Pages

Powered by Blogger.

வா என் வண்ண நிலவே

திக்கற்று தடுமாறுது
வெண் மேகங்களிடை
கரு மேகமொன்று
சுமந்திருக்கும் நீர்த்துளிகள்
அறியாது.....



அவளுடைய அறைதான் .விவரம் தெரிந்தது முதல் அவளுக்கே அவளுக்கென அவள் பயன்படுத்திய அறைதான் .இன்று முற்றிலும் புதிதாக தெரிந்தது .


மல்லியும் முல்லையும் ரோஜாவும் கூட்டி அள்ளினால் ஒரு லாரியை நிரப்பலாம் .அவள் தந்தை செய்த வேலை இது .அவ்வளவு பூக்களுக்கு ஆர்டர் கொடுத்து அறையை அலங்கரிக்க ஆட்களும் ஏற்பாடு செய்து மனம் நெகிழ்ந்தது எழில்நிலாவுக்கு .


மகள் வாழ்வாங்கு வாழ போகிறாள் என்றல்லவா இத்தனை ஏற்பாடுகள் .
மகளின் வாழ்வு காற்றில் படபடக்கும் கற்பூரமென துடித்து கொண்டிருப்பது தெரிந்தால் தாங்குவாரா ?மனதிற்குள்ளாக எண்ணி மருகி கொண்டிருந்தாள் எழில்நிலா.


திருமணத்திற்கு மறுதினம் சம்பந்தி சாப்பாடு எனும் கறிச்சாப்பாடு அவர்களில் வழமை .அதற்காக அவர்கள் திருமணம் நடந்த மண்டபத்திலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது .எனவே இரவுக்காக எழில்நிலாவை அலங்கரித்த உறவினப்பெண்கள் , கேலியும் கிண்டலும் அறை முழுவதும் சிதற விட்டு விட்டு விடை பெற  உறவினர்கள் அனைவரும் இரவு தங்க திருமண  மண்டபம் சென்று விட எழில்நிலா வீட்டில் யாருமற்ற தனிமை புது தம்பதிகளுக்கு .



கூடத்து சோபா நுனியில் அமர்ந்தபடி நகம் கடித்துக்கொண்டிருந்தாள் எழில்நிலா .பட்டு வேட்டி சட்டையில் அரச தோரணையில் வாசல் நிலையில் சாய்ந்து நின்று அவளை உறுத்துக்கொண்டிருந்தான் நித்யவாணன்.



தலை நிமிர்ந்தால் அவன் உள்ளம் அறிவாளோ என்னவோ ?...ஏதோ தவறாக நடக்கப்போவதாகவே எண்ணி தரையின் கார்பெட்டை ஆராய்ந்து கொண்டிருந்தாள் எழில்நிலா .



லேசாக தொண்டையை செருமியபடி நிலா...என அழைத்தபடி அவள் அருகில் சோபாவில் அமர்ந்தான் .அவன் வாச மூச்சை அருகில் உணர்ந்ததும் சட்டென்று எழுந்தவள் "எனக்கு தூக்கம் வருது ....தூங்க போறேன் "என்று விட்டு அவன் எதுவும் சொல்லும் முன்பே படுக்கையறைக்குள் சென்று கதவடைத்து கொண்டாள் .


ஏற்கெனவே இனிப்புக்குள் உருகும் வெண்ணெயாய் அவனுள் கரைய துடித்து கொண்டிருந்த எழில்நிலாவின் உணர்வுகளை சர்வ அலங்காரத்துடன் இருந்த அந்த சாந்தி முகூர்த்த அறை மிகவும் சோதித்தது .



என்றோ எங்கோ கேட்டது 
சிறிது 
எப்போதோ எதிலோ படித்தது 
ஆரம்ப அத்தியாயங்களை
அறிமுகமற்ற இருவர் உணர்வாய் 
திரையில் பார்த்தது 
விளங்காத விசயங்களின் 
விளக்கவுரைக்காக 
வண்டிற்கு காத்திருந்த பூவொன்று 
ததும்பும் தேன் மறைத்து 
இதழ் மூடிக்கொண்டது 
விழி உகுத்த நீரால் 
உப்பரிக்கும் தேன்சுவை .



மனதுக்குள்ளேயே குமுறியபடி இரவு முழுவதும் தூங்காமல் விசித்தபடியே இருந்தாள் .ஏதோ பேச வந்தானே ,என்னவென்று கேட்டிருக்கலாமோ என ஒரே ஒரு நிமிடம் நினைத்தவள் மனதில் அன்று அவன் பேசிய வார்த்தைகள் ஓடியது ஒளி ஒலியுடன் .


"சீச்சீ ...இந்த கறுத்த குட்டி இங்க இருக்கிற வரை பொழுதை போக்க மட்டுந்தான்டா .என் ஊரில் எனக்காக என் வெள்ளை தேவதை காத்துக்கொண்டிருக்கிறாள் "



மறக்க முடிந்த வார்த்தைகளா அவை .காதில் கேட்ட கணம் முதல் அவள் உடலின் ரத்தத்தில் பதட்டங்களை பரப்பியபடி தானும் சேர்ந்து ஓடிக்கொண்டிருக்கிற வார்த்தைகள் .



