Pages

Powered by Blogger.

வானவில் தேவதை - 11








காலை உணவை அறைக்கு கொண்டு வர வேண்டாம் என ஏற்கெனவே அனுசூயாவிடம் சொல்லிவிட்டதால் எட்டுமணிக்கெல்லாம் உணவு அறைக்கு வந்து விடும்படி தகவல் கூறினாள் அவள் .உணவறையில் பூரணசந்திரணை சந்திக்ககூடுமோ ? என்ற அவள் எதிர்பார்ப்பை உறுதிப்படுத்துவது போல் அவனது நீளமான கார் வாசல் வழி நுழைகையிலேயே பார்த்துவிட்டாள் .

பக்கவாட்டு தோட்டத்தில் நின்றுகொண்டிருந்தாள் சபர்மதி அப்போது .தன்னை மீறி மலர்ந்த புன்னகையுடன் அவனைப் பார்த்தபடி இருந்தவள் அவன் முன் வாசல் வழி வீட்டின  உள்ளே போகாமல் பக்கவாட்டில் திரும்பி அவளிருந்த திசை நோக்கி வரவும் திடுக்கிட்டாள் .மெல்ல அங்கிருந்த அடுக்கு செம்பருத்தி செடியின் பின்புறம் மறைந்து கொண்டாள் .

அந்த குறுமரத்தை தாண்டி நடந்தான் பூரணசந்திரன் யாருக்கோ காலைவணக்கம் சொன்னபடி .யாரென லேசாக எட்டிப்பார்த்தாள் .தீபக்குமார் .இவன் நேற்றிரவு இங்கேதான் இருந்தானா ? என்னைக் கொண்டு வந்து விட்டதுடன் சரி என்ன ஆனாள் என ஒரு பார்வை கூட பார்க்கவில்லையே.

உற்சாகத்துடன் காலை வணக்கம் சொன்னான்  தீபக்குமார் .

"நேற்று உன்னை பார்க்க முடியவில்லை தீபக் .அவசர வேலை வந்து விட்டதால் உடனே கிளம்ப வேண்டியதாகி விட்டது .இரவு உனக்கு தங்குமிடமெல்லாம் வசதியாக இருந்ததா ? உனக்கு 
நான் நிறைய நன்றி சொல்ல வேண்டும் " என்றான் பூரணசந்திரன் .

" ஐயோ என்ன சார நீங்க இதுக்கெல்லாம் போய் நன்றி சொல்லிக்கிட்டு .நீங்க எனக்கு எவ்வளவோ செய்திருக்கீங்க."

"ஆறுமாதமாக நீ எனக்காகத்தான் அந்த விருப்பமில்லாத வேலையை செய்து கொண்டு இருந்தாய் "

"அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை சார் "

"அடுத்து என்ன செய்யபோகிறாய் ?"

"இனி அந்த சேனலில் வேலை பார்க்கும் எண்ணமில்லை சார் .சென்னை போகும் எண்ணமேயில்லை .இந்த மீடியாவில் வேலை செய்து செய்து சென்னைன்னாலேயே வெறுத்து விட்டது .பேசாம என் சொந்த ஊர் கும்பகோணத்திற்கே போயிடலாம்னு இருக்கேன் .அங்கே ஒரு தொழில் திட்டமிட்டிருக்கேன் சார் "

"ம் ...நல்ல முடிவு .ஆனால் உனக்கு பிடிக்கவில்லையென்பதால் மீடியா தப்பான தொழில் கிடையாதுப்பா .தவறுவதற்கு வாய்ப்புகள் அதிகமிருக்குமே தவிர தவறாமலேயே நெருப்பாக வாழ்பவர்களும் உண்டு "

"சார் மேடத்தை ஆறு மாதமாக பக்கத்திலிருந்து ஒவ்வோர் நிமிடமும் கவனித்தவன் நான் .அதன் பிறகும் உங்கள் வார்த்தையை மறுப்பேனா ? நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சரி .எனக்கு அந்த சூழ்நிலை பிடிக்கவில்லை .அதைத்தான் சொல்ல வந்தேன் "

