Pages

Powered by Blogger.

வானவில் தேவதை - 14


































முகம் முழுவதும் பரவசத்துடன் சத்யேந்திரனும் , நம்ப முடியாத பாவனையுடன் பூரணசந்திரனும் சபர்மதியின் அந்த வார்த்தைகளை எதிர் கொண்டனர் .

" அம்மாடி ...." என்றபடி தன்புறம் நீண்ட தகப்பனின் கரங்களிலிருந்து சிறிது ஒதுங்கி நின்றாள் சபர்மதி .அவர் முகம் பார்க்காமலேயே " இப்போதைக்கு இங்கே தங்குவதாக மட்டுமே முடிவெடுத்திருக்கிறேன் .மற்ற விசயங்களெல்லாம் பின்னால் பார்க்கலாம் " வீட்டினுள் சென்றுவிட்டாள் .


" பார்த்தாயா பூரணன் , என் பெண் எனக்கு கிடைத்து விட்டாள் ...."

" ம் ...பார்க்கலாம் மச்சான் ...நீங்கள் வாருங்கள் " அவரை மீண்டும் உள்ளே அழைத்து சென்றான் .

" ஹாய் சிஸ்டர் ..." என்ற அழைப்புடன் கை நீட்டி வந்த இளைஞன் ராஜசேகரனாகத்தான் இருக்க வேண்டும் .புன்னகையுடன் அவன் கைகளை பற்றி குலுக்கினாள் சபர்மதி .இவன் என்ன குண்டு வைத்திருக்க போகிறானோ ? என்ற எண்ணம் மனதினுள் ஓடியது .


" உன்னைப்பற்றி அப்பா நேற்று சொன்னார் .நானும் அண்ணாவும் 
பெண்பிள்ளைகள் இல்லாமல் வளர்ந்தவர்கள் .இது போல் ஒரு அழகு தங்கை இருப்பது எங்களுக்கு மிக பிடித்தமான விசயம் .இனி நாம் இருவரும்  ப்ரெண்ட்ஸ் ஓ.கே ..." என்றான் .குரலில் உற்சாகம் நிரம்பி வழிந்தது .



சிறு புன்னகையுடன் அவன் நட்பை ஏற்றுக்கொள்வதாக கூறிய சபர்மதியின் மனதினுள் ஏனோ  சிறு உறுத்தல் இருந்தது .சோபாவில் அவளருகில் அமர்ந்து தனது பள்ளி படிப்பில் ஆரம்பித்து கல்லூரி படிப்பு வரை அவளிடம் விவரிக்க தொடங்கினான் ராஜசேகர் .இடையில் அவளை பற்றிய விசாரணைகள் கொஞ்சம் .


பக்கம் பக்கமாய் இருவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதை பார்த்தபடி உள்ளே நுழைந்தான் பூரணசந்திரன் 


அவனைக்கண்டதும் ராஜசேகரனது வாய் நின்றுவிட " அப்புறமா பேசலாம் " என்றுவிட்டு மாடியேற போனான் .


" ராஜா ...நில்லு "...

" என்ன மாமா ..."

" இன்றாவது என்னோடு ஆபிஸ் வேலை பார்க்க உன்னால் வர முடியுமா ..."

" அது வந்து ...இன்னைக்கு முடியாது மாமா .எனக்கு கொஞ்சம் வேறு வேலை இருக்கிறது "

" என்ன வேலையோ ...? " நக்கல் இருந்தது பூரணனின் குரலில் ..

" வந்து சொல்றேன் ...இப்ப கிளம்பிட்டேன் " சொன்னவன் மாடியேறும் எண்ணத்தை கைவிட்டு வேகமாக வெளியே வந்து தனது பைக்கை எடுத்து கொண்டு பறந்து விட்டான் .

" வீட்டிற்குள் யாரும் சிரிச்சி பேசிட கூடாது .உங்களுக்கு பொறுக்காது .எல்லோரும் உங்களை மாதிரியே மூஞ்சியை கடுவன் பூனை மாதிரி வைத்துக்கொண்டிருக்க வேண்டுமோ ?"



பளிச்சென்று பற்கள் அனைத்தும் தெரிய சிரித்தான் பூரணன் ." என்னைப்பார்த்தால் கடுவன் பூனை மாதிரியா இருக்கிறது ."


அழகாய் சிரித்த அவன் முகத்தை காண பிடிக்காமல் எழுந்து உள்ளே செல்ல திரும்பினாள் .

