Pages

Powered by Blogger.

கிராமத்து பொங்கல்

 கிராமத்து பொங்கல் 




_________________________
"பூக்கிண்ணம் முடிந்ததா ...அடுத்து மயில் ."அழகாய் புள்ளிகள் வைத்து லாவகமாய் கோடிழுக்கத்தொடங்கினாள் பூந்தளிர் .தன் கைகளில் படிந்த வண்ணங்கள் போகுமா ...இதனால் எதுவும் இன்பெக்சன் வருமோ என்ற சிறு கவலையுடன் மயிலுக்கு வண்ணம் பூச தயாரானாள் கவின்மலர் .

சென்னையில் மருத்துவ கல்லூரியில் கடைசி வருடம் படிக்கிறாள் கவின்மலர் .கிராமத்தில் அருகிலிருந்த கல்லாரியில் முதல் வருடம் படிக்கிறாள் பூந்தளிர் .கவினமலரின் அப்பாவின் தங்கை மகள் பூந்தளிர் .

கவின்மலருக்கு ஆறு வயதிருக்கும் போது சென்னை சென்றவர்கள் .இப்போது பதினாறு வருடம் கழித்து சொந்த ஊருக்கு வந்துள்ளனர் .பக்கா சிட்டி கேர்ள் ஆகி விட்டாள் கவின்மலர் .கிராமத்து வெகுளித்தனத்துடன் பேசும் பூந்தளிரை அவளுக்கு மிகவும் பிடித்து தோழிகளாகி விட்டனர் .

கிராமத்தில் பொங்கல் கொண்டாட வந்துள்ளது கவின்மலர் குடும்பம் .
கிராமத்து பொங்கலின் ஓவ்வொரு நொடியையும் அனுபவத்து ரசித்துக் கொண்டிருந்தாள் கவின்மலர் .

கோலம் முடித்து எழுந்தனர் இருவரும் .தெருவை திரும்பி பார்த்தாள கவின்மலர் .பொங்கல்பானைகளாலும் ,மயில்களாலும் ,மான்களாலும் ,வித விதமான பூக்களாலும் வண்ண வண்ணமாய் நிறைந்திருந்தது வீதி .இடையில் நெளிவு கோலங்கள் .இந்த நெளிவு கோலத்தின் சூட்சும்ம் இன்னும் கவின்மலருக்கு வரவில்லை .பூந்தளிரோ அதுவே எளிமை என்றாள் .

தனது கைப்பேசியை எடுத்து வந்து கோலங்களை படமெடுத்தாள் கவின்மலர .முகநூலில் போட வேண்டுமே .அவள் படமெடுப்பதை அருகில் வந்து ஆவென பார்க்கிறாள் பூங்காவனம் .மாமா கதிரேசனின் பண்ணையில் வேலை பார்ப்பவள்

புன்னகைத்தபடி அவளையும் போட்டோ எடுத்து ,அவளிடம் காட்டினாள் .ஒரே சந்தோசமாக அவற்றை பார்த்தாள் பூங்காவனம் .
கவி அம்மாவின் அழைப்பு .உள்ளே திரும்பியவள் பூங்காவனம் தயங்கி நிற்பதை கண்டு ,"என்ன "என்றாள் .

"அம்மா நீங்க டாக்டரம்மாவாமே" !என்றாள் பூங்காவனம் .புன்னகைத்து தலையசைத்தாள் கவின்மலர் .

"என் தங்கச்சியை செக் பண்றீகளா அவா மாசமா இருக்கா "என்றாள் .

"ஓ பண்றேனே ..நீ அவுங்களை கூட்டிட்டு வா "சொல்லியபடி நடந்தாள் .
காலை உணவின் பின் பூங்காவனத்தின் தங்கை மருதாயியை பரிசோதித்தாள் மருதாயிடம் ."எங்கம்மா செக்கப் பண்றீங்க "என கேட்டாள் .

"புள்ள உண்டான உடன் மதுர போயி செக்கப் பண்ணேன் .இனி வலி வந்தவுடனதான் .அங்க கவர்ன்மெண்ட் ஆசுபத்திரி போகனும் "என்றாள் மருதாயி .

கவின்மலர் அதிர்ந்தாள் ."தப்பும்மா ஒவ்வொரு மாசமும் தவறாம செக்கப் பண்ணன்னும் "என்று அதற்கான அவசியங்களை எடுத்துரைத்தாள் .
தனது கையிலிருந்த விட்டமின் மாத்திரைகளை கொடுத்தாள் .

