Pages

Powered by Blogger.
அவன்தானா ...அவனேதானா கண்களை மீண்டும் மீண்டும் சிமிட்டி பார்த்தாள் .பிறர் கவனம் கவராமல் விழிகளை நாசூக்காய் கசக்கி கொண்டாள் .அவன்தான் ...அவனேதான் ...

தலை குனிந்தபடியே வந்து அமர்ந்தவளின் முதல் பார்வையில்
விழுந்தது அந்த நீளமான கால்கள்தான் .வெண்மையான பச்சை நரம்போடிய அழகாய் நகம் கத்தரிக்கப்பட்ட அகன்ற ராஜ பாதங்கள் .

அந்த பாதங்களை பார்த்த நொடியே  குவியலான பனிக்கட்டிகளை தலை மீது உணர்ந்தாள் .இனிப்பும் ,புளிப்புமான திராட்சை சுவையை நாக்கில் சுவைத்தபடி பார்வையை மெல்ல உயர்த்தினாள் .உறுதியான உடம்பையும் ,நீளமான கைகளையும் ,பரந்த தோள்களையும் தாண்டி முகத்தை சந்தித்தபோது மெல்ல ஆகாயத்தில் பறக்க ஆரம்பித்தாள் விழுந்து விடுவோமோ என்ற பயத்துடன் ....

இன்னவென்று விளக்க முடியாத பார்வையுடன் அவன் ,

நீயா என்ற ஆச்சரியமா

நீதானா என்ற அலட்சியமா

என்ன செய்து விட்டாய் என்ற கோபமா ...

என்ன செய்ய முடியும் என்ற திமிரா

அவன் பார்வையின் செய்திகளை படிக்க முடியாமல் தவித்தன விழிகள்.

"முதல்ல அவளை கேளுங்க " என்ற அவனின் குரல் அவளை நனவுலகுக்கு கொண்டு வந்தது .

என்ன கேட்க சொல்கிறான் ? மலங்க மலங்க விழித்தாள் .

"எங்க வீட்டு பொண்ணுங்களை நாங்க அப்படி வளர்க்கலை .கழுத்தை நீட்டுன்னு நீட்டிடுங்க "குடும்ப பெருமை பேசினாள் அத்தை ...அப்பாவின் தங்கை .

ஓ ...திருமண சம்மதம் போல ...அவகிட்ட கேளுங்கன்னு சொல்றானே ...அப்ப இவனுக்கு சம்மதமோ ?...அப்படி சம்மதிப்பானா ?
ம்ஹூம் ,சம்மதிக்க மாட்டான் .அன்னைக்கு அவ்வளவு தூரம் பேசிட்டு ,..இல்லையில்லை சான்சே இல்லை ...தனக்குள்ளாகவே பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருந்தவள் ,

நாங்கெல்லாம் வாசப்படி தாண்ட விட மாட்டோம் பொண்ணுங்களை ,இப்பவும் வாசலை விட்டு இறங்கும்போது எங்க கையை பிடிச்சிக்கிடும் எங்க வீட்டு பொண்ணுங்க "என்ற அத்தையின் தொடர் கதாகாலட்சேபத்தில் நொந்து போய் அவனை ஏறிட்டாள் .

அவன் அவளையே பார்த்தபடி இருந்தான் .

குப்பென வியர்த்தது இவளுக்கு .

என்ன இவன் அப்ப இருந்து என்னையா பாத்துக்கிட்டு இருக்கான் ?..ஆனால் எதற்கு ? குழம்பினாள் .

"ஓ ..அப்ப அன்னைக்கு கொடைக்கானல்ல நீங்கெல்லாம் எங்க இருந்தீங்க ?உங்க நிலாவோட கையில் உங்க விரல் இல்லையே ?"அத்தைக்கு பதில் வினவினான் .

ஒருநிமிடம் தலை சுற்றிவிட்டது அவளுக்கு .என்ன இவன் இப்படி போட்டு உடைக்கிறான் .