"சரி சரி நானும் சும்மாதான் சொன்னேன் .நீ காலை உணவு முடிந்ததும் என் அலுவலகம் வந்து என்னை பார் .உனக்கு தேவையானது செய்கிறேன் "

இதன் பின் இருவரும் பிரிந்து உள்ளே சென்றனர் .அடுக்கு செம்பருத்தியின் பின் பதுமையாக சமைந்து நின்றாள் சபர்மதி .அவர்களிருவரும் தன்னை பற்றியே பேசினர் என்பதில் எள்ளளவு சந்தேகமும் அவளுக்கில்லை .அப்படி எதற்காக ஆறு மாதமாக பிடிக்காத வேலை செய்து தன்னை ஒருவன் அழைத்து வர வேண்டும் ?

யோசிக்க யோசிக்க தலை சுழல்வது போல் இருந்தது அவளுக்கு .அப்படி இங்கே வந்து அவள் பார்த்தே ஆக வேண்டிய வேலை என்ன இருக்கிறது இங்கே ? ஏனோ ஏதோ ஒரு விரும்பத்தகாத சம்பவம் நடக்கப்போவதாக அவள் உள்ளம் கூறியது .

யாரோ அவளருகே இருப்பது போன்று உணர்ந்து திரும்பி பார்த்தவள் வியந்தாள் சிறு பயத்துடன் .அது ஒரு மயில் .தலை சாய்த்து என்ன யோசனை எனக்கேட்பது போல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தது .தோட்டத்தில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த மயில் தோகைகளின் காரணம் இப்போது விளங்கியது.ஆனால் இது பெண்மயிலாயிற்றே எண்ணமிட்டபடி பார்வையை சுழற்றினாள் .

அதோ அங்கே ஓர் ஆண்மயில் தனது பெரிய தோகையை தரையில் பரவ்விட்டு இழுத்தபடி நடந்து கொண்டிருந்தது .மாமரத்தின் அடியில் ஓர் ஆண்மயில் .அந்த குரோட்டன்ஸ் செடியின் பின்புறம் ஒன்று என கிட்டத்தட்ட பத்து மயில்கள் வரை ஆணும் பெண்ணுமாக நடமாடிக்கொண்டிருந்தன.ஒரு ஒழுங்கற்று இருந்த அந்த தோட்டம் கூட இந்த மயில்களினால் பொலிவுற்றது போல் தோன்றியது .

திரும்பி திரும்பி மயில்களை பார்த்தபடி உள்ளே வந்தவள் யார் மீதோ மோதி நின்றாள் .பூரணசந்திரன் தான் .

"என்னம்மா முதுகில் இரண்டு கண் இல்லையேன்னு வருந்துகிறாய் போல ?"

இலகுவான கேலிதான் .ஆனால் சற்று முன் தன்னை பற்றிய உரையாடல்களை ஆண்கள் இருவர் வாயிலாக கேட்டதால் " ஏன் நீங்கள் கண்களை முன்னால் வைத்து வருவதுதானே ?" என  சீறினாள் .

" நான்தான் வரவேயில்லையே .நின்று கொண்டுதானே இருந்தேன் "
மேலும் இலகுவாகவே பேசினான் .

ஆமாம் இவன் நின்று கொண்டு இருந்தானாம் .நான் வேலை மெனக்கெட்டு இந்த அழகன் மேலே இடிக்கவென்றே வந்தேனாம் .தனக்குள் கடுத்தவளுக்கு பூரணசந்திரன் தன் கைகளில் வைத்திருந்த கைபேசி கண்ணில் பட்டது .

" உங்கள் போனில் நெட் உண்டா "

" ம் ..எதற்கு கேட்கிறாய் ?"

" எனக்கு கொடுங்க. என் நண்பருக்கு ஒரு செய்தி அனுப்ப வேண்டும் "

" எந்த நண்பருக்கு ?" சிறிது கவனத்துடன கேட்டான் .

" ஏன் சொன்னால்தான் தருவீர்களா ?" என்றாள் சுள்ளென்று .

