Pages

Powered by Blogger.

வா என் வண்ண நிலவே

"மாப்பிள்ளை மாங்கல்ய தாரணம் பண்ணுங்கோ" அய்யர் தாலியை அவன் கையில் கொடுக்க கோடி மலர்களுடன் ,சொந்த பந்தங்களின் வாழ்த்துக்களுடன் , தாய் தந்தையரின் நெகிழ்வுடன் ,தோழிகளின் கேலியுடன் கழுத்தின் பின்புறம் நித்யவாணனின் சூடான விரல் ஸ்பரிசத்துடன் அவனின் மறுபாதி ஆனாள் எழில்நிலா .
வலதுகையை அவளை சுற்றி வளைத்து கொணர்ந்து அவள் நெற்றியில் ,வகிட்டில் குங்குமம் இட்டான் நித்யவாணன் .அந்த சிறு அருகாமையே அவளை திணறடித்தது .

ஒரு நொடி அவன் கைகளை தள்ளி விட்டு ஓடிவிடலாம் என்று எண்ணியவள் ,மறுநொடியே தலை திருப்பி அவன் மார்பில் புதைந்து கொள்ளலாமா ? என ஏங்கினாள் .
அன்று பூ வைத்து விட்டு சென்றவுடன் சுத்தமாக நான்கு நாட்கள் எழில்நிலா இந்த உலகிலேயே இல்லை . சுற்றிலும் உறவினர்கள் அமர்ந்து திருமண ஏற்பாடுகளை திட்டமிட்டு கொண்டிருக்கையில் ,உரிய நேரம் தலையாட்டி கொண்டிருந்தாலும் இந்த திருமணம் நடக்க போவதில்லை என்றே அவளுக்கு தோன்றிக்கொண்டிருந்தது .

யாருடைய கைபேசி அலறினாலும் நித்யவாணனே போன் போட்டு திருமணத்தை நிறுத்த சொல்லப்போவதாக எண்ணி பயந்தாள் .

அன்று காலையில் கூட இந்த திருமணம் நல்லபடியாக நடக்க வேண்டுமென வாசல் பிள்ளையாரிடம் வேண்டியபடியே  வீட்டினுள் வந்தவள் அப்படியா இந்த திருமணத்தை விரும்புகிறோம் என திகைத்தாள் .

எதிரில் இருந்த கண்ணாடியில் ஒரு உருவம் தோன்றியது . கண்ணை கசக்கி கொண்டு பார்த்தாள் .இன்னொரு எழில்நிலா ...ஓ..என் மனசாட்சி ...இப்போ என்ன வேண்டுமாம் இதற்கு என்று அலுத்தபடி அதனை உறுத்தாள் .
அடி அறிவுகெட்டவளே ...அவளைத்தான் சொன்னது மனசாட்சி ...திருதிருவென விழித்தாள் எழில்நிலா .
அன்னைக்கும் இப்படித்தான "பே"ன்னு அவன் வாயை பாத்துக்கிட்டு இருந்த ?நல்லா ஆசை காட்டிட்டு உன்னை ஏமாத்தலை அவன் ? சீறியது அவள் மனசாட்சி.

மறுக்க முடியவில்லை அவளால் .ஆனால் தற்செயலாக இந்த மறு சந்திப்பு நிகழ்ந்தாலும் அவன் ஏன் தன்னை மணக்க சம்மதித்தான் ?ஒரு வேளை ...உண்மையாகவே தன்னை அப்போதே ...காதலித்தானோ ?....
மெல்ல தனக்கு சாதகமாக எண்ணவோட்டத்தை ஓட்டி வான் நிலவுக்கு எழில்நிலவு முயன்று கொண்டிருக்கையில் சம்மட்டியாய் அவள் தலையில் விழுந்தது அந்த அடி .

மனசாட்சிதான்....எத்தனை பட்டாலும் உனக்கு புத்தி வராதுடி ...அடிக்கடி அன்னைக்கு நடந்ததை மறந்துடுவ ...என்றது அவள் கண்ணாடி உருவம் .சரிதான் ஒரு நிமிடம் நான் தன்வயமிழந்து விட்டேன் என கண்ணாடி பார்த்து கூறிக் கொண்டிருந்தவளை வினோதமாக பார்த்து சென்றாள் அத்தை பெண் அஞ்சனா .

