Pages

Powered by Blogger.

வானவில் தேவதை - 12





வேகமாக ஓடி வந்து தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குள் நுழைந்தவள் ,தனது உடமைகளை பேக்கில் அடைக்க துவங்கினாள் .கையிலிருந்த பணத்தை சரி பார்த்து கொண்டாள் .சொற்ப தொகைதான் .ஆனால் இந்த இடத்தை விட்டு போவதற்கு தாராளமாக போதும் .ஒரே பேக் ,ஒரு கைப்பை கிளம்பி கதவை திறந்தாள் .வாசலை அடைத்தபடி பூரணசந்திரன்


" அவ்வளவு சீக்கிரமா உன்னை இங்கேயிருந்து போக அனுமதிக்க மாட்டேன் "


" உங்கள் அனுமதி எனக்கு தேவையில்லை "கதவைப்பற்றியபடி இருந்த அவனது கைகளை பட்டென தட்டிவிட்டு போக எத்தனித்தாள் .


அவள் தோள்களை பற்றி உட்புறமாக தள்ளினான் .கட்டிலில் போய் விழுந்தாள் சபர்மதி .அறைக்கதவை தாழிட்டான் பூரணசந்திரன் .


" ஐந்து வருடமாக உன்னை தேடி கிடைக்காமல் ,தற்செயலாக டிவியில் பார்த்து இடமறிந்து ,ஆறு மாதமாக உன்னை அருகிலிருந்து கவனித்து மெல்ல மெல்ல இங்கே கொண்டு வந்திருக்கிறேன் .அவ்வளவு எளிதாக போக விட்டுவிடுவேனென்று நினைக்காதே "


" அப்போது சென்னையில்  எனக்கு வந்த இக்கட்டான நிலைகளுக்கெல்லாம் நீங்கள்தான் காரணமா ? "


பதில் சொல்லாது அலட்சியமாக தோள்களை குலுக்கினான் பூரணசந்திரன் .


என்ன அலட்சியம் ? இங்கே ஒருத்தி உயிர் வதை பட்டுக்கொண்டிருக்கிறாள்.இவனுக்கு அலட்சியத்தை பாரேன் .திடுமென வேகம் கொண்டு எழுந்து அவன் தோள்களை பற்ற முடிந்து இயலாமல் ,தன் இரு கைகளால் அவன் கைகளை பற்றி உலுக்க தொடங்கினாள் சபர்மதி .


" சொல்லு நீதான் செய்தாயா இதெல்லாம் ? நான் ...நான் ...எவ்வளவு துன்பப்பட்டேன் அப்போது .அன்று இரவு வீட்டில் தனியாக எந்த அளவு பயந்தேன் தெரியுமா ? ஏன் ஏனிப்படி செய்தாய் ?உனக்கு என்ன பாவம் செய்தேன் நான் ?"


" நீ உன் அக்கா பெருந்தேவி செய்த தவறுக்கெல்லாம் என்னை பிணையாக்காதே " இன்னமும் அலட்சியம் குறையவில்லை அவனிடம் .


அன்று இரவு மட்டுமா ? இரண்டு நாட்கள் அவள் எந்த அபார்ட்மெண்ட் டில் வான் நிலவாக தொட முடியாத தூரத்தில் வலம் வந்தாளோ ,அங்கேயே போன வந்த வெறிநாயெல்லாம் மேலே வந்து விழுந்து பிடுங்க வரவில்லை .அன்று நடந்தது இப்போது போல் நினைவு வர


" அன்று படியில் ஏறும்போது ஒரு பயல் மேலே வந்து மோதுகிறான் .அவனை ஒதுக்குவதற்குள் இன்னொருவன் தோளை தொடுகிறான் .எனக்கு தீ பட்டாறபோல் உடலெல்லாம் எரிந்ததே  .அதை அறிவாயா நீ ?.அது சரி நீயும் ஆண்தானே ,ஒரு பெண்ணின் வேதனையை நீ எவ்வாறு அறிவாய் .நீங்களெல்லாம் எட்டி நின்று எள்ளி நகைப்பவர்கள்தானே ? "முதலில் ஆவேசமாக ஆரம்பித்தவள் பேச்சு உள்ளம் குமுறி அழுகையில் முடிந்தது .