லேசாக தோள்களை குலுக்கியவன் பேசியை திறந்து அவள்புறம் நீட்டினான் .சபர்மதியின் கைபேசியையும் பெருந்தேவி தூக்கி சென்ற பிறகு ,எந்த நம்பரையும் மனதில் ஏற்றாமல் போனில் மட்டுமே ஏற்றியிருந்ததால் ,யாரையுமே தொடர்பு கொள்ள வழியின்றி விழித்துக்கொண்டிருந்தாள் .தீபக் கண்டிப்பாக அவள் நலம் விரும்பி.ஆனாலும் அவளுக்கு தேவைப்பட்ட பெருந்தொகையை தருமளவு வசதியானவன் இல்லை .எனவேதான் நேரில் கூட அவனை தொடர்பு கொள்ளாமல் அப்போது ஒதுங்கியிருந்தாள் .அதன்பிறகு அவள் வாழ்க்கையில் நடந்தவைதான் மின்னல் வேகத்தில் நடந்து முடித்து விட்டதே .

பாவம் தீபக் திடீரென அவளைக் காணாது விபரம் தெரியாமல் விழித்துக்கொண்டிருப்பான் .அவனுக்கு தனது இருப்பிட தகவல் அனுப்பவே இப்போது பூரணசந்திரணிடம் போன் கேட்டாள் .

போனில் நெட்டை திறத்தவள் மெயில் அனுப்பலாமென நினைத்து தீபக்கின்  மெயில் ஐடியை யோசித்தால் அதுவும் நினைவு வராமல் சதி செய்தது .ஒரு முறையாவது முழுவதும் ஐ.டியை டைப் பண்ணி போயிருந்தால்தானே.

என்ன செய்யலாமென யோசித்தபடி நிமிர்ந்த போது அவளையே பார்த்துக்கொண்டிருந்த பூரணச்சந்திரன் கண்ணில் பட்டான் .மனதில் மூண்ட எரிச்சலுடன் அவனிடமிருந்து சற்று தள்ளி நின்று கொண்டு , தனது முகநூல் கணக்கை திறந்தாள் .அதில் தீபனின் பக்கத்தில் உள்பெட்டியில் சென்று தன்னைப்பற்றிய விபரம்  சுருக்கமாக  தெரிவித்து விட்டு ,தனது இப்போதைய முகவரியையும் தெரிவித்தாள் .

இன்னமும் அவளையே பார்த்தபடி பூரணசந்திரன் நிற்பது ஓரவிழியில் தெரிந்தது .பட்டென போனின் மூடியை மூடியவள் அவனிடம் நீட்டினாள் .

" எனக்கு கொஞ்சம் வெளியே போகணும் .கொஞ்சம் சாமான் வாங்கனும் .எப்படி போறது " என்றாள் துண்டு தெறித்தாற்போல் .

" நீ நினைக்கிற மாதிரி போனெல்லாம் இந்த ஊர்ல உடனே வாங்க முடியாது .இந்த ஊர் இன்னமும் கிராமத்தோட சேர்த்திதான் .மலையிறங்கி கீழதான் போகனும் .அப்படி போகிற போது சொல்கிறேன் .என்னுடன் வா "என்றான் .

எனது தேவையை இவனிடம் சொல்லவில்லையே .எப்படி கண்டுகொண்டான் ."எனக்கு போன் வேணும்னு உங்ககிட்ட கேட்டேனா?" இந்த எரிச்சலையும் அவன்மேலேயே காட்டினாள் .

" என்னை வேவு பார்ப்பதையே உங்கள் தொழிலாக கொண்டிருக்கிறீர்களோ ?"நக்கலாக வினவினாள் .

பூரணசந்திரன் புருவம் சுருக்கி சிறிது யோசித்து விட்டு ஏதோ சொல்ல வாய் திறந்தான் .உன் பேச்சை நான் கேட்பதாக இல்லை என அறிவிக்கும் விதமாக 'ணக் ணக்கென 'பாதங்களை சப்தமெழுப்பியபடி அவ்விடத்தை விட்டகன்றாள் சபர்மதி .

