Pages

Powered by Blogger.

முழுமையான நிலா

முழுமையான நிலா 


இந்த வருடம் மார்கழி குளிர் அதிகம்தான் .வைதேகிக்கு குளிர் ஆகாது .கம்பளியை அவளுக்கு இழுத்து போர்த்தி விட்டு ,பால்பாக்கெட்டிற்காக கதவை திறந்த போது அந்த பெண் அறிமுக புன்னகை தந்தாள் .

எதிர் பிளாட்டுக்கு வந்திருக்கிறாள் .ஒரு வாரமாகிறது .ஏதோ கம்பெனியில் வேலை போல. பெயர்  ஜீவபாலா .பதிலுக்கு புன்னகைக்கிறார் சத்தியானந்தம் .

"ஆன்ட்டிக்கு எப்படி இருக்கு அங்க்கிள் "

"பரவாயில்லைம்மா ...நைட் நல்லா தூங்கிட்டா "

"நான் வேணும்னா காபி போட்டு தரவா ...?"

"வேணாம்மா ...நான் காபி நல்லாவே போடுவேன் "

"சரி அங்கிள் "உள்ளே போய்விட்டாள் .
பாலை சுட வைத்து விட்டு தூளை காபி மேக்கரில் போட்ட போது வைதேகி எழுந்து வந்துவிட்டாள் .

"என்னங்க என்னை எழுப்பியிருக்க கூடாதா ...?"

நேத்து நைட் ஒரு மணி வரைக்கும் மூச்சு விட முடியாம கஷ்டப்பட்டுட்டு இருந்த .இவ்வளவு காலைல எழுந்திரிச்சி வரணுமா ...? போய் பல் விளக்கிட்டு வா .நான் காபி கலந்து வைக்கிறேன் ."

வைதேகியை தள்ளாத குறையாய் உள்ளே தள்ளினார் சத்தியானந்தம் .

முகம் கழுவி வந்து அமர்ந்தவளிடம் காபியையும் இரண்டு பிஸ்கெட்டுகளையும் தட்டில் வைத்து கொடுத்து விட்டு தனக்கும் எடுத்துக்கொண்டார் .

காபியை உறிஞ்சிய வைதேகியின் கண்கள் கலங்கின ."இப்படி வயதான காலத்தில் தனியா கஷ்டப்படனும்னு நம்ம தலைல எழுதியிருக்கே " புலம்பினாள் .

சத்தியானந்தத்திற்கும் வருத்தம்தான் .ஆனால் அதனை காட்டிக்கொள்ளாமல் ,"என்னது தனியா கஷ்டப்படுறியா ?நானெல்லாம் உனக்கு மனுசனா தெரியலையா ?..."கிண்டல் பேசி நிலைமையை சமாளிக்க முயன்றார் .

அவர் பேச்சு காதிலேறாமல் உச்சு கொட்டியபடி  வெறுப்பாய்  அமர்ந்திருந்த மனைவியை கண்டவர் மெதுவாக அவளருகே அமர்ந்து அவள் கையை மிருதுவாக பற்றியபடி ,"என்னடா இப்ப நமக்கு என்ன பிரச்சினை .பணமோ ,குணமோ எதில்குறைவிருக்கு நமக்கு .சொல்லப்போனால் அம்மா ,அப்பா ,சகோதர சகோதரிகள் என சுருங்கி கிடந்த நம் இளமைப்பருவம் இப்போதுதான் நரை முடிகளோடு நமக்கே நமக்கென்று விரிந்து கிடக்கிறது .

அதை ஆனந்தமாய் அனுபவிக்காமல் இப்படி அழுது வடியலாமா ..?..ம் ...வா மெல்ல வாக்கிங் போயிட்டு வருவோம் .வர்ற  சனிக்கிழமை காதலர்தினம் வருதாம் .இத்தனை வருடந்தில் என்றாவது அதை கொண்டாடி இருக்கிறோமா ...?

சோகம் போய் செல்லமாக முறைக்க தொடங்கினாள் வைதேகி .,"கிழவனுக்கு ஆசைய பாரு .."

