Pages

Powered by Blogger.

வானவில் தேவதை - 4


சொந்தமின்றி பந்தமின்றி வாடுது ஒரு பறவை
அது தேடுது தன் உறவை
அன்பு கொள்ள ஆதரவாய் யாருமில்லை உலகில்






நெய்யும் ,முந்திரியுமாய் மணத்தபடி தட்டில் விழுந்த வெண்பொங்கலை நம்ப முடியாமல் பார்த்தாள் சபர்மதி .

"சாப்பிடுமா "

பெருந்தேவிக்கு இவ்வளவு இனிமையான குரல் உண்டா ...?

மாற்று உடுப்புடன் சத்தமில்லாமல் குளித்து விட்டு சென்று விடும் எண்ணத்துடன் வந்தவள் வீடு இருந்த தடபுடலுக்கு அரண்டுவிட்டாள் .

கையில் பெருந்தேவியால் தரப்பட்ட காபியில் இருந்து ,இதோ இப்போது தட்டிலிருக்கும் பொங்கல் வரை எதையும் நம்ப முடியவில்லை .

அம்மாவை பறிகொடுத்துவிட்டு புழக்கடை மூலை அறையில் அழுதபடி தேற்ற ஆளின்றி தன் தாய்மாமன் வீட்டில் படுத்து கிடந்தவளை ஆதரவாக அணைத்தது ஒரு கை .

இந்த பெருந்தேவியின் கை .

தேனை குரலில் குழைத்து "எந்திரிடாம்மா "என்றது .

தாயை இழந்து தண்ணீர் கொடுக்க கூட ஆளில்லாமல் அந்த அறையில் ஒரு வாரமாக அழுது கொண்டிருந்தவளுக்கு அந்த இனிய குரல் தேவாமிர்தமாக இருந்தது .

தட்டில் பிசைந்து அவள் சாப்பாடு எடுத்து வந்த போது ,அன்னபூரணியின் அவதாரமாகவே தோன்றினாள் .

"ஒரு வகையில் இவளும் உனக்கு அக்காதான் .பெயர் பெருந்தேவி உன்னை அவள் கூடவே சென்னைக்கு கூட்டிட்டு போய் வச்சிக்கிறேன்னு சொல்றா .போறியாம்மா ...?"

அவளுடைய தாய்மாமா சாமிநாதன் கேட்டார் .

இவ்வளவு நாள் இருந்த இடத்தை விட்டு வேறு இடம் போவதா ...?சிறிது மிரட்சி சபர்மதியிடம் .

"அட அதுக்கு என்னங்க தெரியும் .பச்சப்புள்ள .போன்னா போயிட்டு போகுது .ஏன் செல்லம் இந்த அக்கா உன்னை கூட்டிட்டு போயி நடனம் ,பாட்டெல்லாம் சொல்லிக்கொடுப்பாங்க போறியா "

குறி பார்த்து அடித்தாள் தாய்மாமன் மனைவி பார்வதி .

பெருந்தேவியை ஏறிட்டாள் சபர்மதி .

அபயக்கரம் நீட்டும் அம்பிகை போல் புன்னகைத்து தலையசைத்தாள் அவள் .

சற்று முன் அவள் பிசைந்து கொடுத்த சாதத்தின் ருசி இன்னும் நாக்கிலேயே இருக்க ,சந்தோசமாக தலையசைத்தாள் சபர்மதி .

சாமிநாதன் அவர் தலையை அந்தப்புறம் திருப்பி கண்களை துடைத்து கொண்டார் .அழுகிறாரா என்ன ..?

தமயந்திக்கும் ,சபர்மதிக்கும் அந்த வீட்டில் கிடைத்த ஒரே சிறு ஆதரவு சாமிநாதன் தான் .ஆனால் அவரது அந்த  ஆதரவு அவர் மனைவி பார்வதி ,மாமியார் ரங்கநாயகி அறியாமல்தான் இருக்கும் .

சிறுவயதில் இந்த சிறிய ஆதரவை ஆவலுடன் வரவேற்ற சபர்மதி ,விவரம் அறிந்ததும் ,அப்படி என்ன திருட்டுதனமா கொஞ்சல் வேண்டிக்கிடக்கு என்றெண்ணி சாமிக்கண்ணு வை ஒதுக்க தொடங்கினாள் .

தமயந்தி எவ்வளவோ கூறியும் இந்த ஒதுக்கத்தை அவள் கைவிடவில்லை .
சிறிது காலம் முயன்றுவிட்டு "விடு தமயந்தி சின்னப்பொண்ணு தானா ஒருநாள் இந்த கையாலாகாத மாமனை புரிஞ்சிப்பா ."என்று விட்டார் சாமிநாதன் .

எவ்வளவோ வரவைத்த மகிழ்ச்சியுடன் சபர்மதி பெருந்தேவியுடன் ரயிலேறினாலும் ,பலி கொடுக்க போகும் ஆட்டின் மனநிலை அடிமனதில் இருந்து கொண்டே தானிருந்தது .

இத்தனை வருடங்கள் கழித்து இதோ இந்த தட்டில் விழுந்த பொங்கலின் மணத்திலும் ,பெருந்தேவியின் தேன் பூசிய குரலிலும் அதே பலியாடு நிலைமையை மீண்டும் பெற்றாள் சபர்மதி .