உணவு மேஜையிலும் தனக்கு எதிரேதான் அவன் அமர்ந்திருக்கிறான் என தெரிந்த பின்னும் மேஜயிலிருந்த தண்ணீர் ஜக்கின் மீதே பிடிவாதமாக தன் பார்வையை பதித்திருந்தாள் சபர்மதி .எனவே சாப்பிட அவளுடன் அமர தயங்கிய அம்சவல்லியை கண்களால் அதட்டி  பூரணசந்திரன் அமர வைத்த நிகழ்வை அவள் அறியவில்லை . பூரணசந்திரனும் அவளுடன் பேச முனையவில்லை .

காவேரி பாத்திரங்களை கொண்டு வந்து வைக்க அனுசூயா பரிமாறிக்கொண்டிருந்தாள்.இரண்டு இட்லிகளை சபர்மதியின் தட்டில் வைத்து சாம்பார் ஊற்றிவிட்டு அம்சவல்லியிடம் நகர்ந்தாள் அவள் .
இட்லியா அவை .சிறு கற்பாறை போன்று இருந்தது .அவற்றை மென்று விழுங்க முடியுமென சபர்மதிக்கு தோணவில்லை .

" என்ன சித்தி இந்த தடவை சிறுமலைப்பழம் போட்டிடலாமா ?" என அம்சவல்லியிடம் தொழில் பேச்சை  தொடங்கினான் பூரணசந்திரன் .

"இதெல்லாம் வேலைக்காரங்க முன்னாடி ....அப்புறமா நாம மட்டும் இருக்கும்போது பேசலாமே " தர்ம சங்கடத்துடன் கூறினாள் அம்சவல்லி 
சபர்மதிக்கு சுருக்கென்றது .அப்போது காவேரி உணவு பாத்திரங்களை வைத்துவிட்டு நகர்ந்துவிட்டிருந்தாள் .அனுசூயா சொந்தக்காரி .தான்தானே வேலைக்காரி .எப்படி வீட்டாள் போல் அவர்களுடன் உணவுண்ண அமர்த்தாள் .எழுந்து சென்றுவிட முயன்ற போது கையிலிருந்த உணவுப்பாத்திரத்தை கீழே வைத்துவிட்டு உள்ளே அகன்றாள் அனுசூயா .

அதைக்கண்டு " அக்கா ..." என சிறு கண்டிப்புடன் அழைத்தான் பூரணசந்திரன் .

" சும்மா என்னையே குறை சொல்லாதே தம்பி .என் நிலையிலிருந்து நீ யோசிச்சு பாரு "என்றவளின் பார்வை சபர்மதியையே வெறித்தது .மீண்டும் எழுந்து செல்வதை பற்றி யோசிக்க தொடங்கினாள் சபர்மதி .அந்த இட்லி வேறு அவள் யோசனையை தீவிரப்படுத்தியது .

" இன்று என்னக்கா இட்லி இவ்வளவு மோசமாக இருக்கிறது .வாயில் வைக்க முடியவில்லை .இதெல்லாம் நீங்கள் கவனிப்பதில்லையா ?"என்றவன் உட்புறம் திரும்பி 'காவேரி ' என அழைத்தான் .

அவசரமாக வந்து நின்ற காவேரியின் முகத்தில் சிறு கவலை தென்பட்டது 

.பூரணசந்திரனை முந்திக்கொண்டு சபர்மதி " ஒண்ணுமில்லைங்க காவேரி இன்னைக்கு உங்க டிபன் மிக பிரமாதம் .இட்லி வாயில் போட்டால் கரைகிறது .சாம்பார் அற்புதம் .எப்படிங்க இவ்வளவு அருமையா சமைக்கிறீங்க .? ருசிக்க தெரியாதவங்கதான் உங்கள் சமையலையெல்லாம் குறை சொல்வாங்க ."பூரணச்சந்திரனுக்கு மாற்று சொல்ல வேண்டுமென்ற ஒரே நோக்கத்துடன் நீட்டி முழக்கினாள்.

அமசவல்லி குழம்ப ,காவேரி வாயெல்லாம் பல்லாக நிற்க ,அமைதியாக அவளை நோக்கியபடி இருந்தான் பூரணசந்திரன் .

