Pages

Powered by Blogger.

வானவில் தேவதை - 16





பைத்தியமா
இவனுக்கு? நினைத்தது நடக்கவில்லையென்றால் இப்படி ஆகி விடுவானா ? லூசு ...லூசு ...இவனை. ..மேலே வந்து பார்த்துக்கொள்கிறேன் .

அவசரமாக நீந்தி மேலே வந்து பார்த்தபோது அவனில்லை .வாசலில் அவன் கார்  கிளம்பும் ஓசை கேட்கவே , அப்படியே பக்கவாட்டு வழி வழியாக ஓடி முன்பக்கம் வந்து பார்த்த போது அவன் கார் சுற்றுச்சுவர் தாண்டி வெளியேறிக்கொண்டிருந்தது .

சை ...இப்படி ஒரு லூசுப்பயலிடம் வந்து மாட்டுவேனா ? இந்த வீட்டில் எத்தனை லூசுன்னு தெரியலை. அந்த தர்மன் பைத்தியத்தோட காத்து இவன் மேல பட்டிடுச்சு போல ...தனக்குள் பொறுமியபடியே , உடை மாற்றுவதற்காக மாடியேறியவளின் வழியை மறித்தான் தர்மசேகரன் .விலகி செல்ல முயன்றாள் .மீண்டும் வழி மறைத்தான் .

" என்ன ..." என்றாள் எரிச்சலுடன் .

பதிலே சொல்லாமல் அவளையே பார்த்தபடி இருந்தவன் கைகளை விரித்தான் .அவளை ஆரத்தழுவுபவன் போன்ற பாவனையில் நெருங்க பயந்து " ஏய் என்ன பண்றீங்க ?"  கத்தினாள் .


" தங்கச்சி " நாடக பாணியில் அழைத்து கைகளை விரித்தான் .தலையை மடெரென்று அந்த மாடிப்படி கைவளைவில் முட்டிக்கொள்ள வேண்டும்போல் இருந்தது சபர்மதிக்கு .நேற்று அனுசூயா சொன்னது நினைவு வந்தது. " 


அவருக்கு நீ அவருடைய தங்கை. உனக்கு எல்லா உதவியும் செய்யனும்னு சொல்லிக்கொடுத்திருக்கேன் சபர்மதி .இனி பாரேன் அவர் உன்னை நல்லா பார்த்துக்கிடுவார் ." இப்படி கூற , ஆமாமா எனக்கு இப்ப்ப்புடி .....ஒரு அண்ணன் அவசியம்தான் .என்று மனதில் எண்ணினாள் வெளியே புன்னகை பூசிக்கொண்டு .


முருகா ..இவனுக்கு தங்கை பாசம் பொழிய வேறு நேரம் கிடைக்கவில்லையா ...அம்மலைப்பிரதேசத்திற்கே உரிய குளிர்... தண்ணீரில் நனைந்திருந்த அவள் உடலை நடுக்க தொடங்கியது .

" என்னம்மா குளிருதா ...இப்ப எதுக்கு மழையில் நனைந்தாய்...சரி  விடு அண்ணன் பார்த்துக்கிறேன் ..." என்றவன் அங்கிருந்த சோபா கவரை எடுத்து அவள் தலையை துவட்ட தொடங்கினான் . கூடவே சோபா விரிப்பு எடுத்து மேலே மூடி வேறு விட்டான் .


பொறுமையிழந்து " அனுசூயா " எனக் கத்தினாள் சபர்மதி . வேகமாக ஓடி வந்தாள் அனுசூயா .
" என்ன சபர்மதி "


அவன் பக்கம் கையை சுட்டி " என்ன சொல்லி வச்சு தொலைந்தாய் .பாரு "என்றுவிட்டு தன்மேலிருந்த விரிப்புகளை விசிறிவிட்டு மாடியேறினாள் .


ஈர உடையை கலைந்து சற்று நேரம் ஹீட்டர் முன் நின்றதும்தான் உடல் நடுக்கம் குறைந்தது. சூடாக ஒரு கப் காபி குடித்துவிட்டு வரலாமென கீழே இறங்க போனவளின் கை தன்னிச்சையாக பாக்கெட்டில் கைபேசியை தேடியது.. அவளுடைய சுடிதார்கள் எல்லாவற்றிலுமே கைபேசிக்கென ஒரு பையை தைத்து வைப்பதுண்டு.காணவில்லையே எங்கே ....கடவுளே ...இப்போதுதான் சபர்மதி உணர்ந்தாள் .