"ஷ் மதி என்ன இது .நான் உன்னை எவ்வளவு தைரியசாலி என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன் நீ இப்படி அழலாமா ? "அவள் தோள்களை பற்றி கட்டிலில் அமர வைத்தவன் குரலில் அலட்சியம் மறைந்து பரிவு மட்டுமே மீந்திருந்தது .

அழுகையா அவளா அழுதாள் ? .எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அழக்கூடாது என்பது சபர்மதி கொண்ட கொள்கைகளில் முதன்மையானது .".பொம்பளையா போயிட்டா எல்லாவற்றிற்கும் எளிது .எந்த மாய்மாலமும் செல்லவில்லையென்றாலும் இறுதியில் அழுதே காரியம் சாதித்து விடலாம்.இல்லை தமயந்தி ?"


தனது அண்ணன் மனைவி இப்படி ஒருநாள் கேட்டதிலிருந்து தமயந்தியின் கண்ணீர சுரப்பிகள் வற்றி விட்டன .சபர்மதியையும் பெண்பிள்ளைதான் அழக்கூடாது என சிறு வயதிலிருந்தே சொல்லி வளர்த்தாள்.எத்தனையோ வேதனைகள் விரட்டிய போதும சபர்மதி இதுவரை கண் கலங்கியது  கூட  இல்லை .இதில் பெருந்தேவிக்கு கூட குறை உண்டு .


அப்படிபட்டவளா இன்று கண் கலங்குகிறாள் ? அதுவும் தன் வாழ்வையே மாற்றிய இந்த வில்லனின் முன்பு ? தன் தோள்களை ஆதரவாக பற்றியிருந்த பூரணசந்திரனின் கைகளிலிருந்து விலகியவள் குரலில் தழுதழுப்பு மறைந்து பழைய கம்பீரம் வந்திருந்தது .


"நீங்கள் எவ்வளவுதான் தடுத்தாலும் நான் இங்கே தங்க மாட்டேன் .போயே தீருவேன் .இது என் அன்னைக்கு அநியாயம் செய்தவர்கள் இருக்குமிடம் .இங்கே என் மூச்சு காற்று கூட உலாவாது " உறுதியாக கூறினாள் .


" அடேயப்பா மரியாதை திரும்பி விட்டது போலும் " சூழ்நிலையை இலகுவாக்க முனைந்தான் பூரணன் .


" உனக்கு கோபம் வந்தால் மட்டும் பன்மை ஒருமையாகுமோ ?,மேலும் தன் கேலிக்குள் அவளை இழுத்தான் .

"பேச்சை மாற்ற வேண்டாம் .நான் இங்கே இருக்கவே மாட்டேன் .உன்னால் ஆனதை பார் " தலை நிமிர்த்தினாள் சபர்மதி .


" அதையும்தான் பார்ப்போம் ." பழைய அலட்சிய பாவத்துடன் சொல்லியபடி அறைக்கதவை திறந்து வெளியேறினான் பூரணன் .சிறிது நேரத்திலேயே அவன் கார் சோலைவனத்தை விட்டு வெளியேறியது .


அதுதான் போய்விட்டானே வெளியே போய் பார்ப்போமே .ஏதாவது ஏற்பாடு பண்ணாமல் போயிருக்க மாட்டான் என்ற எண்ணமிருந்தாலும் ,அது என்ன ஏற்பாடு என்றாவது தெரிந்தால்தானே ஏதாவது செய்யமுடியும் .மெல்ல வீட்டை விட்டு வெளியேறி தோட்டத்திற்குள் உலவினாள் .சுற்றும் முற்றும் நோட்டமிட்டாள் .எல்லா வேலையாட்களும் அவரவர் வேலையை பார்த்துக்கொண்டிருப்பது போல்தான் தோன்றியது .


தன்னை யாரும் கவனிக்கவில்லையென முடிவான பின்பு ,வாசல்புற செடிகளுக்கு நீரூற்றி கொண்டிருந்த தோட்டக்காரன் பக்கவாட்டு செடிகளுக்கு போன பிறகு மெல்ல சுற்றுச்சுவர் கதவை நோக்கி நடந்தாள் .வாசல் காவலாளி கண்ணில் படவில்லை .ஒரு சிகரெட்டிற்காக ஒதுங்கியிருக்கலாம் .
இதோ வாசலை நெருங்கி விட்டாள் . 


