Pages

Powered by Blogger.

வானவில் தேவதை - 8




கையருகில் சரிந்து விழும் 
மேக குவியலையும் 
பச்சையணிந்த பாதைகளையும் 
நாசியிழுக்கும் பனி மூச்சினையும் 
மேனி சிலிர்க்கும் சிறு சாரலையும் 
எழுத்துருவாக்க பத்துவிரல் 
போதவில்லை எனக்கு .

அறியாத அந்த புது சூழ்நிலையில் சந்தோசமாக சிக்கி சிலிர்த்துக் கொண்டிருந்தாள் சபர்மதி .சாலையின் இருபுறமும் பசுமை காட்டியபடி அந்த கார் மென்மையாக மலை ஏறிக்கொண்டிருந்தது .

ஏதோ ஒரு பெரிய காரியம் சாதித்தது போன்ற முகபாவத்துடன் காரை கையாண்டு கொண்டிருந்தான் தீபக்குமார் .

இன்னமும் நடந்து விட்ட சம்பவங்களை நம்ப முடியவுல்லை சபர்மதியால் .நேற்று இந்நேரம் வரை இனி தன் வாழ்வு என்னவாகுமோ? என்ற பயத்துடனேயே இருந்தவளுக்கு மந்திரக்கோல் ஒன்றை சுழட்டியது போல் மாறி விட்ட தன் வாழ்வை இன்னும் நம்ப முடியவில்லை .

அன்று மென்சிரிப்புடன் எதிரில் வந்த
மர்ந்த தீபக்கை கண்டதும் அவன் தன் வாழ்வினை அரைநாளில் இவ்வாறு சரி செயது விடுவானென எண்ணவில்லை அவள் .

ஆனால் அவன் செய்தான் .
சுட்டு விரலால் மலையளப்பதை போல் ,...

"என்னம்மா ஆச்சு ?"

கிட்டத்தட்ட இரண்டு நாட களாக பகலில் மிரட்டலாலும் ,இரவில் தனிமையாலும் மிக மனம் நொந்திருந்த சபர்மதிக்கு அந்த ஆதரவான மென்குரல் லேசாக கண்ணில் நீர்த்திரையிட வைத்தது நிஜம் .

ஒரே ஒரு நொடிதான் .சட்டென தன்னை சுதாரித்துக்கொண்டு பழைய கம்பீரத்துடன் நிமிர்ந்தாள் .

"ஏதாவது இருந்தாலும் உங்களிடம ஏன் சொல்ல வேண்டும் "

"அது ...பி...சி ..."என ஏதோ இழுத்தவன் சொல்ல வந்ததை விழுங்கிவிட்டு ,"உங்கள் கதை எனக்கு ஓரளவு தெரியும்மா ...அதனை நன்கு தெளிவு படுத்திக்கொள்ளவே கேட்கிறேன் " என்றான் .

இப்போதும் சபர்மதி சொல்வதற்கில்லை என்பது போல் தலையை திருப்பிக் கொள்ள ,"பாருங்கள் இப்போது நீங்கள் இருக்கும் நிலை மிக இக்கட்டானது .இதிலிருந்து உங்களை மீட்க என் ஒருவனால்தான் முடியும் .அதனால் ப்ளீஸ் ..."என்றான் இறைஞ்சுதலாக .

"நேற்றிரவே உங்கள் வீட்டிற்கு வந்து கதவை தட்டினேன் .நீங்கள் திறக்கவில்லை .அந்த நேரத்தில் மேலும் உங்களை தொந்தரவு செய்ய விரும்பாது திரும்பி விட்டேன் "

சபர்மதி தலையை திருப்பினாளில்லை .சட்டென எழுந்தவன் ,"உங்கள் இஷ்டம் ,நானறிந்த வரை உங்களை சினிமாவில் ஒரு அயிட்டம் நடனமாட வைப்பதற்கான ஏற்பாடுகள் நடக்கிறது .அதுவே உங்கள் விருப்பமெனின் ...."தோள்களை குலுக்கியபடி நடக்க முனைந்தான் .அல்லது செல்வது போல் பாவனை செய்தானா ?....

அதனை கவனிக்கும் நிலையில் சபர்மதி இல்லை .அயிட்டம் நடனம் என்ற வார்த்தையில் ஆடிப்போயிருந்தாள் அவள் .பெருந்தேவியின் கனவுகளில் அவளை இது போல் சினிமாக்களில் ஆட வைத்து நிறைய சம்பாதிக்க வேண்டும் என்பதும் ஒன்று .