அவள் முழக்கி முடித்தவுடன் காவேரியிடம் " இதுக்குத்தான் கூப்பிட்டேன் காவேரி .சபர்மதி இந்த இரண்டு இட்லியிலேயே உன் கைபக்குவத்துக்கு அடிமையாகிட்டா .உன் ரசிகையை நீ கவனிக்க வேண்டாமா ? இதோ நானும் 
அக்காவும் சாப்பிட்டு முடிச்சாச்சு .உன் ஆளை நீ நல்ல்ல்லா கவனி " என்று விட்டு எழுந்துவிட்டான் .அம்சவல்லியும் .

இன்னும் மூன்று இட்லிகளை சபர்மதியின் தட்டில் வைத்த காவேரி " சாம்பாரை மேலே ஊற்றவா ? ஓரமாக ஊற்றவாம்மா ?" துள்ளலுடன் கேட்டாள் .

ம் உன் தலையில் ஊத்திக்கோ .இந்த மஞ்சள் நிற திரவத்திற்கெல்லாம் சாம்பார்னு பெயர் சொன்னா ,சாம்பாரை என்னன்னு சொல்றது ,மனதிற்குள்ளாக அவளை வசை பாடியபடி " ஐயோ காவேரி நான் டயட்ல இருக்கேன் இரண்டு இட்லிதான் சாப்பிடுவேன் .அதனால் இந்த இட்லியை நம்ம வீட்ல நாய் இருக்கில்ல .இருந்ததே... காலைல பார்த்தேன் .அதுக்கு போட்டுடு " அவசரமாக எழுந்து கை கழுவினாள் .


"என்னங்கம்மா நல்லா இருக்குன்னு ரசிச்சு சொல்லிட்டு சரியா சாப்பிடாமல் போறீங்களே .சரி இட்லியை விடுங்க சுக்கையும் ,கருப்பட்டியையும் தட்டிப்போட்டு ஒரு காப்பி போடுவேன் பாருங்க .அப்படியே வாசனையே ஊரை கூட்டும் .செத்த அப்படி உட்காருங்க நிமிசத்துல கொண்டாந்துடுறேன் " இறக்கை கட்டாத குறையாக சமையலறைக்கு பறந்தாள் காவேரி .

பின்வாசல் கண்களில் தட்டுப்பட பேசாமல் தோட்டத்திற்குள் போய் பதுங்கிக்கொள்ள வேண்டியதுதான் .காவேரி காப்பியை எங்கேயாவது கீழே  ஊற்றியபின் வருவோம் .அவசர முடிவொன்றை எடுத்த சபர்மதி  பின்வாசலுக்கு பாய்ந்தாள் .

" என்ன திருப்தியாக சாப்பிட்டாயிற்றா ? மிக ரசித்து உண்டாய் போல ." கிண்டலாக சிரித்தபடி எதிர்கொண்டான் பூரணச்சந்திரன் .

இவனை ....பற்களை கடித்தபடி 
முறைத்தாள் அவனை .இரண்டு கைகளையும் உயர்த்தி காட்டி முறுவலித்தான் அவன் .அவனை சுற்றிக்கொண்டு விலகி போக முனைந்தாள் .கைகளை குறுக்கே நீட்டி தடுத்தான் .

" உன்னுடன் சற்று பேச வேண்டும் "

" உங்களுடன் பேச எனக்கு ஒன்றுமில்லை " மீண்டும் செல்ல முயற்சித்தாள் .

மீண்டும் தடுத்தபடி " உன்னை மீட்பதற்காக கொடுத்த லட்சங்களை பற்றி கூட பேச ஒன்றுமில்லையா ?"

அவமானத்தால் முகம் சுருங்க அப்படியே நின்றுவிட்டாள் சபர்மதி .

பிறகு வேகமாக அவன்புறம் திரும்பி" சொல்லுங்க அதற்கு விடை தெரியாமல்தான் முழிச்சிக்கிட்டு இருக்கேன் .என்ன காரணம் ? எனக்காக அவ்வளவு பணம் குடுக்க வேண்டிய அவசியம் என்ன ?"