எங்கிருந்து வந்தனவோ அந்த நாய்கள் .மொத்தம் நான்கு .நாக்கை தொங்கவிட்டபடி கூர்பற்களை காட்டிக்கொண்டு ,இன்னும் ஒரு அடி எடுத்து வைத்தாலும் அவள் கால் சதையில் கால்கிலோவாவது பிடுங்கிவிடும் .குரைக்கவோ ,விரட்டவோ இல்லை .வெறுமனே அவளை வளையமிட்டபடி மிக சாதுவாக நின்றிருந்தன. ஆனால் காலெடுத்து வைத்தாளானால் அவை வெறி கொண்ட வேங்கையாகி விடுமென சபர்மதிக்கு நிச்சயம் தெரிந்தது .


தோல்வியோடு உள்ளே நடந்தாள் .மதிய உணவுக்கு சபர்மதி வராததால் அனுசூயாவே அவள் அறைக்கு சாப்பாடு எடுத்து வந்து தந்தாள் .வெளியேற சக்தி வேண்டுமே ,அதற்காக தட்டிலிருந்ததை சுவைக்காது விழுங்கி வைத்தாள் .


மதிய உணவுக்கு பின் வீடே அமைதியில் ஆழ்ந்திருந்தது .தோட்டத்தில் மெல்ல நடந்தபடி சிறிது நேரம்  அங்கே அங்குமிங்கும் உலாவும் மயில்களை வேடிக்கை பார்த்தாள் .கால் வலிக்கவே சிறிது நேரம் அமரலாமென எண்ணி அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்தாள் .எப்படி வெளியேறுவது ....


அவள் அமர்ந்திருத்த பெஞ்சிற்கு நேர் பின்னே மற்றொரு பெஞ்ச் போடப்பட்டிருந்தது .அந்த பெஞ்சில் ஏதோ அரவம் கேட்டது .இந்த மயில்களில் ஏதாவது ஒன்று நின்றுகொண்டிருக்கும் ,அதனை கவனியாது தன்னிலேயே மீண்டும் உழல தொடங்கினாள் .


ம்க்கும் என செறுமும் ஒரு ஆண்குரலை தொடர்ந்து " மேடம் தயவுசெய்து திரும்பி பார்த்திடாதீங்க .அந்த பக்கமே பார்த்தே பேசுங்க " என்ற ஒலியும் வந்தது .


திரும்பவில்லையென்றாலும் ஓரக்கண்ணால் அந்த ஆளை கணிக்க முயன்றபடியே "ம் " என்றாள் சபர்மதி .


" உங்களுக்கு இந்த வீட்டை விட்டு வெளியே போக வேண்டும்தானே .அதற்கு நான் உதவி செய்கிறேன் "என்றான் அவன் .


ஆமாம் ஆமாம் எப்படி? என்று பறக்க தொடங்கிய மனதை அடக்கியபடி " அப்படியென்று உங்களுக்கு யார் சொன்னது ? " பந்தாவாக வினவினாள் சபர்மதி .


" ம்....எனக்கு தெரியும் .உங்கள் நிலைமை மட்டுமல்ல என்னுடையது மற்றும் அனுசூயாவினுடையது இன்னும் சில வேலையாட்களின் நிலைமையும் இந்த வீட்டில் அப்படித்தான் ."


"என்ன சொல்கிறீர்கள் ?" நிலைமை மறந்து அவனை பார்த்து நன்கு திரும்பி அமர்ந்து கேட்டாள் .


அவன் சபர்மதிக்கு அறிமுகமானவன்தான் .நேரிடையாக இல்லையெனினும் அந்த வீட்டினுள் இரண்டொரு முறை அவள் கண்ணில் பட்டிருக்கிறான் .காலையில் அனுசூயாவுடன் பேசியபடி ஒருமுறை , அப்புறம் அந்த அவரை சந்திக்க ( அப்பா என்று மனதால் நினைக்க கூட சபர்மதிக்கு மனமில்லை ) அவுட்ஹவுஸ் போன போது வெளியே நாய்களுடன் விளையாடியபடி இருந்தான் .பூரணசந்திரனை பார்த்து கையை கூட அசைத்தானே .ஆக அவன் இந்த வீட்டில் இருப்பவன்தான் .முழுவதுமாக அவனை புறக்கணிக்க வேண்டியதில்லை என்ற முடிவுக்கு சபர்மதி வந்தாள்.


