Pages

Powered by Blogger.

வானவில் தேவதை - 21









ஓர் ஒழுங்கோடு இயங்க ஆரம்பித்திருந்தது .அந்த வீடு .தோட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டு நேர்த்தியாக வடிவமைக்க பட்டிருந்தது .


மயில்களுக்கென ஆங்காங்கே தானியங்களும் , நீரும் வைக்கப்பட்டிருந்ததால் , பூ , கனிகளை கடித்து பாழாக்காமல் தானியங்களை தின்றபடி அங்குமிங்கும் அழகாக பறந்து திரிந்தன .

அருகம்புல்லும் , செம்பருத்தியுமாக வாசலில் அமர்ந்திருந்தார் பிள்ளையார் .கார்கள் ஓட்டுனர்களால்  பளபளவென துடைக்கப்பட்டு இருந்தன .வீட்டினுள் நுழையும்போதே பத்தி வாசமோ, சாம்பிராணியோ ஒரு தெய்வீக வாசம்  வந்தது .


மூன்று மாதங்கள் இரவும் பகலுமாக இடைவிடாது உழைத்து அந்த வீட்டையும் , தொழிலையும் ஒரு நிலைக்கு கொண்டு வந்திருந்தாள் சபர் மதி .


அதோ பளிச்சென்ற மஞ்சள் காட்டன் சேலையும் , ஒற்றைப்பின்னலுமாக மாடியிலிருந்து இயங்கி வருகிறாள் .முகத் தில் குழந்தைத்தனம் மறைந்து சிறு முதிர்ச்சி.கண்களில் அலட்சியபாவம் போய் கவனம் .பேச்சில் படபடப்பு காணாமல் போய் ஓர் அழுத்தமும், ஆழமும் .


வீடு முழுவதும் ஒரு சுற்று வந்து சுத்தம் பார்த்தவள்  , கையில் காபி டிரேயை எடுத்தபடி அவுட்ஹவுஸ் சென்றாள் .சபர்மதிக்காக சத்யேந்திரன் காத்துக்கொண்டிருந்தார்.


அவர் நிலைமையில் இப்போது நல்ல முன்னேற்றம் .வசத்துக்கு வராமலிருந்த கைகள் நன்கு இயங்க தொடங்கிவிட்டன .குழறிக்கொண்டிருந த பேச்சு இப்போது தெளிவாகிவிட்டது .கால்கள்தான் இன்றும் சிறிது வசமில்லை .சக்கரநாற்காலியை தானே இயக்கிக்கொள்ளும் அளவு பழகிவிட்டிருந்தார்.


சத்யேந்திரனின் இந்த முன்னேற்றம் மருத்துவர்களுக்கே பெரிய ஆச்சரியம் .இரண்டு வருடங்களாக ஏதேதோ சிகிச்சை அளித்தும் முன்னேறாத உடல் இப்போது மூன்றே மாதங்களில் இவ்வளவு முன்னேறியது எப்படி என்று .அப்பாவுக்கு நோய் உடலில் அல்ல மனதில். அதற்கு நான்தான் மருந்து .மருந்தை கண்டதும் நோய் ஓடத்தொடங்கியது விட்டது என எண்ணிக்கொண்டாள் சபர்மதி .


தந்தையுடன் தொழில் சம்பந்தமான சில பேச்சுக்கள் பேசினாள். சில ஆலோசனைகள  கேட்டாள். சில விசயங்களுக்கு விபரங்கள் கூறியவர் சிலவற்றிற்கு பூரணசந்திரனிடம் கேட்குமாறு கூறினார் . தலையசைத்துக்கொண்டாள் சபர்மதி.


" அப்பா ராஜன் அண்ணா நேற்று போன் பண்ணியிருந்தாரப்பா.அவருக்கு கல்லூரி மிக பிடித்து விட்டதாம் .இரண்டு வருடங்களை வீணாக்காமல் நன்கு படிக்கப்போவதாக கூறினாரப்பா "


ராஜனுக்கு  தொழில்நுட்ப படிப்பு ஒன்றிற்காக மும்பையில் ஒரு பெரிய பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்தது .அங்கு படிக்க இடம் கிடைப்பதே அபூர்வம் .நான் என்ன செய்யட்டும் சபர்மதி படிக்கவா அல்லது அப்பாவின் தொழிலை கவனிக்க வேண்டுமா ...சிறு பிள்ளையாக அவள் முன் வந்து நின்றான் .