வேகமாக நீச்சல் குளத்தை அடைந்தாள் . லூசு பூரணசந்திரனில்லை ...அவள்தான் சபர்மதிதான் . வேண்டுமென்றே திட்டம் போட்டு நீச்சல்குளத்திற்கு வர வைத்து , அவள் கால்களை இடறி உள்ளே தள்ளி விட்டு ....இவனை ...இவனை ...


மீண்டும் உள்ளே குதித்தாள் சபர்மதி 
அவள் எண்ணியது போலவே எந்த எதிரொலிப்புமின்றி மிக அமைதி காத்தது அவள் குளத்திலிருந்து எடுத்த செல்போன்.மீண்டும் அவளது நட்புகளிடம் இருந்து விலக்கி வைக்கப்பட்டு விட்டாள் சபர்மதி .


ஆத்திரமென்றால் அப்படி ஒரு ஆத்திரம் சபர்மதிக்கு .இப்போது பூரணசந்திரன் மட் டும் எதிரிலிருந்தால் , கத்தியெடடுத்து குத்தவே செய்திருப்பாள் . வாடா ...நீ ...வா ..உன்னை ....பற்களை கடித்தபடி அவனுக்காக காத்திருக்க அவனோ நான்கு நாட்களாக 'சோலைவனம் ' பக்கமே எட்டி பார்க்கவில்லை.


எந்த மூஞ்சை வச்சிக்கிட்டு வருவான் ...மனது உறுத்திக்கிட்டு இருக்கும் .அதனால்தான் வராமல் இருக்கிறான் .என்றாவது ஒருநாள் வந்துதானே தீரணும்.அன்னைக்கு வச்சிக்கிறேன்னு அவனை ...தனக்குள் கறுவியபடி அவன் வரவை தினம் எதிர்பார்த்துக்கொண்டிருந்தாள் சபர்மதி .


தினமும் காலை தோட்டத்தில் சபர்மதி நடக்கும் போது , அனுசூயா அல்லது அம்சவல்லி துணையுடன் சக்கர நாற்காலியில் உலா வரும் சத்யேந்திரன்  இன்றாவது பேசுவாயா...என்ற ஏக்கத்துடன் பார்க்கும் பார்வை அவளை என்னவோ செய்தது. பொறுத்து பார்த்துவிட்டு காலை நடையை நிறுத்தி விட்டாள் .


வீட்டினுள் தர்மனின் தொல்லை வேறு .அவனுக்கு திடீரென தங்கை மீது அபரிதமான பாசம் பொங்கி வந்திருந்தது .தங்கச்சி காபி குடி , தங்கச்சி சாப்புடு, கால் வலிக்கும் உட்காரு, ரொம்ப டிவி பார்க்காதே கண் கெட்டுடும் ...இப்படி தேவையில்லாத நேரங்களில் தன் பாச உணர்வை ஏடாகூடமாக வெளிப்படுத்திக் கொண்டிருந்தான்

 இவளது பார்வையில் அனுசூயா " இல்லை சபர்மதி நான் அன்று சொன்னதோடு சரி. அதையே பிடித்துக்கொண்டு அவராகத்தான் இப்படியெல்லாம் செய்கிறார் " என்றாள் ." சரி விடு " என சபர்மதி சொல்ல வேண்டியதானது .


அம்சவல்லி இவளை இப்படி ஒரு ஜீவன் இந்த வீட்டில் இருக்கிறது என்ற உணர்வேயின்றி , வீட்டை சுற்றி காவல் காக்கும் நாய்களை பார்க்கும் பார்வையால் எப்போதும் பார்ப்பாள் .ராஜனுக்கு என்ன ஆனதோ ...அதன்பின் கண்ணிலேயே படவில்லை. அப்படியே பார்க்க நேரிட்டாலும் ஒரு தலையாட்டலுடன் நகர்ந்து விடுகிறான் .


இவர்களையெல்லாம் நான் உறவென்று ஏற்க வேண்டுமாம் 
வரட்டும் அந்த பூஊஊரணன் ...அவனை நன்கு நாலு வார்த்தை கேட்கிறேன் .ஆனால் இன்றோடு மூன்று நாட்களாகி விட்டதே .நாளையாவது வருவானா .. ?


வந்தான் ஆனால் மேலும் சபர்மதியை கொதிக்க வைக்கும் செய்தியுடன் வந்தான். எப்பொழுதும் உள்ளே நுழைந்தவுடன் பூரணன் போகும் இடம் .சத்யேந்திரன்தான் .அன்றும் அதுபோல் அவுட்ஹவுஸ் நோக்கி நடந்தவனை இடைமறித்தாள் சபர்மதி. 

