Pages

Powered by Blogger.

வானவில் தேவதை- 24







" சபர்மதி ..." அனுசூயாவின் குரலில் நிறைய நடுக்கம் இருந்தது .


"என்ன ....", லேசான அதட்டல் கலந்தே ஒலித்தது சபர்மதியின் குரல் .....


" இது....இது அவருடைய அலமாரியில் கிடைத்தது ...."ப்ரௌன் கலர் கவர் போட்ட ஒரு டைரியை நீட்டினாள் .


" டைரி போல் தெரிகிறதே. அண்ணனோடதா ..." ஆமாமென தலையசைத்தாள் .


" அதை ஏன் எடுத்தாய் ...? சும்மா இருக்க மாட்டாயா ...? " கோபமாக கேட்டாள் சபர்மதி .


" இல்லை அன்று டாக்டர் இவருக்கு எதனால் இந்த பாதிப்பு ஏற்பட்டது என்று தெரிந்தால் இன்னும் விரைவாக குணமாக்கலாமென்று கூறினாரில்லையா ? அதனால் ..."


" அண்ணன் அலமாரியில் துப்பறிந்தாயாக்கும் ..." நக்கலுடன் கேட்டாள் சபர்மதி .


" அப்படி இல்லை ..."என்ற போது அனுசூயாவின் குரல் குறைந்ததிலேயே அப்படித்தான் என்பது தெரிந்து போனது .


" இதில் இருக்கின்ற  விபரங்கள் நமக்கு உதவுமென்று நினைக்கிறேன் .டைரியின் பின்னால் ஒரு கடிதமும் இருக்கிறது .
படித்து பார ..." ஏனோ ஒரு வறண்ட குரலில் கூறி விட்டு சென்று விட்டாள் .



டைரியை முழுவதும் வாசித்ததும் அனுசூயா மேல் சிறு பரிதாபம் தோன்றியது சபர்மதிக்கு .இவள் என்னென்னவோ மனதில் நினைத்திருக்கிறாளே ...இப்போது கதை வேறு பாதையில் போகிறதே ...


சபர்மதி ஊகித்தது போல் அந்த டைரியில் இருந்தது , ஒரு காதல் கதைதான் .தர்மனின் கல்லூரிக்காதல் ...சம்யுக்தா ...அவள்தான் தர்மனின் காதலி .


டைரியின் பக்கங்கள் முழுவதும் அவர்கள் இருவரின் காதலால் நனைந்து நைந்திருந்தது .கிட்டத்தட்ட ஒரு வருடம் ...கல்லூரி இறுதி ஆண்டு முழுவதும் காதல் நதியில் பயணித்திருந்தனர் .


கட்டுப்பாடற்ற அவர்கள் காதலின் சில பக்கங்கள் அந்த டைரியையே சிவக்க வைத்திருந்தன .இருமனம் இணைந்த பின் சாஸ்திர , சம்பிரதாயங்கள் எதற்கென்ற மிக்கக்கக.....உயர்ந்த கொள்கை ஒன்று வைத்திருந்தன அந்த ஜோடிகள் ....எனவே ....மனம் போன போக்கு ....

சை ...எரிச்சலுற்று சில பக்கங்களை 
படிக்காமலேயே திருப்பினாள் சபர்மதி .

அவ்வளவு ஆழமான அந்தக்காதல் கல்லூரி இறுதியில் இருவருக்குமே அமெரிக்காவில் கிடைத்த வேலையில் பிரிந்தது .சம்யுக்தாவை அமெரிக்க மோகம் இழுக்க , சொந்த ஊர் , தொழிலை விட்டு வர முடியாதென தர்மன் கூற ... பிரிவு என்ற முடிவை எளிதாக எடுத்துவிட்டு அமெரிக்கா பறந்தாள் சம்யுக்தா .


இதனை டைரியின் இறுதியில் வைத்திருந்த கடிதம் சொல்லியது .


அதாவது தனது முடிவை நேரில் சொல்லும் நாகரீகம் கூட அவளுக்கு இல்லை .நான்கு வரியில் கிறுக்கி தர்மனிடம் சேர்த்து விட்டு பறந்துவிட்டாள் .

