "என திணறினாள் எழில்நிலா .

"என்ன வந்து ...போயி ...பாம்புகள் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் திசையை மாற்றி விடும் தெரியுமா ?"என்றான் நித்யவாணன் .

எதிலோ படித்த ஞாபகம் வர 'தெரியும்' என தலையாட்டினாள் எழில்நிலா .

"தெரிந்தும்.." என ஏதோ சொல்ல வாயெடுத்தவன் சாருகேசியும் ,மானசியும் வருவதை பார்த்ததும் "அப்புறம் பேசலாம்" என அவளிடம் முணுமுணுத்து விட்டு அங்கிருந்து அகன்றான் .

வீட்டிற்கு திரும்பிய பின்னும் நெடுநேரம் எழில்நிலாவுக்கு நடந்த சம்பவங்களை நம்பவே முடியவில்லை .

நேற்று இந்நேரம் அவனை சந்திக்கவே முடியாது என நினைத்தோமே ...

இன்று சந்தித்ததோடு அவனோடு பேசியுமாயிற்று ,
அவனும் பேசி விட்டான் தன்னுடன் வெகு அக்கறையாக ...

நினைக்க நினைக்க உருகிப்போனது அவள் உள்ளம் .

மறுநாள் வெளியே கிளம்பும் போதே இன்றும் நித்யவாணனை சந்திக்க நேர்ந்தால் நன்றாயிருக்குமே என தோன்றியது .

கடவுள் கருணையிருந்தால் நடக்கும் என எண்ணியபடி காலை உணவுக்காக வந்த போது "எழில் இன்னைக்கு எங்க எல்லோருக்குமே வேலை இருக்கேடா ,இன்னைக்கு ஒரு நாள் வீட்லயே இருக்கிறாயா ?நாளை போட்டிங் போகலாம் "என்றாள் சந்திரா .

காலை எழுந்த போது இருந்த உற்சாகம் வடிந்துவிட்டது எழில்நிலாவுக்கு ."ம் ..."என்றாள் குரல் எழும்பாமல் .

"என்ன சந்திரா ...நம்ம ஊரை சுற்றி பார்க்கவே ஆசையா வந்த பொண்ணு .வீட்டுக்குள்ள இருன்னா எப்படி ?எவ்வளவு நேரந்தான் சும்மா மரத்தையும் மட்டையையும் பார்ததுக்கிட்டிருப்பா ?"என்றார் சந்திராவின் பேச்சை கேட்டபடி வந்த சாருகேசி .

"இல்லங்க இன்னைக்கு நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாண வீடு இருக்கு .வருணுக்கும் ,மானசிக்கும் கிளாஸ் இருக்கு ..அதான் .."என இழுத்தாள் சந்திரா .

"நம்ம வேலை என்னைக்கும்தான் இருக்கு .ஆசையா நம்ம ஊருக்கு வந்த பிள்ளையை ஏமாற்றலாமா ?"என்ற சாருகேசி எழில்நிலா பக்கம் திரும்பி ,"எழில் சின்ன காரை விட்டுட்டு ,சாமிதுரையை ஓட்ட சொல்லிட்டு போறோம் .நீ அவன் கூட போட்டிங் இல்லைன்னா வேற இடத்துக்கு போயிட்டு வர்றியா ?"எனக் கேட்டார் சாருகேசி .

சிறிது தயங்கினாள் எழில்நிலா .இதுவரை பெரியவர்கள் துணையில்லாமல் அவள் எங்கும் வெளியே சென்றதில்லை ..இப்போது எப்படி ..என எண்ணமிடும்போதே அவள் ராஜகுமரன் மனதுக்குள் தோன்றி அப்புறம் பேசலாம் என புன்னகைத்தான் .

சரி சொல்லிவிடுவோம் என எண்ணி வாயை திறந்த போது ,"இல்லையில்லை தனியா எப்படி அனுப்புறது .அதெல்லாம் வேண்டாம் "என ஆட்சேபித்தாள் சந்திரா .