அழுத்தமாக அவள் கைகளை பற்றி தடுத்தான் ."" உட்கார் உன்னிடம் சிறிது பேச வேண்டும் " என்றான் அதிகாரமாக .


" நான் பேச தயாராக இல்லை " அழுத்தம் திருத்தமாக அறிவித்து விட்டு மீண்டும் எழ போனாள் .

" இல்லை நாம் பேசுகிறோம் .உட்கார் "

" பேசுங்களேன் நான் போய்விடுகிறேன் இந்த சோபா ,அந்த போட்டோ சுற்றி எத்தனை சாமான்கள் இருக்கிறது .எல்லாவற்றுடனும் பேசுங்கள் .தலையை ஆட்டி ஆட்டி எல்லாம் கேட்கும் .எனக்கு வேலையிருக்கிறது "நடக்க தொடங்கினாள் .



" சதிஷ் யார் சபர்மதி ? உனக்காக உருகி உருகி செய்தி அனுப்பி இருக்கிறானே .
."வசதியாக சோபாவில் சாய்ந்து அமர்ந்து கொண்டு அப்பாவியாய் முகத்தை வைத்துக்கொண்டு கேள்வி எழுப்பினான் .


அவளது அறையை நோக்கி நடக்க தொடங்கியிருந்த கால்களை சதிஷ் என்ற பெயரை கேட்டவுடனேயே நிறுத்தியிருந்தாள் சபர்மதி .வேகமாக திரும்பி பார்த்தபோது அவனது கைப்பேசியை கையில் எடுத்து வைத்து கொண்டு எதையோ தீவிரமாக பார்த்துக்கொண்டிருந்தான் பூரணன் .


வேகமாக அவனருகில் சென்றவள் " என்ன அனுப்பியிருக்கிறான் காட்டுங்கள் " என போனுக்காக கையை நீட்டினாள் .


காதில் விழாதது போல் போனிற்குள்ளேயே மூழ்கி இருந்தான் ." சே ...வீட்டிற்குள்ளே வந்து விட்டாலே சிக்னல் சரியாக கிடைக்க மாட்டேங்குது " சலித்தபடி மேலும் ஏதேதோ பட்டன்களை அழுத்திக்கொண்டிருந்தான் .


தனக்கு வந்த செய்தி இவனுக்கு எப்படி தெரிந்தது ...நகத்தை கடித்தபடி யோசித்தவளுக்கு , தான் அன்று அவசரத்தில் தனது முகநூல் பக்கத்தை மூடாமல் அவனிடம் கொடுத்து விட்டது நினைவு வந்தது .அதனை அப்படியே இரண்டு நாட்களாக வைத்திருந்து தனக்கு வந்த செய்திகளையெல்லாம் படித்திருக்கிறான் .


சபர்மதிக்கு வந்த கோபத்திற்கு அப்படியே அவன் தலையில் நாலு கொட்டு வைத்து போனை பிடுங்க வேண்டும் போல் இருந்தது .ஆனால் என்ன செய்ய முடியும் உன்னால் ? பாவனையுடன் அவன் காத்திருப்பதாக தோன்ற 
இல்லை இப்போது நமக்கு காரியம்தான் முக்கியம் என தன்னை தானே அடக்கி கொண்டாள் .


மெல்ல அவனருகில் சோபாவில் அமர்ந்தவள் " பாருங்க மிஸ்டர் .சதிஷ் என்னோட நண்பர் .ரொம்ப நல்லவர் .எனக்கு நன்மை தரும் செய்திதான் கண்டிப்பாக அனுப்பியிருப்பார். அதனால் கொஞ்சம் போனை கொடுங்களேன் என்னவென்று பார்த்துவிட்டு தருகின்றேன் " மிக பணிவுடன் கேட்டாள் .


" நீ யாரிடமும் பேசினாயா சபர்மதி ? "
தலையை சுற்றி சுற்றி பார்த்தான் .


" உங்களிடம்தான் " கடுப்பை அடக்கியபடி பதிலளித்தாள் .

" இந்த மிஸ்டர் எல்லாம் போட்டு பேசினாயே ...அதுவா ? என்னிடமா ?"

" ம் " ஒற்றை வார்த்தையில் அடக்கப்பட்ட ஆத்திரம் .

" இதோ பாரம்மா கொஞ்சம் சுற்றி வளைத்தென்றாலும் நான் உனக்கு தாய்மாமா முறை வருகிறதாக்கும் .கொஞ்சம் முன்பு ராஜா என்னை எப்படி அழைத்தான் பார்த்தாயில்லையா ?..நீயும் ...."