ஸ்டெதஸ்கோப்பை கழுத்திலிருந்து சுழற்றியபடி உள்ளே செல்ல திரும்பிய போது உள்ளிருந்து வந்த உருவத்தின் மேல் நன்றாக மோதிக்கொண்டாள் .

அப்பா நெற்றி லேசாக தடித்து விட்டது .இதென்ன தோளா இரும்பு உலக்கையா என முணுமுணுத்தபடி நிமிர்ந்தால் கண்கள் சிவக்க அவளை முறைத்தபடி நின்றிருந்தான் கதிரவன் .

பூந்தளிரின் அண்ணன் .அவள் மாமன் மகன் .அக்ரி படித்து விட்டு அப்பாவுக்கு துணையாக விவசாயம் பார்த்து கொண்டிருக்கிறான் .
அந்த கிராமத்தில் முதன் முறையாக இயற்கை விவசாயத்தை அறிமுக படுத்தி அதனை வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருக்கிறான் .

"உன் வெள்ளை கோட் உன் கண்ணை மறைக்குதா ?"வெட்டுவது போல் பார்த்தபடி கேட்டான் .

குழம்பியபடி "புரியலை அத்தான்" என்றாள் கவின்மலர் .

"இயற்கையை மறந்தவங்களுக்கு அதை நினைவூட்டி வெற்றி பெற்றுட்டேன்"என்றான்

கவிக்கு மண்டை வலித்தது ."என்னத்தான் ...."என்றாள் .

"உயர்ந்த நம் அறிவு அடுத்தவர் ஏற ஏணியாக்கப்பட வேண்டும் "என்றான் .
கவிக்கு அழுகை வரும் போல் இருந்தது ."சத்தியமா புரியலத்தான்" என்றாள் .

மீண்டும் ஏதோ சொல்ல வாயெடுத்தவன் தோள்களை குலுக்கியபடி செல்ல முயன்றான் .

"அத்தான் புரியாம பேசிட்டு நீங்க பாட்டுக்கு போனா எப்படி ? "என்றாள் கவின்மலர் .

"புரியும் மலர் உனக்கு ஒரு நாள் புரியும் .அப்ப நீயாகவே என்னை தேடி வருவாய் ."என்றுவிட்டு சென்றுவிட்டான் .

வந்ததிலிருந்து இப்படித்தான் புரியாத பார்வையும் ,புதிரான பேச்சுமாகவே வளைய வருகிறான் .
அந்த புரியாத மொழிக்கு பதில் தேட விழைகிறாள் அவனிடத்தில் கவின்மலர்.

மாடியறையில் தாயும் தந்தையும் மெல்லிய குரலில் பேசுவது கேட்டது "கமலி ,நம்ம கவி நேத்துல இருந்து ரொம்ப பிரஷ்ஷா தெரியுறாளே"0 என்றார் மதியழகன் அவள் அப்பா .

திடுக்கென்றது கமலவேணிக்கு ."என்ன ப்ரெஷ் ,அந்த ஹாஸ்பிடல் டென்சன் இல்லாமல் இருக்காள்ல அதான் "என்றாள் அவள் .

"என்னடி ஊருக்கு கிளம்பும் ஐடியா இல்லையா ? "என்றாள் மகளிடம் தனியே .

தாயை விநோதமாக பார்த்த கவின்மலர்" என்னம்மா பொங்கலுக்காகதானே வந்தோம் ,பொங்கல் முடியட்டும் பார்ப்போம"் .என்றாள் .

உண்மை கவின்மலர் இப்போது உடனே ஊருக்கு போக விரும்பவில்லை .காரணம் ...நேற்று நடந்தது நினைவில் வந்து இந்த மார்கழி குளிரிலும் உடல் வேர்த்தது .

நேற்றிரவு மல்லிகை பந்தலடியில் சர சர சத்தம் கேட்டு பயந்து ஓடியவள் தங்கிய இடம் கதிரவனின் தோள்கள் .பாம்பை மறந்து தேக்கை சுற்றிய பூங்கொடியானாள் .

சிறு ஆராய்ச்சி பார்வையுடன்
அவளை விலக்கி நிறுத்தியவன் அவள் கண்ணுக்குள் ஊடுறுவியபடி தன் ஆட்காட்டி விரலால் அவள் மூக்கு நுனியை செல்லமாக தட்டி விட்டு போய்விட்டான் .