என்னது ? எங்கே ? எப்போ ? எப்படி ?
அனைத்து கேள்விகளையும் ஒரே பார்வையாக்கி அவள் அம்மா அப்பாவின் மேல் எறிகிறாள் அத்தை .
மூணு மாத்த்துக்கு முன் கொடைக்கானல்ல நீங்க சந்திச்சிருக்கீங்களா நித்யா ?மகனிடம் வினவுகிறாள் அவன் அன்னை சந்திராவதி .

ம் ..என ஓரெழுத்தில் விடை கொடுக்கிறான் தனயன் .பார்வை மட்டும் அவள் முகத்தை விட்டு அகல்வதாயில்லை .

எழில் நீ எப்போ அவரைப் பார்த்த ...அடக்கப்பட்ட குரலில் அவளிடம் கேட்டாள அவள் அன்னை  மஞ்சளா .புயலுக்கு முன்னான அமைதியை அவள் குரலில் இனங்கண்டு வயிற்றை கலக்க எப்படி சொல்லலாம் ? நகத்தை கடித்தபடி வினை விதைத்தவன் அறுக்க வருவானா ? நப்பாசையுடன் அவனையே ஏறிட்டாள் .

அவனோ அலட்சிய பாவத்துடன் உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் ?யார் நீ ? என்ற ரீதியில் பார்த்து விட்டு வெகு நேரமாக அவள் முகத்தில் ஒட்டியிருந்த பார்வையை பியத்து எடுத்து விட்டத்தில் ஓடும் பல்லியை ஆராய தொடங்கினான் .

வெளியே தெரியாமல் பல்லை கடித்து கொண்டாள் அவள் .இவனை ...டக்கென எழுந்து அவன் தலையில் ணங்கென ஒரு கொட்டு வைக்கும் ஆவலை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டாள் .

தன் தலையில் கொட்டை உணர்ந்தானோ ..தன் போக்கில் தலையை தடவிய படி ஓரக்கண்ணால் அவளை ஆராய்ந்தான் .

அம்மா சித்தி வீட்டுக்கு போனப்ப ..எல்லோருமா லேக் போனப்ப ...போட்டிங் டிக்கெட் வாங்க நின்னப்ப ..அங்க வச்சு ....இவரை ...சித்தப்பா கூட பேசினார் ....போட்டிங் டிரைவிங் சொன்னார் ...

ஒன்றுக்கொன்று தொடர்பின்றி தலையை குனிந்தபடி கண்ணை மூடிக்கொண்டு சொல்லி முடித்தாள்

ஏதோ ஆட்சேபிக்க வாயை திறந்தவன் போதும் ப்ளீஸ் என்ற அவளின் இறைஞ்சல் பார்வையில் கருணை கொண்டு வாயை மூடிக்கொண்டு தலையை ஆட்டி வைத்தான் .

ஓ ..அங்கேயா அங்க அவள் சித்தி இருக்கிறா ...எப்பவுமே அப்படியெல்லாம் தனியாக அனுப்ப மாட்டோம் .அன்னைக்கு குழந்தை ரொம்ப ஆசைப்பட்டாளேன்னு ....அதான் ...அவள் சித்தி கூட நல்ல மாதிரி பார்த்துக்கிடுவா...கூடவே வந்து ...கூடவே நின்னு ...அதான் ...இல்லைன்னா "என தொடர்ந்த அத்தையை ...

"உங்க வீட்டு பொண்ணுங்களை அப்படி அனுப்ப மாட்டீங்க" ...இல்லையா ஆன்ட்டி ..என லேசான கிண்டலுடன் ஆரம்பித்தவன் ...எனக்கு உங்க பொண்ணை பற்றி தெரியும் என அழுத்தமாக அவள் முகத்தை பார்த்தபடி கூறி முடித்தான் .
கேள்வியாய் நோக்கிய தாய்க்கு இமைகளை அழுந்த மூடி திறந்து சம்மதம் தெரிவித்தவன் ,கம்பீரமாய் நிமிர்ந்து உங்கள் பெண்ணை எனக்கு பிடிச்சிருக்கு .என சபையில் அறிவித்தான் .