"ஏன் இருக்க கூடாதா ...?இத்தனை வருடமா ஒரு கல்யாண நாளை கூடா நிம்மதியா கொண்டாடியதில்லை .இந்த வருடம் காதலரதினம் நாம் கொண்டாடுறோம் "

"நீ என்னை காதலிக்கிறதானே "கேட்டுவிட்டு சோபா குஷனால் வைதேகியிடம் அடி வாங்கினார் .

"உள்ள வரலாமா ..?" குரலை கேட்டு அவசரமாக விளையாட்டை நிறுத்தினர் அந்த வயோதிக காதலர்கள் .

கல்மிசமில்லா அவர்கள் காதலை கண்டுகொண்ட குறும்பின் அறிகுறி உள்ளே வந்த ஜீவபாலா விழிகளில் .

இருவருக்குமே சிறிது வெட்கமாகி விட்டது .அவசரமாக எழுந்த சத்தியானந்தம் "வாம்மா ...நீங்க பேசிக்கிட்டு இருங்க "கிச்சனுக்குள் மறைந்தார் .

வைதகியின் அருகே அமரந்த ஜீவபாலா ,"நைட் நல்லா தூங்குனீங்களா ஆன்ட்டி "என்றாள் .

ம் ...தலையசைத்தபடி அவளை ஆவலாய் அருகமர்த்திக்கொண்டீள் வைதேகி .

ஜீவபாலாவுக்கு ஒரு கப் காபியுடன் வந்தார் சத்தியானந்தம் .ஒரு வாய் காபி பருகிய ஜீவபாலா "அங்கிள் சான்சே இல்லை .என்ன அருமையான காபி .என்னைக்காவது நான் காபி போடுறேன்னு சென்னா ,சரின்னு சொல்லிடாதீங்க .அது உங்களுக்கு நீங்களே செய்ற துரோகம் "என்க 
தனை மறந்து சிரித்தனர் தம்பதிகள் .

முன்தினம் இரவு சுவாசிக்கும் இன்ஹேலர் தீர்ந்து விட கடை அருகிலிருந்தாலும் ,மூச்சு விட சிரம்ப்பட்டுக்கொண்டிருந்த மனைவியை தனியாக விட்டு செல்ல முடியாமல் வாசலுக்கும் உள்ளுக்குமாக சத்தியானந்தம் தவித்து கொண்டிருந்தார் .

எதிர் ப்ளாட்டிலிருந்து கவனித்த ஜீவபாலா தான் பார்த்து கொள்வதாக கூறவே ,அவளிடம் வைதேகியை  விட்டுவிட்டு மெடிக்கலுக்கு போய் வாங்கி வந்தார் .
பிறகும் வைதேகி நன்றாக மூச்சு விட்டு சிறிது நார்மலாகும் வரை உடனிருந்து ,வெந்நீர் வைத்து கொடுத்து இதமாக கை கால்களை அழுத்தி விட்டு என வைதேகி தூங்கும் வரை அருகிருந்து உதவி விட்டுத்தான் சென்றாள் .

கைகளை பற்றியபடி கண்கள் பளபளக்க பேசிக்கொண்டிருந்த பெண்களை நிறைவாய் பார்த்தபடி அலுவலகம் கிளம்பினார் சத்தியானந்தம் .

இரண்டு நாட்களாகவே வாழ்க்கை ஒரு வித நிறைவோடு செல்வதாக தோன்றியது சத்தியானந்தத்திற்கு .இரண்டே நாட்களில் அந்த அளவு அவர்கள் இருவருடனும் ஒட்டிக்கொண்டாள் ஜீவபாலா .

அன்று அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வந்த சத்தியானந்தத்திற்கு சிறிது கவலையை முகத்தில் தேக்கியபடி அமர்ந்திருந்த மனைவியை கண்டதும் "என்னம்மா "என்றார் .

"நாம் வேண்டாமென்று ஒதுக்கிய விசயங்களை பற்றி கவலைப்படாதேன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன் "என்றார் சிறிது கனிவு கலந்த கண்டிப்புடன் .