அவள்தான் வீட்டினுள் அவன் கார் நுழையவுமே இங்கே வந்து காத்துக்கொண்டு இருக்கிறாளே .
அவன் அந்த ஓரம் திரும்பும் போதே பாதி வழியில் வந்து மறித்தபடி நின்று கொண்டாள் .இன்று இவனை விடப்போவதில்லை.


பாதி வழியில் அவளைக் கண்டவன் முகம் பூவாய் மலர
" என்னம்மா எனக்காக ரொம்ப நேரமாக காத்திருக்கிறாய் போல ?
நடையை சிறிதும் தளர்த்தாமல் நடந்தபடியே கேட்டான் .


" ஆமா இந்த அழகு மன்மதனை பார்க்காமல் நான்கு  நாட்களாக என் கண்கள் பூத்துக்கிடக்கிறது." நக்கலடித்தாள் சபர்மதி.


" ம்...அப்போ ஒரு போன் போட்டிருக்கலாமே டார்லிங் .மாமா ஓடி வந்திருப்பேனே. " நடையை நிறுத்தாமல் நடந்தபடி சபர்மதியை நோக்கி கண்சிமிட்டினான்.


ஏற்கெனவே நிற்காமல் நடக்க தொடங்கிவிட்ட அவனுடன் வேறு வழியின்றி நடக்க ஆரம்பித்திருந்த சபர்மதிக்கு எரிச்சல் உச்சிக்கு போனது .கண்றாவி இவன் மூஞ்சியை பார்க்கத்தான் இங்கே நின்றேனாக்கும். இவன்கிட்ட பேசலாம்னு நின்றால் ..

அப்போதுதான் அந்த நீச்சல்குள சம்பவத்திற்காக பூரணனை வாங்கு வாங்கென்று வாங்க வேண்டுமென்ற தன் முடிவு சபர்மதிக்கு வர , அவனோடு சேர்ந்து நடந்து கொண்டிருந்தவள் நின்றாள் .


நடை வேகத்தை சிறிது குறைத்து அவளை நோக்கி " என்ன "என்றான் .
" அன்னைக்கு ஏன் அப்படி பண்ணீங்க ?" குரலில் கண்டிப்பு கலந்து கேட்டாள் .


" அதை கேட்க  ஏன் நிற்கிறாய் ...வா நடந்து கொண்டே பேசலாம்"


" இல்லை எனக்கு பதில் சொல்லிவிட்டு ..." சொல்லிக்கொண்டிருந்தவளின் கரத்தை பற்றி இழுத்து " அதுதான் டார்லிங் நமது காதல் மொழிகளை எல்லாம் நடந்தபடியே பேசுவோம். ஏனெனில் எனக்கு நேரம் கொஞ்சம்தான் இருக்கிறது " சொல்லியவன் அவள் கைகளை பற்றி அவளை கிட்டதட்ட தன்னோடு இழுத்துக்கொண்டு நடக்க தொடங்கினான்.


" விடுங்க இப்போ சொல்லப்போறீங்களா இல்லையா...அன்று ஏன் அப்படி செய்தீர்கள் ?" கேட்டபடி அவனுடன் இழுபட்டபடி நடந்தாள் .


" இன்னுமா அது உனக்கு புரியவில்லை ?" கேலியுடன் கேட்டான் ." ஏன்னு தெரியுது...அது எதற்காகன்னுதான் கேட்கிறேன் ..." அழுத்தமாக கேட்டாள் சபர்மதி .


" சொல்றேன் செல்லம் ...அதை விளக்கத்தானே வந்திருக்கேன் ."


" முதலில் இந்த டார்லிங் ...செல்லத்தையெல்லாம் விட்டுவிட்டு சாதாரணமாக பேசித்தொலையுங்கள் "

" ஆஹா என் கண்மணி யை நான் கொஞ்சக்கூடாதா ?"


எப்படியும் கூப்பிட்டு விட்டு போ என்று பேசாமல் இருந்திருக்கலாம்.இவன் அடங்கமாட்டான்.செய்யாதே என்றால் செய்வான்.இப்போது புதிதாக கண்மணியை சேர்த்திருக்கிறான். வேறு எதுவும் சொன்னால் அடுத்து ஒரு வார்த்தை சேர்ப்பான் .அது இந்த வார்த்தைகளை விட கண்றாவியாக இருந்து தொலையும் .எனவே அந்த பேச்சை விட்டுவிட்டு தனது பிரச்சினைக்கு வந்தாள் .


"அன்று எனக்கு நீச்சல் தெரியாமல் எவ்வளவு சிரமப்பட்டு மேலே வந்தேன் தெரியுமா " குரலில் சிறு தளுதளுப்பை கொண்டுவந்தாள் .