"தனியா என்ன சாமிதுரை நம் வீட்டு ஆள் போல ,நம்மிடம் பதினைந்து வருடங்களாக வேலை செய்பவர் .நல்ல விசுவாசி .அவரை நம்பி தாராளமாக எழிலை அனுப்பலாம் "என்ற சாருகேசி ...நீ கிளம்பும்மா என்றார் எழில்நிலாவிடம் .
வானத்து விண்மீன்களை கை நிறைய அள்ளியது போல் மகிழ்ந்தாள் எழில்நிலா .
லேக்கில் போய் காலை வைத்தவுடன் பார்வையை அங்குமிங்கும் மேய விட்டாள் .
"யாரை தேடுற ?"என்ற கேள்வியுடன் பின்னால் வந்து நின்றான் நித்யவாணன் .

"எப்படி இங்கேயும் வந்தான் ?" என யோசிப்பதற்கு பதில் முகம் முழுதும் பற்களை காட்டி விழி விரித்தாள் எழில்நிலா .

போட்டிற்கான டிக்கெட்டுடன் வந்த சாமிதுரையிடம் டிக்கெட்டை வாங்கியபடி "போலாமா.." என்று ஒரு போட்டை நோக்கி நடத்தான் நித்யவாணன் .

மறுக்க தோன்றாமல் ஆட்டுக்குட்டி போல் பின்னாடி சென்றாள் .முழுவதுமாக ஒரு மணி நேரம் போட்டிலேயே ஏரி முழுவதும் சுற்றினர் .

பேசினர் ...பேசினர் ..என்ன ..எதை பேசுகிறோம் என அறியாமல் ,இப்பூமியில் இருக்கும் அனைத்தை பற்றியும் பேசினர் .

பத்தே நிமிடங்களே இருக்கும் என அவள் எண்ணிய ஒருமணி நேரத்திற்கு  பிறகு ,
மனமின்றியே வீட்டிற்கு கிளம்பினாள் எழில்நிலா .உன் செல் நம்பர் சொல்லு என கேட்டு வாங்கி கொண்டான் நித்யவாணன் .

இரவில் எதிர்பார்ப்புடன் போனை கையில் வைத்துக்கொண்டு பார்த்துக்கொண்டிருந்தாள் எழில்நிலா .

'நல்ல இரவுடன் ,இனிய கனவுக்கான வாழ்த்து' வந்தது நித்யவாணனிடமிருந்து .

தானும் பதிலுக்கு வாழ்த்தி விட்டு "யாஹூ ..!"என கைகளை உயர்த்தி கத்தினாள் எழில்நிலா .

உண்மையிலேயே அன்றைய இரவு இனிய கனவுகளுடன் கழிந்தது அவளுக்கு .

தொடர்ந்து வந்த மூன்று நாட்களும் சித்தி ,சித்தப்பாவிற்கு வேலை ,வருண் ,மானசி படிப்பு என அமைய ,எழில்நிலாவின் ஊர்சுற்றலுக்கு சாமிதுரையே துணையாகி போனார்.

வீட்டின் வெளியே நித்யவாணன் இமையாகி போனான் .கொடைக்கானலின் ஒவ்வொரு இடத்தையும் ஒரு தேர்ந்த கைடின் திறமையுடன் விளக்கினான் .

உலகத்து விசயங்கள் அனைத்தையும் எளிதாக விவரமாக  நித்யவாணன் பேசும்போது ,இவன் அறியாத விசயங்களே இந்த உலகில் கிடையாது என்றே நம்பினாள் எழில்நிலா .

இரவுப்பொழுதுகள் நித்யவாணனுடனும் ,வாட்ஸ்அப் உடனும் கழிந்தது .

நான்காம் நாள் எழில்நிலா உற்சாக பந்தாக மாடியிலிருந்து இறங்கிய போது ,தம்பி வருண் அவளை கேலியாக நோக்கி "என்னக்கா அப்படியே ஒளிர்கிறாய்.." என்றான் .

