Pages

Powered by Blogger.

கள்ளின்றி வாடும் பூக்கள் .

 


                  கள்ளின்றி வாடும் பூக்கள்


ம்மா " பனை ஓலைகளை அடுக்கிக் கொண்டிருந்த மருதாயி கொல்லைப்புறம் கத்திய பசுவிற்கு வைக்கப்போரிலிருந்து சிறிது வைக்கோலை எடுத்து போட்டுவிட்டு பக்கவாட்டு வழி எட்டி சுற்று வாசல் கதவை பார்த்தாள் .அவள் கணவன் இருளப்பனை இன்னும் காணவில்லை .வழக்கமான நேரம் கடந்துவிட்டதால் சிறிது நெருடலுடன் கூடிய யோசனையுடன் நின்ற போது அடுப்படியில் கொதிக்கும் காப்பித்தண்ணியின் வாசம் வர அடுப்பை அடைந்து கொதித்துக் கொண்டிருந்த காப்பித்தண்ணியில் கருப்பட்டி டப்பாவிலிருந்து சிறிது கருப்பட்டி எடுத்து போட்டாள் .டப்பாவை மூடும் போது ஒன்று தோன்ற டப்பாவினுள் கை விட்டு சிறிது கருப்பட்டியை கை நிறைய அள்ளி மூக்கருகே கொண்டு சென்று இழுத்து முகர்ந்தாள் .நுரையீரல் வரை வாசத்தை இழுத்து நிரப்பினாள் .இப்போது கொதிக்கும் கருப்பட்டி வாசம் அறையை நிறைக்க ...கண் மூடி வாசத்தை சுவாசித்தாள் .பெருமூச்சுடன் கண்களை திறந்தவள் தனக்குள் ,"ம் ...இதெல்லாம் இன்னும் எத்தனை நாளோ?,,...நம்ப பேரப்பிள்ளைக கூட இதெல்லாம் அனுபவிக்குமோ என்னமோ ?" என புலம்பினாள் .காபித்தண்ணியை டம்ளரில் ஊற்றி எடுத்துக்கொண்டு வந்து வாசலில் அமர்ந்து துளித்துளியாய் ரசித்து பருக தொடங்கினாள். ..

அரக்க பரக்க ஓடி வந்தான் அடுத்த தெரு பையன் விநாயகம்.,"எக்கா உங்க வீட்டு அண்ணாச்சியை போலீஸ் புடிச்சிட்டு போயிட்டாகளாம் "
மூச்சிரைத்தது அவனுக்கு .

அதிர்ந்தாள் மருதாயி ,"என்னடா சொல்ற "கிட்டதட்ட அலறினாள் .

"ஆமக்கா இன்னைக்கு உங்க அண்ணாச்சி கிழக்கு தோப்புக்கு தான போனாக ,அங்கதான் போலீஸ் போச்சு .தோப்புல இருந்த எல்லாரையும் புடிச்சிட்டு போயிட்டாகளாம் "தகவல் சொல்லிவிட்டு பறந்து விட்டான் .

ஒரு நொடி கை காலெல்லாம் பதற நின்றவள் சட்டென்று வீட்டுக்கதவை இழுத்து பூட்டி விட்டு சகாயம் அண்ணாச்சி வீடு நோக்கி நடக்கத்தொடங்கினாள் .

அண்ணாச்சி வீடு எந்த நிகழ்வுமில்லாமல் ஞாயிற்றுக்கிழமை க்குரிய அமைதியுடன் இருந்தது .தயக்கத்துடன் நின்ற  மருதாயியை பார்த்த அண்ணாச்சி மனைவி ,"வா புள்ள ...அண்ணாச்சி ஸ்டேசனுக்குத்தான் போயிருக்காக ...இப்ப எல்லாரையும் கூட்டிட்டு வந்துருவாக ...இங்கன உட்காரு "என திண்ணையை காட்டி விட்டு சென்றாள் .