அசடு வழிய அவளை பார்த்த படி அவசரமாக அறைக்குள் சென்று கதவடைத்தவள் தனது கைப்பேசியை எடுத்து நித்தியவாணனை  தேடினாள் ."நித்யமுத்து" என்ற பெயர் கண்ணில் பட்டு எழில்நிலாவின் தொண்டை அடைக்க செய்தது .

அவள் தேடி எடுத்த ,அவள் வாழ்வில் ஒளி வீச வந்த வெண் முத்தாம் ...இப்படி எண்ணிக்கொண்டு அவனுக்கு அவள் வைத்த பெயர் .(வேறு யாராவது பார்த்தா கண்டுபிடிக்காம இருக்கனுமே ...இவா செஞ்ச வேலை அதுக்காகவும் இருக்கும் )

அதே நம்பர்தானா இல்லை என்னை ஏமாற்றவே அந்த நம்பர் வைத்திருந்தானா ?...யோசித்தபடி நம்பரை அழுத்தினாள் .

இரண்டாவது ரிங்கிலேயே போன் எடுக்கப்பட்டு ஹலோ என்ற அவனது கம்பீர குரல் சிறிது கவனம் கலந்து ஒலித்தது .

வந்து நான்தான் ...இழுத்தாள் ...

எதிர்முனையில் பேச்சு ஏன் மூச்சே இல்லை ...

இங்க பாருங்க நம்ம ரெண்டு பேருக்குள்ள ஒத்து வராது அதனால் இந்த திருமணத்தை நிறுத்தி டுங்க படபடவென ஒப்பித்தவள் ...சிறிது நிறுத்தி கவனித்த போது போன் தொடர்பு நின்றிருந்தது .

என்ன இது கட்டாயிடுச்சு ...அவன் கேட்டானா ..இல் லையா ...

மீண்டும் முயன்றாள் .தொடர்பு எல்லைக்கு வெளியே என்றது போன் .
அதன் பின் இரண்டொரு தடவை அவனை தொடர்பு கொள்ள முயன்றாள் .முடியவில்லை .

வேண்டுமென்றே தவிர்க்கிறான் .தாலி கட்டும் கடைசி நேரத்தில் கண்டிப்பாக கல்யாணத்தை நிறுத்த போகிறான் என்றே நெஞ்சுக்குள் ரயில் ஓட்டிக்கொண்டிருந்தாள் .

தாலி கட்டியானதும் ஐய்யய்யோ எனும் பரிதவிப்பும் ,அப்பாடா எனும் பெருமூச்சும் ஒன்றாக தோன்றின .

உறவினர் ,நண்பர்கள் வருகை சிறிது குறைந்திருந்த போது அலங்காரம் சரி செய்து வருவதாக அவனிடம் முணுமுணுத்து விட்டு அஞ்சனாவின் கையை பற்றிக்கொண்டு மேடையை விட்டு இறங்கி மணமகள் அறைக்குள் நுழைந்தாள் எழில்நிலா .
குளியலறைக்குள் புகுந்து கொண்டவள் ,சிறிது நேரம் சுவரில் சாய்ந்து கண் மூடி நின்றாள் .

பின் மேக்கப் கலையாமல் தலையை முகத்தை கண்ணாடி பார்த்து சீர்திருத்திக் கொண்டிருக்கையில் சன்னலின் மறுபுறம் அந்த பேச்சு சத்தம் கேட்டது .

"என்ன நம்ம மைனாக்கா இப்படி பண்ணிட்டாங்க ?"யாரோ ஒரு பெண் யாரிடமோ கேட்டுக்கொண்டிருந்தாள் .
"அதானே ஏதோ உலகத்துல இல்லாத மருமகளை கொண்டு வர போறதா பெரிசா பீத்திக்கிட்டு இருந்தாங்க .இப்ப என்னன்னா இந்த கறுப்பியை கொண்டு வந்து உட்கார வச்சிருக்காங்க "..இது வேறொரு பெண் .
சுரீரென்றது எழில்நிலாவுக்கு .
யாரைப்பற்றி பேசுகிறார்கள் ? தன்னையா ?..காதுகளை கூர்மையாக்கினாள் .