" அப்படியெல்லாம் கூப்பிட முடியாது "
அவன் வார்த்தைகளை முடிக்கும் முன் வெட்டினாள் .


" நண்பர்கள் போல் பூரணன் என்று கூப்பிடு "  அதுதான் முடிவென்பது போல் மீண்டும் போனிற்குள் நுழைந்து விட்டான் .

வேறு வழியின்றி " பூரணன் போனை கொடுங்களேன் " என்றாள் .

" இவ்வளவு பேசியும் ஒரு சின்ன ப்ளீஸ் இல்லையே " தாடையை தடவியபடி யாரிடமோ கூறுவது போல் தொடர்ந்து போனை நோண்டியபடி கூறினான் .

பற்களை கடித்தபடி " ப்ளீஸ் " என்றாள் . "

 என்னது என்றான் காது கேளாதது போல் .நெறிபடும் பற்களுக்கிடையே மீண்டும் " ப்ளீஸ் "என்றாள் .கைகளை அசைத்து மீண்டும் சொல்லுமாறு கூறினான் .


திரும்பவும் ப்ளீஸ் ...ப்ளீஸ் .....


"ம் ....என்றபடி மீண்டும் போனை குடைய ஆரம்பிக்க பொறுமையிழந்து அவன் கையிலிருந்த போனை பறிக்க முயன்றாள் .அவள் கைக்கு அகப்படாமலிருக்க போனுடன் கைகளை அங்குமிங்கும் நகர்த்தினான் .சபர்மதியும் மேலும் போனுக்காக முயன்றாள் .

ஒரு கட்டத்தில் பூரணனின் முன் பற்களுக்கிடையே இருந்த சிறு இடைவெளி கண்களுக்கு மிக அருகே தெரிய திடுக்கிட்டு தன் நிலை ஆராய்ந்தாள் .தனது தலைக்கு மேலே உயர்த்திய கைகளில் போனுடன் பூரணன் இருக்க அந்த போனை எட்டிப்பிடிக்க முயன்றபடி கிட்டத்தட்ட அவன் மீது தனது பாதி உடம்பை படர்ந்தபடி கிடந்தாள் சபர்மதி .


அதிர்ந்து அவன் முகம் நோக்கினாள் .கண்களை சிமிட்டினான் அவன் .முகமெல்லாம் சிவக்க சட்டென அவனை விட்டு எழுந்து செல்ல முயன்றவளின் கைகளை பிடித்து இழுத்து அமர வைத்து அவள் கைகளில் போனை வைத்தான் .போனை வாங்கிக்கொண்டு திறக்க தெரியாமல் விழித்தவளின் விரல்களை தானே பற்றி திறப்பதற்கான கோட்டினை தானே வரைந்தான் .போன் ஓபன் ஆனதும் அவன் கைகளை உதறிவிட்டு போனுடன் தன் அறைக்கு நடந்தாள் சபர்மதி .


" பார்த்தியா உன் வேலை முடிந்ததும் உதறிட்டு போறியே ? " காதில் வாங்காமல் மாடியேறினாள் .

" நான் உன் அப்பாவிடம் ஒரு விவரம் கேட்டுவிட்டு வருகிறேன்.அதற்குள் பார்த்து முடி " என்று  'உன் அப்பாவிடம் 'என்பதில் அழுத்தம் கொடுத்து பூரணன் சொன்னதற்கு அடித்து பூட்டப்பட்ட கதவுதான் பதிலாக அமைந்தது .


சபர்மதி நினைத்தது போல் அவளது முகநூல் லாக் ஆகாமல் திறந்தே இருந்தது ." சே அன்று சிறிது கவனக்குறைவாக இருந்ததினால் இன்று இவனிடம் இவ்வளவு படும்படி ஆகிவிட்டது " மனதிற்குள் புலம்பியபடி சதிஷின் செய்தியை படித்தாள் .


சபரமதியின் நிலைமைக்கு வருத்தம் தெரிவித்திருந்தான் .தன்னிடம் ஒன்றும் கூறாமல் மறைத்ததற்கு கோபித்திருந்தான் .முன்பே சொல்லியிருந்தால் ஏதாவது செய்ய முயன்றிருப்பேனென கூறியிருந்தான் .இப்போது அவள் பத்திரமாக இருப்பதற்கு மகிழ்ச்சி தெரிவித்தவன் ஒரு படப்பிடிப்பிற்காக பெங்களூர் வந்திருப்பதாகவும் ,படப்பிடிப்பு முடிந்ததும் கட்டாயம் அவளை வந்து சந்திப்பதாகவும் கூறியிருந்தான் .