உடனே விட்டுடுவாகளா ?இல்லை ....மூணு மாசத்துக்கு முன்னாள அந்த மணியன் மாட்டுனப்ப ஆறு மாசம் உள்ள வச்சிட்டாகளே ..அது போல ஆயிடுமா ?...பலவாறு எண்ணியபடி இருப்புக்கொள்ளாமல் அங்குமிங்கும்  நடந்தபடியே இருந்தாள் மருதாயி .

ஒரு மணி நேரத்தில் அண்ணாச்சி திரும்பி வந்தார் .உடன் இன்று மாட்டிய சுமார் முப்பது பேர் .அவர்களில் இருளப்பனும் .கணவனைக் கண்டதும் உயிர் வந்தது மருதாயிக்கு .

அரவம் கேட்டு எட்டிப்பார்த்த மனைவி கொண்டு வந்த தண்ணீர் சொம்பை வாங்கி ஒரே மூச்சில் குடித்த அண்ணாச்சி ,"விட்டுட்டாக "என்றார் மனைவியின் பார்வைக்கு பதிலாக .

மருதாயி ஓரமாக ஒதுங்கி நின்றாள் .
சிறிது நேரம் யோசனையுடன் திண்ணையில் உட்கார்ந்திருந்தவர் தொண்டையை செருமியபடி நிமிர்ந்து எதிரிலிருப்பவர்களை பார்த்தார் ."எனக்கு இதெல்லாம் ரொம்ப நாள் ஓடும்னு தோணலைப்பா ...இதை சாக்கா வச்சு ஒரேடியா துட்டு புடுங்குறானுங்க ...எனக்கும் கஷ்டம் உங்களுக்கும் எல்லாருக்கும் கஷ்டம் .பையன் என்னை ரொம்ப சத்தம் போடுறான் .பேசாம எல்லாத்தையிம் விட்டுத்தொலைஞ்சிடலாம்னு பார்க்கிறேன் "என்றார் .

சிறு பதட்டம் தெரிந்தது அவர்களிடையே ...ஐயா என பேச ஆரம்பித்த இருளப்பனை கையை உயர்த்தி தடுத்தவர் இப்போ ஒண்ணும் பேச வேணாம் .....எல்லாரும் வீட்டுக்கு போங்க .எல்லாம் நாளைக்கு பேசலாம் "என்றார் .

தங்களுக்குள் குசுகுசுத்தபடி அவர்கள் களைய இருளப்பன் மருதாயியுடன் நடந்தான் .

அது கேரள எல்லையோரம் இருந்த தமிழக  கிராமம் .ஒரு காலத்தில் அங்கு பனந்தோப்புகள் ஏராளம் .எனவே பனையேறும் தொழில் அமோகமாக நடந்தது .அப்போதெல்லாம் சகாயம் அண்ணாச்சிக்கு பத்து தோப்பு இருந்தது .நூற்றுக்கணக்கான பனையேறிகள் அவரிடம் வேலை பார்த்தனர் .அரசாங்கம் பனையேற தடைவிதித்ததிலிருந்து தொழிலும் படுத்து விட்டது .பனையேறிகள் குற்றவாளிகளாக்கப்பட்டு போலீசாரால் கைது செய்யப்பட அண்ணாச்சி பணத்தை அழுது அவர்களை மீட்டு வர என தொடர்கதையானது அண்ணாச்சியின் தோப்பும் தேய்ந்து இப்போது இரண்டில் வந்து நிற்கிறது .

இந்த முறை அண்ணாச்சி கண்டிப்பாகநமக்கு பிடிக்காத முடிவுதான் எடுக்கப்போகிறார் என மருதாயியிடம் கூறியபடி நடந்தான் இருளப்பன் .

