Pages

Powered by Blogger.

வானவில் தேவதை 20






முதலில் பூரணனின் கண்களில் தன்னைக்கண்டதும் சிறு மின்னல் தோன்றியதோ என சந்தோசப்பட்டவள் ...தொடர்ந்த அவனின் வெறுமை பார்வையில் முதலில் பார்த்தது பிரமையோ என எண்ணினாள் .


" என்ன விசயம் " ஒட்டாத கேள்வி ...

என்ன விசயமா ...அவனிடம் இரண்டு வார்த்தை பேசுவதற்காக ஆறுமணிநேரம் பிரயாணித்து சாப்பிட கூட செய்யாமல் ஓடி வந்திருக்கிறாள் .நிதானமாக என்ன என்கின்றானே ...பொறுமியபடி " உங்களிடம் பேசவேண்டும் ..." என்றாள் .


தோள்களை குலுக்கி " பேசலாமே ..." என்றான் ." சாரி நான் அன்று ...."ஆரம்பித்துக் கொண்டிருக்கையிலேயே ... "செக்கிங்  ஆரம்பிச்சுட்டாங்க போகலாமா சார் இரண்டு பேர் பூரணசந்திரன் அருகில் வந்து நின்றனர் .


" ம்...போகலாம் ..."...என்று அவர்களிடம் கூறியவன் " அப்புறம் ..." என்றான் இவளிடம் .


இப்படி கேட்டால்  என்ன சொல்வது .அதுவும் இவர்கள் முன்னிலையில் பெருமூச்சுடன் தலை குனிந்தவள் கண்களில் கையிலிருந்த பொக்கே பட அதனை பூரணனின் கைகளில் வைத்து " இனிய பயணத்திற்கான வாழ்த்துக்கள் " என்று வாழ்த்தினாள் .


சபர்மதியின் கைகள் பொக்கேயின் அடியில் பூரணசந்திரனின் கரங்களை பற்றியது .தனது அன்பை அவனுக்கு உணர்த்தி விடும் தாபம் தெரிந்தது அதில் .


பேச்சின்றி ஒருவரை ஒருவர் விழுங்கி கொண்டிருந்தன இரு விழிகள் .பூரணசந்திரனின் கருநீல சூட் அணிந்த கரங்களின் மேல் தனது சிகப்பு ரோஜா பொக்கே எழிலாக இருப்பதை ரசனையுடன் பார்த்தபடி இருந்தவளுக்கு , ஒரு வெண்ணிறகை உரிமையாக அந்த கருநீல சூட் கரங்களை பற்றுவதை கண்டதும் சுரீரென்றது .


தீ சுட்டார் போல் தனது கரங்களை விலக்கி கொண்டு , அவ்வெண்நிற கரத்துக்காரியை ஏறிட்டவள் உடலெங்கும் மின்சாரம் வாங்கினாள் .அவள் ஸ்வாதி ...பூரணசந்திரனுடன் நிறைய புகைப்படத்தில் இடம்பெற்றவள் .


இவள் எங்கே ...இங்கே ..பூரணனை வழியனுப்ப வந்தாளோ ?,...



" சந்துரு யார் இது ....? அவன் கையிலிருந்த பொக்கேவை வாங்கி அருகிலிருந்தவரிடம் கொடுத்தபடி கேட்டாள் .லேசாக பூரணனின் தோள் மேல் சாய்ந்தாளோ ...? சந்துருவாம் ...பெயரைப்பார். ...சகிக்கவில்லை .


" இது என்னோட அக்கா பொண்ணு .இவளை நான் கல்யாணம் பண்ணிக்க போகிறேன் ..."இபபடித்தான் பூரணன் சொல்வானென எதிர்பார்த்தாள் சபர்மதி .சொல்லவேண்டுமென்றும் மிக மிக விரும்பினாள் .


ஆனால் " இது என்னோட ரிலேடிவ் ...( சொந்தக்கார பொண்ணாம் ) சாதாரணமாக சொன்னவன் " சபர்மதி இது என்னோட டியர் ப்ரெண்ட் ஸ்வாதி ." என அறிமுகம் செய்தான் .


"ஹாய் " கையசைத்தாள் ஸ்வாதி.


டியராம் ....சபர்மதிக்கு உடல் முழுவதும் பற்றியெறிவது போல் இருந்தது .