குத்தூசி ஒன்று தொண்டையில் சொருகியதாய் உணர்ந்தாள் அவள் .
ஆனால் என்ன இது வலிக்காமல் தித்திக்கிறதே .குருதிக்கு பதில் தேன் கசிந்தாற்போல் .

நீ வீசியதென்னவோ 
ஈட்டி முனைகளைத்தான் 
ஆனால் 
தைக்காமல் தடவுகிறதே 
அது என்னை ...

மனதுக்குள் கவிதை சொல்லிக்கொண்டாள் .

அன்னையின் மென் கேள்விக்கு ம் என சம்மதித்து தலையசைத்தாள் .
கொண்டாட்டத்தில் ஆழ்ந்தது வீடு .

அவன் விழிகளில் சிறு நிம்மதி கலந்த ஆசுவாசம் தெரிந்ததோ ?...யார் கண்டது இவன் விழி சொல்லும் மொழிகளை அலுப்புடன் எண்ணிக்கொண்டாள் .

அடுத்தடுத்த நிகழ்வுகள் பேசப்பட்டன .அவரவர் சௌகர்யங்கள் அலசப்பட்டன .இரு பக்கமும் பணப்பிரச்சனையற்ற குடும்பம் என்பதால் எந்த பிரச்சினைகளும் வரவில்லை .

அரைமணியில் தெய்வசிகாமணி மகன் நித்யவாணனுக்கும் ,பரமேஸ்வரன் மகள் எழில்நிலாவுக்கும் திருமணம் என முடிவு செய்யப்பட்டு பொண்ணுக்கு பூ வைக்கப்பட்டது .

எழில்நிலா அடிக்கடி தன் கையை கிள்ளி கிள்ளி பார்த்து அவளுக்கு கையெல்லாம் சிவந்து விட்டது .
நித்யவாணனின் பார்வையை பிடித்து அவன் மனதை அறிந்து கொள்ள முயன்றாள் எழில்நிலா .

ஆனால் அவன் பார்த்தால் அல்லவா ?....அவள் சம்மதம் சொல்லும் வரை அக்கம் பக்க கவலையின்றி அவளை பார்வை பசிக்கு இரையாக்கி கொண்டிருந்தவன் பிறகு அவள் புறம் திரும்பவே இல்லை .

அவள் தம்பிக்கு மேற்படிப்பு ஆலோசனை சொன்னான் .தந்தையுடன் நாட்டு நிலவரம் பேசினான் .அத்தையிடம் குலதெய்வ வழிபாடு பேசினான் .அத்தை மகனுக்கு கிரிக்கெட் கோச்சிங் அட்ரஸ் சொன்னான் .அம்மாவின் சமையலை ரசித்தான் .

வீட்டினர் அனைவரிடமும் அவரவர்க்கு தக்க உறவாடினான் .அவளை மட்டும் ஒதுக்கினான் பார்வையில் கூட ...

அன்று கூட அப்படித்தான் ...
நினைக்கையிலேயே தொண்டை அடைத்தது எழில்நிலாவுக்கு .

எப்படி வாழ போகிறாள் இந்த வாழ்க்கையை ?

0 comments:

Post a Comment

Blogger News

வணக்கம் தோழமைகளே , எனது " வா என் வண்ண நிலவே " கதைக்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு மிக்க நன்றி. இதோ உங்கள் முன் எனது அடுத்த கதை " வானவில் தேவதை " கறுப்பென்பது பிழையல்ல .மனமிருப்பின் வரமே என்பதனை என் முதல் கதையில் கூறியிருந்தேன். சொந்தங்கள் இல்லாத வாழ்வு வாழ்வல்ல.சந்தர்ப்ப சூழ்நிலைகளே சொந்தங்களின் பாசத்தை மறைக்கிறது என்பதனை இரண்டாவது கதையில் கூறியிருக்கிறேன் காதல் கலந்து.படித்து பாருங்கள்.
 

Blogger news

Blogroll