நினைக்கும்போதெல்லாம் நெஞ்சம் படபடக்கிறது கவின்மலருக்கு .

பகல் முழுவதும் வயல் வரப்பு தோப்பு என சுற்றி திரிந்தனர் கவின்மலரும் பூந்தளிரும் .தென்னந்தோப்பில்
பண்ணையாள் வெட்டி வெட்டி தர இளநீரை குடித்தனர் .சிறிது நேரத்தில் அடிவயிறு அழுத்த இயற்கை அழைப்பிற்கான இடத்தை தேடினாள் கவின்மலர் .

ஒரு புதர் மறைவை காட்டினாள் பூந்தளிர் .அதன் பின் சென்றவள் அதிர்ந்தாள் .கால் வைக்க இடமில்லாமல் மனித கழிவுகளால் நிரம்பியிருந்தது அந்த இடம் .

"இங்கயா நீங்கெல்லாம் போறீங்க" வேதனையுடன் கேட்டாள் .

"என்னண்ணி ரொம்ப அசிங்கமா இருக்கேன்னு பாக்கறீங்களா?.இதென்ன நம்ம வீட்டு பாத்ரூமா ?பொது இடம் அப்படித்தான இருக்கும் .கண்ணை மூடிக்கிட்டு போயிட்டு வந்திடுங்க" என்றாள் பூந்தளிர் .

மனமும் உடலும் அருவெறுக்க பாரமிறக்கினாள் கவின்மலர் .

இரவு மொட்டை மாடியில் நின்றபடி மல்லிகை பந்தலை பார்த்த போது கதிரவன் வாசம் நாசியருகில் வீசியது .

கண் மூடி அதனை சுவாசிக்கையில் திடீரென மல்லிகை மணம் மறைந்து வீசத்தொடங்கியது அந்த நாற்றம் .அந்த நாற்றம் இங்கு வர காரணிகள் இல்லை .அது தன் நாசியிலேயே தங்கி விட்டதோ ,அநிச்சையாக மூக்கை பொத்திக்கொண்டாள்.

திடீரென கார் செட்டருகே ஒரு உருவம் பதுங்கி பதுங்கி செல்ல கண்டு வேகமாக கீழிறங்கி சென்றாள் .

குனிந்து ஏதோ எடுத்து கொண்டிருந்த அவ்வுருவம் முகத்தில் விழுந்த வெளிச்சத்தில் வெலவெலத்து திரும்பியது .

அஞ்சலை .வீட்டு வேலை செய்யும் பெண் .என்னங்கம்மா என்றவாறு தன் கையை பின்னால் மறைத்தாள் .
தனது போன் டார்ச்சை அவள் கைகளில் திருப்பியபடி என்ன அது ? என்ன மறைக்கிற?என அதட்டினாள் கவின்மலர் .

அசட்டுத்தனமாக தலையை சொறிந்தபடி கையை நீட்டினாள் அஞ்சலை .

வீட்டு வேலை மற்றும் கார் செட்டில் உபயோகித்து விட்டு தூக்கியெறுந்த பழைய துணிகள் .

"இதை எதுக்கு எடுத்து வைத்திருக்கிற ? "என்றாள் கவின்மலர் .

"என்னம்மா தெரியாத மாதிரி கேட்குறீங்க ? எல்லாம் அந்த நாளுக்குத்தான்" என்றாள் அஞ்சலை .
"என்னது "அதிர்ந்தாள் கவின்மலர் .அதெற்கெல்லாம் இதை உபயோகிக்க கூடாது ".அதுக்கெல்லாம் நாப்கின் தான் யூஸ் பண்ணனும் "என்றாள் .

"எதும்மா இந்த டிவிலெல்லாம் காட்டுறாங்களே அதுவா ?அதெல்லாம் கொள்ளை விலை சொல்றாங்கம்மா ..எங்களுக்கெல்லாம் கட்டுபடியாகுமா ?"என்றாள் அஞ்சலை .

"ஓ...சரி ஆனா நீங்க இந்த அழுக்கு துணியெல்லாம் யூஸ் பண்ணக்கூடாது .நல்ல சுத்தமான் துணிகளை யூஸ் பண்ணுங்க" என்றாள் கவின்மலர் .