ஆனால் அதைப்பற்றி லேசாக ஒருநாள் பெருந்தேவி பேச ஆரம்பித்ததுமே பத்ரகாளியாய் மாறி ஆடித்தீர்த்து விட்டாள் சபர்மதி .
இனியொரு முறை இது போல் பேசினால் தூக்கில் தொங்கி விடப்போவதாக மிரட்டினாள் .

மட்டுமின்றி சிலநாட்கள் ஒரு வலுவான கயிற்றினை கையோடு எடுத்துக்கொண்டே அலைந்தாள் .சுவருக்கே ஆபத்து வந்துவிட்டால் சித்திரம் எங்கே வரைய என்று பெருந்தேவியும் அந்த பேச்சை விட்டுவிட்டாள் .

நகர்வது போன்ற பாவனையில் இருந்தவன் இப்போது நின்று ," உங்கள் அக்கா ஐடியா இது .பணத்தை கட்டவில்லையெனில் அவர்கள் காட்டப் போகும் ஒப்பந்தம் இதுதான் .நீங்கள் கையெழுத்து போட்டுத்தான் ஆக வேண்டும் ."என்றான் .

அவ்வளவு பதட்டத்துடன் இருந்தாலும் "உங்களுக்கு எப்படி தெரியும் ?" தீபக்குமாரை கூர்ந்தாள் சபர்மதி .

"நான் உங்கள் தொலைக்காட்சி நிறுவன நிகழ்ச்சிகள் சிலவற்றின் 
ஸ்பான்சர்களின் மேனேஜர் .அதாவது ஸ்பான்சர்களுக்கு அவர்களின் விளம்பரத்திற்கு ஆள் பிடித்து கொடுக்கும் கம்பெனி மேனேஜர் .அதனால் எனக்கு தெரியும் " சுருக்கமாக உரைத்தான் .

"அப்ப எல்லா விவரமும் உங்களுக்கே தெரிகிறதே .என்னிடம் கேட்க என்ன இருக்கு ? " இன்னமும் என் நிலை உன்னிடம் சொல்லும் எண்ணமில்லை என சொல்லாமல் சொன்னாள் சபர்மதி .

"இல்லை பணவிவரம் உங்கள் வாயால் கேட்காமல் யாரிடமும் என்னால் பேச முடியாது "

எனது பணக்கணக்கை கேட்டவுடன் மெல்ல நழுவி விட போகிறான் என மனதுக்குள்ளேயே சிறு குதூகலத்துடன் எண்ணமிட்டபடியே தனது தேவையை கூறினாள் சபர்மதி .

சிறு சலனமும் இன்றி கேட்டவன் ,"ஒரு நிமிடம"" என அவளிடம் அனுமதி வாங்கிக்கொண்டு தனது போனை வெளியே எடுத்தபடி அந்த உணவகத்தின் வாயிலுக்கு சென்றான் .

ஒரு பத்து நிமிடம் மிக தீவிரமாக கைகளை ஆட்டியபடி போனில் மெல்லிய குரலில் யாரிடமோ பேசினான் .பின்பு ...

"நீங்கள் வீட்டிற்கு போய் கிளம்பி ஆபிஸ் வாருங்கள் .நானும் வருகிறேன் .பணத்தை கொடுத்து கணக்கு முடித்து உங்களை விடுவிக்கிறேன் "

"அந்த வீடு இனி உங்களுக்கு தேவையிருக்காது .எனவே அந்த வீட்டுக்கார்ரை பார்த்து அந்த கணக்கையும் முடித்துவிடுவோம் "

"இன்றிரவு கிளம்பினால் நாளை காலை அங்கே போய் சேர்ந்து விடலாம் "

தீபக்குமார் வரிசையாக திட்டங்களை அடுக்கிக்கொண்டே செல்ல ,

என்ன அத்தனை பணத்தையும் கொடுக்க போகிறானா ?

என்ன வீட்டை காலி பண்ண வேண்டுமா ?...வரிசையாக தோன்றிய ஆச்சரியங்களுக்கிடையே ...

எல்லாம் முடித்து எங்கோ கிளம்ப வேண்டுமென்றதும் சபர்மதி விழித்துக்கொண்டாள் .

எங்கே ?என்றாள காட்டமாக .

தனது திட்டமிடல்களுக்கு சிறிது ஓய்வு கொடுத்தவன் அவளை ஆழ்ந்து நோக்கி ," நிச்சயமாக உங்கள் மானத்திற்கு பங்கம் வராத இடத்திற்கு "உறுதியளித்தான் .

அந்த உறுதிமொழியில் ஏனோ ஒரு ஆறுதல் கிடைக்கவே தலையசைத்தாள் சபர்மதி .

அவன் சொன்னது போலவே நகர்த்த முடியாத மலையாய் இருந்த அவளது பிரச்சினைகள் நம்ப முடியாமல் மணலாகி அவள் காலடியில் குவிந்தன.