ஆனால் தர்மனால் அவ்வளவு எளிதில் அவளை மறக்க முடியவில்லை .இதனை டைரியின் இறுதி பக்கங்கள் தெரிவித்தன .கடைசி முறையாக அவளிடம் பேசிப்பார்க்க போவதாக டைரியில் பதிந்து விட்டு சென்ற தர்மன் , அந்த விபத்தில் சிக்கியிருக்கிறான் .அதன் விளைவாகத்தான் இந்த மனப்பிறழ்வு ....


விபத்து ஒன்றும் கவலைப்படும்படி பெரியது இல்லை. ஆனால் அவனது மனவெறுமைக்கு விபத்தை விட , காதல் பிரிவே காரணமாயிருக்குமென சபர்மதிக்கு தோன்றியது .


டைரியின் உள்ளே சம்யுக்தாவின் போட்டோவும் இருந்தது .சந்தேகமின்றி அழகான பெண் .எத்தனை அற்புதமான கண்கள் .இந்த கண்கள் இப்படி துரோகம் செய்யுமா ? நம்பமுடியவில்லை சபர்மதியால் .


கண்முன் ஆதாரமாக தர்மன் இல்லையெனில் இப்பெண் ஒரு காதல் துரோகியென யார் சொல்லியிருந்தாலும் சபர்மதி நம்பியிருக்க மாட்டாள் .

பாவம் அனுசூயா இதையெல்லாம் எப்படி ஜீரணம் செய்தாளோ ? தனக்கே இப்படி வலிக்கிறதே .அவளுக்கு ....?



கண்டிப்பாக தன் வலிகளை விழுங்கிக்கொண்டு தர்மனின் உடல்நலத்திற்காகவே இதையெல்லாம் செய்து கொண்டிருப்பாள் .இந்த பாசத்திற்கான எதிரொலி அந்த பேதைப்பெண்ணிற்கு கிடைக்குமா ?
வேதனையுடன் எண்ணமிட்டாள் சபர்மதி .



ஏனெனில் தர்மனுடன் விட்டை விட்டு வெளியேறுவதற்காக சபர்மதி சென்ற போது கூட , அவளை சாலையில் நிறுத்திவிட்டு ...சம்யுக்தா. ...அமெரிக்கா ...போக வேண்டும் என தர்மன் ஏதோ பிதற்றிய ஞாபகம் இருக்கிறது.


மனம் பாதிப்படைந்திருக்கும் இந்த நிலையிலும் அவன் மனதில் அந்த சம்யுக்தா இருக்கிறாளே ...குணமடைந்த பின் அவளை தவிர வேறு யாரும் அவன் நினைவில் இருக்க மாட்டார்கள் போலவே ...பாவம் அனுசூயா .


கண்ணில் விழுந்த தூசியை 
எடுக்கையில் 
தொண்டையில் உருளுது 
நெருப்பு பந்து 
துப்பவும் வழியின்றி 
விழுங்கவும் திறனின்றி 
கனவு வரிகளில் 
மட்டுமே 
ஒற்றெழுத்து பதிக்கிறாள் 
பேதை ஒருத்தி


அனுசூயாவிற்கான கவிதை வரிகள் சபர்மதிக்குள் .


" ஏய் சபர்மதி எத்தனை தடவை சாப்பிட கூப்பிடுவது .என்ன பண்ற ...?" மிரட்டியபடி உள்ளே வந்தார் அம்சவல்லி .


" இதோ வந்துட்டேன்மா ....ஐயோ ஏம்மா டிபன் கையிலேயே கொண்டு வந்தீங்க ?...நான் கீழே வரமாட்டேனா ? "


" ஆமாமா வருவாய் கிளம்ப ஐந்து நிமிடத்திற்கு முன்னால் வந்து அரைகுறையாக வாயில் அள்ளிப்போட்டுக்கொண்டு கிளம்புவாய் ...ஒழுங்காக சாப்பிடக்கூட இல்லாமல் என்ன பெரிய வேலை ...அதென்னது கையில் ....கொடு அதை ..சாப்பிடு முதலில் ..."