இந்த கண்ணகியெல்லாம் மதுரையை எப்படி எரித்திருப்பாள் .இவர்களிடம் அந்த பார்வையை உபயோகித்து பார்ப்போமா ? ஆழமாக யோசித்தபடி அவர்களை விழித்து பார்த்தாள் சபர்மதி .


" போகலாம்பா " தான் கோர்த்திருந்த பூரணசந்திரன் கரங்களை இழுத்தாள் ஸ்வாதி .ஆக இவளும் பூரணனுடன் போகிறாள் .


பூரணசந்திரன் நினைத்திருந்தால் ஓர் ஐந்து நிமிடம் ஒதுக்கி ,சபர்மதியிடம் சற்று ஓரமாக நின்று நான்கு வார்த்தைகள் பேசியிருக்கலாம் .ஆனால் அவனுக்குத்தான் அந்த எண்ணமே இல்லையே .


"போகலாமே "என்று அவளிடம் கூறியவன் " பை " என்ற ஒரு வார்த்தையில் இவளிடம் விடை பெற்று கோர்த்த கைகளை விடாமல் பின்னாலேயே போய்விட்டான் .போயே விட்டான் .கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து சந்திக்க இருக்கும் தன் துணையிடம் ஒருவன் விடை பெறும் லட்சணம் இதுவா .



அயர்ந்து போய் சிலையாக நின்றாள் சபர்மதி .நான் ..என்னை ...எப்படி ...இப்படி விட்டு செல்லலாம் .இவனுக்காக அப்பா எப்படியெல்லாம் வக்காலத்து வாங்கினார் .ஏதோ மருந்தை வெளிநாடுகளில்  அறிமுகம் செய்து , நம் நாட்டில் காட்டி உரிமம் பெற்று , நம் ஊரிலேயே அதற்கான தொழிற்சாலை உரிமம் பெற்று நிறைய பேருக்கு வேலை வாய்ப்பு கொடுக்கப்போகிறான். நம ஊரின் மதிப்பு உயரும் .அது ...இதுவென்று ஏதேதோ கூறினாரே ...இவன் இப்படி ஒரு பெண்ணின் கையை பிடித்துக்கொண்டு செல்கின்றவன் என்ன சாதனை செய்ய முடியும் .


பாட்டி வேறு ஏதோ அவர்கள் மகன் என்னைக்கண்டதும் பேச ஓடி வந்து விடுவார் போல் போய் பேசு பேசு என அனுப்பி வைத்தாரே ...இங்கே ஒரு பார்வைக்கே பஞ்சமாக இருக்கிறதே


இருக்கட்டும் ஊருக்கு போய் இவர்களை என்ன செய்கிறேன் பார் மனதிற்குள் கறுவியபடி காரில் ஏறினாள் சபரமதி .இரவு வெகு நேரமாகி விட்டதால் , தனது வீட்டில் தன்னை இறக்கிவிட்டு விடும்படியும் , தான் நாளை காலை பாட்டியை சந்திக்க வருவதாகவும் டிரைவரிடம் சொல்லி அனுப்பினாள்.


அனைவரும் உறங்கிவிட்டதால் ஆழ்ந்த  அமைதியில் இருந்தது வீடு 
தனது அறைக்கு சென்று படுக்கையில் விழுந்தவள் தன் வாழ்க்கையில் ஒரு நாளும்  செய்யவே கூடாது என்று நினைத்திருந்ததை செய்ய தொடங்கினாள் . முகத்தை மூடியபடி விக்கி விக்கி அழ துவங்கினாள் .


சபர்மதியின் துயரம் அன்றைய  நாளுக்கு தெரியவில்லை .அது எப்போதும் போல் அழகாகவே விடிந்தது .அதிகாலை நான்கு  மணிக்குதான் அழுதழுது உறங்க தொடங்கியிருந்த சபர்மதிக்கு வழக்கம்போல் ஆறுமணிக்கு விழிப்பு தட்டிவிட்டது .எழுந்ததும் முன்தினம் நிகழ்வுகள் மனம்
வலம் வர துவங்க மீண்டும் கண்கள் கலங்க தொடங்கின .


திரும்பி தலையணையில் முகம் புதைத்துக்கொண்டாள் .கதவு தட்டும் சத்தம் .முகத்தை துடைத்துக்கொண்டு கதவை திறந்தாள் 

.காவேரி ...


" அம்மா இரவு வர ரொம்ப நேரமாகி விட்டதா ? இப்போ காபி கொண்டு வரவாம்மா ...? கொஞ்சம் நேரமாகட்டுமா ? "மிக பணிவுடன் கேட்கிறாள் .