"இல்லங்க நான் அதை பத்தி யோசிக்கலை ,நம்ம ஜீவா பத்திதான் ,பாவங்க ரொம்ப நல்ல பொண்ணு ஆனா டைவர்சியாம் ..."என்றாள் .

இது சத்தியானந்தத்திற்கும அதிர்ச்சிதான் .விவாகரத்து பண்ணுமளவு இந்த பெண்ணிடம் குறை உள்ளதாக தோணவில்லை .பழக பேச என மிக அருமையான பெண்ணாக தோன்றுகிறாளே .

"ஆமாங்க ...எவ்வளவு நல்ல பொண்ணு ...காதலிச்சித்தான் கல்யாணம் பண்ணியிருக்காங்க.ஆனா இரண்டு பேருக்கும் ஒத்து வரலையாம் .சமாதானமா பேசி பிரிஞ்சிட்டாங்களாம் .இந்த பொண்ணு அவுங்க அம்மா வீட்டுக்கு போக வெட்கப்பட்டுட்டு வேலையை மாற்றி வாங்கிக்கிட்டு இங்க வந்து தனியா இருக்கு "என்றாள் .

"ம் ...பார்த்துக்கோ இந்தக்கால காதலை ..."என்றார் கசப்புடன் சத்தியானந்தம் .

மறுநாள் அலுவலகத்திலிருந்து வரும்போது அவர்கள் வீடு கலகலப்பை சுமந்து கொண்டிருந்தது .
அடுப்படியில் ஒரு நாற்காலியை போட்டு அமர்ந்து கொண்டு ஜீவபாலாவுக்கு பாயாசம் செய்ய கற்றுக்கொடுத்து கொண்டிருந்தாள் வைதேகி .பின்னணியில் இளையராஜா பாடல்கள் .

உடை மாற்றி வந்த சத்தியானந்தத்துக்கும் ஒரு கப் பாயாசம் கிடைத்தது .

"என்கிட்ட இளையராஜா வோட புது ஆல்பம் இருக்கு .இதை முடிச்சுட்டு போய் எடுத்திட்டு வர்றேன் "என்ற ஜீவபாலா வைதேகியின் மூட்டு வலிக்கு தைலம் தடவிக்கொண்டிருந்தாள் .

"நீ சாவியை கொடும்மா ..இடத்தை சொல்லு நான் போய் எடுத்து வர்றேன் "என கிளம்பினார் சத்தியானந்தம் .

ஜீவபாலா சொன்ன அலமாரியில் சிடியை எடுத்தவர் கண்களில் அடுத்த அலமாரியில் இருந்த போட்டோ ஆல்பம் பட்டது .ஏதோ ஆவலில் எடுத்து பார்த்தவருக்கு ஜீவபாலா தங்களோடு ஒட்டிக்கொண்டதன் காரணம் விளங்கியது .

தன் கண் முன் நீட்டப்பட்ட ஆல்பத்தை கண்டதும் முதலில் திகைத்து பின் கலங்கி அழத்துவங்கினாள் ஜீவபாலா .

அழைப்பு மணிக்கு கதவை திறந்த குணமாறன் வைதேகியை கண்டதும் திகைத்து தடுமாறி "அம்மா "என்றான் .

"பளார் "அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள் வைதேகி .

"ஏன்டா திடீர்னு வந்து லவ் பண்றேன் கல்யாணம் பண்ணி வைங்கன்னு சொன்ன .முடியாதுடா நாங்கதான் பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணுவோம்னு சொன்னப்ப அப்ப நான் போறேன் ,நாங்களா கல்யாணம் பண்ணி சந்தோசமா வாழ்ந்து காட்டுறோம்னு சவால் விட்டு போனியே என்னடா ஆச்சு "

சட்டையை பற்றி உலுக்கினாள் .