பெண்கள் பொதுவாக மனதால் மிக விரைவாக  வளர்ந்துவிடுகிறார்கள் .பதினெட்டு வயதில் ஒரு பெண்ணிற்கு இருக்கும் மனமுதிர்வு ஆணுக்கு வாய்க்க அவன் தன் முப்பது வயது வரை காத்திருக்க வேண்டியிருக்கிறது .

பெண்பிள்ளையை பெற்றெடுத்தவுடன் ஒரு  பெண்ணுக்கு தோன்றி விடும் சேமிப்பு உணர்வு , மகள்  பூப்படையும் போதுதான் ஆணுக்கு வருகிறது .



திருமணம் முடியும் இருபதுகளில் பெரும்பான்மை ஆண்கள் தாயை  முன்னிறுத்தி  யோசிப்பவர்களாக இருக்கின்றனர் .மணம் முடித்த மூன்றே மாதத்தில் அவன் மனைவி அதனை  இனம் கண்டு எளிதாக தன் புறம் திருப்பிக்கொள்கிறாள் .


தாயின் வளையத்திலிருந்து தாரத்தின் ஆளுகைக்குள் வரும் ஆண் அதனை உணரும் முன்பே ஆளுகை வட்டத்திற்குள் அமிழ தொடங்கிவிடுகிறான் .தன் சேலை முடிச்சை பெண் இறுக்கிக்கொள்கிறாள் .


சபர்மதியை  விட இரண்டு வயது பெரியவனாக இருந்தாலும் , என்ன செய்யட்டும் என வந்து நின்றவனை அன்புடன் பார்த்தாள் சபர்மதி .படிக்கும் பருவமென்பது வாழ்க்கை ஏட்டின் வசந்தகால பறவை .தனக்கு முழுமையாக கிடைக்காத அதனை  தன் சகோதரனுக்கு அளிப்பதில் சபர்மதி பெருமகிழ்ச்சி அடைந்தாள் .தொழிலை அப்பாவின் துணையுடன் தான் பார்த்துக்கொள்வதாக தைரியம் சொல்லி அண்ணனை அனுப்பி வைத்தாள் .


அப்பாவிற்கு காபி கொடுத்துவிட்டு வரும்போது வீட்டை சுற்றி வந்து தோட்டத்தையும் , நாய்களையும் கவனித்து விட்டு , காலை உணவு ,மதிய உணவு ஏற்பாடுகளை காவேரியிடம் விளக்கிவிட்டு , விவசாய சம்பந்தப்பட்ட சில விவரங்களை லேப்டாப்பில் 
தேடிக்கொண்டிருந்தாள் .


" சபர்மதி ..." அழைத்தபடி அருகில் வந்து அமர்ந்தான் தர்மசேகரன் .அவனிடத்தில் முன்பை விட இப்போது தெளிவு கூடியிருந்தது . " இன்னைக்கு வெளியே கூட் டிப்போகிறாயா "...ஆவலாக கேட்டான் .அவனுக்கு வீட்டிற்கே வந்து ஒரு மருத்துவர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார். சில நேரம் நன்கு முன்னேறி வருவது போல் தோன்றுவான் .திடீரென முன்னேற்றம் அப்படியே நின்றுவிடும் .


ஆனால் அவனிடம் வன்முறை குறைந்திருந்தது .சபர்மதி அடிக்கடி வெளியே அழைத்து போவதால் எப்போது அவள் வெளியே போனாலும் , தானும் உடன் வருவதாக அடம்பிடித்தான் .இன்றும் அப்படித்தான் கேட்டான் .


" அண்ணா நேற்றுதானே போனோம் .இனி நாளைதான் .இன்று உங்களுக்கு யோகா மாஸ்டர் வருவார் . நீங்கள் அவர் சொல்லிக்கொடுப்பதை எல்லாம் சமத்தாக இன்று செய்தால் , நாளை உங்களை வெளியே கூட்டிப்போவேன் .சரியா .இப்போ குளிக்க போங்க "


" ம் ..என்றபடி அரைமனதுடன் தர்மன் எழுந்து சென்றான் .


அனுசூயா " சபர்மதி இந்த யோகா கிளாஸ் அவருக்கு அவசிய தேவையா .?.....இதெல்லாம் அவர் புரிந்து கொள்ளும் நிலையிலில்லை .மாஸ்டர் ஒன்று சொன்னால் அவர் ஒன்று செய்கிறார் ."என்றாள் .