" உனக்கு நீச்சல் தெரியுமென்று எனக்கு தெரியும் "

" அதெப்படி தெரியும் ..."


" உன் ஜாதக காப்பி ஒன்று கூட  வைத்திருக்கிறேன் .பார்க்கிறாயா ? நம் இருவருக்கும் பத்து பொருத்தம் முத்தாக பொருந்தியிருக்கிறது தெரியுமா ?"மீண்டும் கண்களை சிமிட்டினான்.


இவனிடம் போய் எப்படி தெரியுமென்று கேட்டேன் பார் .இவன்தான் என்னை வேவு பார்க்கவே ஒரு ஆளை சம்பளம் கொடுத்து வைத்தவனாயிற்றே.தன்னையே நொந்து கொண்டாள் சபர்மதி.



" அப்படி என் நட்புகளை துண்டிப்பதில் உங்களுக்கு என்ன லாபம் ?"

" லாப நஷ்ட கணக்குகளெல்லாம் பெரியவர்களை வைத்துதான் பேசவேண்டும் .வா உன் தந்தையை வைத்தே பேசுவோம். " அவுட்ஹவுஸ் வாசல் வரை வந்துவிட்டவன் அவளை உள்ளே இழுத்தான் .

கால்களை தரையில் அழுத்தமாக ஊன்றி நின்றவள் " அங்கெல்லாம் நான் வர மாட்டேன்" உறுதியாக நின்றாள் .


" வேண்டாம் நானே தூக்கிக்கொண்டு செல்கிறேன் " என்ற கூறியவன் தொடர்ந்து அதற்கான செயல்களிலும் இறங்க முனைய அவசரமாக சாத்தி வைத்திருந்த கதவுகளை திறந்து தானே அவுட்ஹவுசினுள் நுழைந்தாள் சபர்மதி .


கோடி சூரியன்கள்  பிரகாசித்தன சத்யேந்திரனின் விழிகளில் சபர்மதியை காணவும் ." கண்ணம்மா வாடா....கைகளை ஆவலாக நீட்டினார் .


ம்க்கும் இவரைப் பார்க்கத்தான் இப்போ வந்து நிற்கிறேனாக்கும் .
சக்சக்கென்று தன் பாதங்களை வைத்து நடந்து சன்னலோரமாக கிடந்த நாற்காலியை விருட்டென்று சன்னல் புறமாக திருப்பி போட்டுக்கொண்டு அவர்கள் இருவருக்கும் முதுகு காட்டியபடி அமர்ந்து கொண்டாள் சபர்மதி .


தாயிடம் கோபம் கொள்ளும் செல்லப்பிள்ளையை பார்க்கும் பார்வை பார்த்தனர் ஆண்கள் இருவரும் .காபி பயிர் , விளைச்சல் , வாழைத்தோப்பு என அவளுக்கு புரியாத விசயங்கள் சிறிது நேரம் பேசினர் .


பின் அவளை நோக்கி " சபர்மதி ஒரு நிமிடம் " என்றான் பூரணசந்திரன் .
" என்ன " என்றாள் திரும்பாமலேயே .


" இந்த தொழில் விசயங்களையெல்லாம் நீயும் கொஞ்சம் கற்றுக்கொண்டால்  எனக்கு உபயோகமாக இருக்கும் "

" எதற்கோ ...."


" என்றைக்கிருந்தாலும் நம் குடும்ப தொழிலை நாம்தானே பார்க்க வேண்டும் "

" யார் குடும்பத்தையோ யார் தொழிலையோ நான் ஏன் பார்க்கவேண்டும் "


" யாருடையதையோ அல்ல ...உன் குடும்பத்தை ...." அழுத்தினான்  பூரணசந்திரன்.


நாற்காலியில் திரும்பி அமர்ந்து அவர்களிருவரையும் நோக்கி தெளிவாக " எனக்கு இந்த ஊரில் அம்மா , அப்பா , அண்ணான்னு எந்த உறவும் இல்லை .ஒரு குடும்பமும் இல்லை .யாரையும் பார்க்கனுங்கிற அவசியமும் எனக்கில்லை " சத்தமாக அறிவித்தாள்.


கருமை பூத்துவிட்ட சத்யேந்திரனின் முகத்தை சிறு திருப்தியுடன் பார்த்தாள்.


" உன் கணவன் குடும்பத்தாருடன் கூடவா ..."அமைதியாக வினவினான் பூரணசந்திரன்.


" என்னது கணவனா..அது யார் ..." புரியாமல் கேட்டாள் சபர்மதி .