"அம்மா தப்புதான்மா உங்களுக்கு செஞ்ச பாவத்துக்கு தான்மா இப்ப தண்டனை அனுபவிக்கிறேன் .அவா என்னை விட்டுட்டு போயிட்டா .திரும்ப உங்ககிட்ட வர வெட்கப்பட்டுட்டு என்ன செய்யன்னே தெரியாம வெறுமையா வாழ்ந்துக்கிட்டிருக்கேன்மா "

எவ்வளவோ கோபங்களும் வெறுப்புகளும் இருத்தாலும் தன் தோள்களை பற்றியபடி அழுத மகனை அணைத்து தேற்றவே தோணியது அந்த தாய்க்கு .

"நல்லா வாழ்ந்து காட்டுறோம்னு சவால் விட்டுட்டு வந்தவர்களிடம் போய் எப்படி ஒற்றையாய் நிற்பேன் .அதனால்தான் உங்கள் அருகாமையையாவது அனுபவிப்போமென்று இங்கு வந்து உங்களுடன் ஒட்டிக்கொண்டேன் "

ஜீவபாலாவின் வார்த்தைகள் காதில் ஒலித்தன வைதேகிக்கு .

தன் மடியில் தலை வைத்து குமுறிய மகனின் தலையை வருடியபடி "என்னடா நடந்தது "என்றாள் வைதேகி .

"அம்மா அவளுக்கு ஒரு ரசம் வைக்க கூட தெரியலை .எதற்கெடுத்தாலும் பதிலுக்கு பதில் வாதம் .அட்ஜஸ் பண்றதே இல்லை .உன்னை நம்பி வந்தேனே என்னை இப்படி படுத்துறியேன்னு ஒரே புலம்பல் .

இவா மட்டுமா இவளோட பெத்தவங்களை விட்டு வந்தா ...?நானும்தானே உங்களையெல்லாம் விட்டு இவ கூட வந்தேன் .கொஞ்சம் கூட அட்ஜஸ்மென்ட் இல்லை .

அவா சுடிதாரை என்னை காயப்போட சொல்றா .திடீர்னு எனக்கு ஒரு கப் காபி போடேங்கிறா லேப்டாப்பை நோண்டிக்கிட்டு .அவாள்லாம் நம்ம குடும்பத்துக்கு ஒத்து வர மாட்டா .அதான பேசி டைவர்ஸ் வாங்கிட்டோம் "

சொல்லி முடிக்கும் வரை பொறுமையாக கேட்ட வைதேகி "ஏண்டா சுடிதார் காயப்போடுறதும் ,காபி போடுறதும் தப்புன்னு உனக்கு யாருடா சொன்னா ?உடம்பு முடியாம இருக்கிற எனக்கு இப்ப காபில இருந்து சமையல் வரை உங்க அப்பாதான்டா செய்றாரு .வேலைக்காரி வராதப்ப என் புடவையை கூட துவைக்கிறாரு .
அவளும் வேலைக்கு போற பொண்ணு .இதெல்லாம் எதிர்பார்க்கிறதுல என்ன தப்பு ..."

"இந்த மாதிரி  ஒரு நல்ல அப்பாவுக்கு பிறந்துட்டு நீ எப்படிடா இப்படி இருக்க ...?

உங்களோட காதல் உண்மையானதா இருந்தா  இந்த மாதிரி சாதாரணங்கள் விஸ்வரூபம் எடுக்காது .இப்ப நீ பேசுனதிலிருந்தே உங்க காதலோட லட்சணம் தெரியுது .

சரி விடு போனது போயிடுச்சு கிளம்பு நம்ம வீட்டுக்கு போகலாம் .உனக்கு வேறு பொண்ணு பார்த்து எங்க ஆசைப்படி கல்யாணம் பண்ணி வைக்கிறோம் எந்திரி "என்றாள்

அசையாமல் அமர்ந்திருந்தான் குணமாறன் .

"என்னடா "அதட்டினாள் .