நல்ல நண்பன் ...தனக்குள் மெச்சிக்கொண்டவள் ஞாபகமாக தனது முகநூல் கணக்கை லாக் செய்தாள் .தற்செயலாக அவளது விரல்கள் ' போட்டோஸ் ' போல்டரில் பட. படபடவென பல போட்டோக்கள் விரிந்தன


.பூரணனின் பல போட்டோக்கள். ஏதேதோ விழாக்களில் எடுத்தவை .ஏதோ அவார்டெல்லாம் வாங்கியிருந்தான் .நிறைய கருத்தரங்குகளில் பேசியிருந்தான் .இரண்டு முறை ஒரு அமைச்சரை கூட சந்தித்திருந்தான்


.இவை எல்லாவற்றையும் விட சபர்மதியை உறுத்திய ஒரு விசயம் அவனுடன் நிறைய படங்களில் ஒரு பெண் இருந்தாள் .
கூட்டத்தோடாயினும் சரி .தனிமையாயினும் சரி .அவனுடன் உரசியபடி .என்னுடையவன் என்று சொல்லாமல் சொல்லுவதை போல .


.சபர்மதிக்கு எரிச்சலாக வந்தது .எதற்கு என்ற காரணம் தெரியாதது வேறு அவளுக்கு கடுப்பாக இருந்தது .எவனும் எவளுடனும் ஊர் சுற்றுகிறான் எனக்கென்ன வந்தது .உதட்டை சுழித்து கொண்டாள்.

கதவை தட்டும் ஓசை கேட்டது. அவனாகத்தான் இருக்கும் .வேகமாக சென்று கதவை திறந்த வேகத்தில் போனையும் கிட்டதட்ட அவன் மீது வீசினாள் .


" கடவுளே இந்த போன் ஐம்பதாயிரம் வரைக்கும் ஆனதும்மா .இப்படி தூக்கி போடுகிறாயே நியாயமா ? ஆனால் ஏன் ? உன நண்பன் இவ்வளவு கோபம் வரும்படி என்ன செய்தி அனுப்பியிருந்தான ?"


" ஏன் உங்களுக்கு தெரியாதோ ?"


" அவன் செய்தி அனுப்பியது உனக்கும்மா .எனக்கு எப்படி தெரியும் ?" அப்பாவியாக வினவினான் .


" ப்ராடு ...எல்லாவற்றையும் படித்துவிட்டு ....நான்தான் என் கணக்கை மூட மறந்து விட்டேன் .உடனே நீங்கள் எல்லாவற்றையும் படிப்பதா ? ஒரு பெரிய மனிதன் செய்யும் வேலையா இது ?" படபடத்தாள் .


" பெரிய மனிதனா ? அது யார் ? அப்படி யாரும் இங்கு இருக்கிறார்களா மதி ?" அவனது செல்ல அழைப்பில் திணறிப்போனாள் சபர்மதி .

" மதி " அவள் அன்னை அழைக்கும் பெயர் .அதுவும் மிக நல்ல மனநிலையில் இருக்கும் போதுதான் அவ்வாறு அழைப்பாள் .அதை இவன் ஏன் ? ......


" என் பெயர் சபர்மதி " என்றாள் எடுப்பாக ..

அதை காதில் வாங்காமல் "  யார் பெரிய மனிதன் எனக்கேட்டேனே ...."என்றான் .

" அதுதான் அவார்டெல்லாம் வாங்கி குவித்த , அமைச்சரிடமெல்லாம் பேசிய, கையோடு ஒரு அழகான செகரட்டரியோடவே சுற்றிக்கொண்டிருக்கும் அந்த ஆள்தான் ..."

" ஓ...நாம் இருவரும் ஒரே படகில் பயணித்து கொண்டிருக்கிறோம் " என்றான் புன்னகையுடன் .

புரியாமல் பார்த்தவளிடம் ," we are sailing in the same boat " என்றான் புருவம் உயர்த்தி .

நாக்கை கடித்து கொண்டாள் சபர்மதி .அவன் மீது குற்றம் சுமத்திவிட்டு , தானே அதனையே ....

" சாரி ..." ஒற்றை வார்த்தை கூறிவிட்டு முகத்தை திருப்பிக்கொண்டாள் .