"செய்கிறாரில்லையா ...அப்படி ஏதாவது செய்ய வேண்டுமென்றுதான் இந்த ஏற்பாடு செய்தேன் .மாஸ்டரிடம் அண்ணனைப்பற்றி நிறைய சொல்லியிருக்கிறேன். எனவே அவர் அதற்கேற்றாற்போல்தான் சொல்லிக்கொடுப்பார். இந்த மாதிரி வகுப்பு இருக்கிறது , இதற்கு சரியாக போகவேண்டுமென அண்ணனுக்கு தோன்றுகிறது பார் .அதுவே நமக்கு வெற்றிதான் ." என்றாள் சபர்மதி .


" என்ன அனுசூயா இப்போது உனக்கு அடி கொஞ்சம் கம்மிதானே " கேலியாக கேட்பது போல் தமையனின் உடல்நிலை விசாரித்தாள் சபர்மதி .

"ஆமாம் சபர்மதி பழைய  முரட்டுத்தனம் அவரிடம் குறைந்து விட்டது .நாம் பேசுவதை சிறிது காது கொடுத்து கேட்கிறார்." என்றாள் அனுசூயா .


"குடமார்னிங் மேடம் " இருவரும் திரும்பி பார்த்தனர் .


குமாரவேல் .தர்மசேகரனின் மருத்துவர் .


" வாங்க சார் .என்ன இன்று அதிகாலையிலேயே ...?" வரவேற்றாள் சபர்மதி .


" இன்று காலையிலேயே ஒரு வேலை இங்கே .அப்படியே நம் தர்மனையும்  பார்த்து விடலாமென ...எப்படியிருக்கிறார் அவர் "


" பரவாயில்லை சார்...நல்ல முன்னேற்றம் .அனுசூயா டிபன் தயாரா என பார் .டாக்டர் இன்று நம்முடன் சாப்பிடுவார் "


இப்போது அனுசூயாவுக்கு சிறிது வீட்டு வேலை பார்க்க நேரம் கிடைக்கிறது .அவள் சென்றதும்


" இப்போ சொல்லுங்க டாக்டர் ...நீங்கள் என்னிடம் ஏதோ சொல்ல நினைத்தது போல் இருந்தது .அதனால்தான் அனுசூயாவை உள்ளே அனுப்பினேன் " என்றாள் சபர்மதி .


" ஆமாம் மேடம் ...உங்களுடன் தனியாக பேச வேண்டுமென்றுதான் நீங்கள் அலுவலகம் கிளம்பும் முன் வந்தேன் .நான் சில மருந்துகள் தர்மனுக்கு தருகிறேன் .ஆனால் என் மருந்துகளை மீறி ஏதோ தர்மனுக்குள் நடக்கிறதோ என சந்தேகப்படுகிறேன் "


" புரியவில்லை. தெளிவாக கூறுங்கள் டாக்டர் .",


" என் மருந்துக்கான நான் எதிர்பார்க்கும் மாற்றங்களை தர்மனின் உடல் எனக்கு தர வில்லை .
மூன்று மாதங்களாக இதே நிலைதான் .மருந்தில் குறையிருக்க வாய்ப்பில்லை. எதற்கும் அதனையும் சோதித்து விட்டேன் . எனக்கென்னவோ இங்கேதான் ஏதோ தவறு நடப்பதாக தோன்றுகிறது .நீங்கள் அதனை கொஞ்சம் கவனியுங்களேன் "


இது சபர்மதிக்கு பெரிய அதிர்ச்சியாக இருக்கின்றது .தர்மன் குணமாவது பிடிக்காத ஆட்களும் இந்த வீட்டில் இருக்கின்றனரா ...குழம்பினாள் சபர்மதி .


இதே யோசனையுடன் டாக்டருடன் காலை உணவை முடித்துவிட்டு , அலுவலகத்திற்கு கிளம்பும்போது , அம்சவல்லியும் வெளியே செல்ல  கிளம்பி வந்து கொண்டிருந்தாள்.அதீத மேக்கப்புடன் ...ஒரு ஐம்பத்தைந்து பெண்ணிற்குரிய அலங்காரம் எதுவும் அவளிடம் தென்படவில்லை .


முதல் நாள் வாழைத்தோப்பில் வேலை செய்யும். செல்லியம்மாள் சபர்மதியிடம் " அம்மா உங்க பெரியம்மாவை கொஞ்சம் அடக்கி வைங்க. தேவையில்லாமல் எங்கள் எல்லோரோட குடும்ப விவகாரத்தில் தலையிடுறாங்க ....வயசுக்கேற்ற குணம் இல்லை ...இதுவே தொடர்ந்ததுன்னா நாங்கெல்லாம் சும்மா இருக்க மாட்டோம் ...சொல்லிட்டேன் " என்று குற்றம் கூறியது நினைவு வந்தது .