வழக்கமான ஆட்டோவில் ஏறி படப்பிடிப்புக்கு போகும்போதும் இதே உணர்வுதான் .ஒருவேளை நேற்று யாரிடமும் சொல்லாமல் ரயிலேறி சென்றுவிடுவேன் என மிரட்டினோமே அதுதான் காரணமோ ...?

வேறு எதுவும் தோன்றவில்லையென்பதால் அதுவேதான் காரணமென தன்னையே சமாதானம் செய்து கொண்டாள் .

அன்று "புகுந்த வீட்டு லட்சுமி " நெடுந்தொடருக்கான படப்பிடிப்பு .
அதன் கதாநாயகி ஒரு காலத்தில் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருந்த தற்போது சீரியல் கதாநாயகி ஆகி விட்ட ஒரு நடிகை .

அந்த கதாநாயகியின் தங்கை வேடம் சபர்மதிக்கு .அவள் மட்டும் கொஞ்சம் விட்டுக்கொடுத்திருந்தால் எத்தனையோ நெடுந்தொடர்களின் கதாநாயகி ஆகியிருப்பாள் .ஆனால் அதற்கு அவள் தயாராக இல்லாததால் இப்போது தங்கையாக நின்று அழுது கொண்டிருக்கிறாள் .

சொன்னதையே மீண்டும் மீண்டும் வேறு வேறு மாடுலேசன்களில் சொல்லிவிட்டு ,கொஞ்சம் அழுது விட்டு ,கொஞ்சம் சீரியல் அக்காவை புகழ்ந்து விட்டு தலை வெடிக்குமளவு தலைவலியை சுமந்து கொண்டு அந்த ஸ்டுடியோவை விட்டு வெளியேறினாள் .

அடுத்த படப்பிடிப்பு வேறொரு தளத்தில் .வேறொரு நெடுந்தொடருக்காக .அதற்கு முன் சத்தம் போடும் வயிற்றை சமாதானப்படுத்த வேண்டும் .

பெருப்பாலான நடிகைகளின் பகலுணவு ஆர்டர் செய்யப்பட்ட பீட்ஸா .,குளிர்பானமாக இருக்கும் .அந்த வகை உணவுகளில் சபர்மதிக்கு நாட்டமிருந்ததில்லை .

ஏதாவது கலவை சாதம் சொல்லலாமா ...இல்லை பழம் ,பாலென முடித்து கொள்வோமா என யோசித்தபடி நடந்தவளின் பாதையை மறித்தன ஒரு கரங்கள் .

கொரியோகிராபர் பாலன் ...

ஒரு மாதிரி கோணல் சிரிப்புடன் நின்றிருந்தான் .

"என்ன ..?" என்றாள் அதட்டலாக.

"என்னது ...என்னவா ...? எனக்கு சொளையா வர இருந்த இரண்டு லட்சம் உன்னாலதான் போச்சு .இப்ப என்ன செய்ய போற ...?"

என்ன உளர்றான் .ஓ...அவன் சொன்ன மாதிரி கழுதை குதி குதிச்சிருந்தா பெஸ்ட் கொரியோகிராபர் அவார்ட் வாங்கி இரண்டு லட்சம் வாங்கியிருப்பானாம் .

மனதிற்குள் அவனை திட்டியபடி ,"இங்கே பாருங்க பாலன் .இதுல நான் என்ன செஞ்சேன் .எனக்கும் சதிஷ் கும் பரதம் நல்லா வர்றதால அதையே ஆடலாம்னு சென்னேன் .ஜட்ஜஸ்க்கு அது பிடிக்காம போயிடும்னு யாருக்கு தெரியும் "

கொஞ்சம் வழி விடுங்க ப்ளீஸ் எனக்கு அடுத்த ஷூட் இருக்கு ."

அவனை சுற்றிக்கொண்டு போக முனைந்தாள் .ஆனால் ...

கைகளையும் ,கால்களையும் அவள் முன் பரப்பி அவள் பாதையை மறித்தான் பாலன் .

"என்னடி திமிரா ...?"என்றான் குனிந்து ....

சபர்மதிக்கு புரிந்து விட்டது .அவன் குடித்து விட்டு வந் திருக்கிறான்.


-தேவதை வருவாள்.

2 comments:

  1. oh my god. veetil baombaka kothum perunthevei veliyelo kazhukai thooki chella kathirukum balan, innum ethanai per Padma.....

    ReplyDelete

Blogger News

வணக்கம் தோழமைகளே , எனது " வா என் வண்ண நிலவே " கதைக்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு மிக்க நன்றி. இதோ உங்கள் முன் எனது அடுத்த கதை " வானவில் தேவதை " கறுப்பென்பது பிழையல்ல .மனமிருப்பின் வரமே என்பதனை என் முதல் கதையில் கூறியிருந்தேன். சொந்தங்கள் இல்லாத வாழ்வு வாழ்வல்ல.சந்தர்ப்ப சூழ்நிலைகளே சொந்தங்களின் பாசத்தை மறைக்கிறது என்பதனை இரண்டாவது கதையில் கூறியிருக்கிறேன் காதல் கலந்து.படித்து பாருங்கள்.
 

Blogger news

Blogroll