"இல்லம்மா நீங்க போங்க நான் வரலை "

"ஏன்டா "

"அவள் என்னை எப்படி காதலித்தாளோ நான் அவளை உண்மையாத்தான் விரும்பினேன் .என்னைக்காவது அவளும் என்னை உணர்ந்து திரும்பி வருவான்னுதான் நான் இங்கேயே காத்துக்கிட்டு இருக்கேன் "

"காத்துக்கிட்டு இருக்கிறவன் தேடி போக வேண்டியது தானடா "

மௌனமானான் குணமாறன் .

"ஓ..கௌரவமா ...?"

"இல்லம்மா இப்ப கொஞ்ச நாளா அவள் எங்க இருக்கான்னு தெரியலை .அவ வேலையை மாத்திட்டு போயிட்டா போல "

"ம்க்கும் இதுதான் உங்கள் காதலா "நொடித்தாள் வைதேகி .

"அவள் எங்கே இருக்கான்னே தெரியலம்மா "தலைகுனிந தபடி கூறினான் குணமாறன்

"அதை நான் சொல்றேன் மகனே"

""அப்பா "

"நான்தான்டா அம்மாவும் பிள்ளையும் பேசி ஒரு முடிவுக்கு வரட்டும்னுதான் வெளியே காத்துக்கிட்டு இருந்தேன் "

"கிளம்பு நீயா தேடி கல்யாணம் பண்ணின உன் பொண்டாட்டி கிட்ட இப்ப நான் உன்னை கூட்டிட்டு போறேன் "

விடிந்தால் பிப்ரவரி 14.காதலர் தினம் காதலிக்கும் போது இந்த நாள் எவ்வளவு இனிமையாக இருந்தது .இன்று இதைவிட கொடுமையான நாள் கிடையாது .

துக்கத்துடன் எண்ணியபடி படுக்கையில் புரண்டு கொண்டிருந்தாள் ஜீவபாலா .

அழைப்புமணி ஒலித்தது .இந்நேரத்தில் யார் ...கதவை திறந்தவள் ஸ்தம்பித்தாள் .

எத்தனை நேரம் ஒருவரையொருவர் பார்த்தபடி இருந்தனரோ ...?

வாசலுக்கு வெளியே நின்ற குணமாறன் அவளை பற்றியபடி உள்ளே நுழைந்து ஆவேசமாக அணைத்தான் .

ஆவேசத்திற்கு ஈடு கொடுத்து பதிலளித்தாள்  ஜீவரேகா .

பிறைநிலவொன்று முழுமையடைந்தது .

அவர்கள் வாசல் கதவை பூட்டிவிட்டு தங்கள் வீட்டிற்குள் திருப்தியுடன் நுழைந்தனர் அந்த முதிய ஜோடிகள் .

காதலர்தினம் அழகாக விடிய தொடங்கியது .

1 comments:

  1. hi I don't know how I missed it. indha kala kadhal future pathi panna kanaku la than yosikiranga ana manakanaku thappa potturanga. arumaiyana pen jeeva, nalla payan guna anal avargal inaiya oru anbana thambathigal ego illathan iru anbu ullangal vazhkaiyai adhan pokileye anubhavita nalla idhayangal thevai patturuke mmagane analum unmaiku satchiyai anda ilam (!?) thambathikaluku en belated valentine day wishes sollidunga. ama jeeva bala kadaiseiyil jeeva rekhava maritale ,,,,,,good story dear

    ReplyDelete

Blogger News

வணக்கம் தோழமைகளே , எனது " வா என் வண்ண நிலவே " கதைக்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு மிக்க நன்றி. இதோ உங்கள் முன் எனது அடுத்த கதை " வானவில் தேவதை " கறுப்பென்பது பிழையல்ல .மனமிருப்பின் வரமே என்பதனை என் முதல் கதையில் கூறியிருந்தேன். சொந்தங்கள் இல்லாத வாழ்வு வாழ்வல்ல.சந்தர்ப்ப சூழ்நிலைகளே சொந்தங்களின் பாசத்தை மறைக்கிறது என்பதனை இரண்டாவது கதையில் கூறியிருக்கிறேன் காதல் கலந்து.படித்து பாருங்கள்.
 

Blogger news

Blogroll