எப்படி ஒரு இரவில் இப்படி மாற முடியும் ...? என்று எண்ணியபடி , நீங்கள் எடுத்து வைங்க வந்துட்டேன் என்றாள் சபர்மதி .

அவளுக்கு இன்று வெளியே எங்கேயும் போகும் எண்ணமில்லை .யாரையும் பார்க்கவோ , பேசவோ பிடிக்கவில்லை .காவேரியை அனுப்பி விட்டு பேசாமல் அறையினுள் சென்று முடங்கிக்கொள்வோம் என எண்ணுகிறாள் .


" நீங்க பல் விளக்கி முகம் மட்டும் கழுவி வாங்கம்மா .நான் சூடா உங்களுக்கு ஒரு கப் காபி கொண்டு வர்றேன் .பிறகு நீங்கள் குளித்து வருவதற்குள் டிரேயில் செட் பண்ணி வைக்கிறேன் ." என்றுவிட்டு சென்றாள் காவேரி .


இவள் விட மாட்டாள் போலவே .அப்பா எப்படியும் தனக்காக காத்திருப்பாரே. அவரிடம் அழாமல் தன்னால் பேச முடியுமா ? முகம் கழுவி துடைத்தாள் ...கண்ணீரையும் சேர்த்து.

 காபி குடித்து விட்டு குளித்து கீழிறங்கினாள் .அப்பாவிடம் இரண்டு வார்த்தை பேசிவிட்டு வந்துவிடுவோம் என எண்ணினாள் .


" குட்மார்னிங் சபர்மதி " ராஜசேகரன் .
புன்னகைத்து காலை வணக்கம் சொன்னாள்.


" சபர்மதி நீ அப்பாவிற்கு காபி கொடுத்து விட்டு வருகிறாயா ? உன்னிடம் கொஞ்சம் பேசவேண்டுமே ." என்றான் .


" சரிண்ணா "என தலையாட்டினாள் .


" இங்கே பார் " அம்சவல்லியின் குரல் மாடியிலிருந்து .நிமிர்ந்து பார்த்து " சொல்லுங்க பெரியம்மா " என்றாள் .


" என்னமோ துணிமணின்னு கேட்டியே ..ஒன்பது மணிக்கெல்லாம் நான் போகும் போது கூட வந்தால் கடையை காட்டுறேன் "இவள் பதிலை எதிர்பார்க்காமல் நகர்ந்து விட்டாள் அம்சவல்லி .


சபர்மதிக்கோ வியப்பு.அட பெரியம்மா நம்மை மதித்து உடன் கூப்பிடுகிறார்களா ...ஆச்சர்யம்தான் என எண்ணிக்கொண்டாள் .


காபி டிரேயை எடுத்துக்கொண்ட போது , தர்மசேகரன் எதிரே வந்தான் .ஓடி வந்தவன் போல் மூச்சிரைத்தது .

" தங்கச்சி இன்னைக்கும் மருந்து குடிச்சிட்டேன் .ஒரே கசப்பு தெரியுமா .நீ சொன்னதால குடிச்சேன் .வா..வெளியே போவோம் " சபர்மதியின் கைகளை பிடித்து இழுக்கிறான் .


" வெரிகுட்  அண்ணா , அப்படித்தான் இருக்கனும் .முதல்ல உட்காருங்க " அவனை சோபாவில் அமர வைத்தவள் " முதலில் கொஞ்சம் காபி குடிங்க " என அவனுக்கு காபி கலக்க தொடங்கினாள் .


" இல்லை சபர்மதி " அனுசூயா இடையில் வந்தாள் ."அவர் காபி குடிக்க கூடாது "என்றாள் லேசான பதட்டத்துடன் .


" ஏன் அனுசூயா ..."


" அது .....அவர் மருந்து சாப்பிடுகிறாரில்லையா ...அதனால்தான் ..."


" பத்தியமா ...ஆங்கில மருந்துதானே எடுத்துக்கொண்டிருக்கிறார் ..அதற்கு எதற்கு பத்தியம் ...எல்லாம் சாப்பிடலாம் "சபர்மதி காபி கலந்துவிட்டாள் .


அதை ஆற்ற போனவளிடம் " ஏய் ஆத்தாதே எனக்கு சூடாகத்தான் வேண்டும் " என்று கப்பை வாங்கியவன் , சோபாவில் சாய்ந்தபடி ரசித்து குடிக்க ஆரம்பித்தான் .