"உங்களைப்போலவேதான் என்னையும் இங்கே அடைத்து வைத்திருக்கிறார்கள் .நான் இன்றிரவு தப்பிக்க ஏற்பாடு செய்துவிட்டேன் .வெளியேற வேண்டுமானால் நீங்களும் இரவு பதினோரு மணிக்கு இதே பெஞ்சுக்கு வந்து விடுங்கள் " அவன் எழுந்து விட்டான் .


"யார் இப்படியெல்லாம் செய்கிறார்கள் ? எதற்காக ?" அவசரமாக கேட்டாள் .


" வேறு யார் எல்லாம் அந்த பூரணசந்திரன்தான் . எல்லாம் பணத்துக்காகத்தான் "என்றான்  வெறுப்புடன்


" அனுசூயா அவளையும் அழைத்து சென்று விடலாமே ? "இடை நிறுத்தி கேட்டாள சபர்மதி .


" காரியம் கெட்டு விடும் .அவள் இங்குள்ள வாழ்வுக்கு பழகிவிட்டாள் .இனி நாமே அழைத்து சென்றாலும் மீண்டும் இங்கேயே வந்து விடுவாள் .எனவே அவள் வேண்டாம் .நீங்கள் பதினோரு மணிக்கு சரியாக வந்துவிடுங்கள் " விடுவிடுவென வீட்டினுள் சென்று விட்டான் .


வீட்டை விட்டு போகப்போகிறோம் என்பதனை விட பூரணசந்திரனை முட்டாளாக்க போகிறோம் என்பதே சபர்மதிக்கு உவப்பாக இருந்தது .பொங்கும் மனதின் வெளிப்பாடு கண்ணில் தெரிந்ததோ ?


"என்ன ஏதும் விசேஷம் இருக்கிறதோ ? " அவள் கண்களை கூர்ந்தபடி கேட்டான் மாலை வந்த பூரணசந்திரன் .


" ஆஹா அதை சொல்லத்தானே காத்துக்கொண்டிருக்கிறேன் ." உதடுகளை கொஞ்சம் அதிகமாகவே இளித்து காட்டினாள் சபர்மதி .


"ம் "என்ற ஒற்றைச்சொல்லுடன் அவளைக்கடந்து சென்றவன் அவுட்ஹவுஸ் நோக்கி நடந்தான் .சிறிது நேரத்திலேயே திரும்பி வந்தவன் "மிக வருத்தத்தில் இருக்கிறார் உன் தந்தை .தந்தையென்ற எண்ணமில்லையெனினும் உடலநலம் சரியில்லாத ஒரு பெரியவர் என்ற முறையிலாவது அவரிடம் ஒரு வார்த்தை பேசக்கூடாதா ?" சிறிது தயவாகவே கேட்டான் .


தந்தையா எனக்கு யாருடா அப்பா ? இவ்வாறு மனதினுள்  எண்ணியபடி " முடியாது போய்யா " என்று தலை உயர்த்தி கூறிவிட்டு அருகில் கிடந்த ஏதோ புத்தகத்தை எடுத்து கனகாரியமாக படிக்க துவங்கினாள்


ஒரு பெருமூச்சுடன் மீண்டும் சத்யேந்திரனிடம் சென்றான் அவன் .வெகு நேரம் அவருடன் பேசிக்கொண்டிருந்துவிட்டு ,அம்சவல்லி ,அனுசூயா வையும் அவுட்ஹவுசுக்கே அழைத்து பேசினான் .


பின்னர் வீட்டினுள் , மாடியை ,வெளிப்புறம் ஒரு சுற்று வந்தான் .தோட்டக்காரன் ,சமையல்காரம்மா அனைவரிடமும் நின்று பேசினான் .ஹாலில் ஒரு ஓரம் அமர்ந்து புத்தகத்திற்குள் முகத்தை புதைத்தபடி நடப்பவைகளை கண்காணித்து கொண்டிருந்த சபர்மதியை ஒரு எச்சரிக்கை பார்வை பார்த்து விட்டு வெளியேறி விட்டான் .


இரவு உணவுக்கு பின் பத்து மணிக்கெல்லாம் வீடு சத்தம் அடங்கிவிட்டது .அனுசூயா ஏன் இந்த அடிமை வாழ்வை விரும்புகிறாள் என்ற சிந்தனையுடன் படுக்கையில் படுத்து கொண்டிருந்தாள் சபர்மதி .
வேறு போக்கிடமில்லாததால் இந்த வாழ்வே போதுமென எண்ணி விட்டாள் போலும் என தானே ஒரு முடிவுக்கு வந்து கொண்டாள் .