ஆவலாக நோக்கிய சத்யேந்திரனிடம் ஒப்புதலாக தலையசைத்து விட்டு எழுந்து சபர்மதியிடம் வந்து அவள் இரண்டு கைகளையும் பற்றி அவளை எழுப்பினான் .சத்யேந்திரனின் முன்னால் கொண்டு வந்து நிறுத்தி " உங்கள் மகளை நான் மணந்து கொள்ள விரும்புகிறேன் .அதற்கு உங்கள் சம்மதம் வேண்டும் மச்சான் "
என்றான் .


சொர்க்கத்தின் வாசலை எட்டி விட்ட சந்தோசம் தகப்பனின் முகத்தில் .ஆனால் தன் கைகளை பற்றியிருந்த கரங்களை பட்டென உதறினாள் சபர்மதி .


" யார் கல்யாணத்திற்கு யார் சம்மதம் கொடுப்பது ?எனக்கு இப்போதைக்கு திருமணம் செய்யும் எண்ணமே இல்லை .அதுவும் நீங்கள்தான் மணமகன் என்றால் கடைசி வரை திருமணம் முடிக்காமல் கன்னியாகவே இருந்து விடுவேன் ." படபடவென பொரிந்தாள் .


மனக்கலக்கத்துடன் தன்னை நோக்கிய சதயேந்திரனுக்கு விழிகளாலேயே அபயமளித்தபடி " சபர்மதி இதில் விளையாட்டிற்கு இடமில்லை. இது நம் வாழ்க்கை.நான் தெளிவாகவே சொல்லிவிடுகிறேன் .நான் உன்னை மனமார விரும்பியே ....."


" என்னது காதலா உங்களுக்கா என் மீதா ...இதை நம்பும் அளவு நான் ஒன்றும் இளித்தவாய் இல்லை .நீங்கள் நினைத்ததை முடிக்க வேண்டும் உங்களுக்கு .அதற்குத்தானே இத்த காதல் , கல்யாணமெல்லாம் "

" என்ன நினைத்தது ..." முகம் இறுக கேட்டான் பூரணசந்திரன் .


"இதோ இந்த கை கால் விளங்காத மனுசன் , ஒரு முழு பைத்தியம் , ஒரு அரைப்பைத்தியம் , ஒரு அல்டாப்பு இத்தனை பேரையும் வச்சி ஒரு குடும்பம் .அதற்கு நான் இங்கே தங்கியிருந்து சேவகம் பண்ணனும் .அதற்கு எனக்கு தர்ற சம்பளம் இந்த கல்யாணம். கொடுக்கும் போனஸ் தாலிக்கயிறு .அப்படி ஒரு கேடு கெட்ட வாழ்க்கை எனக்கு தேவையில்லை .உங்களை பார்க்கவே எனக்கு பிடிக்கவில்லை. நீங்க கிட்ட வந்தாலே எனக்கு உடம்பெல்லாம் எரியுது .இந்த உலகத்திலேயே நான் அதிகமாக வெறுப்பது உங்களைத்தான்  "


தன்போக்கில் பேசிக்கொண்டிருந்தவளை கையுயர்த்தி நிறுத்தினான் பூரணசந்திரன் .


" உனக்கு பிடிக்காத வேலையை இனி நீ செய்ய வேண்டியதில்லை.நீ ...." என்றவன் போகலாம் என கையை ஆட்டினான் .


ஒரு நிமிடம் தயங்கி நின்றவளை " போ என்றேன் " குரலை உயர்த்தினான்.


மீண்டும் வீம்பு தலை தூக்க வேகமாக வெளியே வந்தாள் சபர்மதி .ஐந்தே நிமிடங்களில் வெளியேறிய பூரணனின் கார் பின்பு ' சோலைவனம்' வரவேயில்லை .









0 comments:

Post a Comment

Blogger News

வணக்கம் தோழமைகளே , எனது " வா என் வண்ண நிலவே " கதைக்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு மிக்க நன்றி. இதோ உங்கள் முன் எனது அடுத்த கதை " வானவில் தேவதை " கறுப்பென்பது பிழையல்ல .மனமிருப்பின் வரமே என்பதனை என் முதல் கதையில் கூறியிருந்தேன். சொந்தங்கள் இல்லாத வாழ்வு வாழ்வல்ல.சந்தர்ப்ப சூழ்நிலைகளே சொந்தங்களின் பாசத்தை மறைக்கிறது என்பதனை இரண்டாவது கதையில் கூறியிருக்கிறேன் காதல் கலந்து.படித்து பாருங்கள்.
 

Blogger news

Blogroll