புரியாமல் "என்னடா .."என்றாள் எழில்நிலா .
"நானும் மூன்று நாட்களாக உன்னை கவனித்து கொண்டுதான் இருக்கிறேன்.அப்படியே லைட் போட்டது போல் உன் முகம் ஒளிர்கிறது" என்றான் வருண் .

அப்போது அங்கு வந்த மானசியும் அதையே சொல்லி அவளை கிண்டலடிக்க தொடங்க "பாருங்க சித்தி இவுங்களை.." என சித்தியிடம் செல்ல புகார் ஒன்று வைத்தாள் எழில்நிலா .

"டேய் போதும்டா.. போங்க போய் படிங்க "என அவர்களை விரட்டினாள் சந்திரா .

வருண் நின்று "எக்காவ் இதெல்லாம் உன் பிறப்புன்னு நினைச்சுக்காத ...எங்க ஊர் மூலிகை காத்துதான் உன்னை இப்படி மின்ன வச்சிருக்கு .உங்க ஊருக்கு போனதும் நீ பழையபடி டார்க் ஆயிடுவ ..."எனக் கூறி கிண்டலாக சிரித்தான் .

தரைக்கு ஒரடி மேலே மிதந்து கொண்டிருந்த எழில்நிலாவின் பாதங்கள் தரையை தொட ஆரம்பித்தன.

எட்டிக்காயொப்ப எடுத்து வீசப்பட்ட
சொற்கள் சில 
ஜீரணமாக மறுத்து எதுக்களித்து
கொண்டிருக்கின்றன ,
நடப்பின் நெருப்பில் 
முன்பெப்போதோ சொல்லப்பட்ட
கூர் தீட்டப்பட்ட முனைகள் 
தூசு தட்டப்படுகின்றன ,
உணர்வு கொல்லும் விசமொன்று 
கூர்களில் பூசப்பட்டு 
இலக்கை தைக்க தயாராக ,
பொழிந்து விட்ட மழையில் 
எழுந்து விட்ட சுகந்தமொன்று 
வசந்த வாசம் வீசி
என் வீட்டு பவள மல்லியை சிவக்க வைத்தபடி 
காதல் கணங்களை ஞாபகப்படுத்தி 
செல்ல 
விசத்தை அமிர்தமாக்க 
செம்பருத்தி பூக்களின் தேன்துளிகளை 
உறிஞ்ச முயல்கிறேன் .

தடுமாறி நின்றாள் எழில்நிலா. இப்படி...இப்படி...நித்யனும் நினைப்பானோ...?

சே சே அவளுடைய நித்யன் அப்படி நினைக்க மாட்டான்.... தன்னைத் தானே சமாதானப்படுத்தையிலேயே நித்யனின் பளபளவென்ற வெண்ணை போன்ற நிறம் நினைவில் வந்து தொலைத்தது.

உடனே நித்யனை பார்க்க வேண்டும் போல் இருந்தது எழில்நிலாவுக்கு.
ஆனால் அவனை பார்த்த போதோ......

அப்படி இருக்காது ..இருக்காது என உள்ளத்திற்குள் உரு போட்டு வந்தது கண் முன்னே காது கேட்க நடந்தும் நம்ப மறுத்தது பேதை உள்ளம் .

1 comments:

Blogger News

வணக்கம் தோழமைகளே , எனது " வா என் வண்ண நிலவே " கதைக்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு மிக்க நன்றி. இதோ உங்கள் முன் எனது அடுத்த கதை " வானவில் தேவதை " கறுப்பென்பது பிழையல்ல .மனமிருப்பின் வரமே என்பதனை என் முதல் கதையில் கூறியிருந்தேன். சொந்தங்கள் இல்லாத வாழ்வு வாழ்வல்ல.சந்தர்ப்ப சூழ்நிலைகளே சொந்தங்களின் பாசத்தை மறைக்கிறது என்பதனை இரண்டாவது கதையில் கூறியிருக்கிறேன் காதல் கலந்து.படித்து பாருங்கள்.
 

Blogger news

Blogroll