பதினொன்றடிக்க பத்து நிமிடங்கள் இருக்கும் போதே மெல்ல எழுந்து வாசல் கதவை திறந்து வெளியே வந்தாள் .சரியாக அந்த பெஞ்சிற்கு பதினோரு மணிக்கு வந்து விட்டாள் .மயான அமைதியுடன் இருந்த தோட்டம் சிறிது பயமுறுத்தியது .அவளை அதிகம் தவிக்க விடாமல் அடுத்த ஐந்து நிமிடங்களிலேயே அவன் வந்துவிட்டான் .


ஏதோ உயரத்திலிருந்து இறங்கி வந்தது போல் மூச்சு இரைத்துக்கொண்டிருந்தது அவனுக்கு .வா என்றபடி வேகமாக முன்னே நடக்கலானான் .என்ன இவன் பாட்டுக்கு போகிறான் அந்த நாய்கள் ...என்று எண்ணியபடி அவன் வேகத்திற்கு ஈடாக கிட்டத்தட்ட ஓடினாள் .


எங்கிருந்தோ வந்த நாய்கள் அவன் அருகில் வந்ததும் குழைந்து வாலாட்டின .ஓ..இவன்தான் நாய்களை ஏற்கெனவே பழக்கம் பண்ணி வைத்திருக்கிறானே . ஒரு பெரிய பாரம் இறங்கியது சபர்மதிக்கு .


கேட்டருகில் வாட்ச்மேன் இல்லை ."அவன் இந்த நேரம் காணாமல் போய்விடுவான் அதுதான் இந்த நேரத்தை தேர்ந்தெடுத்தேன்" அவனது குரலில் ஒரு சிறு குழந்தையின் குதூகலம் .இவனது பெயரை கேட்டுக்கொள்ளவே இல்லையே என திடீரென தோன்ற "உங்கள் பெயர் என்ன ?" எனக் கேட்டாள் சபர்மதி .


"அதெல்லாம் வெளியே போய் சொல்றேன் .இந்த கேட்ல ஏறித்தான் போகனும் .நான் முன்னால் ஏறுகிறேன் .நீ பின்னாலேயே வா " சொல்லியவன் சரசரவென கேட்டில் ஏறத்துவங்கினான் .குனிந்து தன் உடையை பார்த்து கொண்டாள் சபர்மதி .நல்லவேளை சுடிதார்தான் .


தடுமாறியபடி மெல்ல ஏறத்தொடங்கினாள் .சிறிது தூரத்திலேயே அவளுடைய குதியுயர்ந்த செருப்புகளால் மூக்குடைபட்டுவிடுமென உறுதியானதால் அங்கிருந்தபடியே செருப்புகளை கீழே உதறினாள் .கைகளும் ,கால்களும் எங்கெங்கோ உராய்ந்து எரிய தொடங்கின .பல்லை கடித்தபடி மிக கஷ்டப்பட்டு பாதி தூரம் சபர்மதி ஏறுவதற்குள் அவன் மறுபுறமாக கீழேயே இறங்கிவிட்டான் .


தரையில் நின்றபடி சீக்கிரம் சீக்கிரம் என அவளை அவசரபடுத்திக்கொண்டிருந்தான் .
உச்சியை அடைந்து காலை வீசிப்போட்டு மறுபுறம் போய் அங்கே சிறிது நிதானித்தாள் .


" ஏய் அங்கே என்ன ஜடம் மாதிரி நின்று கொண்டிருக்கிறாய் ? சட்டுபுட்டுன்னு இறங்கு " ஒரு மாதிரி உறுமல் குரலில் அதட்டினான் .சபர்மதிக்கு வயிற்றை கலக்கியது .என்ன இவ்வளவு கடினமாக பேசுகிறான் .இந்த பக்கம் இறங்குவதற்கு பதில் பேசாமல் கால்களை வீசிப்போட்டு உள்ளேயே இறங்கி வீட்டிற்குள் போய்விடலாமா ? இப்படி யோசித்தவளை வா வாவென அவசரப்படுத்தினான் .