மறுநாள் அதிகாலை டீக்கடை பக்கம் சென்ற போது சேவியரைப் பார்த்தான் இருளப்பன் .சேவியர் அவன் மகன் அருட்குமரனுடன் படித்தவன் .அப்பாவின் சொத்துக்களை பார்த்தபடி சேவியர் ஊரில் தங்கிவிட சொத்தற்ற அப்பாவின் மகன் படித்த படிப்பிற்கேற்ப பெங்களூரில் கம்யூட்டர் தட்டி சம்பாதித்து கொண்டிருக்கிறான் .அருட்குமரனின் சம்பளத்தில் பெரம்பகுதி இருளப்பனுக்கே வருகிறது .தங்கை மலர்விழி படிப்பு படிப்பு திருமணம் போன்றவற்றைதானே இயல்பாய் ஏற்று நடத்தி வைத்தான்.தனது திருமணத்தை இரண்டு ஆண்டுதள்ளி போட்டு பெற்றோர்கேற்ற பிள்ளையாய் பணியாற்றிக்கொண்டிருக்கிறான் .

சேவியரும் அருட்குமரனும் மிக நெருக்கம் .சேவியர் அவர்கள் தொகுதி எம்.எல் .ஏ வின் தூரத்து சொந்தம் .எனவே அவன் மூலம் ஏதாவது செய்யச்சொல்லலாமென அவனை கூப்பிட்னான் .

இருளப்பனை பார்த்ததும் சேவியர் வாங்கய்யா டீக்கடையில் உட்கார்ந்து பேசுவோம் என அழைத்து சென்றான் .

டீ சொல்லி விட்டு அமர்ந்த இருளப்பன் நிலைமையை சேவியரிடம் கூறி எம் .எல் .ஏ மூலமாக ஏதாவது செய்ய முடியுமா என கேட்டான் .

சிறிது நேரம் மௌனமாக இருந்த சேவியர் ஐயா ,"நீங்க எதைப்பத்தி பேசுறீங்கன்னு தெரயுதா ?என்றான் .

புரயாமல் பார்த்தபடி என்ன என்றான் இருளப்பன் .


ஐயா நீங்க சாராயத்தைப் பத்தி பேசுறீங்க என்றான் .அது உடம்புக்கு எவ்வளவு கெடுதி ...அதனால் எத்தனை குடும்பம் பாழாய போகுது தெரியுமா "என்றான் சிறிது ஆத்திரத்துடன் .

பதறியபடி இடை மறித்த இருளப்பன் "ஐயோ இது கள்ளு தம்பி சாராயம் இல்லை .அது மட்டுமில்ல இதுல பதநீர் கருப்பட்டி ன்னு நிறைய நல்ல விசயங்கள் இருக்குது .அரசாங்கம் தான் வீம்பு பிடிக்குதுன்னா படிச்ச நீங்களே புரிஞ்சிக்கலைன்னா எப்படி தம்பி "வருத்தத்துடன் கூறனான் .

சும்மா உங்க வசதிக்காக ஏதாவது சொல்லாதீங்கய்யா .கவர்ன்மெண்ட் என்னைக்கும் தப்பான முடிவெடுக்காது.கள்ளு கண்டிப்பா ஒரு போதை பானம் .அது நம்ம ஊரை விட்டு முழுமையா ஒழியனும் .படபடவென பொரிந்து விட்டு வெளியேறினான் .

இயலாமையுடன வீடு திரும்பிய இஇருளப்பன் மருதாயியிடம புலம்பினான் .அவனை சமாதானப்படுத்தினாள் மருதாயி .விடுங்க அந்த தெய்வம் துணையிருக்கும் நமக்கு என சொல்லியபடி இருந்தபோதே ,கைபேசி ஒலித்தது .அருட்குமரந்தான் ...மருதாயியிடம் அம்மா அப்பாவை சும்மா இருக்க சொல்லுங்க ,அவர் பனையேறி என்ன ஆகப்போகுது ,நான் இன்னும் கூட பணம் அனுப்புறேன் .பேசாம இன்னும் ரெண்டு மாடு வாங்கிட்டு அதைப் பார்த்துக்கிட்டு இருங்க ."என்றான் .

போனை வாங்கிய இருளப்பன் ,"தம்பி!நான் நமக்காக பாக்கலப்பா ..பனையேறித்தான் அடுப்பெரியுற குடும்பம் கொஞ்சம் நம்ம ஊர்ல இன்னும் இருக்கே .அவுகளுக்காகத்தான் பாக்கேன் "என்றான் .