"ஆமா நம்ம நித்யா தம்பி அழகுக்கும் கலருக்கும் இந்த கறுவாச்சி எந்த மூலைக்கு ?சரி விடு இதெல்லாம் நமக்கெதுக்கு ..அங்க இந்த பந்தி முடியப்போகுது வா போய் சாப்பிடலாம்" என்றது அடுத்த குரல் .

பேயறைந்தது போல் ஆனாள் எழில்நிலா .எவ்வளவு திமிர் என்னைப்பற்றி இப்படி பேச அவர்களை இப்பவே போய் ...பல்லை கடித்தபடி கதவை திறந்து வெளியே செல்லும்போதே மனம் மாறிவிட்டது .
அவர்கள் சொன்னதில் என்ன தப்பு தான் கறுப்புதானே ...இந்த நினைவு வரவும் கால்கள் நடுங்குவதாய் உணர்ந்தவள் அருகிலிருந்த கைப்பிடி கம்பியை பிடித்து கொண்டாள் .
அதற்குள் அஞ்சனா அவளை தேடிக்கொண்டு வந்துவிட்டாள் .

"எழில், பொண்ணில்லாம மாப்பிள்ளை மட்டும் மேடைல என்ன செய்வார் .பாவம் அண்ணா தனியா உட்கார்ந்து போரடிச்சுக்கிட்டு இருக்கார் .சீக்கிரம் வா" என அவள் கையை பிடித்து இழுத்து போனாள் .
அவள் கூறியது போல் நித்யவாணன் ஒன்றும் போரடித்துக்கொண்டிருக்கவில்லை அவளது உறவினர்கள் சுற்றிலும் இருக்க அவர்கள் அனைவரின் கிண்டல்களை இயல்பாக ஏற்றுக்கொண்டு சிரித்தபடி பதிலளித்து கொண்டிருந்தான் நித்யவாணன் .

அஞ்சனா எழில்நிலாவை தள்ளி சென்று நித்யவாணனின் அருகில் அமர்த்தினாள் .
இருவரது கைகளும் உரசி கொண்டன .

வெள்ளை வெளேரென்ற கைகளுக்கு அருகே தமிழர்களின் சராசரி நிறமான மாநிற கைகள் .
கண்ணீர் தளும்பியதால் கைகள் மங்கலாக தெரிந்தன எழில்நிலாவுக்கு .

3 comments:

  1. ஹாய் பத்மா,
    nice update.
    என்ன பிரச்னை என்று தெரியல.....
    கருப்புன்னு வேற தாழ்வுணர்ச்சி இருக்கா ......
    பாவம் நித்யா ......உன் பாடு திண்டாட்டம் தான்.

    ReplyDelete
    Replies
    1. ஆமக்கா நித்யன் பாவம் தான்.தொடர்ந்து படியுங்கள்

      Delete
  2. அக்கா , அருமையா எழுதிருக்கீங்க. நான் இப்பதான் கவனிச்சேன். தொடர்ந்து எழுதுங்கள். காத்திருக்கிறோம்...

    ReplyDelete

Blogger News

வணக்கம் தோழமைகளே , எனது " வா என் வண்ண நிலவே " கதைக்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு மிக்க நன்றி. இதோ உங்கள் முன் எனது அடுத்த கதை " வானவில் தேவதை " கறுப்பென்பது பிழையல்ல .மனமிருப்பின் வரமே என்பதனை என் முதல் கதையில் கூறியிருந்தேன். சொந்தங்கள் இல்லாத வாழ்வு வாழ்வல்ல.சந்தர்ப்ப சூழ்நிலைகளே சொந்தங்களின் பாசத்தை மறைக்கிறது என்பதனை இரண்டாவது கதையில் கூறியிருக்கிறேன் காதல் கலந்து.படித்து பாருங்கள்.
 

Blogger news

Blogroll