" தங்கச்சி வெளியே ..." மீண்டும் ஆரம்பித் தான் ." நீங்க போய் குளிச்சிட்டு வாங்க.அப்புறம் போகலாம் ".டிரேயை எடுத்துக்கொண்டு தந்தையிடம் சென்றாள் சபர்மதி .


ஆவலோடு மகளுக்காக காத்துக்கொண்டிருந்தார் தந்தை .
தன்னைப்பார்த்ததும் தாமரையாய் மலர்ந்த தந்தை முகம் பார்த்து வியந்தபடி " என்னப்பா "என்று விசாரித்தபடி காபியை கலந்தாள் .


" இல்லைம்மா நேற்று ஒருநாள் நீ வந்து கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தது மனதுக்கு நிம்மதியாக இருந்தது. இன்று கொஞ்சம் நேரமாகிவிட்டதா ..அதனால் கொஞ்சம் கவலையாக இருந்தது "


மனம் நெகிழ்ந்தது சபர்மதிக்கு.அப்பா பாவம் ,சிறிது ஆறுதலாக பேச ஆளின்றி தவித்துக்கொண்டிருக்கிறார்.இவரை பார்க்காமல். உள்ளேயே இருந்து விட நினைத்தேனே .." 

"அப்புறம் சொல்லுங்கப்பா .." என்றாள் .


"நீதான்மா சொல்ல வேண்டும் ..சொல்லு பூரணன் என்ன சொன்னார .?" ..


" அவர் ...அவர் வந்து ....எச்சில் விழுங்கியவள் , அவர் நேற்றே அவரோட பயணத்தை ஆரம்பித்துவிட்டாரப்பா .நான் அவரை நேற்று கோயம்புத்தூர் விமான நிலையம் சென்றுதான் சந்தித்தேன் .அவர் இப்போது அநேகமாக சிங்கப்பூரில் இருக்கலாம் "என முடித்தாள் .


ஒன்றுமே பேசாமல் சிறிது நேரம் அமைதியாக இருந்தார் சத்யேந்திரன் ." இப்படி வாம்மா ..." சபர்மதியை தன் அருகே அழைத்தார் .தான் அமர்ந்திருத்த சோபாவிலிருந்து எழுந்து தந்தையருகே தரையில் அமர்ந்தாள் சபர்மதி .


அவள் தலையை மெல்ல வருடியபடி " மதிம்மா என்னம்மா ஆச்சு " பரிவாக வினவினார் .


" அப்பா அன்று அவரிடம் நான் கோபமாக பேசினேனில்லையா ...அதனால் என்னை அவருக்கு பிடிக்காமல் போய் விட்டதுப்பா .பயணமாறுதல் அவருக்கு பத்து தினங்களுக்கு முன்பே தெரிந்துவிட்டது .ஆனால் நம் யாரிடமும் சொல்லாமல் சத்தமின்றி கிளம்பிவிட்டார் .இனி ஒரு வருடம் கழித்து வந்து என்னை யாரென்று கேட்க போகிறார் ..." என்று சொல்லி முடிக்கும் முன்பே அழுகை வெடித்து கிளம்ப தந்தையின் மடியில் சாய்ந்து அழ தொடங்கினாள் சபர்மதி .


அவள் தலையை வருடியபடி சிறிது நேரம் அமர்ந்திருந்தார் சத்யேந்திரன். பின் " போதும்மா எழுந்திரு போய் முகம் கழுவிக் கொண்டு வா " என்றார் கண்டிப்புடன் .


முகம் கழுவி வந்த மகளை அருகே அமர வைத்து " மதிம்மா நான் பூரணசந்திரன் அப்பாவை கொன்றவன் .சாவுக்கு காரணமானவன்  என்று தளுக்காக 
சொல்லிக்கொண்டாலும் உண்மை அதுதான் .ஆனால் அவ்வளவு தீங்கு செய்த எனக்கு ஒரு இக்கட்டு என்றதும், எனக்காக ஓடி வந்து உதவியவர்கள் பூரணசந்திரனும் அவன் தாயாரும் .அவர்களுக்கு யாருடைய மனதையும் நோகடிக்க தெரியாது .சொந்தத்திற்கு மிக மரியாதை கொடுப்பவர்கள். இதெல்லாம் உனக்கும் தெரியுமில்லையா ?" ...