பெருமூச்சுடன் பாதி கிணற்றில் நின்று கொண்டு ஒன்றும் செய்ய முடியாது என்றெண்ணி மீதி  தூரத்தை இறங்க தொடங்கினாள் .பாதி கதவில் இருக்கும்போது குதித்து அவளை பற்றி கீழே இழுத்து போட்டு விட்டான் .இடுப்பில் கால்களில் சிறிது அடிபட்டது சபர்மதிக்கு .


கைகளை ஊன்றி எழுந்தவளின் கைகளை பற்றி ஓடத்துவங்கினான் அவன் ." ஏய் என்ன பண்ற விடு நானே வர்றேன் " சபர்மதியின் கத்தல்களை காதில் வாங்காமல் நாயை இழுத்துக்கொண்டு ஓடுவது போல் ஓடினான் .இரண்டு வளைவுகளை தாண்டியதும் அவள் கைகளை விட்டு விட்டு சுற்றும் முற்றும் பார்த்தான் .


" யாஹூ " கைகளை உயர்த்தி கத்தினான் ."தப்பிவிட்டோம் " மீண்டும் கத்தினான் .கை கால்களெல்லாம் சிராய்ப்புகளாலும் இடுப்பிலும் காலிலும் நல்ல அடியாலும் நிற்க கூட முடியாமல் அருகிலிருந்த பாறை மேல் அமர்ந்த சபர்மதி அவனை விநோதமாக பார்த்தாள் .


எங்கே தப்பினோம் இரண்டு வளைவு தாண்டி வந்து நிற்கிறோம் .காரை எடுத்து வந்தால் வீட்டிலுள்ளோர் ஐந்தே நிமிடங்களில் அவர்களை அடைந்து விடலாமே .இவனே அவர்களை அழைப்பான் போலவே .


அடுத்த அவனது செய்கையில் அவள் அதிர்ந்தாள் .நடுரோட்டில் சம்மணம் போட்டு அமர்ந்து கொண்டான்.காற்றில் ஏதோ வரைந்தபடி யாருடனோ புரியாத மொழியில் பேச தொடங்கினான் .


சபர்மதி மண்டைக்குள் இப்போதுதான்  லேசாக விளக்கெரிந்தது .இவன் ...இவன் ...


சட்டென்று எழுந்து வந்தவன் "வா பிளைட் பிடிச்சி அமெரிக்கா போய் தப்பிச்சிக்கலாம் .அங்கே சம்யு இருக்கா .அவகிட்ட பேசிட்டேன் .நம்மளை வர சொல்றா " என தன் கைகளை நீட்டினான் .


" இல்லை ...நா ...நான் வரலை எனக்கு கா ...கால் வலிக்குது " தடுமாறினாள் சபர்மதி .


"பரவாயில்லை நான் உன்னை கூட்டிட்டு போறேன் " என்றவன் அவளது இரண்டு கைகளையும் பற்றி அவளை தரையோடு இழுத்தபடி நடக்க துவங்கினான் .


" அம்மா " என கத்தியபடி இழுபட துவங்கினாள் சபர்மதி .


அவர்களிருவர் மீதும் ஒளியை வாரி இறைத்தபடி ஒரு கார் வந்து நின்றது 


." தர்மா அவளை விடு " என்ற அதட்டலுடன் வந்த உருவத்தை பார்த்தபடி நினைவிழந்தாள் சபர்மதி .


- தேவதை வருவாள்,



3 comments:

  1. Padma aka appa uyiroda irukar adhuve periya adhirchithan sabarmatiku. 6 masama theevira kankanipil. adhuta adi. appo ava friend deepka ivan illaiya. idhu enna pudu kilaikadahi....samyu yaru. dharma yaru. vandadhu PC ya.....aha sema speed than po

    ReplyDelete

Blogger News

வணக்கம் தோழமைகளே , எனது " வா என் வண்ண நிலவே " கதைக்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு மிக்க நன்றி. இதோ உங்கள் முன் எனது அடுத்த கதை " வானவில் தேவதை " கறுப்பென்பது பிழையல்ல .மனமிருப்பின் வரமே என்பதனை என் முதல் கதையில் கூறியிருந்தேன். சொந்தங்கள் இல்லாத வாழ்வு வாழ்வல்ல.சந்தர்ப்ப சூழ்நிலைகளே சொந்தங்களின் பாசத்தை மறைக்கிறது என்பதனை இரண்டாவது கதையில் கூறியிருக்கிறேன் காதல் கலந்து.படித்து பாருங்கள்.
 

Blogger news

Blogroll