டிபன் தட்டை கையில் வாங்கிக்கொண்டு மௌனமாக தர்மனின் டைரியை தாயிடம் நீட்டினாள் சபர்மதி .

சாப்பிட்டு முடித்து கை கழுவியவள் " என்னம்மா ..படித்தீர்களா ...?" என்றாள் .


" ம் ...இப்போது என்னம்மா செய்வது ? குழந்தை முகத்துடன் அம்சவல்லி கேட்ட போது , அக்கா குழந்தை மாதிரி ...என்று பூரணசந்திரன் கூறியது நினைவு வந்தது சபர்மதிக்கு ..


" நடந்து முடிந்ததற்கு நாம் என்னம்மா செய்ய முடியும் ? டாக்டரிடம் அண்ணனின் முன் கதையை சொல்ல வேண்டியதுதான் .இப்போதைக்கு அதுதான் நம்மால் செய்ய முடியும் .அண்ணன் பூரண குணமடையட்டும் ...பிறகு மற்றவற்றை பார்க்கலாம் ...நான் இன்றே டாக்டரிடம் பேசி விடுகிறேன் .நீங்கள் கவலைப்படாமல் இருங்கள் " சபர்மதி வேலைக்கு கிளம்பினாள் .


அப்பாவிடம் சொல்லிக்கொண்டு வெளியே வந்து காரில் ஏறியதும் அவள் செல் ஒலித்தது .


" பி.சி ..சாராகத்தான் இருக்கும் .எடுத்து பேசுங்கள் மேடம் .இப்போதுதான் என்னிடம் பேசினார் " என்றான் தீபக்குமார் .


நெஞ்சம் படபடக்க போனை ஆன் செய்தாள் " ஹலோ ...."
வெளிநாட்டிற்கு சென்றதிலிருந்து பலமுறை அவளுடன் போனில் பேசியிருக்கிறான் பூரணன் .


இருப்பினும் ஒவ்வொரு முறையும் அவன் முதல் ஹலோவில் ' பூவானம் ஒன்று உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை பாயும் ' உணர்வில் உடல் சிலிர்க்கிறாள் .வெறும் ஒரு வார்த்தையில் இத்தனை காதலை பொதிக்க முடியுமா ..?


கண் மூடி அவன் ஹலோவை உணர்ந்து கொண்டிருந்தவளை "என்ன சரியா ? " என்ற அவனின் குரல் நினைவிற்கு கொணர்ந்தது .
" எ...என்ன ...ச...சரி ...?"


" என்ன மேடம் என் குரல் கேட்கவும் கனவுலகிற்கு சென்று விட்டீர்களா ?",
உல்லாசம் ஒலித்தது பூரணன் குரலில் ...


விரைவாக தன்னை மீட்டுக்கொண்டவள் " என்னவென்று சொல்லுங்கள் ..எனக்கு நிறைய வேலையிருக்கிறது " என்றாள் .


" தீபக் இருக்கிறானில்லையா ..." மீண்டும் சிரித்தான் பூரணன் .பின் " பாரு சபர்மதி தோப்பு கை விட்டு போய்விட்டதால் அந்த முத்தையா வெறியில் இருக்கிறான் .எனவே நீ கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் .பாதுகாப்பு ஏற்பாடுகள் சில தீபக்கிடம் கூறியிருக்கிறேன் .அதன்படி நடந்து கொள் .அப்புறம் அன்று அந்த முத்தையாவிடம் வந்து பாருன்னு பேசினியாமே ...தீபக் சொன்னான் .."


" எனக்கு ரொம்ப பெருமையாக இருந்தது சபர்மதி ." என்றபோது பூரணன் குரல் குறைந்து குழைந்தது .சபர்மதி இறகின்றி வானத்தில் மிதந்தாள் .மனதிற்கினியவன் பெருமையோடு பாராட்டும்போது தனது பெண்மைக்கு அர்த்தம் காண்கிறாள் ஒவ்வொரு பெண்ணும் அது ...இன்று சாம்பார் சூப்பர் என்ற சாதாரண பாராட்டாக இருந்தால் கூட போதும் .மகாராணியாய் தன்னை உணரதொடங்குகிறாள் .