" பார் சபர்மதி ...என ஆரம்பித்த பூரணசந்திரன் குரலில் விளையாட்டுத்தனம் அடியோடு மறைந்திருந்தது .

" நீ இங்கேயே இருக்கப்போவதாக சொன்னது குறித்து மிகுந்த சந்தோசம் .நான் அம்சவல்லி அக்கா எனக்கு உடன்பிறந்தவரில்லை .ஒன்று விட்ட அக்காதான் .மச்சானின் உடல்நிலை கெட்டதும் , பிள்ளைகள் யாரும் சரியில்லாததால் வீடு ,தொழில் என எல்லா பொறுப்புகளையும் என்னிடம் ஒப்படைத்திருக்கிறார் உன் தந்தை ."


முகம் சுழித்தாள் சபர்மதி இந்த இடத்தில் .தந்தையாம் ...அவளை கூர்ந்து கவனித்தபடியே தொடர்ந்தான் பூரணன் .


" எனக்கு ஏற்கெனவே நிறைய தொழில்கள் ..என் வீட்டில் அம்மா மற்றும் தங்கை .அப்பா தவறிவிட்டார் .தங்கை திருமணம் முடிந்து மும்பையில் செட்டிலாகி விட்டாள் .அம்மாவுக்கும் சிறிது சுகவீனம் உண்டு .நான் என் வீட்டையும் ,தொழிலையும் பார்த்து இங்கேயும் இரண்டையும் பார்ப்பதென்றால் கடினமாக இருக்கிறது .தொழில் பரவாயில்லை என்னுடையதுடன் சேர்த்து பார்த்து விடுவேன்.ஆனால் வீடு ...அதனை இனி மேல் நீதான் பார்த்துக்கொள்ள வேண்டும் " முடித்தான் ...


" ஏனோ " என்றாள் அலட்சியமாக ...

" இந்த வீட்டில் நிறைய குளறுபடி இருக்கிறது சபர்மதி .அதையெல்லாம் உன் போன்ற ஒரு பொறுப்பான பெண்ணால்தான் சரி செய்ய முடியும் " பொறுமையாக விளக்கினான் .


" ஏன் இந்த குடும்ப தலைவி என்ன ஆனார்கள் ? தடித்தடியாக இரண்டு ஆம்பளை பசங்க ...கோடி கோடியாக சம்பாதித்த தலைவர் ...இவுங்களுக்கெல்லாம் என்னவாம் ..?


" சபர்மதி. உன் தந்தையின் நிலை உனக்கு தெரியும் .தர்மனின் நிலையை அருகிருந்து அனுபவித்தவள் நீ ...உனக்கு நான் சொல்ல தேவையில்லை .ராஜாவை அதிகம் கவனிக்க
வேண்டியிருக்கிறது ....அவன் பச்சைமண் போலிருக்கிறான் .


அம்சா அக்கா சின்ன வயதிலிருந்தே செல்லமாக வளர்ந்தவர்கள் .பொறுப்புகளை ஏற்க தெரியாது .திருமணத்திற்கு பின் சத்யன் மச்சானும் அவர்களுக்கு பொறுப்புணர்த்த தவறிவிட்டார் .அவர்கள் குழந்தை போல் ...நல்லது கெட்டது தெரியாது .... அதனால் ..."


" ஓஹோ இந்தக்குடும்பத்தில் உடம்பு கெட்டவரும் ,மனது கெட்டவரும் ,குழந்தைகளும் ,பச்சை மண் மனிதர்களுமாக இருப்பர் .அவர்களுக்காக நான் என் சிறு வயது ரணங்களை மறந்துவிட்டு உடனிருந்து சேவை செய்ய வேண்டுமோ ....?"

"சபர்மதி பார்த்து பேசு ...." அதட்டினான் பூரணன் .