பொதுவாகவே எழில்நிலாவுக்கு தான் கறுப்பு என்ற தாழ்வு மனப்பான்மை அதிகம் உண்டு .நிறத்தில் அவள் தந்தையை கொண்டிருந்தாள் .என் பொண்ணு என்னை மாதிரி என அடிக்கடி கூறுவதில் எழில்நிலாவின் தந்தைக்கு மிக பெருமை .



அவளுக்கு நினைவு தெரிந்த நாள் முதல் எழில் கொஞ்சம் கறுப்பு ,எழில் நிறத்துக்கு இந்த கலர் சூட் ஆகாது ,என்பது போன்ற உறவினர்களின் பேச்சுக்கள் எழில்நிலா காதை எட்டினாலும் கருத்துக்குள் புகும் முன்பே அவற்றின் கூர் உடைக்க பட்டுவிடும் அவள் பெற்றோரால் .



தனது நிறத்தை எழில்நிலா உணராமலேயே வளர்த்து வந்தனர் அவள் பெற்றோர் .


பள்ளியில் பத்தாவது படிக்கும்போது உடன் பயின்ற மாணவிகளுள் நடந்த சிறு உரசலில் அவள் நிறம் பழிக்கப்பட்டது .

கருவாச்சி.. ,காக்கா.. ,என அவள் உயர்ந்த நிலை கண்டு பொறாமை கொண்ட கூட்டம் ஒன்று மறைமுகமாக விமர்சித்தது .

எழில்நிலா மிகவும் மதிக்கும் மியூசிக் டீச்சர் ஒரு போட்டியில் அவள் பாடி பரிசு வாங்கியதும் ,சந்தோச மிகுதியில் அவளை அணைத்தபடி அப்படியே நீ குயில்தான் எழில் ,நிறத்திலும் குரலிலும் என தன்போக்கில் தீ மூட்டி சென்றார்
.

இவற்றுடன் ,"இவளுக்கெல்லாம் யாருடி எழில்நிலா ன்னு பேர் வச்சது .எழிலும் இல்லை நிலவும் இல்லை இவகிட்ட" என எழில்நிலா நெஞ்சில் எறிந்து கொண்டிருந்த நெருப்புக்கு சுள்ளிகளை பொறுக்கி போட்டது வம்பர் சபை .


பள்ளி முடிந்து கல்லூரியில் வேறு தோழிகள் அமைந்து விட ,பழைய கசப்புகளை ஒருவாறு ஒதுக்க முனைந்து கொண்டிருந்தாள் எழில்நிலா .


அதற்கும் வினை வந்தது ஒரு காதல் கடிதம் மூலம் .இளமை கோளாறில் உடன் பயிலும் மாணவன் ஒருவன் எழில்நிலாவுக்கு எழுதிய காதல் கடிதத்தில் "என் கறுப்பு வானவில்லே! "என எழுதிவிட்டான் .


இக்கடிதம் அவள் தோழி ஒருத்தி கையில் சிக்கிவிட சிறு வயது போல் நக்கல்கள் இல்லை .ஆனால் அவள் நிறத்திற்கான வேர்கள் அடிக்கடி அவள் மனதில் ஊன்றப்பட்டது .


அந்த 'கறுப்பு வானவில்' ஒரு முறை முறைத்ததும் வேறு வண்ணம் தேடி பறந்துவிட்டான் .


இவற்றைவிட எழில்நிலா மனதை கறுப்பாக்கிய சம்பவம் ஒன்று அவள் வீட்டிலேயே நடந்தது .

அது ....


எனக்கான வரங்களை தேடி
எங்கெங்கோ பறந்து கொண்டிருந்தேன் நான் ...
மலையுச்சி வரை பறந்து விட்டு
சிம்மாசனம் காணாது சிறிது
மூர்ச்சையானேன் .
வயல்வெளி புகுந்துவிட்டு
களைகளால் களைத்தேன்
தூக்கணாங்குருவி கூடு ஒன்றில்
சிறிது நேரம் படுத்திருந்தேன்
பூவின் மகரந்தத்தை தென்றல் சிறிது விசிறியபோது 
குதிரை ஒன்றிற்கு இறக்கை பூட்டிக்கொண்டிருந்தேன் வானமேற 
நடுவானில் நகர்ந்த மேகத்திற்கு 
வானவில் மறைப்பிட்ட போது 
தலையில் வீழ்ந்தன பனிக்கட்டிகள் 
வெட்டப்பட்ட மரங்களின் சாபங்களாய் உடல் முழுதும் உருகி பூமி வீழ்ந்தேன் 
நாளை விதையாய் விழிக்க

0 comments:

Post a Comment

Blogger News

வணக்கம் தோழமைகளே , எனது " வா என் வண்ண நிலவே " கதைக்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு மிக்க நன்றி. இதோ உங்கள் முன் எனது அடுத்த கதை " வானவில் தேவதை " கறுப்பென்பது பிழையல்ல .மனமிருப்பின் வரமே என்பதனை என் முதல் கதையில் கூறியிருந்தேன். சொந்தங்கள் இல்லாத வாழ்வு வாழ்வல்ல.சந்தர்ப்ப சூழ்நிலைகளே சொந்தங்களின் பாசத்தை மறைக்கிறது என்பதனை இரண்டாவது கதையில் கூறியிருக்கிறேன் காதல் கலந்து.படித்து பாருங்கள்.
 

Blogger news

Blogroll