அந்த மணல்மேட்டில் ஏறி நடந்தவள் இதோ ...இப்போது ...
இந்த மலைப்பாதையில் ...இயற்கையை சுவாசித்தபடி ....

அது பழனியருகே இருந்த ஒரு மலைவாசஸ்தளம் .மலையேறும் முன் பழநி மலை கண்ணில் பட்டது .தன்னிச்சையாக கைகள் கூப்பின சபர்மதிக்கு .

"வேலவா நான் இதுவரை  பட்ட துன்பங்கள் போதுமப்பா ...இனி என் மானத்திற்கு பங்கம் வராமல் என்னை காத்திடப்பா "...மனமாற வேண்டிக்கொண்டாள் .

"நீங்கள் "சோலைவனம் " போய் செட்டிலானதும் அடிக்கடி முருகனை தரிசிக்கலாம் சபர்மதி " கார் ஓட்டியபடியே சொன்னான் தீபக்குமார் .

ஏதோ அவளுக்கான வேலை இருப்பதாகவும் அதற்காகவே அவளை அங்கே கூட்டி செல்வதாகவுமே  கூறி அழைத்து வந்திருந்தான் .

இத்தனை பணத்தையும் கொடுத்து ,மேலே அவளுக்கு வேலையும் கொடுக்கும் புண்ணியவான் யாரோ ?...

அப்படி என்ன வேலையோ அது ?...

யோசனையில் இருக்கும்போதே கார் திடீரென நின்றது ."சபர்மதி கொஞ்சம் நேரம் கீழே இறங்கி நில்லுங்களேன் ப்ளீஸ் .கார் காலையிலிருந்து ஓடிக்கொண்டிருப்பதால் கொஞ்சம் ரெஸ்ட் வேணும் அதுக்கு " என்றான் தீபக்குமார் .

உண்மை கிட்டத்தட்ட பத்து மணி நேரமாக ஓடிக்கொண்டிருக்கிறது .மலையேற்றத்தின் போது அதற்கும் ஓய்வு வேண்டுமே .

காரை விட்டிறங்கினாள் சபர்மதி .
சுற்றுப்புற இயற்கை அவளை ஈர்த்தது .கார் நின்ற சாலையை ஒட்டியிருந்த சிறு பள்ளத்தாக்கு அவளை வாவென அழைத்தது .மெல்ல அதனை நோக்கி நடந்தாள் .

கார் பானெட்டுக்குள் தலையை விட்டிருந்த திபக்குமார் "சபர்மதி இந்த பக்கம் காட்டெருமைகள் தொந்தரவு ரொம்ப இருக்கும் .ஜாக்கிரதையா போய் பாருங்க .பத்து நிமிடத்தில் வந்திடுங்க " என்றான் .

போகலாமா வேண்டாமா என இரு மனதுடன் உள்ளே இறங்கி வந்த சபர்மதி ....கடவுளே ...என மூச்சை உள்ளிழுத்தாள் .கண்கள் வட்டமாக சாசர் போல் விரிந்தன .

இயற்கை அழகுக்கு ஈடு இணை கிடையாது .உள்ளே சிறிது தூரம் தள்ளி எங்கோ ஒரு சிற்றருவி இருக்ககூடும் .அதன் ஓசை மிக மெல்லியதாக கேட்டுக்கொண்டிருந்தது .அங்கிருந்து வந்த நீர் மெல்லிய நீரோடையாக ஓடிக்கொண்டிருந்தது .

பறவைகள் பலவற்றின் இனிய ஓசைகள் .ஏதேதோ காட்டு மலர்களின் கதம்ப மணம் ,அந்த நீரோடையில நீந்தியபடி இருந்த சில வெண் வாத்துகள் .ஆஹா ...என்ன அருமையான சூழல் .

தனக்கு முன் இருந்த பாரங்கள் அனைத்தும் மாயமாக மறைவதை உணர்ந்தாள் சபர்மதி .அந்த நீரோடையின் அருகேயிருந்த சிறு பாறைத்திண்டு ஒன்றின் மேல் அமர்ந்து கொண்டவள் அந்த வாத்துகளை ஆவலோடு பார்த்தாள் .

முதலில் இவளைப் பார்த்து மிரண்ட அவை , "ஹாய் " என்ற இவளது மென் கையாட்டலில் என்ன நினைத்ததோ தலையை நீருக்குள் விட்டு துழாவியபடி இருந்தது .

" அட , நான் உன்னை ஒண்ணும் பண்ண மாட்டேன்னு உனக்கு தெரியுமா ?...ம் .."  பிள்ளை மொழியில் மிழற்றினாள் அவள் .