அந்த உணர்வை அணுஅணுவாய் அனுபவித்துக்கொண்டிருந்த சபர்மதி ஒரு ஹாரன் ஓசையில் தரையிறங்கினாள் 


.உதட்டில் ஒரு எந்திரத்தனத்தை பொருத்திக்கொண்டு ,
" நான் என்ன பண்ணினேன் .எல்லாம் நீங்கள்தான் .நீங்க சொன்னதை நான் செய்தேன் .இதில் பெருமைப்பட என்ன இருக்கிறது " மந்திரித்து விட்டது போல் கூறினாள் .


பெருமளவு அது உண்மையும் கூட .உலகம் முழுவதும் சுற்றிக்கொண்டே இங்கே தனது தொழிலையும் , சத்யேந்திரனின் தொழிலையும் எளிதாக கவனித்தான் பூரணசந்திரன்.அவன் வாய் மொழிந்ததைத்தான் சபர்மதி செய்து கொண்டிருந்தாள் பொம்மை போல் .


ஒரு நிமிடம் மௌனமாக இருந்தவன் " என்ன சொன்னாய் ...?" என்றான் .


" இல்லை ..நீங்கள் சொன்னதை நான் ...."


" அதில்லை அதற்கு முன்  சொன்னாயே ..."


" எல்லாம் நீங்கள்தான் ...." சொல்லிவிட்டு நாக்கை கடித்து கொண்டாள் .


" ம்...இதை மறக்காமலிருந்தால் ...சரி ..." பெருமூச்சு விட்டான் பூரணன் .


மனபாரத்தை மறைத்தபடி " வேறெதுவும் இருக்கிறதா ..." என்றாள் சபர்மதி .


" மனம் நிறைய இருக்கிறது ஏதேதோ எண்ணங்கள் ....ஆனால் ஏன் இப்போதெல்லாம் உன் போன் இரவு ஸ்விட்ச் ஆப் ஆகி விடுகிறது ..."


" சார்ஜ் இல்லாததால் இருக்கும் ...இப்போது வைக்கிறேன் "


" இன்று இரவு சார்ஜ் இருக்குமா ..."


பதில் பேசாமல் தொடர்பை துண்டித்தாள் சபர்மதி .பின் மனக்கலக்கம் தெரியாமலிருக்க சாலையில் எதிர்ப்புறம்  செல்லும் மரங்களை எண்ண தொடங்கினாள் .
கூடவே சோலைவனத்தில் தன் நாட்களையும் .


இதோ ஒவ்வொரு பொறுப்பாக முடித்து வருகிறாள் .தர்மன் மனம் தெளிந்து விட்டால் , தொழிலை அவனிடம் ஒப்படைத்து விடலாம் .அம்சவல்லியின் இந்த பெரிய மாற்றமதான் சபர்மதி எதிர்பார்க்காத ஒன்றாக இருந்தது .அந்த அன்புக்கொடியைத்தான் எப்படி அறுக்கப்போகிறாளோ தெரியவில்லை .


பிறகு ...பூரணனின் வெற்றியை தூர இருந்து உறுதி படுத்திக்கொண்டு அவள் கிளம்ப வேண்டியதுதான் .


இரு பெரிய கண்ணீர சொட்டு அவள் கைகளில் பட்டு தெறித்தது .


                                          - தேவதை வருவாள்




0 comments:

Post a Comment

Blogger News

வணக்கம் தோழமைகளே , எனது " வா என் வண்ண நிலவே " கதைக்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு மிக்க நன்றி. இதோ உங்கள் முன் எனது அடுத்த கதை " வானவில் தேவதை " கறுப்பென்பது பிழையல்ல .மனமிருப்பின் வரமே என்பதனை என் முதல் கதையில் கூறியிருந்தேன். சொந்தங்கள் இல்லாத வாழ்வு வாழ்வல்ல.சந்தர்ப்ப சூழ்நிலைகளே சொந்தங்களின் பாசத்தை மறைக்கிறது என்பதனை இரண்டாவது கதையில் கூறியிருக்கிறேன் காதல் கலந்து.படித்து பாருங்கள்.
 

Blogger news

Blogroll