அம்சவல்லியிடம் பேசிப்பார்ப்போமா என எண்ணி 
மெல்ல அவளை நெருங்கி " சாப்பிட்டீர்களா பெரியம்மா ...எங்கே போகிறீர்கள் ?" என்று ஆரம்பித்தாள் .


எரிக்கும் பார்வை ஒன்றை வீசியபடி " இங்கே பார் உன்னோட அலப்பறையெல்லாம் மத்தவங்ககிட்ட வச்சுக்கோ .என்கிட்ட வச்சுக்காதே " டக்டக்கென நடந்தவள் " ஏய் காரை எடு ..." டம்மென கார் கதவை அடித்து அமர்ந்தவள் கிளம்பி விட்டாள் .


" இவர்களை எப்படி வழிக்கு கொண்டு வருவது " யோசித்தபடி வந்தவளுக்கு கார் கதவை திறந்து விட்டான் தீபக்குமார் .


ஆம் ..சென்னையில் சபர்மதியை இக்கட்டிலிருந்து காத்து ,இங்கு கொண்டு வந்து சேர்த்த தீபக்குமார் தான் .அவன்தான் அவர்கள் தொழிலை பார்ப்பதற்காக பூரணசந்திரனால் நியமிக்கப்பட்டவன் .சபர்மதியின் வலது கையாக செயல்பட்டுக்கொண்டிருப்பவன் .


சபர்மதி அமர்ந்ததும் காரை ஓட்ட தொடங்கினான் .அவளுக்கு டிரைவர் ,உதவியாளர் எல்லாமே தீபக்குமார்தான் .


" இன்று மரத்தக்காளி பற்றி நெட்டில் பார்த்தேன் தீபக் .அவைகள் நமக்கு லாபம் தருமென்றே தோன்றுகிறது "


" ஆனால் அவை கொடைக்கானல் பகுதிகளில்தான் விளையும் மேடம் .நம் பகுதிகளில் ....இருக்கட்டும் ..இன்று இரவு பி.சி சார் போன் பண்ணும்போது இது பற்றி பேசுகிறேன் .நீங்களும் பேசுங்கள் .
சார் இன்று காலை கனடா சென்று விட்டார் .எனக்கு மெயில் அனுப்பியிருந்தார் .உங்களிடம் பேசியிருப்பாரில்லையா ?..."


" ம் ...பேசினார் ..." மெல்ல கூறியவள் தன் போனில் மெயில் செக் பண்ணினாள் .ஆம் அனுப்பியிருந்தான் .அதனை திறந்து பார்க்க துடித்த தன் கரங்களை அடக்கியபடி போனை அணைத்தாள்


கார் சன்னல் வழி தெரிந்த மரங்கள் மங்கலாக தெரியவும்தான் தன் கண்கள் கலங்கியபடி இருப்பதை சபர்மதி உணர்ந்தாள் .


உஷ் ...இதென்ன பலவீனம் ...தான் செய்ய வேண்டியது எவ்வளவோ உள்ளது .பூரணசந்திரன் திரும்பி வருவதற்குள் , எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்தி சாதித்து காட்ட வேண்டும் .தனக்கு தானே ஒரு இலக்கு நிர்ணயித்துக்கொண்டு நாணென நிமிர்ந்து அமர்ந்தாள் சபர்மதி .


அவள் நடக்க வேண்டிய பாதை நெளிந்து , வளைந்து , நீண்டு கொண்டே சென்றது


- தேவதை வருவாள்





0 comments:

Post a Comment

Blogger News

வணக்கம் தோழமைகளே , எனது " வா என் வண்ண நிலவே " கதைக்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு மிக்க நன்றி. இதோ உங்கள் முன் எனது அடுத்த கதை " வானவில் தேவதை " கறுப்பென்பது பிழையல்ல .மனமிருப்பின் வரமே என்பதனை என் முதல் கதையில் கூறியிருந்தேன். சொந்தங்கள் இல்லாத வாழ்வு வாழ்வல்ல.சந்தர்ப்ப சூழ்நிலைகளே சொந்தங்களின் பாசத்தை மறைக்கிறது என்பதனை இரண்டாவது கதையில் கூறியிருக்கிறேன் காதல் கலந்து.படித்து பாருங்கள்.
 

Blogger news

Blogroll