"நான் பேசுறது உனக்கு புரியுதா செல்லம் .தலையை தலையை ஆட்டுறியே " தலையை உதறி தண்ணீரை சிதறடித்த வாத்துக்களை ஏதோ உடன்பிறப்புகள் போல பாவித்து கேட்டாள்.

பின்புறம் ஏதோ அரவம் கேட்டாற்போலிருந்தது .வாத்துக்களுடன் பேசும் மும்முரத்தில் அதனை கவனிக்கவில்லை அவள் .

சிறு பெருமூச்சொன்றை வெளியிட்டவள் " இப்படியே உங்க கூடவே ஒரு வாத்தா மாறி உங்க கூடயே இந்த ஓடையில் வாழ்ந்திடலாமான்னு இருக்கு .ம் ..ஹும் ...எங்கே ...இன்னும் காலம் என் தலையில் என்னென்ன எழுதியிருக்கோ ?"

இன்னதென விளக்க முடியா ஒரு பிளிறல் போன்ற அலறல் பின்னால் கேட்டது .திரும்பி பார்த்த சபர்மதி அலறிவிட்டாள் .

வளைந்த கொம்புகளை உடைய காட்டெருமை ஒன்று .நீ மட்டுமே என் இலக்கு என்ற பார்வையுடன் அவளை நெருங்கியது .

அதிலிருந்து தப்பிக்க வேண்டுமானால் எழுந்து ஓட வேண்டுமென மூளை சொன்னாலும் உடல் அதற்கு ஒத்துழைக்காமல் அப்படியே உட்கார்ந்திருந்தாள் .

இதோ இன்னும் இரண்டே நிமிடந்தான் நம் கதை முடிந்தது என்றெண்ணி விழிகளை இறுக்க மூடிக்கொண்டாள் .வேதனைக்குரலுடன் கீழே விழும் சத்தம் கேட்டு விழித்தாள் .

அந்த எருமைதான் .சரியாக கழுத்திலிருந்து ரத்தம் ஆறாக வடிந்து கொண்டிருந்தது .கீழே விழுந்து கால்களை உதைத்து கொண்டிருந்தது .அந்த இடமே புழுதிக்காடாகிக்கொண்டிருந்தது.

சிறிது நேரத்தில் அடங்கிவிட்டது .யாரோ சுட்டிருக்கிறார்கள் .துப்பாக்கியில் சைலன்ஸர் பொருத்த பட்டிருக்க வேண்டும் என ஊகித்தபடி சுட்ட ஆளை தேடினாள் .

ஒரு பெரிய பாறையின் பின்னிருந்து இரு நீண்ட கால்கள் வந்தன.உயரமும் வாளிப்புமான ஓர் ஆண்மகன் .தனது துப்பாக்கியை மெல்ல துடைத்தபடி வந்து , அந்த பாறையின் மீதே சாய்ந்து நின்றபடி சபர்மதியை அடிக் கண்ணால் நோட்டமிட்டான் .

சபர்மதி திகைத்து நின்றாள் .


- தேவதை வருவாள்.






4 comments:

  1. ஹாய் பத்மா ,
    wow சூப்பர்
    அத்தியாத்திற்கு அத்தியாயம் ..........மர்மம்
    அப்பா ...........ஹீரோ வரும் முன்பே ..........இவ்வளவா ?சூப்பர்

    ReplyDelete
    Replies
    1. நன்றிக்கா...இன்னும் நிறைய மர்ம முடிச்சுகள் இருக்கு. தொடர்ந்து படியுங்கள்.

      Delete
  2. enna oadma idhu. pudiyadai oru herova ...villana....nallavana kettavana. edharku inda sandipu.......pre planned meeting ah illa accidental ah..onnum puriyalapa

    ReplyDelete
    Replies
    1. சாரதாக்கா கொஞ்சம் பொறுத்துக்கோங்க.மா்மம் விலகும்

      Delete

Blogger News

வணக்கம் தோழமைகளே , எனது " வா என் வண்ண நிலவே " கதைக்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு மிக்க நன்றி. இதோ உங்கள் முன் எனது அடுத்த கதை " வானவில் தேவதை " கறுப்பென்பது பிழையல்ல .மனமிருப்பின் வரமே என்பதனை என் முதல் கதையில் கூறியிருந்தேன். சொந்தங்கள் இல்லாத வாழ்வு வாழ்வல்ல.சந்தர்ப்ப சூழ்நிலைகளே சொந்தங்களின் பாசத்தை மறைக்கிறது என்பதனை இரண்டாவது கதையில் கூறியிருக்கிறேன் காதல் கலந்து.படித்து பாருங்கள்.
 

Blogger news

Blogroll