" என். பின்னால் வா , "அமர்த்தலாக மொழிந்தபடி முன்னால் நடந்தான் பூரணசந்திரன் .முரணும் மனத்துடன் பின் நடந்தாள் சபர்மதி .

அவுட்ஹவுஸ் அருகில் நின்றவன் " உள்ளே உடல்நலமின்றி படுத்து இருப்பவர் இக்குடும்ப தலைவர் சத்யேந்திரன் .அவருடன் பேசும்போது அவர்தான் அந்த படுகுழியிலிருந்து பல லட்சங்கள் கொடுத்து உன்னை மீட்டு வந்திருக்கிறார் என்பதனை நினைவில் வைத்துக்கொண்டு பேசு " என்றான் .

இவன் ஏதோ உளறுகிறான் .அப்படி பல லட்சங்களை வாரி இறைத்து என்னை கூட்டி வந்து இங்கே வைக்க வேண்டிய அவசியம் இவருக்கென்ன .இப்படி எண்ணியபடிதான் சபர்மதி உள்ளே சென்றது .

கட்டிலோடு கட்டிலாக ஒட்டியபடி கிடந்த அந்த மெல்லிய உருவம் அவளுக்கு பரிதாபத்தை தோற்றுவித்தது .தனது குச்சி கைகளை அவளை நோக்கி ஆதரவு தேடுவது போல் நீட்டினார் அம்முதியவர் ." வா மகளே "...

கைகள் செயல்படாததால் துவண்டு கட்டில் மேல் விழுந்தன .அவசரமாக முன் சென்று கைகளை பற்றி சரியாக வைத்தாள் சபர்மதி .

" நான்தான் வந்து கொண்டே இருக்கிறேனே .நீங்கள் ஏன் எழ முயல்கிறீர்கள் ஐயா ? என கேட்டாள் .

"  ஐயாவா ... வயதிற்கான மரியாதைச் சொல்லா தாயே இது ? "

ஏதோ வயிற்றை பிசைய பதில் சொல்லாமல் மௌனித்தாள் சபர்மதி .

" என்னடா மகளே ...தாயே ன்னு பலவாறாக குழப்புகிறானேன்னு பார்க்கிறாயா செல்லம் .நாம் பெற்ற பிள்ளைகள் ஒரு காலத்திற்கு பின் நமக்கு தாயாகி விடுகிறார்கள் .இப்போது எனக்கு நீயும் அப்படித்தான "

சத்தமின்றி இடியொன்று இறங்கியது சபர்மதி தலையில் .இவர் ...இவர் ...சத்யேந்திரன் ...என் இந்தர் ...தாயின் கையெழுத்தில் எழுதப்பட்ட வாசகங்கள் கண் முன் வந்தன .

தலை சுற்றி கீழே விழ இருந்தவளை தாங்கினான் பூரணசந்திரன் .நிமிர்நது அவன் முகம் பார்த்தவள் ஒரு உதறலில் அவனிடமிருந்து விடுவித்து கொண்டு உடனடியாக இந்த இடத்தை விட்டு விலக வேண்டுமென்ற முடிவோடு வேகமாக வெளியே ஓடலானாள் .




- தேவதை வருவாள்.




0 comments:

Post a Comment

Blogger News

வணக்கம் தோழமைகளே , எனது " வா என் வண்ண நிலவே " கதைக்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு மிக்க நன்றி. இதோ உங்கள் முன் எனது அடுத்த கதை " வானவில் தேவதை " கறுப்பென்பது பிழையல்ல .மனமிருப்பின் வரமே என்பதனை என் முதல் கதையில் கூறியிருந்தேன். சொந்தங்கள் இல்லாத வாழ்வு வாழ்வல்ல.சந்தர்ப்ப சூழ்நிலைகளே சொந்தங்களின் பாசத்தை மறைக்கிறது என்பதனை இரண்டாவது கதையில் கூறியிருக்கிறேன் காதல் கலந்து.படித்து பாருங்கள்.
 

Blogger news

Blogroll