"அட போங்கம்மா நீங்க வேற சிரிப்பு காட்டிக்கிட்டு ...இதுக்குன்னு ஜவுளிக்கடைல போயி கிழிச்சா வாங்கிட்டு வருவாங்க தள்ளுங்கம்மா "என்றபடி போய்விட்டாள் அஞ்சலை .

செய்வதறியாது நின்றாள் கவின்மலர் .சுத்தமான நாப்கின்கள் உபயோகித்தாலே அந்த நாட்களில் சருமம் படும் வேதனை சொல்ல முடியாது .இது போன்ற கழிவு துணிகள் பயன்படுத்தினால் ....நினைத்து பார்க்கவே பயங்கரமாக இருந்தது அவளுக்கு .

அன்று இரவு தனது அத்தை பாக்கியலட்சுமியிடம் வேலை செய்யும் பெண்களின் அறியாமையை கூறி அதை நீக்க என்ன வழியென்று கேட்டுக்கொண்டிருந்தாள் .

"என்ன மருமகப்பொண்ணு என்ன?" கேட்டபடி உள்ளே வந்தார் கதிரேசன் .

"மாமா நம்ம கிட்ட வேலை பார்க்கிற பொண்ணுங்களை நாமதான பாத்துக்கனும் .இவுங்களுக்கெல்லாம் ,பொது கழிப்பறை ,நாம் கட்டிக்கொடுக்கலாமே "என்றாள் கவின்மலர் .

"கட்டுறது பெரிசில்லம்மா ,அதை அவுங்க உபயோகிக்கனுமே ,மேலும் நீ பாக்கியத்துட்ட சொன்ன எல்லா விசயங்களையும் கேட்டுக்கிட்டுதான் இருந்தேன் .எந்தவொரு செயலையும் நாம் ஆரம்பிப்பது எளிது .அதை அவர்கள் தொடர வேண்டுமல்லவா ? "என்றார் கதிரேசன் .

வாஸ்தவம்தானே என்று பட்டது கவின்மலருக்கு .

நகங்களை கடித்தபடி யோசித்தவளின் விரல்கள் தட்டி விட பட்டன தாயின் கரங்களால் ."ஒரு டாக்டர் செய்யுற வேலையா நீ செய்யுறது ?"என்றாள் கமலவேணி அவள் நகம் கடிப்பதை .

"இல்லம்மா ஒரு டாக்டர் செய்யுற வேலையை இனித்தான் செய்யப்போறேன்" என்றவள் தேடி சென்ற இடம் கதிரவன் .

"அத்தான் இங்க இருக்கிற கிராமத்து பெண்கள் அனைவருக்கும் தகுந்த ஆலோசனை சொல்ல ஒரு பெண் டாக்டராலதான் முடியும் .நீங்க ஏன் அதற்கு ஏற்பாடு பண்ணக்கூடாது ?"என்றாள் .

கண்களில் சிறு கவனத்துடன் "எல்லாம் பண்ணியாச்சு .வந்த பெண் டாக்டர்கள் ஒரு மாதம் கூட தாக்கு பிடிப்பதில்லை .எல்லாம் நோகாத பட்டணத்து வாழ்வையே விரும்புகின்றனர் "என்றான் .

உடனே ஆட்சேபித்தாள் கவின்மலர் "அவர்களை குறை சொல்லாதீர்களத்தான் .நூற்றுக்கு தொண்ணூறு பர்சன்ட் டாக்டர்கள் கை நிறைய வருமானம் பார்த்தால்தான் படிப்பு கடனை அடைக்க முடியும் .அவர்களுக்கான வளமான எதிர்காலத்தை சிட்டிதான் கொடுக்கிறது" என்றாள் .

"பின்னே இது போன்ற கிராமங்களின் கதி ...."என்று நிறுத்தினான் கதிரவன் .
கண்களை மூடி யோசித்தாள் கவின்மலர் .சூடான ஆண் வாடை காற்றொன்று கன்னம் தீண்ட கண் திறந்தாள் .

அவள் முகமருகே மிக அருகே குனிந்திருந்த கதிரவன்" நீ இருக்கியா ....இங்கேயே கடைசி வரை "என்றான் .

நிமிர்ந்து அவன் விழிகளை பார்த்த கவின்மலர் ஏதோ சுழலுக்குள் சிக்கியது போல் உணர்ந்தாள்.ஆனால் உயிரை எடுக்கும் சுழலல்ல.உயிரை உருக்கும் சுழல் .