ம்...என தலையாட்டியவள்" ஆமப்பா அந்த நல்ல குணத்தை கண்டு பூரணன் மேல் ஏற்பட்ட என் பிரமிப்புதான் உங்களையெல்லாம் என்னை ஏற்றுக்கொள்ள வைத்தது "


" அதேதான்மா அப்படிப்பட்டவனை நீ தவறாக நினைக்கலாமா ..?"


" மனதில் வேறொருவரை நினைத்து கொண்டிருப்பவர் என்னை அலட்சியப்படுத்துவது இயல்புதானேப்பா "

" என்னம்மா சொல்ற ..."


" ஆமப்பா ...பூரணன் பயணம் தனியாக போகவில்லை. அ...அந்த...பெண்...பெயர் என்னவோ ஸ்வாதி என்று சொன்னார்.அவளுடன்தான் செல்கிறார் "


" யார் ...பெயர் என்ன சொன்னாய் ...ஸ்வாதியா ....?



" ஆமாமா ...அவரோட டியர் ப்ரெண்டாம் ...அப்படித்தான் அவளை அறிமுகப்படுத்தினார் " மீண்டும் குரல் தழுதழுத்தது சபர்மதிக்கு .




" என்னம்மா ஸ்வாதி இல்லாமல் பூரணன் எப்படி போகமுடியும் ...கண்டிப்பாக ஸ்வாதி பூரணனின் டியர் ப்ரெண்டுதான் .இந்த திட்டத்தின் ஆணிவேரே அவள்தானே "

"அப்பா ..."


" ஆமம்மா ...நான் சொன்னேனே ...நமக்கு ஒரு மந்திரி சப்போர்ட் பண்ணுவதாக , அவரின் மகள் இந்த ஸ்வாதி தாம்மா .இந்தப்பொண்னு நம்ம பூரணன் கூட படித்த பொண்ணு .அவள் மூலமாகத்தான் அவள் தந்தையை சந்தித்து , இவ்வளவு பெரிய காரியத்தை பூரணனால் சாதிக்க முடிந்தது .இந்த வெளிநாட்டு பயணத்தில் பூரணனுக்கு உதவ போவதும் அவள்தான் ."


"அப்பா நிஜம்மாவாப்பா ..."


"ஆமம்மா ...பூரணனுக்கு உன்னோடு பேசுவதற்கு நேரமில்லாமல் இருந்திருக்கலாம் .இனி அங்கே போய் சேரவும் உன்னிடம்  போனில் பேசுவார் பாரேன் ..."


நீரின்றி வாடும் 
தொட்டிச்செடிகளென 
கலைந்து கிடந்தன 
என் காலடி சுவடுகள் 
வழிப்படுத்த பன்னீர் 
தெளிக்க வேண்டாம் 
உன் நாசியோர காற்றின் 
ஓர மூச்சில் சிறிதனுப்பு 
முழுமை பெறட்டும் 
பிறைநிலவு .



அவசர கவிதை ஒன்றை மனதினுள் எழுதிப்பார்த்துக்கொண்டாள் சபர்மதி .


பூரணசந்திரனின் போனுக்காக காத்திருக்க தொடங்கினாள் .ஆனால் அவள் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை .



                                                                             - தேவதை வருவாள்.


1 comments:

  1. yes. naan ninaithuthan. innum oru varudam avan pesave povathillai. adhharkul mathi indha veetai thalai keezhanga mattra vendum. vendam endru thooki erindapin, adhai thedi adharkaka ival thavam irupaduthane niyayam. anal thappana mudivu ehaiyum edukamal irundal saridhan. alladu meendum cinema endra pudaikuzhiku pokamal irukattum. enna seiya pokirai penne

    ReplyDelete

Blogger News

வணக்கம் தோழமைகளே , எனது " வா என் வண்ண நிலவே " கதைக்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு மிக்க நன்றி. இதோ உங்கள் முன் எனது அடுத்த கதை " வானவில் தேவதை " கறுப்பென்பது பிழையல்ல .மனமிருப்பின் வரமே என்பதனை என் முதல் கதையில் கூறியிருந்தேன். சொந்தங்கள் இல்லாத வாழ்வு வாழ்வல்ல.சந்தர்ப்ப சூழ்நிலைகளே சொந்தங்களின் பாசத்தை மறைக்கிறது என்பதனை இரண்டாவது கதையில் கூறியிருக்கிறேன் காதல் கலந்து.படித்து பாருங்கள்.
 

Blogger news

Blogroll