" நீங்கள் சொல்வது சரிதான் மிஸ்டர் பூரணன் ...இந்த வீட்டில் யாருமே சரியில்லை .எதுவுமே சரியில்லை ....எதெல்லாம் சரியில்லை ,யாரெல்லாம் சரியில்லை என்பதும் எனக்கு தெரியும் .நான் இங்கு வந்த நான்கு நாட்களுக்குள் எல்லாவற்றையும் கணித்து விட்டேன் இதே போல் போனால் இந்த குடும்பம் இன்னும் இரண்டு வருடங்களில் இருக்குமிடம் தெரியாமல் போய்விடும் "

" இப்போது நான் என்ன செய்யப்போகிறேன் தெரியுமா ? " சர்ரென்ற சத்தத்துடன் ஒரு நாற்காலியை இழுத்து போட்டாள் .அதில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தாள்


." அப்படி இந்த குடும்பம் ஒன்றுமில்லாமல் போகப்போவதை ஆனந்தமாக அருகிலிருந்து பார்க்க போகிறேன் .அதனால் அடுப்படியில் என் அன்னை உகுத்த வியர்வை துளிகளுக்கு சாமரம் வீச போகிறேன் என் அன்னையை கதற வைத்த இந்த குடும்பம் தடமின்றி கரைந்ததும் நான் என் வேலையை பார்த்துக்கொண்டு போய்விடுவேன் "
திமிராக அறிவித்தாள் சபர்மதி .


கண் சிமிட்டாமல் சில நொடிகள் அவளையே பார்த்த பூரணசந்திரன் திடீரென தலையை சரித்து உரத்த குரலில் சிரிக்க தொடங்கினான் .

ஆத்திரத்துடன் நாற்காலியை பின்னுக்கு தள்ளி எழுந்தவள் " போதும் நிறுத்துய்யா ...இப்போ எதற்கு இப்படி சிரிக்கிற ?  " என்றாள் .

"ஏகப்பட்ட சீரியல்களை பார்த்து நடித்ததால் வந்த விளையாட்டுத்தனம்  இது .மதிம்மா இது சீரியல் இல்லைடா கண்ணா ...வாழ்க்கை .." என்றான் சிரிப்பினூடே .


" விளையாட்டா ...பார்க்கின்றாயா ...இந்த குடும்பத்தை ஒரே வருடத்தில் உருத்தெரியாமல் அழித்து காணபிக்கிறேன் சேலன்ஞ் "ஆவேசமாக கைகளை நீட்டுகிறாள் சபர்மதி .

" ம்..இதனை ஒருவேளை  சபர்மதி செய்தாலும் செய்வாள் .ஆனால் பொறுமையின் சிகரம் தமயந்தியின் மகள் ஒருபோதும் செய்ய மாட்டாள் "

" ஓ அப்படி செய்து காட்டி விட்டாளென்றால் ...."

" முடிந்தால் ....என்று ஆரம்பித்த பூரணசந்திரன் முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு அவளை நெருங்கினான் .

அவன் முன்னே வர வர பின்னால் நகர்ந்தபடி சென்ற சபர்மதி நாற்காலியில் விழ ,அவள் இருபுறமும் தன் கைகளை அழுத்தமாக ஊன்றி அவள் முகத்திற்கு வெகு அருகே தனது முகத்தை கொண்டு சென்றவன் முத்தமிடுபவன் போல் உதடுகளை குவிக்க வேண்டாமென அலறி முகத்தை மூடிக்கொண்டாள் சபர்மதி .

அவள் கைகளை மெல்ல விலக்கியவன் தன் மூச்சுக்காற்றால் அவள் கன்னத்தை வருடியபடி " செய்து பார் " என்று தனது முந்தைய வாக்கியத்தை முடித்து விட்டு அறையை விட்டு வெளியேறினான் .



- தேவதை வருவாள்





1 comments:

  1. sabarmathi ennama ippadi sunamiyaka marivitaye. ellaraiyum azhithuvitu meendum chinnathirai nokki payanapada pokiraya. nee thamayanthi sathyan in pen enral inda motha veedu sothaiyun un control il kondu va. avargalai un mun kaikatti nikka vai. neeyinri oru anuvum asaiyadhu enru nirupi.nee aala piranthaval, aakka piranthaval. azhika alla penne

    ReplyDelete

Blogger News

வணக்கம் தோழமைகளே , எனது " வா என் வண்ண நிலவே " கதைக்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு மிக்க நன்றி. இதோ உங்கள் முன் எனது அடுத்த கதை " வானவில் தேவதை " கறுப்பென்பது பிழையல்ல .மனமிருப்பின் வரமே என்பதனை என் முதல் கதையில் கூறியிருந்தேன். சொந்தங்கள் இல்லாத வாழ்வு வாழ்வல்ல.சந்தர்ப்ப சூழ்நிலைகளே சொந்தங்களின் பாசத்தை மறைக்கிறது என்பதனை இரண்டாவது கதையில் கூறியிருக்கிறேன் காதல் கலந்து.படித்து பாருங்கள்.
 

Blogger news

Blogroll