அதுக்கு நாம என்னப்பா செய்யமுடியும் ?" என்றான் மகன் .அப்பா இங்க பாருங்க விசயம் இப்ப வேற மாதிரி போய்கிட்டு இருக்கு .உங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா என்னால் தாங்க முடியாது .பேசாம இருங்க "முடிவாய் முடித்து விட்டு போனை வைத்து விட்டான் .



மறுநாள் அனைவரும் பயந்தபடியே அண்ணாச்சி இருந்த இரண்டு தோப்பையும் விற்று விட போவதாகவும் வேறு இடத்தில் பிழைப்பு தேடிக்கொள்ளுமாறும் கூறிவிட ...தொழிலாளர்கள் செய்வதறியாது விழித்தனர் .

இதைத்தவிர வேறு வேலை தெரியாத சில குடும்பத்தினர் கண்ணீர் விட்டு கதறியபடி அடிமாட்டு கூலிக்கு வேறு இடம் பெயர்ந்தனர் .

தோப்பு விற்கப்பட்டு மரங்கள் அனைத்தும் வெட்டப்பட்டன.நிலம் பிளாட் போடப்பட்டு ரியல் எஸ்டேட் போர்டு வைக்கப்பட்டது .

அண்ணாச்சி அமெரிக்க மகனுடன் செட்டிலாகி விட்டார் .தோப்பு பகுதியை கடக்கும் போது இருளப்பன் கண்ணீர் வடிய சட்டென்று ஓடி விடுவான் .

சில நாட்களாவே ஊர் முழுதும் சிறு பரபரப்பு தென்படுவதாய் தோன்றியது இருளப்பனுக்கு .பெரிய பள்ளிக்கூடத்திற்கு எதிரே இருந்த கட்டிடம் சுத்தமாக்கப்பட்டு பழுது பார்க்கப்பட்டது .அடிக்கும் வண்ணங்களில் கண்ணை பறிக்கும் வகையில் பெயிண்ட் பூசப்பட்டது .

அனைத்தையும் மேற்பார்வையிட்டுக்கொண்டிருந்த சேவியரை விவரம் தெரிய அணுகியபோது ,செல்போனை காதில் ஒட்ட வைத்தபடி உட்புறம் நடந்தான் .அதன பிறகு சேவியர் இருளப்பன் கண்ணிலேயே படவில்லை .பட்டாலும் கண்டுகொள்ளாமல் நழுவினான் .

அவனுடைய நடத்தைக்கான விடை மறுநாள் அந்தக் கட்டிட வாசலில் வைக்கப்பட்ட போர்டில் தெரிந்தது.

விதவிதமான வகைவகையான பாட்டில்களை உள்ளே அடுக்கிக்கொண்டு வெளியே பல்லிளித்துக்கொண்டிருந்தது கள்ளு கெடுதி என பனந்தோப்புகளை பிளாட்டுகளாக மாற்றிய அரசாங்கத்தின்  சாதனை கடை டாஸ்மாக் 

2 comments:

  1. ஹா ..........ஹா,........சூப்பர் .
    பத்மா ......என்ன கதை !!! வாவ் !!

    ReplyDelete

Blogger News

வணக்கம் தோழமைகளே , எனது " வா என் வண்ண நிலவே " கதைக்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு மிக்க நன்றி. இதோ உங்கள் முன் எனது அடுத்த கதை " வானவில் தேவதை " கறுப்பென்பது பிழையல்ல .மனமிருப்பின் வரமே என்பதனை என் முதல் கதையில் கூறியிருந்தேன். சொந்தங்கள் இல்லாத வாழ்வு வாழ்வல்ல.சந்தர்ப்ப சூழ்நிலைகளே சொந்தங்களின் பாசத்தை மறைக்கிறது என்பதனை இரண்டாவது கதையில் கூறியிருக்கிறேன் காதல் கலந்து.படித்து பாருங்கள்.
 

Blogger news

Blogroll