எத்தனை நேரம் அப்படி நின்றார்களோ ?"கவி" ...கமலவேணியின் குரல் .

கனவு மின்னும் கண்களுடன் தள்ளாடி வந்த மகளை கண்டிப்புடன் நோக்கினாள் அன்னை .

"காரை ரெடி பண்ண சொல்லிட்டேன் .இப்பவே ஊருக்கு கிளம்புறோம் " என்றாள் உறுதியாக .

"நாளை பொங்கல் முடியட்டும்மா ...எல்லோரும் ஒன்றாகவே போகலாம் "என்றாள் கவின்மலர் .

இரவெல்லாம் விழித்திருந்து பூந்தளிருடன் இணைந்து கோலம் போட்டாள் .அதிகாலை குளித்து பட்டு கட்டி தாத்தா ,பாட்டி ,அத்தை ,மாமாவிடம் ஆசீர்வாதம் பெற்றாள் .

கதிரவனின் விழுங்கும் பார்வையை ஏற்றபடி பொங்கல் பொங்குகையில் குலவை போட்டு (போட முயற்சித்து )
சிறு பிள்ளைகளோடு சேர்ந்து பொங்கலோ பொங்கல் என கூவினாள் .

பாட்டி அனைவருக்கும் பொங்கலை தட்டில் வைத்து கொடுத்து கொண்டிருக்கும் போது ,மதியழகன் குடும்பம் பெட்டியோடு வந்து ஊருக்கு கிளம்புவதாக அறிவித்தது .

கேள்வியாய் நோக்கிய கதிரவன் கண்களை சந்திக்க மறுத்தாள் கவின்மலர் .

காலில் விழுந்த பேத்தியை உச்சி மோந்த பாட்டி "கண்ணு நான் என்னென்னவோ நினைச்சேன்டா"
என கலங்கினாள் .

"அப்படியே நினைப்பை கன்டினியு பண்ணிக்கிட்டிருங்க பாட்டி .மூணே மாசம் என் படி ப்பை முடிச்சுட்டு டிகிரி வாங்கிட்டு ஓடி வந்திடுவேன் .மாமா எனக்காக கிளினிக் ஒண்ணு நான் வரும்போது ரெடியா இருக்கணும"் என்றாள் கவின்மலர் .

கதிரவனை ஓரப்பார்வை பார்த்து யாருமறியாமல் கண் சிமிட்டினாள் .

பொங்கி வைத்த பொங்கலின் வெல்ல மணம் வீடு முழுவதும் நிறைந்தது .

நாகரீக ஆசை காட்டி மதியழகனை சென்னைக்கு அழைத்து சென்று அங்கேயே இறுத்தி விட்ட கமலவேணி ,கணவனின் கை பற்றியபடி அந்த வீட்டை விட்டு வெளியேறுகையில் ,"காலம் எல்லாவற்றுக்கும் பதில் சொல்லும்மா "என்ற மாமியாரின் வார்த்தைகளை நெஞ்சுக்குள் மீட் கொண்டாள் .

திடீரென பாட்டியின் காலில் விழுந்து கதறும் தாயை புரியாமல் பார்க்கிறாள் கவின்மலர் .

புரிதலுக்காய் கதிரவனை நோக்க நான் சொல்கிறேன் ,நான் இருக்கிறேன் ,நான் பார்த்துக்கொள்கிறேன்,நான் தாங்கிக்கொள்கிறேன் என பல பொருள் படும் ஒற்றை பார்வையால் கவின்மலர் மீது வருடுகிறான் கதிரவன்

.



0 comments:

Post a Comment

Blogger News

வணக்கம் தோழமைகளே , எனது " வா என் வண்ண நிலவே " கதைக்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு மிக்க நன்றி. இதோ உங்கள் முன் எனது அடுத்த கதை " வானவில் தேவதை " கறுப்பென்பது பிழையல்ல .மனமிருப்பின் வரமே என்பதனை என் முதல் கதையில் கூறியிருந்தேன். சொந்தங்கள் இல்லாத வாழ்வு வாழ்வல்ல.சந்தர்ப்ப சூழ்நிலைகளே சொந்தங்களின் பாசத்தை மறைக்கிறது என்பதனை இரண்டாவது கதையில் கூறியிருக்கிறேன் காதல் கலந்து.படித்து பாருங்கள்.
 

Blogger news

Blogroll